Enable Javscript for better performance
புரட்சி கணிதவியலாளர் சோஃபி ஜெர்மைன்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  அறிவியல் ஆயிரம்: புரட்சி கணிதவியலாளர் சோஃபி ஜெர்மைன்

  By பேரா. சோ. மோகனா  |   Published On : 19th September 2021 04:12 PM  |   Last Updated : 19th September 2021 04:12 PM  |  அ+அ அ-  |  

  sophie_jermain

  சோஃபி ஜெர்மைன்

  புரட்சியின்  நூற்றாண்டு எது தெரியுமா? 18ம் நூற்றாண்டுதான். 18ம் நூற்றாண்டு என்பது 1701, ஜனவரி முதல் தேதியிலிருந்து, 1800, டிசம்பர் 31 வரை உள்ள நாட்கள்தான். மேலும்  அப்போதுதான், நிஜமாகவே புரட்சி வெடித்தது. பிரெஞ்சு புரட்சியும் , அமெரிக்க புரட்சியும், அறிவின் முன்னணியில் நின்று ஒன்றிணைந்து   முடிவடைந்தது.  இந்த கால கட்டத்தில்தான் தத்துவமும்,  அறிவியலும், அடிமைத்தளையிலிருந்து எழுந்து முக்கியத்துவம்   பெற்று,  கொழுந்துவிட்டு எரியத் துவங்கின.

  தத்துவமும் அறிவியலும் தத்துவவாதிகளின் கனவுக்கேற்ப, மிகவேகமாய் வளர்ந்தன. உண்மையாகவே, கனவு மெய்ப்படத் துவங்கியது. அதன் காரணி,1789ல் நடந்த பிரெஞ்சு புரட்சி மட்டுமே. மன்னர்களுக்கெல்லாம் தங்களின் மகுடம் சூடிய முடி பறிபோய்விடும் என்ற ஐயம்தான்.

  கடல் மேல் பயணிப்பு

  18ம் நூற்றாண்டு பல வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன்படி பார்த்தால், ஐரோப்பாவின் காலனியாதிக்கம் இப்போதுதான் சூடு பிடித்தது. இது அமெரிக்காவிலும் உலகின் மற்ற பகுதிகளிலும் வெகுவேகமாகப் பரவியது. பிரெஞ்சு வீழ்ந்ததின் பின்னர், பெரிய பிரிட்டன் என்பது உலகின் மிகப் பெரிய சக்திகளுள் ஒன்றாகப் பேசப்பட்டது. அவர்கள் நாடு பிடிக்க பரபரப்பாக கடலில் பயணித்தனர். அப்படிப் பிடித்துப்போட்ட பெரும்பகுதிகளுள் ஒன்றுதான், இந்திய தீபகற்பமும். இதனை கடல்மேல் பயணிப்பு காலம் என்றே சரித்திரம் வருணிக்கிறது. பிரிட்டனில் 1770ல் தொழிற்புரட்சி வெடித்தது. இதன்விளைவாக நீராவி எஞ்சினை உருவாக்கி அர்ப்பணித்தது. எந்திரங்களை காதலுடன் கைப்பற்றி, மனித சமுதாயத்தின் முகபிம்பமும், சுற்றுச்சூழலின் தன்மையும் அடிப்படையிலேயே மாறிப் போக நேர்ந்தது.

  சோஃபி ஜெர்மன் பிறப்பும், பிரெஞ்சு புரட்சியும்

  இப்படிப்பட்ட 18ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் புரட்சியின் காலகட்டத்தில்தான் நம் புரட்சி தேவதை பிறக்கிறாள். ஆம், இந்த கதையின் நாயகி, சோஃபி ஜெர்மைன் உலகை எட்டிப் பார்த்தது புரட்சியின் காலத்தில்தான். சோஃபி ஜெர்மைன், பாரிசில், 1776, ஏப்ரல், முதல் தேதி பிறந்தார். அவரின் தந்தையின் பெயர் அம்ப்ராய்ஸ் பிராங்கோயிஸ் ஜெர்மைன் (Ambroise-Francois Germain) அன்னையின் பெயர் மேரி ஜெர்மைன். மேரி சோஃபி ஜெர்மைன் ஒரு பணக்கார குடும்பத்தில்தான் பிறந்தார். துவக்கத்தில் அவரின் தந்தை பட்டுத் துணி  விற்பனை செய்யும் ஒரு சாதாரண வியாபாரியாகவே இருந்தார். குழப்பமும், கொந்தளிப்பும் மிகுந்த காலகட்டத்தில், சோஃபியின் தந்தை  பிராஞ்சின் வங்கி  இயக்குநர் ஆகி பணிபுரிய நேரிட்டது. 

  சோஃபி ஜெர்மைன் பிறந்த ஆண்டில்தான் அமெரிக்க நாட்டிலும் புரட்சி  துவங்கியது. ஆறு ஆண்டுகால போரில், (1756-1763) ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் மக்கள் ஏராளமாகத் துன்பப்பட்டனர். சோஃபி ஜெர்மைன் பிறந்து 13 ஆண்டுகளுக்குப் பின்னர் (1789) அவரது சொந்த நாட்டிலேயே புரட்சி வெடித்தது. அதுதான் பிரெஞ்சுப் புரட்சி.

  மேரி சோஃபி ஆன கதை ..!

  சோஃபி ஜெர்மைன் அவரது பெற்றோரின் மூன்று பெண் மகவுகளில் இரண்டாவது பெண் குழந்தை. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் மேரி சோஃபிதான். ஆனால் மேரி சோஃபி என்ற பெயர் ஒன்று அதிசயமான பெயர் இல்லை. ஜெர்மைன் இல்லத்தில், பொதுவாக அந்த குடும்பத்திற்கு மேரி என்ற பெயரின் மேல் கொள்ளை பிரியம். அவர் அன்னை மற்றும் பெரிய சகோதரி இருவருக்குமே மேரி என்ற பெயர் வைக்கப்பட்டது. அவர்களுக்கு மேரி என்ற பெயர் பொதுசொத்துதான். இருவரின் பெயரும் மேரி மாடலீன் என்பதே. ஒரு வீட்டில் மூன்று மேரிகள். எப்படி இருக்கும் வீடு? யாரை கூப்பிட்டால், யார் பதில் சொல்வார்கள். வீட்டில் ஒரே குழப்பம்தான். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா? நம் நாயகிதான் இதற்கு விட்டுக்கொடுத்து தனது பெயரை சோஃபி என்று ஆக்கிக்கொண்டார். எல்லோரும் அவரை அன்போடு சோஃபி சோஃபி என்றே அழைத்தனர். சோஃபி ஜெர்மைனின் இளைய தங்கையின் பெயர் ஆன்ஜெலிகூ அம்ப்ரோஸ். இங்கு அவரின் ஒரு சகோதரியின் கணவர் மருத்துவர். இன்னொரு சகோதரியின் கணவர் ஓர் அரசு அதிகாரி. ஆனால் சோஃபி ஜெர்மைன் இறுதிவரை மணம் புரிந்து கொள்ளவே இல்லை. கணிதத்துக்காகவே தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டார்.   

