‌ பூ‌ண்டியில் நீரி​ய‌ல், நீ‌ர் நிலை​யி​ய‌ல் ஆ‌ய்வு மைய‌ம்

திருவள்ளூரை அடுத்த பூண்டி நீர்த்தேக்க வளாகத்தில் செயல்பட்டு வரும் நீரியல் மற்றும் நீர்நிலையியல் ஆய்வு மையத்தில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 50 க்கும் மேற்பட்ட அணைகளின் மாதிரிகள் இடம் பெற்றுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருவள்ளூரை அடுத்த பூண்டி நீர்த்தேக்க வளாகத்தில் செயல்பட்டு வரும் நீரியல் மற்றும் நீர்நிலையியல் ஆய்வு மையத்தில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 50 க்கும் மேற்பட்ட அணைகளின் மாதிரிகள் இடம் பெற்றுள்ளன.

இது கல்விச் சுற்றுலா ஆய்வாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.      இந்த அணை வளாகம் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் அனைவரும் செல்லும் வகையில் அனுமதி பெறுவதை எளிதாக்க வேண்டும் என்ற கோரிக்கை சுற்றுலா ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் ஈர்க்கும்...: திருவள்ளூர் அருகே  அமைந்துள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பிரதான நீராதாரமாகவும் திகழ்கிறது. இந்த  நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு 77 ஆண்டுகள் ஆகின்றன.  பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிமனிதர்கள் பயன்படுத்திய கல்லாயுதங்கள் கொண்ட அருங்காட்சியகம், நீரியல் மற்றும் நீர் நிலையியல் ஆய்வு மையம் ஆகியவை இங்குள்ளன. 

மேலும் பல்வேறு பொழுது போக்கும் அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இதுபோன்ற காரணங்களால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக பூண்டி நீர்த்தேக்கம் விளங்குகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்விச் சுற்றுலாத் தலமாகவும், பண்டிகை, விடுமுறை நாள்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதி மக்கள் இங்கு வந்து செல்லும் சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.

குறிப்பாக இங்குள்ள  நீரியல் மற்றும் நீர் நிலையியல் சோதனை ஆய்வு மையத்தில் அகில இந்திய அளவில் பல்வேறு அணைக்கட்டுகளின் மாதிரிகள் இடம் பெற்றுள்ளன. இதனால் நீரியல் ஆய்வாளர்கள் வருகை தரும் இடமாகவும் உள்ளது  குறிப்பிடத்தக்கது.

நீரியல் மற்றும் நீர் நிலையியல் ஆய்வு மையம்: பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர்வள ஆதாரத்துறை சார்பில் நீரியல் மற்றும் நீர் நிலையியல் ஆய்வுக்கழக சோதனைக் கூடம் உள்ளது. இந்த ஆய்வு மையம் மூலம் நீரியல் மற்றும் நீர் நிலையியல் சம்பந்தமான நீர்த்தேக்கங்கள், கடலோர கட்டுமானங்கள் சம்பந்தப்பட்ட மாதிரி வடிவமைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இந்த மையத்தின் மூலம் கடற்கரையோரங்களில் மாற்றங்களை கண்காணித்தல், கடலோரப் பாதுகாப்புகளை ஆய்வு செய்தல் போன்ற பணிகளும்  மேற்கொள்ளப்படுகிறது. 

இங்கு கர்நாடகம், ஆந்திரம், தமிழக பகுதிகள் அடங்கிய சென்னை மாகாணமாக இருந்த போது 3 மாநிலங்களுக்கும் ஆன நீர்த்தேக்கங்களின் மாதிரிகள் இங்குதான் வடிவமைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் மேட்டூர், பூண்டி உள்பட தமிழகத்தில் உள்ள அணைகள் மற்றும் ஆந்திரத்தில் உள்ள அணைகள் என 58}க்கும் மேற்பட்ட அணைகளின் மாதிரிகள் இதில் இடம் பெற்றுள்ளன. 

அதோடு, தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அணைகளின் குறிப்புகள், சேதமடைந்தால் சரி செய்தல், வரத்து கால்வாய்கள் உள்ளிட்ட முழுவிவரங்களின் மாதிரிகள் இங்குள்ளன. இங்குள்ள கருத்தரங்கக் கூடத்தில் நீரியல் சம்பந்தமான ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் கொண்ட நூலகமும் உள்ளது.

