காலிறுதியில் சாதிப்பார்களா ‘அட்லஸ் சிங்கங்கள்’

பள்ளிக்கூட நாட்களில் அட்லஸ் என்ற உலகப்பட புத்தகம் நம்மிடம் இருந்திருக்கும்.  அட்லஸ் என்ற மலை, ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடமேற்கே உள்ள மொராக்கோ நாட்டில் இருக்கிறது.
காலிறுதியில் சாதிப்பார்களா  ‘அட்லஸ் சிங்கங்கள்’

பள்ளிக்கூட நாட்களில் அட்லஸ் என்ற உலகப்பட புத்தகம் நம்மிடம் இருந்திருக்கும்.  அட்லஸ் என்ற மலை, ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடமேற்கே உள்ள மொராக்கோ நாட்டில் இருக்கிறது. அதனால், மொராக்கோ நாட்டு கால்பந்து வீரர்களுக்கு ‘அட்லஸ் சிங்கங்கள்’ என்பது இன்னொரு பெயர்.

உலகப்புகழ் பெற்ற பிரேசில் நாட்டின் கால்பந்து வீரர் பீலே. அவர் ஒருமுறை சொன்னார். ‘நான் கால்பந்தாட்டத்தின் மன்னன் என்றால், லார்பி பென்பாரெக் கால்பந்தாட்டத்தின் கடவுள்.

அட! யார் இந்த லார்பி பென்பாரெக் என்று கேட்கத் தோன்றுகிறதா? ‘கால்பந்தாட்டத்தின் கடவுள்’ என பீலேயால் பாராட்டப்பட்ட லார்பி பென்பாரெக், மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர். காசபிளாங்கா நகரத்தில் பிறந்தவர். இப்படியும் ஒரு கால்பந்து வீரர் இருக்க முடியுமா என அந்தக்காலத்து ரசிகர்களை மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்தவர் இந்த லார்பி பென்பாரெக்.

சிறுவயதில் பெற்றோரை இழந்து விட்டவர் பென்பாரெக். அவருக்கு கால்பந்து ஆட்டம் கவலைகளை மறக்க வைக்கும் ஒரு புகலிடமாக மாறியது. ஆப்பிரிக்காவின் முதல் கால்பந்து நட்சத்திரமாக உருவெடுத்த பென்பாரெக், பிரான்ஸ் நாட்டுக்கு இடம்பெயர்ந்தார். பிரான்ஸ் நாட்டின் மர்செயில்ஸ் அணிக்காகவும்,   பிரான்ஸ் அணிக்காகவும் அவர் ஆடியிருக்கிறார். பிளாக் பெர்ல் (கறுப்பு முத்து) என்பது அவரது செல்லப்பெயர். ‘கடவுளின் கால்’ என்பது லார்பி பென்பாரெக்கின் மற்றொரு செல்லப்பெயர்.

ஸ்பெயின் நாட்டின் அத்லெடிகோ மட்ரிட் அணி அந்தக்காலத்திலேயே 80 லட்சம் பிராங்க் (பிரெஞ்சு நாணயம்) கொடுத்து அவரை வாங்கியிருக்கிறது. பென்பாரெக்கின் அபார ஆட்டத்தால், அத்லெடிகோ மட்ரிட் அணி 1950, 1951ஆம் ஆண்டுகளில்  இரண்டு முறை கோப்பையை வென்றிருக்கிறது. 1956ஆம் ஆண்டு மொராக்கோ நாடு விடுதலையடைந்த பிறகு, அந்த நாட்டு கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராகவும் லார்பி பென்பாரெக் இருந்திருக்கிறார்.

தற்போது கத்தாரில் நடந்து வரும் உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியில், வரலாற்றில் முதன்முறையாக மொராக்கோ அணி காலிறுதிக்குள் நுழைந்திருக்கிறது. அதிலும், தகுதிச்சுற்று போட்டி ஒன்றில், உலகின் தலைசிறந்த இரண்டாவது அணியாகக் கருதப்பட்ட பெல்ஜியத்தை 2-0 என மொராக்கோ வீழ்த்தியது சிறப்பு. ஆக, கால்பந்தாட்டக் கடவுள் லார்பி பென்பாரெக் காலத்து வேகமும், விறுவிறுப்பும் மொராக்கோ வீரர்களுக்கு மீண்டும் வந்து விட்டதைப் போலிருக்கிறது.

தற்போதைய மொராக்கோ அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் அஷ்ரப் அக்கிமி. இவர், ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மட்ரிட்டில், மொராக்கோ நாட்டுப் பெற்றோர்க்குப் பிறந்தவர். அக்கிமியின் அம்மா துப்புரவுத் தொழிலாளி. அப்பா நடைபாதை வணிகர். 

அக்கிமிக்கு தலைமுதல் கால்வரை கால்பந்து ஆர்வம். அக்கிமி, தனது தாய் நாட்டு அணிக்காக ஆட முயற்சித்தபோது ஸ்பெயின் நாடு அனுமதி மறுத்துவிட்டது. இருந்தும் எதிர்ப்பை மீறி மொராக்கோ அணியில் இணைந்துகொண்டார் அக்கிமி. 

காலிறுதிக்கு முந்தையச் சுற்றில், ஸ்பெயின் அணியை மொராக்கோ எதிர்கொண்டு பெனால்டி சூட்அவுட்டில் ஸ்பெயினை 3-0 என வீழ்த்தியது. இதில் வெற்றி கோலை அடித்தவர் அக்கிமி. தான் பிறந்து வளர்ந்த ஸ்பெயின் நாட்டின் அணியைத் தோற்கடித்து, மொராக்கோ அணியை அஷ்ரப் அக்கிமி காலிறுதிக்கு  அழைத்துச் சென்றது ஒருவகையான காவிய நீதி.

மொராக்கோவை பிறப்பிடமாக கொண்ட மணிமணியான கால்பந்து வீரர்களில் பலர் மொராக்கோ அணிக்காக ஆடியதில்லை. எடுத்துக்காட்டாக மருவன் பெலய்னி. இவர் கடந்த உலகக்கோப்பைப் போட்டியில் பெல்ஜியம் அணிக்காக ஆடியவர். 

இருந்தும்கூட,  மொராக்கோ அணி மீண்டும் மூரி நிமிர்ந்துள்ளது. லார்பி பென்பாரெக் காலத்து பொற்காலம் மீண்டும் பூத்திருப்பதைப் போலத் தோன்றுகிறது.

மொராக்கோ அணி காலிறுதியைக் கடந்து, அரையிறுதியில் அடியெடுத்து வைத்தால் அது  அரிதிலும் அரிதான சாதனையாக இருக்கும். 

காத்திருப்போம். பார்ப்போம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com