  புரட்சியும் கணிதக் காதலும்

  எப்படிப் பார்த்தாலும், சோஃபி ஜெர்மைனை புரட்சியின் புரட்டலிருந்து அதன் தாக்கத்திலிருந்து அந்த  சிந்தனையிலிருந்து பிரித்துப் பார்க்கவே இயலாது. அவரின் உடலுடன், உள்ளத்துடன், இரண்டறக் கலந்துவிட்டது புரட்சி. புரட்சி நடந்து கொண்டிருந்ததால், வெளியே  சென்று  பள்ளியில் படிக்க முடியாத நிலைமை  சோஃபி ஜெர்மைனுக்கு.. ஆனால்,  எப்படியோ  சோஃபிக்கு கணிதத்தின் மேல் தீராத கொள்ளைக் காதல் உருவாகிவிட்டது. அவரின் கணிதக் காதலும், பிரெஞ்சுப் புரட்சியும்  ஒரேகாலத்தில் உச்சத்தில் இருந்தன. சோஃபியாவால் பாரிசில் நடந்து கொண்டிருந்த கொந்தளிப்பால், ரகளையால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. எனவே சோஃபி ஜெர்மைன் நிறைய நேரம் அவரது தந்தையின் நூலகத்திலேயே நேரத்தை செலவழித்தார். 

  இதையும் படிக்க | அறிவியல் ஆயிரம்: கணிதம் உருவான கதை!

  ஆர்க்கிமிடீசின் மீது தீராத காதல்

  அப்படி ஒருநாள், சோஃபி ஜெர்மைன் புத்தகங்களை பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஆர்க்கிமிடிஸ் பற்றி படித்தார். அதன்பின்னர் கி.மு. 287-212 களில் வாழ்ந்த சைராகியுசின் ஆர்க்கிமிடீஸ் அவரது ஆதர்ச   குருவாகிவிட்டார். ஏன் தெரியுமா? ஆர்க்கிமிடீஸ், கிரேக்கத்தின் மிகப் பெரிய மேதை, அவர் ஓர் இயற்பியலாளர்; பொறியாளர்; புதினங்களின் கண்டுபிடிப்பாளர் மற்றும் வானவியலாளரும்கூட. எனவே, ஆர்க்கிமிடீசின் மேல் சோஃபி ஜெர்மைனுக்கு மீளாக் காதல் உருவானதில் வியப்பில்லைதான். ஆனால் ஆர்க்கிமிடீஸுக்கு  ஏற்பட்ட கொடுமையான சாவு சோஃபி ஜெர்மைனை ரொம்பவே பாதித்துவிட்டது. சாதாரணமான எதுவும் தெரியாத ஒரு ரோமானிய வீரன், ஏதோ ஒரு உப்பு சப்பற்ற காரணத்துக்காக, ஈட்டியை ஆர்க்கிமிடீசின் நெஞ்சில் செலுத்திக் கொன்றுவிட்டான்.

  ஆர்க்கிமிடீசின் கொலையும் சோஃபியின் கணிதப் பயணமும்

  அப்போது கிரேக்கம் ரோமானியர்களின் ஆட்சிக்கு வந்திருந்தது. ஊரைச் சுற்றி வருகிறான் ரோமானிய வீரன். அப்போது  மணலில் வட்டம் போட்டு அதன் ஜியோமிதி கோணம் பற்றிய  ஆழ்ந்த யோசனையில் இருந்தார் ஆர்க்கிமிடீஸ். அவரைப் பார்த்த வீரன் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டான். ஆனால் அதனைக் கவனிக்காத ஆர்க்கிமிடிஸ் பதில் சொல்லவில்லை. அதனால் கோபம் கொண்ட ரோமானிய வீரன் ஒரு பாய்ச்சலில் கத்தியை ஆர்க்கிமிடீசின் நெஞசில் செலுத்தி, ஆர்க்கிமிடீஸை உலகை விட்டு அனுப்பிவிட்டான். அந்த நிகழ்வும், ஏன் இப்படி ஆழமான ஆராய்ச்சியில் ஆர்க்கிமிடிஸ் மூழ்கி இருந்தார் என்ற தகவலும்தான், சோஃபி ஜெர்மைனை கணிதம் நோக்கி இழுத்து வந்த ஈர்ப்பு விசை. அப்பாவின் நூலக கணித நூல்களை சோஃபி ஜெர்மைன் ஆராய்ந்தார். படித்தார். மேலும் மேலும் கணிதத்துக்குள் ஆழமாக பயணிக்க அவரின் மூளை உத்தரவிட்டது. 

  கணிதம் படிக்கக் வைக்க மறுத்த பெற்றோர்

  சோஃபி ஜெர்மைனின் கணிதக் காதலை அறிந்த அவரது பெற்றோர் ரொம்பவும் வேதனைப்பட்டனர். அவரை கணிதம் படிக்க அவர்கள் அனுமதிக்கவில்லை. காரணம் அன்றைய சமூகம், கணிதம் படிப்பது ஒரு பெண்ணுக்கு ஆகாத செயல் என விதித்திருந்தது. சோஃபி ஜெர்மைன் கணிதம் படிக்காமல் இருப்பதற்காக அவரைச் சோர்வடையச் செய்ய அனைத்து ஆவணங்களும் தயாரிக்கப்பட்டன. ஆனால், சோஃபி அதனையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, இரவு நேரங்களில் உற்றார். உறவினர், என யாருக்கும் ஊருக்கும் தெரியாமல் கணிதம் படித்தார். ஆனால், இதனை அறிந்த அவரின் சுற்றத்தார், அவர் கட்டிலை விட்டு எழுந்திருக்க முடியாதபடி, அவரின் அனைத்து ஆடைகளையும் எடுத்துச் சென்றுவிட்டனர். அவர் ஒரு துணியைப் போர்த்திக் கொண்டு, மெழுகுவர்த்தியின் ஒளியில் கணிதம் படித்தார் சோஃபி ஜெர்மைன். அவர் பயன்படுத்தும் மெழுவர்த்தி மற்றும் ஆடையைக்கூட  யாரும் அறியாமல் ஒளித்து வைத்திருந்தார் சோஃபி ஜெர்மைன். கடைசியில், இது தேறாத கேஸ் என்று அறிந்த அவரின் பெற்றோர், அவரை மேலே படிக்க அனுமதி தந்தனர். ஆனால் சோஃபி ஜெர்மைன் , யாருடைய போதனை மற்றும் கற்பித்தல் இன்றியே கால்குலஸ் (Reign of Terror studying differential calculus") படித்தார்.

  பயிலகம் மறுத்தும், குறிப்புகள் மூலம் படித்த சோஃபி  

  சோஃபி ஜெர்மைனுக்கு 18 வயதாகும்போது, பாரிசில், பாலிடெக்னிக் கல்லூரி  ஒன்று உருவானது. அது அறிவியல் மற்றும் கணிதவியலாளர்களுக்கு  பயிற்சி அளிக்கவே  உருவாக்கப்பட்டது. ஆனால் அங்கு பெண்கள் உள்ளே நுழைய முடியாது; அவர்கள் அங்கு சேர்ந்து படிக்க முடியாது. ஆனால் அந்த பாலிடெக்னிக் கல்லூரியில் மற்றவர்களுக்கு கொடுக்கப்படும் நோட்ஸ்களை வாங்கி சோஃபி ஜெர்மைன் படித்தார். இதுபோன்ற செயலால், அவரை அப்போதுள்ள பல கணித விற்பன்னர்களின் முக்கியமான தரவுகள் கிடைக்க கதவினைத் திறந்தது. வழி  கோலியது. அவரின் ஆர்வம் திரண்டது. சோஃபி நிறைய கணிதம் பற்றி  படித்தார், எழுதினார். 

