நூறு கோடி கரோனா தடுப்பூசி: அத்தனை எளிதில் படைக்கப்பட்ட சாதனையல்ல!

ஜனவரி மாதம் 16ஆம் தேதி தொடங்கி 278 நாள்களுக்குப் பின் அக்டோபர் 21ஆம் தேதி 100 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தி நாட்டில் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நூறு கோடி கரோனா தடுப்பூசி: அத்தனை எளிதில் படைக்கப்பட்ட சாதனையல்ல!
நூறு கோடி கரோனா தடுப்பூசி: அத்தனை எளிதில் படைக்கப்பட்ட சாதனையல்ல!

ஜனவரி மாதம் 16ஆம் தேதி தொடங்கி 278 நாள்களுக்குப் பின் அக்டோபர் 21ஆம் தேதி 100 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தி நாட்டில் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இது அவ்வளவு எளிதில் படைக்கப்பட்ட சாதனையல்ல. மக்கள் தொகை அதிகம் கொண்ட, போக்குவரத்து வசதி இல்லாத எண்ணற்ற கிராமங்களைக் கொண்ட நாட்டில் அது இன்று சாத்தியமாகியிருக்கிறது என்றால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், சுகாதாரத் துறையினரின் தீவிர நடவடிக்கையும் மத்திய, மாநில அரசுகளின் முயற்சியும், எல்லாவற்றுக்கும் மேலாக கரோனா தொற்று ஏற்படுத்திய உயிர் பயமும் காரணங்களாக அமைந்தன என்றே சொல்லலாம்.

2019ஆம் ஆண்டு கரோனா தொற்று பற்றிய செய்திகள் வெளியான போது, 
அது சீனாவில் பரவும் தொற்று என்றார்கள்.

இந்தியாவுக்குள் வந்த போது, தமிழகத்துக்குள் வராது என்றார்கள். தமிழகத்துக்குளும் பரவிய போது சென்னைக்கு வராது, சென்னைக்கு வந்த பிறகு, நம்ம ஊருக்கு வராது, நம்ம ஊருக்கு வந்த போது நம்ம தெருவுக்கு வராது, நம்ம தெருவுக்கு வந்த போதும் நம்ம வீட்டுக்கு வராது என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் எல்லா நினைப்புகளையும் கரோனா பொய்யாக்கிச் சென்றது.

கரோனா முதல் பேரிடர் காலத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்தபோது, கரோனாவை வெல்ல தடுப்பூசி எனும் பேராயுதம் தான் ஒரே தீர்வு என்று கரோனா தடுப்பூசி ஆராய்ச்சிகள் ஊக்குவிக்கப்பட்டு, ஒரு சில நிறுவனங்கள் அதில் வெற்றியும் பெற்றன. நாட்டில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. சரியாக 278 நாள்களுக்குப் பிறகு நாட்டில் 100 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தி இன்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்தியாவில் முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களாக 29.1 கோடிப் பேரும் (30 சதவீதம்), முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 70.7 கோடிப் பேரும் உள்ளனர். 

278 நாள்களில் இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது என்றால் சராசரியாக நாள் ஒன்றுக்கு 36 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய போது இந்த அளவுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை. இந்த எண்ணிக்கையில் பெரிய அளவில் மாற்றம் இருந்தது.

கரோனா பாதிப்பில் உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்திலும், கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து 3வது இடத்திலும் உள்ளது.

2021ஆம் ஆண்டுக்குள் இந்திய மக்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் 100 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை அடைய இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

அதாவது நாள் ஒன்றுக்கு 1.20 கோடி (1,20,00,000) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டால்தான் இந்த இலக்கை 2021க்குள் அடைய முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது என்று ஒரு பக்கம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளாத 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கையும் இன்னும் கணிசமாகவே உள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அச்சம் காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வரவில்லை. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு, அவர்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த போது மருந்து தட்டுப்பாடு போன்றவை பெரும் பின்னடைவாக இருந்தது.

அதற்குள் இரண்டாவது கரோனா பேரிடர் நாட்டை ஒரு உலுக்கு உலுக்கியது. ஒரு பக்கம் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, கடுமையான பலி எண்ணிக்கை என நாடு தத்தளித்துக் கொண்டிருந்த போது, நாட்டின் சுகாதாரத் துறை மற்றொரு பக்கம் கரோனா தடுப்பூசி செலுத்துவதிலும் அக்கறை செலுத்தியது.

கரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய போது, அதன் விழிப்புணர்வோடு சேர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொள்வது பற்றி பல்வேறு புரளிகளும் பரவின. அசைவம் சாப்பிடக் கூடாது, மது அருந்தக் கூடாது, இதய நோய் இருப்பவர்கள் தடுப்பூசி போடக் கூடாது என.. இவை அனைத்தையும் கடக்க ஒரு சில மாதங்கள் ஆகின.

கரோனா தடுப்பூசி போட்டுச் சாவதை விட, போடாமல் கரோனா வந்து சாவது அதிகம் என்பதை மத்திய, மாநில அரசுகள் மக்களிடையே எடுத்துச் சொல்லவே சில காலம் ஆனது.

நாடு முழுவதும் சுமார் 61 ஆயிரம் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

ஆரம்பத்தில் வெறிச்சோடிய தடுப்பூசி முகாம்கள் என்ற நிலை மாறி விழிப்புணர்வு ஏற்பட்ட பிறகு அதிகாலையிலேயே மக்கள் கூட்டம் என மாறியது. பிறகு மணிக் கணக்கில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். கரோனா இரண்டாவது பேரிடரில் ஏற்பட்ட பெரும் பாதிப்பு, மக்களை கரோனா தடுப்பூசி முகாம்களை நோக்கி அழைத்து வந்தது. அந்த நேரத்தில் போதுமான மருந்து இல்லாமல் சுகாதாரத் துறை தடுமாறியது. உடனடியாக மருந்து உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டு, போதுமான தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு உறுதி செய்யப்பட்டது.

பிறகு, ஆன்லைனில் பதிவு செய்து கொண்டு, கரோனா தடுப்பூசி செலுத்தும் வாய்ப்பும், உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகே முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி போடும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது.

தடுப்பூசி போடுவது அதிகரிக்க அதிகரிக்க, நாள்தோறும் கரோனா உறுதியாகும் விகிதம் குறையத் தொடங்கியது. மக்களிடையே இது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. தடுப்பூசி போட்டுக் கொள்வதிலும் பாலின வேறுபாடு பெரிய அளவில் காணப்படுவதாகவும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

கிராமங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத் துறையினர் கடும் சிரமங்களுக்கு இடையே மேற்கொண்டனர். நாடு 278 நாள்களில் 100 கோடி தடுப்பூசியை செலுத்தி சாதனை படைத்திருப்பதற்கு, சுகாதாரத் துறைக்கு ஒரு சல்யூட்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com