 இதுபோன்ற காரணங்களால் பல்வேறு பகுதிகளில் இருந்து நீரியல் வல்லுநர்கள், பொறியாளர்கள் இங்கு வந்து செல்கின்றனர். அதேபோல், பூண்டி நீர்த்தேக்கத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளும், இங்கு இடம் பெற்றுள்ள மாதிரி அணைகளை பார்வையிடுவதில் ஆர்வமாக உள்ளனர்.

அனுமதியை எளிதாக்க கோரிக்கை: சுற்றுலா ஆர்வலர் சுந்தர்ராமன் கூறியது: பூண்டி நீர்த்தேக்கத்தை பொதுப்பணித்துறையும், சுற்றுலாத்துறையும் இணைந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். மேலும், அதிகரிக்கும் வகையில் சிதைந்துள்ள பாம்புப் பண்ணையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். அதேபோல் பூங்காக்களில் சிதிலமடைந்து காணப்படும் சிலைகள், பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் பொழுதுபோக்கும் ஊஞ்சல், கொடை ராட்டினம், சறுக்கு விளையாட்டு, ஏற்ற இறக்க சமதூக்கி விளையாட்டு உள்ளிட்டவைகளை சீரமைக்க வேண்டும். 

அதேபோல், இங்குள்ள நீரியல் ஆய்வு மையம், பூங்காக்கள், பொழுது போக்கும் பூங்காக்கள் போன்ற இடங்களில் ஆங்காங்கே சுகாதார வளாகம், குடிநீர் குழாய்கள் அமைக்க வேண்டும். அதேபோல் வயதானோர் ஓய்வு எடுக்கும் வகையில் சாலையோரம் நிழற்குடையுடன் கூடிய இருக்கையை ஏற்படுத்த வேண்டும். நீரியல் மையத்துக்கு செல்லும் பாதையை சீரமைத்து சுற்றுச்சூழல் பூங்காவை செம்மைப்படுத்த வேண்டும். அதோடு இங்கு செல்ல அனுமதியை எளிதாக்குவதன் மூலம் சுற்றுலா பயணிகள், பள்ளி கல்லூரி மாணவர்களை அதிகம் ஈர்க்கவும் முடியும் என்றார் அவர்.

இதுகுறித்து பூண்டியில் உள்ள நீரியல் மற்றும் நீர் நிலையியல் ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:  

இந்த ஆய்வு மையமானது அகில இந்திய அளவில் பூணேயிலும், திருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீர்த்தேக்க வளாகத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1944}ஆம் ஆண்டு முதல்   செயல்பட்டு வருகின்றன.

 இங்கு நீரியல் சம்பந்தமான புத்தகங்கள் அடங்கிய நூலகம், கருத்தரங்க கூடம், நீரியல் ஆய்வாளர்கள் அமரும் இடம், ஆய்வு மாதிரிகள் அடங்கிய வளாகம், ராட்சத ஜெனரேட்டர்கள் அடங்கிய மோட்டார் அறைகள் உள்ளன. 

அதோடு, மேட்டூர் அணை, பூண்டி நீர்த்தேக்கம், ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட் முதல்   கிருஷ்ணா கால்வாய், சாத்தனூர் அணை, ஆந்திர துங்கபத்ரா, ராஜஸ்தான் பாஞ்ச்சனா அணை உள்ளிட்ட பல்வேறு அணைகளின் மாதிரிகள் இடம் பெற்றுள்ளன. 

இதுபோன்ற அனைத்து நீர்த்தேக்கங்களின் மாதிரிகள் அடங்கிய ஆய்வகம் உள்ளது. இது பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. 

ஆனால், கல்லூரி மாணவ, மாணவிகள், நீரியல் ஆய்வாளர்கள் ஆகியோர் மட்டும் சென்னையில் உள்ள பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர்(வடிவமைப்பு, நீரியல் ஆராய்ச்சி) அலுவலகத்தில் கட்டாயம் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 

வர்தா புயலின் போது இந்த மையம் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து நீரியல் ஆராய்ச்சி மையத்துக்கு செல்லும் ராட்சத குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. 

அதேபோல் இந்த வளாகத்தில் புதிதாக சுற்றுச்சூழல் அறிவியல் பூங்கா அமைக்கப்படவும் உள்ளது. இவை அனைத்தையும் சீரமைக்க ரூ.5 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அதைத் தொடர்ந்து இந்த மையம் முழு அளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இங்கு நாள்தோறும்  நீரியல் மையத்திற்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். அதனால் பொதுப்பணித்துறைதான் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com