  சமூகச் சூழலால்..ஆண் பெயரில் வெளியிட்ட சோஃபி

  பிரெஞ்சு நாட்டின் கணித மேதை  சோஃபி ஜெர்மைன் பள்ளி செல்லாமலேயே சுயம்புவாய் உருவானர்.  அவரின் வாழ்க்கையை,  கண்டுபிடிப்பை, ஒளித்தே அவர் வாழ வேண்டியிருந்தது. அவரின் கண்டுபிடிப்பு மற்றும் செயல்பாடுகளை சோஃபி ஜெர்மைன், அவர் ஓர் ஆண் என்ற பெயரிலேயே அனைத்தையும் வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஏனெனில் 1800களில் அன்றிருந்த சமூகச்சூழல், பெண் முக்கியமாக கணிதம் படிப்பதையோ, அதன் பலனாக பணிபுரிவதையோ, பட்டம்பெற்று ஆராய்ச்சி செய்து புகழ் ஈட்டுவதையோ அனுமதிக்கவில்லை. பெண்களை இரண்டாம் தர குடிமகனாகவே பிரெஞசு நாடு கருதியது. பெண்கள் ஆண்களுக்கு கீழ்பட்டவர்கள் என்றே அவர்களை மோசமாக நடத்தினர். சமூக கட்டுப்பாடு என்பது அப்போது மிக இறுக்கமாய் இருந்தது. பெண்களுக்கு சமூக நீதி கிடைக்கவே இல்லை. சோஃபி ஜெர்மனின் தந்தை நடுத்தர குடும்பத்து மனிதர். எனவே, அவரின் தாயின் பெயர் தவிர அவரைப் பற்றிய எந்தவித தரவும் அவர் பற்றி நமக்கு கிட்டவில்லை. 

  பிரெஞ்சுப் புரட்சி

  பிரெஞ்சு புரட்சிக்கு சற்று முந்தியே, அமெரிக்கப் புரட்சி நடைபெற்று உலகளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருந்தது. அந்த காலகட்டத்தில் இதன் தொடர்ச்சியாக தான், பிரெஞ்சு புரட்சியும் உருவானது. எல்லாவற்றையும் விட பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கம், ஐரோப்பாவில் அதிகமாக இருந்தது. நிலப்பிரபுத்துவத்திற்கு சாமானிய மக்கள் ஒரு முடிவை உண்டாக்கிய புரட்சி இது என வரலாறு குறிப்பிடுகிறது. பிரெஞ்சுப் புரட்சி  1789–ம் ஆண்டு முதல் 1799ம் ஆண்டு வரை, என  11 ஆண்டுகள் தொடர்ச்சியாக பிரெஞ்சு தேச மக்களால், அந்த நாட்டின் ஆட்சியாளர்களை எதிர்த்து நடைபெற்ற பெரும் புரட்சியாகும். மக்கள் பசியிலும், வேதனையிலும் துடித்திருக்க, ஆளுவோர் மமதையோடு  “உண்ண ரொட்டி இல்லாவிட்டால் என்ன., கேக் இருக்கிறதே” என்று எள்ளி நகையாடினர். இதனை பொறுக்காத எளியோர் கூட்டம், அதிகார வர்க்கத்தை கூண்டோடு அறுத்து  ஒழித்த வீர காவியம் தான் பிரெஞ்சு புரட்சி.

  கந்தகப் போர்வை போர்த்திக்கொண்ட பிரெஞ்சு பூமி

  சோஃபி ஜெர்மைனின் சின்ன வயதில், பாரிஸ் மற்றும் பிரான்சில் பெரிய குழப்பங்கள் மற்றும் பிரச்சினைகள் ஏற்பட்டன. சோஃபி ஜெர்மைனுக்கு 7 வயதாகும்போது,1783-84 ல் லாகி என்ற இடத்தில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. அங்கு 120 டன் கந்தக டை சல்படைக் கொண்டுவந்து கொட்டியது. அந்த ஊரில் 8 மாதங்கள் பூமி கந்தக டை சல்பைட் போர்வையைப் போர்த்திக்கொண்டு பிரெஞ்சு பூமியின் இந்த பகுதி மூடிக்கிடந்தது. இது வடக்கு பகுதியின் வெப்பநிலை மற்றும் சூழலை அடியோடு  மாற்றியது.

  ஜெர்மைனின் கணித அறிமுகம் 

  சோஃபிக்கு வயது 13 ஆனது. அவர் கல்வி கற்க பள்ளி செல்லவே இல்லை. யாரும் பள்ளி செல்லக்கூடிய நிலைமை அந்த  ஊரில் இல்லை.  பிரெஞ்சுப் புரட்சியின் முக்கிய நிகழ்வான பாசில் சிறை உடைப்பு  நிகழ்ந்தது. ஊரில் கலவரம் வெடித்தது. தனது தந்தையின் நூலகத்திலேயே இருந்தார். அங்கேயே பெரும்பகுதி நேரத்தை செலவிட்டர். சோஃபி ஜெர்மைன் புத்தகங்களை புரட்டுகிறாள். கணிதம் அவளைக் காந்தமாய் இழுக்கிறது. கணித புத்தகங்கள் எல்லாவற்றையும் பார்க்கிறாள்; படிக்கிறாள். அப்பாவின் புத்தக அலமாரியே சோஃபி ஜெர்மைனின் ஆசிரியராக மாறிவிட்டது. அவளே சுயம்புவாக லத்தீன் மொழியையும், கிரேக்க மொழியையும் கற்றுக்கொண்டாராம். இது எப்படி? நமக்கு சொல்லிக் கொடுத்தாலே கணிதம் சுட்டுப்போட்டாலும் வருவதில்லை. ஆனால் சோஃபி ஜெர்மைன் தானாகவே மொழி அப்பியாசம் செய்து இருக்கிறார் என்றால் அவரின் திறமையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

  தனியாகவே/சுயம்புவாகவே கணிதம் கற்றல்

  சோஃபி லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளின் துணையுடன் கணிதம் கற்றுக்கொள்கிறார். அதற்கு அவர் எட்டின்னே பெசொலின் எழுதிய எண் கணிதத்தின் தொகுப்பு (Étienne Bezout’s mathematics textbook Traité d’Arithmétique) என்ற புத்தகத்தின் துணையுடனே சோஃபி தன்னந்தனியாக கணிதம் கற்கிறார். அதன் பக்கங்களிலிருந்தே  அதன்  வகுமானம், விகிதம், பின்னங்கள் மற்றும் மடக்கைகள் பற்றி படித்து தெரிந்து கொண்டார். பின்னர் தானாகவே கால்குலஸ் பற்றி அறிந்து கொண்டார். பின்னர் லத்தீனில் , கணிதத்தின் விற்பன்னர்  லியோனஹார்ட் யூலர் எழுதியவைகளைக் கற்றுக்கொள்கிறார். அதன்பின், இயற்பியலாளர் மற்றும் வானவியலாளர் ஐசக் நியூட்டனைப் பற்றியும், அவாது கணித செயல்பாடுகள் பற்றியும் படித்து தெரிந்து கொண்டார். கதை இப்படி போய்க் கொண்டிருக்க, இந்த கதையெல்லாம், இதன் பின்னணி எல்லாம் சோஃபியாவின் தந்தை மற்றும் தாய்க்கு கொஞசம்கூட பிடிக்கவில்லை. எப்படியாவது சோஃபியாவின் ஆர்வத்தைக் குறைக்க எடுத்துக்கொண்ட விதவிதமான முயற்சிகள் அனைத்திலும் தோற்றுப்போனார்கள். அப்போதுதான் அவர்களுக்கு, அவர்களின் செல்ல மகள் நிஜமாகவே, கணிதத்தின் மேல் மீளாக்காதலில் இருக்கிறாள் என்றும் புரிந்துகொண்டனர்.

  கணிதம் பயில புதிய வழி

  இதற்கிடையில், 1794ல், பாரிசில் அனைவருக்குமான  எகோல் பாலிடெக்னிக் (École Polytechnique)  கல்லூரி புதிய விஞ்ஞானக் கதவுகளுடன் திறக்கப்பட்டது. சோஃபி ஜெர்மனின் 18வது பிறந்த நாளும் வந்தது. ஆனால் அவருக்குத்தான் கல்லூரிக்கான விடிவு பிறக்கவில்லை. கல்லூரியின் கதவு சோஃபிக்காக திறக்கப்படவில்லை, தீவிரமாக மறுக்கப்பட்டுவிட்டது. பெண் என்ற ஒரே காரணத்துக்காக சோஃபி அங்கு சேர அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அங்கும் கூட  பிரெஞ்சுப் புரட்சியின் கோஷங்கள் சுதந்திரம், சமத்துவம்,  சகோதரத்துவம் என்பதே. எழுந்தது. எனினும் சோஃபிக்கு  சுதந்திரம், சமத்துவம் இரண்டும் மறுக்கப்பட்டுவிட்டன. 

  இருப்பினும் எப்படியாவது படிக்க வழி தேடினார் சோஃபி ஜெர்மைன். அந்த கல்லூரியில் பயிலும் மற்ற ஆண்களிடம் இருந்து பாடத்திட்டத்துக்கான குறிப்புகளை வாங்கிப் படித்தார். அதிலும் குறிப்பாக ஜோசப் லூயிஸ் லாக்ராஞ்ஜே ( J. L. Lagrange ) என்ற கணிதவியலாளர் பற்றி படிக்கும்போது அவரது செய்முறைகள் பற்றி ஈர்க்கப்பட்டார்.  ஆனாலும் கூட, நேரடியாக ஆசிரியரிடம் படிக்காமல், சந்தேகம் கேட்காமல், அவரே குறிப்புகளிலிருந்து ஜோசப் லூயிஸ் லாக்ராஞ்ஜே  செய்முறைகள்  படிப்பது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. பின்னர் வேதியியலையும் கூட ஆசிரியர் ஆண்டனி போர்க்ராய் ( Antoine Fourcroy. )என்பவரின்  குறிப்புகளிருந்தே படித்தார். எத்ததனை தடைகள் ஏற்படினும், கணிதம் படிப்பது ஒன்றே குறிக்கோளாக இருந்த சோஃபி ஜெர்மைனுக்கு எதுவும் பொருட்டாகத் தெரியவில்லை. இருப்பினும் அனைத்தையும் நன்றாகவே படித்து அனைத்தையும் தேர்வில் எழுதினார். 

  இதையும் படிக்க | அறிவியல் ஆயிரம்: உலகை புரட்டிப்போட்ட கணித மேதை அடா லவ்லேஸ்

  கணிதத் தூதுவர் ஆகஸ்ட் லேபிளான்க்

  ஆனால், சோஃபி ஜெர்மைன் நேரிடையாக தேர்வு எழுதி ஆசிரியரிடம் கொடுக்கவில்லை. அவரின் தேர்வை இன்னொரு மாணவர் எழுதியது போல எழுதினார். அதற்கு உதவ  ஓர் உதவியாளர் தேவையாக இருந்தது. அவர்தான் ஆண்டனி ஆகஸ்ட் லேபிளான்க் (Antoine-August LeBlanc ) அவரைத் தனது உதவிக்கு வைத்துக்கொண்டார்.  அதாவது சோஃபி எழுதியவற்றை கட்டுரைகளை எல்லாம் ஆகஸ்ட் லேபிளான்க், அவரே எழுதிய கட்டுரைகளாக அவரது ஆசிரியரிடம், சமர்ப்பித்து திருத்தி வாங்கித்தரவேண்டும். இதுதான் இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள உடன்பாடு. அதன்பின்னர், சோஃபி தான் எழுதிய கணித வழிமுறை மற்றும் குறிப்புகளை அனைத்தையும் சோஃபி, அவர்தம் உதவியாளர் ஆண்டனி ஆகஸ்ட்லேபிளாங்க் பெயரிலேயே ஜோசப் லூயிஸ் லாக்ராஞ்ஜே ஜிடம், தேர்ச்சிக்காக சமர்ப்பித்தார்.

  ஆனால் நடந்தது என்ன?

  தேர்ச்சி ஆசிரியர் ஜோசப் லூயிஸ் லாக்ராஞ்ஜே அவர்கள், ஆகஸ்ட் லேபிளாங்க் சமர்ப்பித்த கணித செய்முறைகள் மற்றும் குறிப்பினைப் படிக்கும்போதே கண்டுபிடித்துவிட்டார். இந்த கட்டுரைகள், வழிமுறைகள் எதுவும் ஆகஸ்ட் லேபிளாங்க் எழுதியவை அல்ல என்று கணிதத்தில் கரை கண்ட 55 வயது பேராசிரியருக்கு இது கூடவா தெரியாது? அவருக்கு ஆண்டனியிடம் ஐயம் தோன்றியது. இந்த எழுத்துகள், வழிமுறைகள்,  ஆண்டனியுடையது போல் இல்லையே என சந்தேகப்பட்டார். இதன் சொந்தக்காரார் வேறு ஒருவர் எனத் தெரிகிறதே என்று ஐயப்பட்டார்.  இந்த கட்டுரைகளில் ஏராளமான திறமை ஒளிந்துள்ளதை ஜோசப் லூயிஸ் லாக்ராஞ்ஜே கண்டுபிடித்தார்.  ஆகஸ்ட் லேபிளாங்க்குக்கு  யாரோ எழுதிக் கொடுத்து இருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டார். அங்கு சோஃபி ஜெர்மைன் ஆகஸ்ட் லேபிளாங்க் மூலம் அனுப்பிய ரகசிய சமர்ப்பணம் என்ற குட்டையை உடைத்தார். பின்னர் சில வினாக்கள் மூலம் அதன் மூல ரகசிய குட்டும்  உடைந்தது. அந்த கட்டைகளை, வழிமுறைகளை எழுதிக் கொடுத்தது சோஃபி ஜெர்மைன் என்ற பெண்  என்றும் கூட  அறிந்தார். பின்னர் ஆசிரியர் லூயிஸ் லாக்ராஞ்ஜே -க்கு  சோஃபி ஜெர்மைனின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டது. சோஃபி ஜெர்மைன் வாழும் இடத்துக்கே ஜோசப் லூயிஸ் லாக்ராஞ்ஜே, சென்றார். லாக்ராஞ்ஜே ,சோஃபி ஜெர்மைனை அவரின் சிறப்பான அபாரமான கணித திறமைக்காக மனதாரப் பாராட்டினார்.

  அனைத்து கணிதவியலாளர்களும் பாராட்டு

  அத்துடன் ஆசிரியர் லூயிஸ் லாக்ராஞ்ஜே  நிற்கவில்லை. அவருக்கு தெரிந்த மற்ற கணிதவியலார்களுக்கு இந்த தகவலை  தெரிவித்தார். இப்படி கணக்கில் பிஸ்துவான சோஃபி ஜெர்மைனை  அனைவரும் சந்தித்து பேச வேண்டும் என்ற  ஏற்பாட்டினையும் செய்தார் ஆசிரியர் லூயிஸ் லாக்ராஞ்ஜே. இவை பெரும்பாலும் பயனுள்ளவைகளாகவே இருந்தன.

  அதன்பின்னர், வானவியலாளர், ஜெரோம் லாலண்டே சோஃபிக்கு ஒரு மன்னிப்பு கடிதமும் அனுப்பி இருந்தார். அதாவது சோஃபி ஜெர்மைனப்  பற்றித் தெரிந்து கொள்ளாமல், அவரைக் காயப்படுத்தியமைக்காக வருத்தப்பட்டார். பின்னர் பாரிஸிலுள்ள அனைத்து கணிதவியலாளர்களாலும்   சோஃபி ஜெர்மைன் பெரிதும் பாராட்டப்பட்டார். இருப்பினும் பெண் என்ற காரணத்தால் சில பின்னடைவுகளையும் வழக்கம்போலவே  சந்தித்தார்.

  மேல்நிலை பட்டம் 

  கணிதத்தில், சோஃபி ஜெர்மைன் , மேல்நிலைப் பட்டம் படிக்க விரும்பினார். அதுவும் கூட பெண் என்பதாலேயே தட்டிபோயிற்று. கல்லூரிகளில் சோஃபி சேர்ந்து படிக்க அனுமதிக்கப்படவில்லை. எனவே சோஃபியின் கணிதப்  படிப்பு துண்டு துண்டாக வெட்டுப்பட்டே நடந்தது. அவர் கணிதத் துறையில் ஒற்றைப் பெண் என்பதால் யாரையும் சென்று நேரில் கண்டு, விபரம் அறிய முடியாமல், விளக்கம் சொல்ல இயலாமை அனைத்தையும் கடித போக்குவரத்து மூலமே நடத்தினார். சோஃபி, தனது கட்டுரைகளுக்கு ஓர் நேர்மையான, உண்மையான விமரிசனம் வேண்டினார். ஆனால் அது சரியில்லாத நிலையில், அவரைக் குறைகூறி காயப்பட வைக்க வேண்டாம் என கருதி  அனைவரும் வாளாவிருத்தனர். இதனால் சோஃபி ஜெர்மைன் கட்டுரை, கண்டுபிடிப்புகள் மற்றவர்களுடன் ஒப்பிட முடியாமல் போயின. சோஃபிஜெர்மைனின்  இந்த செயல்பாடு, இதற்கு முன் வாழ்ந்த பியரே டேபெர்மா (Pierre de Ferma) என்ற விஞ்ஞானி, புத்தகங்கள் மெல்லாம் படித்தே, கடிதம் மூலமே விவாதித்தார்.. நம் நாயகியும் பெண் என்பதால், ஏராளமான சமூக கட்டுக்கோப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது

  சமூகத் தடைகளே படிப்புக்கும் தடையாக

  நம் நாயகி சோஃபி ஜெர்மைனின் பெயர் அப்போது பாரிசிலுள்ள அனைத்து அறிவுசார் வட்டத்திலும் பரவலாயிற்று. அவரின்  கண்டுபிடிப்புகளைப்பற்றி  கணிதம்சார்ந்த விஞ்ஞானிகள் பேசலாயினர்.

  ஆனாலும்கூட அவரின் அறிவுத் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் எல்லாமே ரோஜாக்களாக இல்லை. அவர் பட்டமேற்படிப்புக்கான வேலைகளை செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அங்குள்ள கொடுமை என்னவென்றால், அப்போதும்கூட பெண்கள் நகரத்து கல்லூரிக்குச் சென்று படிக்க அனுமதிக்கப்படவில்லை.

  எனவே அவரின்  படிப்பு  துண்டாடப்பட்டது.  அன்றைய காலத்தின் சமூகத் தளைகள், கட்டுப்பாடுகள் அனைத்தும் படிக்கத் துடித்த ஒற்றைப்பெண் சோஃபியா ஜெர்மனுக்கு பெரிய தடைக் கற்ளாகவே   இருந்தன. 

  பியரி டே பெர்மெட்டும் சோஃபி ஜெர்மைனும்

  சோஃபி ஜெர்மைனின் படிப்பு தொடர்பான அனைத்தும் கடிதப் போக்குவரத்து மூலமே நடந்தது என்றால் நினைத்துப் பாருங்கள் எவ்வளவு கஷ்டமாகவும் வேதனையாகவும் இருக்கும் என்பதை. ஆனால் அவரின் எழுத்துக்களுக்கு ஓர் ஆழமான விமரிசனம் தேவைப்பட்டது. அதேசமயம் இவர் நேரில் சென்று அவரது ஆசிரியர்களிடம் விளக்க முடியாததால், அவர்களுக்கு சோஃபி ஜெர்மைன் எழுதி உள்ளதன் முழுப் பொருளையும்  விவரிக்க இயலாத நிலை இருந்ததும் உண்மைதான். ஆசிரியர்கள் சோஃபி எழுதி உள்ளது தவறு என்று நினைத்தனர். ஆனாலும்கூட விடாமுயற்சியுடன் செயல்படும்  ஒரு சின்னப்பெண்ணை காயப்படுத்த வேண்டாம் என்றும் நினைத்தனர். இதுவே சோஃபி ஜெர்மைனின் கட்டுரைகளை மற்ற கணிதவியலாளர்களுடன் ஒப்பிட முடியாத  நிலையை உண்டாக்கியது. இந்த நிலைதான், இவருக்கு முன் வாழ்ந்த பியரி டே பெர்மெட்என்ற விஞ்ஞானியுடன் இவரது நிலைமை ஒத்து இருந்தது. ஏனெனில் பியரி டே பெர்மெட்டும் கூட கணிதத்தை தன் பால்ய காலத்தில் நூலக புத்தகங்கள் மூலமே கற்றவர் ஆவார். 

  மேரி லெஜெண்ட்ரி மற்றும் சோஃபி ஜெர்மைன் நட்பு

  உலகில் வருடங்கள் வரும் போகும், ஆனால் 1798 மற்றும் 1801 என்ற இரு ஆண்டுகளும், கணித உலகிற்கும் மற்றும் சோஃபி ஜெர்மைனுக்கும் மிகப் பெரிய மாற்றம் செய்த ஆண்டுகளாகும். இந்த ஆண்டுகளின் துவக்கத்தில், மற்றொரு பிரெஞ்சு கணிதவியலாளர்,  அட்ரெய்ன் மேரி லெஜெண்ட்ரி (Adrien-Marie Legendre) என்பவருடன் தொடர்பு கொள்கிறார். லெஜெண்ட்ரியின் நம்பர் தியரி (1798 Essai sur le Théorie des Nombres ) என்ற கணிதத்தின் மிகப் பெரிய தகவலை அதன் பிரச்னைகளை அவர் முன் வைக்கிறார். இதன் மூலம் சோஃபி ஜெர்மைன் மற்றும் லெஜென்ட்ரே இருவரும் நட்பு வட்டத்தில் இணைகின்றனர். அதன் பின் லேஜெண்டரே சோஃபி ஜெர்மைனின் சில கண்டுபிடிப்புக்களை அவரது இரண்டாவது நம்பர் தியரி  பதிப்பில் அதே புத்தகத்தில் இணைக்கிறார். அதன் பின்னர் சோஃபி ஜெர்மைனின் பல கணிதம் தொடர்பான கடிதங்கள்  அவரின் பெயரிலேயே தத்துவங்கள்(Oeuvres Philosophique de Sophie Germain ) என வெளியிடப்பட்டன. ஜெர்மைனை விட வயதில் சிறியவரான காரி பிரெடரிக் காஸ் நம்பர் தியரியில் மிகப் பெரிய விஷயங்களை எழுதி சமர்ப்பிக்கிறார். இவற்றை அறிந்து மிகவும் மகிழ்வுற்று நம்பர் தியரியை, இன்னும் மேம்படுத்த அதிக புதிய கருத்துக்களை இணைக்கிறார். அவர் நேரில் செல்ல முடியாமலேயே ,  லெஜென்ரியிடம், கடிதம் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறார். இப்படி உருவானதுதான் இன்றைக்கு சோஃபி ஜெர்மைனின் பெயர் சொல்லும் நம்பர் தியரி. 

  இதையும் படிக்க |  அறிவியல் ஆயிரம்: நூற்றாண்டுகளை வென்ற விஞ்ஞானி கேதரீன் ஜான்சன்

  ஆணின் பெயரில் ஆராய்ச்சியை சமர்ப்பித்த சோஃபி ஜெர்மைன்

  எப்படி இருப்பினும் கார்ல் பிரெடரிக் காஸ் ( Carl Friedrich Gauss) எனற கணித மேதையுடன் ஏற்பட்ட கடிதத் தொடர்பும், அவருடனான உரையாடலில் ஏற்பட்ட புரிதலும்தான் சோஃபி ஜெர்மைனை  புகழின் உச்சிக்கு கொண்டு செல்ல உதவியது என்றால் மிகையில்லை. 1801ல் கார்ல் பிரெடரிக் காஸ் வெளியிட்ட எண்கணிதத்தின் உரையாடலில் (Disquisitiones Aritmeticae ) உள்ள விஷயங்கள் மூலமே சோஃபி ஜெர்மைன் தனது புரிதலை வளர்த்துக்கொண்டார்.  மீண்டும் சோஃபி ஜெர்மைன் தான் செல்ல முடியாத நிலைமையில், 1804ல் சோஃபி ஜெர்மைன்  தனது ஒரிஜினல் கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சி தகவல்களை கார்ல் பிரெட்ரிக்ஸ் மூலமாக அனுப்பி பெர்மெட்டின் கடைசி தேற்றத்துடன் இணைக்கச் சொன்னார். நேரில் செல்ல முடியாததால், ஆனால் அதிலும் கூட அது சோஃபி தனது தேற்றம் என்று சொல்லாமல், லே பிளாங்க்கின் (LeBlanc’s) பெயரையே பயன்படுத்தினார். அதன் பின்னர் சோஃபி, 1804 -1809 என இந்த 5 ஆண்டுகள் காலகட்டத்தில் கார்ல் பிரெட்ரிக் காஸ் அவர்களுக்கு சோஃபி அவரது ஐயம் மற்றும் எண்கணிதம் தொடர்பாக என 12 கடிதங்களை எழுதினார்.  

  அதிலுள்ள இன்னொரு தகவல், ஆனால் கடிதம் எழுதத் துவங்கியபோது சோஃபி ஜெர்மைன் தனது புனைபெயரான எம்.லீ பிளாங்க் (M. LeBlanc) என்ற பெயரிலேயே கடிதங்களை எழுதி அனுப்பிக்கொண்டு இருந்தார். காரணம் என்னவென்றால், சோஃபி ஜெர்மைன் என்பவர் ஒரு பெண் என்று அவருக்குத் தெரிந்தால், அதனை  கார்ல் பிரெட்ரிக் காஸ் கடிதத்தை மறுத்துவிடுவாரோ/புறக்கணித்து விடுவாரோ என்ற அச்சம்தான் சோஃபி அப்படி செயல்பட வைத்தது. ஆனால்  அவர் இந்த தேற்றத்தை அனுப்பியபோது லே பிளாங்க் உயிரோடு இல்லை. அப்போதும் கூட இந்த அறிவியல் களத்தில் ஒரு பெண்ணை முன்னிறுத்த முடியாத நிலை. ஓர் ஆணின் பின்னால்தான், அவரின் பெயரில்தான் தான் செய்த ஆராய்ச்சி தகவல்களை சோஃபி ஜெர்மைனால் சமர்ப்பிக்க முடிந்தது என்றால், அன்றைய காலகட்டத்தில் பெண்களின் நிலையை எண்ணிப்பாருங்கள். சோஃபி ஜெர்மைன் தன்னைப்பற்றித் தெரிவிக்கும்போது , மிகவும் அடக்கமாக, ஆர்வமுள்ள ஒரு அமெச்சூர்காரர் என்றே சொல்லிக்கொள்வார்.

  கார்ல் பிரெட்ரிக் காஸ் பாராட்டு

  பிரெஞ்சு நகரில் இருந்த கார்ல் பிரெட்ரிக் காஸின் சொந்த ஊரான பிரௌன்ச்விக் (Braunschweig)ல் 1806ல் சோஃபி ஜெர்மைனை நேரில் சந்திக்கிறார் பிரெட்ரிக் காஸ். சோஃபிஜெர்மைன் சாக்ரடீசுக்கு ஏற்பட்ட  முடிவை மனதில் கொண்டு கார்ல் பிரெட்ரிக்கின் பாதுகாப்பை முன்னினிட்டு தனது குடும்ப நண்பரான ஒரு ராணுவ வீரரை உதவிக்கு  அழைக்கிறார். இதையெல்லாம் பின்னாளில் தெரிந்துகொண்ட கார்ல் பிரெட்ரிக் காஸ், சோஃபி ஜெர்மைன் மேல் அதிகமான மதிப்பும் அன்பும் கொள்கிறார். மேலும் அப்போது தான் எம். லீப்லாங்க் என்ற பெயரில் கட்டுரைகள் அனுப்பியது சோஃபி என்பதும் தெரிகிறது. ஆனால் கார்ல் பிரெட்ரிக் காஸ் மற்றும் சோஃபி ஜெர்மைன் இருவரும் சந்திக்காத போதிலும்கூட, காஸ் சோஃபியினுடைய திறமைகளையும் கட்டுரைகளையும், காஸ் தனது நண்பர்கள் வட்டத்தில் பெரிதும் பாராட்டினார். 1807ம் ஆண்டில், சோஃபி ஜெர்மைனின் கடிதத்தின் சாராம்சம் காரணமாக சோஃபி ஜெர்மைன் அளவுக்கு அதிகமான மேதை என்றும், மேலும் தனது பாலினம் தாண்டி, அதனால் ஏற்பட்ட தடைகளை உடைத்த அதீத உன்னதமான தைரியம் /மன உறுதி நிறைந்தவர் என்றும் கார்ல் பிரெட்ரிக் காஸ் சோஃபி ஜெர்மைன் பற்றி பொறுத்த அங்கீகாரத்துடன்  குறிப்பிட்டுள்ளார்.

  ஆய்வின் பிரச்னைகளோடு பரிசு ஒரு கிலோ தங்கம் 

  சோஃபி ஜெர்மைன் அனுப்பிய கடிதத் தொடர்பை பார்த்த கார்ல் பிரெட்ரிக் காஸ் ரொம்பவே சந்தோஷப்பட்டார். அதன்பின்னர் சோஃபி ஜெர்மைன் அனுப்பிய நம்பர் தியரி பிரசுரிக்கப்பட்டது. நிறைய கணிதவியலாளர்களின் கருத்துப்படி, சோஃபி ஜெர்மைனின் கருத்துகோட்பாடுகள், போதுமான ஆதாரங்கள் இல்லை என்றே கருதப்பட்டன. எனவே, கார்ல் பிரெட்ரிக் காஸிடமிருந்து எவ்வித  பதிலும் அனுப்பப்படவில்லை. ஆனால் சோஃபி ஜெர்மைன்  சிறிதும்  சளைக்காமல், கணிதத்திற்கு சேவை செய்தார். 

  அப்போது பிரெஞ்சு அறிவியல் கழகம், எர்னஸ்ட் சாலடினி என்பவரின் கருத்தில் கணிதத்தில் கணித விளக்கங்கள் கேட்டு ஒரு போட்டியை அறிவித்தனர். சோஃபி ஜெர்மன் அவரின் எழுத்துக்களை 1811ல் சமர்ப்பித்தார். ஆனால் இரு ஆண்டுகள் வரை அதற்கு எவ்வித பதிலும் அங்கிருந்து வரவில்லை.  அவரது பேப்பருக்கு பரிசும் வரவில்லை; பதிலும் கூட இல்லை.  மேலும், சோஃபி ஜெர்மைன் அவரது பேப்பருக்கான கருதுகோள்களை இயற்பியலில் இருந்து எடுக்கவில்லை; அதனை அப்போது அவர் செய்யவே இல்லை.  காரணம், அவர் பகுப்பாய்வு மற்றும் மாறுபாடுகள் தொடர்பான கால்குலஸ் பற்றி செய்துகொண்டு இருந்தார்.

  ஆனாலும் கூட அவரது கருத்துகள் நம்பர் தியரியில் புது ஒளியைப் பாய்ச்சியது. மேலும் அப்போது அதன் போட்டியாளர்களை தீர்மானிக்கும் குழுவில் லாக்ரெஞ்சே ஒரு நீதிபதியாக இருந்தார். எனவே அவர் அதிலுல் தவறைத் திருத்திய பின்னர் அது விளக்கம் தருகிறது. மேலும் அந்த போட்டி இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. மீண்டும் சோஃபி ஜெர்மைன்  கட்டுரையை சமர்ப்பிகிறார். அப்போது  இரு ஆண்டுகளுக்குப் பின்னர் சோஃபியாவின் அந்த கட்டுரைக்கு  பரிசு வழங்கப்பட்டது. இருப்பினும் கூட அவரின் கருத்துரை பேப்பர்கள் மறுக்கப்பட்டன. ஆல்ட்ரின் மேரி சோஃபி ஜெர்மைனின் தியரியை ஒத்துக்கொள்ள முடியாது என்கிறார். இருப்பினும் சோஃபி  ஜெர்மைன்  மனம் தளராமல், பிரெஞ்சு அகாடமியின் போட்டிக்கு தொடர்ந்து கட்டுரைகளை அனுப்பிக்கொண்டே இருக்கிறார்.

  அவரது தளரா முயற்சியால், சோஃபி ஜெர்மன் 1816ல், பிரெஞ்சு அறிவியல் அகாடமியின் பரிசினைப்பெறுகிறார். இந்த கட்டுரையில் போதுமான சான்றுகள் இல்லை என்றாலும்கூட கொஞ்சம் மறுக்கும் விஷயங்கள் இருப்பினும், அதிலுள்ள கணித உண்மைகள் யாரும் மறுக்க முடியாததாகவே இருந்தது.

  எனவே சோஃபியாவுக்கு ஒரு கிலோ தங்கம் பரிசாக தரப்பட்டது. இந்த பரிசு என்பது ஒரு சம தளத்தில் வரையக்கூடிய வளைவுகள் மற்றும் அதிர்வுகளை (law of vibrating elastic surfaces) பற்றியது. (இந்த தியரியை அடிப்படையாக வைத்தே ஈபில் கோபுரம் கட்டப்பட்டது) இதில் பரிசு வாங்கிய முதல் பெண் சோஃபி ஜெர்மைன் மட்டுமே. தளரா மனஉறுதி மட்டுமே சோஃபி ஜெர்மைன் அறிவியலில் கணிதத்தில் வெற்றி பெற முடிந்தது. இருப்பினும் இதற்கு முன்னர் இதற்காக இந்த கட்டுரைகள் மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட மனத் தளர்வால் சோஃபி ஜெர்மைன், இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொது நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இந்த நிகழ்வுதான், சோஃபி வாழ்வில் அவருக்கு அறவியல் தகவலுக்காக அவருக்கு கிடைத்த  அதிகபட்ச அறிவியல் வெகுமதி ஆகும்.

  கணிதவியலாலர்களுடன் அமர வைத்த அகாடமி பரிசு  

  சோஃபி ஜெர்மைன் போட்டியில் பரிசை வென்ற பின்னர்,  சோஃபி ஜெர்மைன் நெகிழ்ச்சித்தன்மையின் கோட்பாடு (theory of elasticity) குறித்த தனது பணியைத் தொடர்ந்தார். இவற்றில் மிக முக்கியமானது "இயல்பு, எல்லைகள் மற்றும் மீள் மேற்பரப்புகளின் அளவு" (“nature, bounds, and extent of elastic surfaces,”Osen90) என்பதே. அந்த துறையில் “நெகிழ்ச்சி கோட்பாட்டில்”( theory of elasticity) சோஃபியின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதை நிரூபிக்கும். எப்படியாயினும், அகாடமியின் பரிசு என்பது  உடனடி முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், அந்த பரிசானது சோஃபி ஜெர்மைனை  அந்தக் காலத்திய  முக்கிய கணிதவியலாளர்களின்  வரிசையில் அவரை சமமாக வைத்து அறிமுகப்படுத்தியது என்பது பெரிய விஷயமாகும். பொதுவாக அறிவியல் அகாடமி உறுப்பினரின் மனைவிதான்  ஜீன்-பாப்டிஸ்ட்-ஜோசப் ஃபோரியரின் (of Jean-Baptiste-Joseph Fourier) உதவியுடன் அகாடமியில் கலந்துகொள்வார். அப்படி இல்லாமல், அகாடமியில் கலந்து கொண்ட முதல் பெண் சோஃபியா ஜெர்மைன்தான். பின்னர் பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட்டால் அவர் பாராட்டப்பட்டார் மற்றும் அவர்களின் அமர்வுகளில் கலந்துகொள்ளவும் அழைக்கப்பட்டார். இது அந்த கல்வி குழுமம் ஒரு பெண்ணுக்கு வழங்கிய மிக உயர்ந்த மரியாதை என்றும் சொல்லப்படுகிறது.

  கணித கோட்பாடு கண்டுபிடிப்பும் மரணிப்பும்

  சோஃபி ஜெர்மைன் ஒரு பிரபலமான ஆண் கணிதவியலாளருடன் 1820களில் கூட்டு பணியாளராகவும்  (Dalmedico 122) பணிபுரிந்தார். சோஃபி  தனது சான்றுகளைச் செழுமைப்படுத்தவும் எண் கோட்பாட்டில் பற்றி பணியாற்றவும் ஆண் கணிதவியலாளருடன் பணியாற்றினார்.

  1829ல் சோஃபி  ஜெர்மைனுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. அதன்பின்னர் அவர் இரண்டு ஆண்டுகள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ரொம்பவும் வேதனைப்பட்டார். ஆனால் அது அவரது கோட்பாடுகளில் தொடர்ந்து பணியாற்றுவதைத் தடுக்கவில்லை மற்றும் புற்றுநோய் கண்டறியப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீள் மேற்பரப்புகளின் வளைவு (paper on curvature of elastic surfaces ) பற்றிய சோஃபியின் கட்டுரை விஞ்ஞான இதழான ‘க்ரெல்லின் ஜர்னல்’ (Crelle’s Journal’)இல் வெளியிடப்பட்டது. ஆனால் சோஃபி ஜெர்மைனின் வழிகாட்டிகளில் ஒருவரான கார்ல் பிரெட்ரிக் காஸ், சோஃபி ஜெர்மைனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும்படி கோட்டிங்கன் (Gottingen) பல்கலைக்கழகத்திற்கு பரிந்துரை செய்தார். ஆனால், அது கிடைக்கும் முன்னரே சோஃபி ஜெர்மைன் தனது 55ம் வயதில் , ஜூன் 27, 1831 அன்று, மார்பகப் புற்றுநோயுடன் பெரும்போரிட்டு தனது வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொள்ள நேரிட்டது. 

  அடக்கம் பாரிசின் கல்லறையில்

  சோஃபி ஜெர்மைன் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவருக்கு குழந்தைகளும் இல்லை. சோஃபி ஜெர்மைன் தன் வாழ்க்கயை கணிதத்துக்கே அர்ப்பணித்துக்கொண்டார். சோஃபி தத்துவப் படைப்புகளையும்கூட எழுதினார். அவரை நன்கு அறிந்தவர்கள் சோஃபி ஜெர்மைன் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவர். பேசுவதற்கு மிகவும் இனிமையானவர் என்றும் தெரிவித்துள்ளனர். சோஃபி ஜெர்மைன் இறப்புக்குப் பின்னர் அவரது உடல் பாரிஸின் பெரே லாச்செய்ஸ் கல்லறையில் (Paris’s Père Lachaise Cemetery)  அடக்கம் செய்யப்பட்டது. 

  பாதுகாக்கப்படும் சோஃபியா ஜெர்மைனின் கல்லறை

  சோஃபி ஜெர்மைன் ஓய்வாக உறங்கும் இடம் அவரது கணித ஹீரோ ஆர்க்கிமிடிஸுடன் ஒரு விசித்திரமான அதிர்வுகளைக் கொண்டுள்ளது. அவரது அடக்கத்திற்குப் பிறகு, ஆர்க்கிமிடிஸின் கல்லறை பழுதடைந்தது. சிசிலியின் ரோமானிய ஆளுநரான சிசரோ, அது களைகள் மற்றும் புதர்களால் நிரம்பியிருப்பதைக் கண்டறிந்தார், அதை அழிக்க அவர் உத்தரவிட்டார். இதேபோல், சோஃபி  ஜெர்மைனின் கல்லறை பழுதடைந்த நிலையில் விழுந்தது, அதுவும் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்யப்படுவதற்கு முன்பு. ஆர்க்கிமிடிஸ் கல்லறை இப்போது தொலைந்துவிட்டது, ஆனால் ஜெர்மைனின் கல்லறை பாரிஸில் இன்னும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

  சோஃபியா ஜெர்மைனின் தேற்றம்

  ஜெர்மைனின் தேற்றம் என்பது ஜெர்மைனின் பிரமாண்டமான வடிவமைப்பின் சாம்பலில் இருந்து ஜெர்மைனின் தேற்றத்தின் பீனிக்ஸ் ஆக  உயர்ந்து எழுந்துள்ளது. 

  இறப்புக்கு பின்னரும் பெருமை பெற்ற ஆய்வுகள்

  ஜெர்மைனின் இறப்புக்குப் பின்னர் அவரது தேற்றத்திற்கு அப்பால் சோஃபி ஜெர்மைனின் வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதிகளை ரெய்ன்ஹார்ட் லாபன்பேச்சர் மற்றும் டேவிட் பெங்கெல்லி ஆகியோர் மறுஆய்வு செய்தனர், பின் 2010 இல், ரெய்ன்ஹார்ட் லாபன்பேச்சர் மற்றும் டேவிட் பெங்கெல்லி ஆகியோர் சொல்லிய தகவலின் அடிப்படையில் , மீண்டும் ஃபெர்மட்டின் கடைசி தேற்றத்தைப் பற்றிய சோஃபி ஜெர்மைனின் ஆராய்ச்சி முன்பு நம்பப்பட்டதை விட இப்போது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்றும் தெரிவிக்கிறது.

  இந்த திட்டத்திற்காக அவர் கண்டுபிடித்த துணை வழிமுறைகள் எல்லாம் அவரே சுயமாக கண்டுபிடித்த யோசனைகள் மற்றும் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டவை என்று லெஜென்ட்ரே மற்றும் பிற்கால ஆராய்ச்சியாளர்களுடன் அவரது படைப்புகளை ஒப்பிட்டுப் பேசுகின்றனர். ஆனால் இதில் ஃபெர்மட்டின் கடைசி தேற்றத்தில் தைரியமான, அதிநவீன, பன்முக, சுயமான படைப்புகளைக் காட்டுகிறது. சோஃபி ஜெர்மைனின் தேற்றம் என்று பெயரிடப்பட்ட ஒற்றை முடிவைவிட விரிவானது அவை. 170 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, அவற்றை , 1995இல், ஆண்ட்ரூ வைல்ஸ் இறுதியாக அனைத்து எண்களுக்கும் ஃபெர்மாட்டின் கடைசி தேற்றத்தை வைத்தே நிரூபித்தார்.

  போராட்டமே வாழ்க்கையான சோஃபி

  சோஃபி ஜெர்மைன் ஒரு புரட்சியாளராக இருந்தார். ஒரு பிரபலமான கணிதவியலாளராக மாறுவதற்காக அவர் சகாப்தத்தின் சமூக தப்பெண்ணங்களுக்கும் முறையான பயிற்சியின்மைக்கும் எதிராக போராடினார். எண் கோட்பாட்டில் அவர் பணியாற்றியதற்காக அவர் மிகவும் பிரபலமானவர், ஆனால் நெகிழ்ச்சி கோட்பாட்டில் அவரது பணி கணிதத்திற்கும் மிகவும் முக்கியமானது. அவர் ஒரு நடுத்தர வர்க்கப் பெண்ணாக இருந்தார். ஒரு புரட்சியின் உறுப்பினரைப் போலவே, அவரது வாழ்க்கையும் விடாமுயற்சியும் கடின உழைப்பும் நிறைந்தது. கணிதத் துறையில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக அவர் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படுவதற்கு நீண்ட காலம் பிடித்தது. ஆனால் அவர் அதை விட்டுவிடவில்லை. இன்றும்கூட, அவர் ஒரு பெண் என்பதால் எண் கோட்பாடு மற்றும் கணித இயற்பியலில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக அவருக்கு ஒருபோதும் கடன் வழங்கப்படவில்லை என்று உணரப்படுகிறது.

  இறந்த பின்னர் பெருமைகள்

  இந்த காலகட்டத்தில் அவர் செய்த பணிகளில் ஃபெர்மாட்டின் கடைசி தேற்றம் மற்றும் சோஃபி ஜெர்மைனின் தேற்றம் என அறியப்பட்ட ஒரு தேற்றம் ஆகியவை அட ங்கும். இது 1738 முதல் 1840 இல் கும்மரின் பங்களிப்புகள் வரை ஃபெர்மட்டின் கடைசி தேற்றத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான முடிவாக இருந்தது. சோஃபியா ஜெர்மைன் 1831 இல் இறந்ததிலிருந்து பல வழிகளில் கௌரவிக்கப்பட்டு இருக்கிறார்.  பாரிஸில் உள்ள தெரு ஒன்றுக்கு சோஃபி ஜெர்மைன் என அவரது நினைவாகப் பெயரிடப்பட்டது. மேலும் அவரது சிலை இப்போது பாரிஸில் உள்ள எக்கோல் சோஃபி ஜெர்மைனின் முற்றத்தில் உள்ளது. அவர் இறந்த 13 ரூ டி சவோய் வீடு ஒரு வரலாற்று அடையாளமாக நியமிக்கப்பட்டுள்ளது. சோஃபி ஜெர்மைன் ஹோட்டல் 12 ரியூ சோஃபி ஜெர்மைனில் அமைந்துள்ளது. வெள்ளிக்கோளில் உள்ள பள்ளம் ஒன்றுக்கு சோஃபி ஜெர்மைன் பெயர் சூட்டப்பட்டு அவரை பெருமைப்படுத்தியுள்ளனர்.

  இதையும் படிக்க | அறிவியல் ஆயிரம்: கருமுட்டையின் நுண்ணறையைக் கண்டுபிடித்த ரெக்னியர் டி கிராஃப்


  TAGS
  scientist

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp