'கருணாநிதியிடமிருந்து கற்க நிறைய மீதமிருக்கிறது'

தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் செல்வம் உள்ளிட்ட சில மிகச் சாதாரணமான மனிதர்கள் அவரை ஒரு முறை சந்தித்தோம். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தமிழகத்தின் ஏதோவொரு மூலையிலுள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும் செல்வம் உள்பட மிகச்  சாதாரணமான சில மனிதர்கள் அவரை ஒருமுறை சந்தித்தோம். அந்த சந்திப்பின் மூலம் அவரைப் பற்றிய நினைவுகளுடன், அவர் நாங்கள் எடுத்துச் சென்ற  பிரச்னையை  அணுகிய விதமும் “இந்த மனிதர் எப்பேர்பட்டவராக இருக்கிறார், எப்படி முடிவுகள்  எடுக்கிறார்,” என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

இன்று அந்த நினைவுகளையும் புரிதல்களையும் பகிர்வது அவருக்கேயான அகவேந்தலாக இருக்கும்.

2010, ஜனவரி, 24 காலை. 9 மணி இருக்கும். ரோகிணி அழைத்தார், ஆம் சமூகப் பிரச்னைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட திரைத்துறை ரோகிணியே தான். “செல்வம், நாளை காலை கலைஞர் சந்திக்க வரச் சொல்லியிருக்கிறார். வந்துடுங்க,” என்றார்.

“நாளை காலைக்கா?” மனதிற்குள் இன்று இரவுப் பயணத்திற்கு டிக்கெட் கிடைக்குமா என்று மனதில் ஒரு சின்ன எண்ண ஓட்டம்.

“ஆமாங்க. ஏன் கஷ்டமா?”

"எந்த வேலை இருந்தாலும் ஒதுக்கி வைச்சுட்டு வந்திடுறேன்.”

“யார் யார் அவரைச் சந்திக்க வருவோம்ன்னு பட்டியல் கேட்டு இருக்காங்க. 10 நிமிஷத்துல குடுங்கன்னு கேட்டு இருக்காங்க. சீக்கிரம் லிஸ்ட் குடுங்க,” என்றார்.

ஒரு நிமிடம் இருங்க சொல்கிறேன் என்று கூறிவிட்டு, மருத்துவர் ஜீவாவை அழைத்தேன்.

"என்னடா, அதிசயம் இந்த நேரத்துல கூப்புடற, எப்படி இருக்கற?"

“நல்லா இருக்கேன் டாக்டர். நாளைக்கு காலை நீங்க சென்னை வர வேண்டும். கலைஞரைச் சந்திக்கப் போகிறோம்,” என்றேன்.

எதிர்முனையில் சின்ன மௌனம். பெருந்திகைப்புடன் "என்னடா சொல்லற, எதுக்கு அவரப் பாக்கப் போற?”

“போற இல்லங்க, போறோம்ங்க” என்ற கூறிவிட்டு, “பிடி கத்திரி பத்தி பேசறதுக்குங்க டாக்டர். அவரைச் சந்திக்க ரோகிணி நேரம் வாங்கி இருக்காங்க. காலை 8 மணிக்குங்க. நீங்களும் வரனும்,” என்றேன்.

“நான் எதுக்குடா. நீங்கதான் அதுல  வேலை செய்யறீங்க. நீங்க போயிட்டு வாங்க. இதுல வேலை செய்யறவங்களைக் கூட்டிகிட்டு போடா. அதுதான் சரி. அவங்களுக்கு மகிழ்ச்சியா இருக்கும்,” என்றார்.

"அதனாலதான் உங்கள வரச் சொல்லறேன். தமிழ்நாட்டுல மரபணு மாற்றுப் பயிரைப் பற்றிப் பேசிய முதல் ஆள் நீங்கதான். அத மறக்காதீங்க. இளவரசர் சார்லஸ், மரபணு மாற்றுப்பயிர் பற்றி கூறிய - ஆங்கிலப் பத்திரிக்கைல வந்த 4 பத்தி செய்தியைப் படித்து விட்டு, என்னையும் படிக்க சொல்லிட்டு, உடனே தமிழாக்கியவர் நீங்கள்தான். தமிழ்நாட்டுல,  ஈரோட்டில்தான் மரபணு மாற்றுப் பயிருக்கு எதிரான முதல் எண்ணம் விழுந்ததுங்க. விதைத்தது நீங்க. அதானல தான் நீங்க கட்டாயம் வரனும். எந்த வேலை இருந்தாலும் மாத்திட்டு வந்துடுங்க. நான் மதியமே கிளம்பறேன்.”

“சரிடா வரேன். காலைலக்குள்ள வந்திடறேன்"

இரவே வந்திடுங்க. தங்கறத்துக்கு அறை போட்டு இருக்கேன், என்று கூறிவிட்டு பட்டியலைத் தயாரித்தேன். யாரெல்லாம் தங்களைத் தீவிரமாக இப்பிரச்னையில் இணைத்துக் கொண்டார்களோ அவர்கள் எல்லோர் பெயரையும் தெரிவித்தேன், ரோகிணிக்கு.

ஷீலுவுக்கு தகவல் தந்தேன். கூடவே எனக்கு பொய்யூர் கத்திரி வேண்டும். எப்படியாவது கொண்டுவர ஏற்பாடு செய்யுங்கள் என்றேன். பொய்யூர் தஞ்சை மாவட்டத்துக் கிராமம். பொய்யூர் கத்திரி அவரது இதயத்திற்குப் பிடித்த கத்திரிக்காய்.

அடுத்த அரை மணி நேரம் இருக்கிற வேலைகளை மாற்றி அமைக்கிறேன். இரவு புகைவண்டிக்கு டிக்கெட் கிடைப்பது சிரமம். மதியமே கிளம்பிவிட முடிவு செய்துவிட்டு, இருக்கும் அறிக்கைகள், ஆய்வு அறிக்கைகள், அரசின் அறிக்கைகள், நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தகவல் உரிமைச் சட்டத்தில் பெற்றது என நிறைய தாள்களை, புத்தங்களை எடுத்துக் கொண்டு மதியம் கிளம்பியாகிவிட்டது.

எதை முதலில் பேசுவது, எப்படி வாதங்களை முன்வைப்பது, அவர் என்ன கேட்பார், என்னென்ன எதிர்பார்ப்பார் என்று யோசித்துக்கொண்டே இரயில் பயணம் ஓடியது. பயணம் முழுக்க கையேட்டில் அடித்து அடித்து எழுதினேன்.

இரவு அறை சேரும்போது சென்னை நண்பர்கள் இருந்தார்கள். சின்னதாக ஒரு கூட்டம், சில அலைபேசி கலந்துரையாடல்கள். என்னென்ன விவரங்கள் தேவை என்று இறுதிப்படுத்தினோம். மருத்துவர் சிவராமனிடம் காலை 7.30-க்குள் சிலவற்றை நகலெடுத்துக் கொண்டுவர வேண்டிய வேலை ஒப்படைக்கப்பட்டது. அப்போது இரவு 10.30. “என்னங்க செல்வம், இனிமேலா, எப்படி,” என்று ஒரு கணம் யோசித்தவர். சரிங்க காலை எடுத்துகிட்டு வந்திடறேன் என்றார்.

முதல்வர் கலைஞரிடம் தர வேண்டியவற்றை அடுக்கி வைத்துக்கொண்டு, ஆதாரங்களை லாஜிக்கலாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தேன். உள்ளே வந்த டாக்டர் ஜீவா, செய்யும் வேலைகளைப் பார்த்துவிட்டு, “என்னப்பா பண்ணிகிட்டு இருக்கீங்க”

“நாளைக்கு கலைஞரிடம் தர வேண்டியவற்றை அடுக்கிவைச்சுகிட்டு இருக்கோம்ங்க”

“ஏன்டா, வெட்டிவேலை செஞ்சுகிட்டு இருக்கீங்க. அவரு முன்னாடியே முடிவு செஞ்சுட்டார். நாளைக்கு பிடி கத்திரி வேண்டாம்னு சொல்லிடுவார். போய் படுங்க. காலைல பாத்துக்கலாம்.”

“என்ன சொல்லறீங்க டாக்டர்?”

“ஆமாம் செல்வம். அவரு இதபத்தி ஏற்கெனவே விவரங்கள கேட்டு வைச்சு இருப்பார். ஒரு முடிவுக்கும் வந்து இருப்பார். இதுக்காக வேலை செய்யறவங்க கிட்ட கேட்டு செஞ்சா மாதிரி இருக்கனுங்கறதுக்காகத் தான் கூப்பிட்டிருக்கார். நீங்க ஒரு பேப்பர்கூட குடுக்கலைன்னாலும் அவரு பிடி கத்திரி வேண்டாம் என்று சொல்லிடுவாரு. போய்ப் படுங்க. இப்பவே மணி 3 ஆச்சு”, என்று கூறி விட்டு சென்றுவிட்டார்.

குருதான். ஆனாலும் அவரு சொன்னா கேக்கற சீடனில்லையே நாம. இன்னொரு மணி நேரம் வேலையை முடித்துவிட்டுப் படுத்தோம்.

காலை 7.30-க்கு கோபாலபுரம் சென்று விட்டோம். சிவராமன் கற்றையாகத் தாள்களை அடுக்கி வைத்துக்கொண்டு வந்தார். ஷீலு ஒரு கைப்பை நிறைய கத்திரியோடு வந்தார். “ஒரு தனி ஆளைப் போட்டு, பொய்யூரே போய் வாங்கிக் கொண்டுவரச் சொன்னேன், இந்தாங்க,” என்றார்.

சண்முகநாதன் வெளியே வந்து, “கத்திரிக்காகாரங்க, வாங்க தலைவர் கூப்புடறார்”.

மருத்துவர் ஜீவா, சிவராமன், ரோகிணி, பெண்கள் அமைப்புக் குழுவின் ஷீலு, பச்சைப் புரட்சி குறித்து நூல் எழுதிய சங்கீதா (கைக் குழந்தையுடன்), பாதுகாப்பான உணவுக் கூட்டமைப்பின் ராம் மற்றும் நான் மாடி ஏறி உள்ளே சென்றோம்.

எங்கிருந்து தொடங்குவது என்று இன்னமும் புரிபடவில்லை.

அமர்ந்ததும், தமிழகம் பெருமையுடன் போற்றிக் கொண்டிருந்த அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை, மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கடிதத்தை அளித்து, “அவர் வர விரும்பினார். ஆனால் முக்கியப் பணி இருக்கறதால வர இயலவில்லை. தனது இயலாமையைத் தெரிவித்துக் கடிதம் கொடுத்துள்ளார்,” என்று கூறி கடிதத்தை அளித்தேன் (உண்மையில் அவரை இந்தப் பக்கம் அனுப்பியது வேளாண் பல்கலைக்கழகமே. அவர் இந்த வட்டத்திற்குள் வந்தது தனிக் கதை. தமிழகத்தில் பிடி கத்திரிக்கு தடை பெற்றதில் அவருக்கும் பங்கு இருப்பதை இப்போதுதான் முதல்முறையாக பொது வெளிக்குத் தெரிவிக்கிறோம். அப்போது வெளியிட்டால் அவர் இருந்த இடத்திற்கும் அவரது வளர்ச்சிக்கும் பாதிப்பு வந்திடலாம் என்று வெளியே சொல்லாமல் வைத்திருந்தோம்).

“அவரா? அவர் எப்படி உங்க கூட்டத்துல,” என்று கூறிவிட்டு “ஓ… மயில்சாமி இப்படிப் பாக்கிறாரா? அவரே இதை வேண்டாங்கறாரா”, என்று கூறிவிட்டு தலைஉயர்த்திப் பார்க்க, பெண்கள் இணைப்புக் குழுவின் தலைவர் ஷீலு கையில் வைத்திருந்த பையை இருவருமாக அவரிடம் அளித்தோம். “அம்பலவாணன் அண்ணன் உங்களுக்கு பொய்யூர் கத்திரி ரொம்ப பிடிக்கும் ன்னு சொன்னார். கொடுத்துனுப்பி இருக்கார், என்றதும் முகம் முழுக்க பூரிப்பு, சிரிப்பு, அம்பலவாணன் சொன்னானா. நல்லா இருக்கானா என்று கேட்டுக் கொண்டே வாங்கி சண்முகநாதனிடம் கொடுத்தனுப்பினார். “அம்மா இந்தப் பொய்யூர் கத்திரிக்காய்ல எண்ணெய்க் கத்திரி செய்வார். நல்லா இருக்கும்,” என்றார்.

“இந்தப் பொய்யூர் கத்திரிக்காய் காலாகாலத்துக்கும் இதே மாதிரி இருக்கனுங்க. பொய்யூர் கத்திரி மட்டுமில்லீங்க. தமிழ்நாட்டுல இருக்கற எல்லா கத்திரி வகைகளும் அதே மாதிரி இருக்கனுங்க. மரபுணு மாற்று கத்திரி வந்துட்டா எல்லா ரகமும் மரபணு மாற்றுக் கத்திரியா மாறிடுங்க, என்றேன்.

“அது வந்தா இதெல்லாம் எப்படி மாறிடும்?” - கலைஞர்.

“தேனீப் பூச்சிங்க மகரந்தத்தை இங்க இருந்து அங்க கொண்டு போய் சேர்த்து கலப்படம் ஆக்கிடுங்க. இப்படி கலப்படம் ஆகிட்டா, அத மறுபடியும் திரும்ப சரி செய்யவே முடியாதுங்க. செடி முழுக்க இருக்கற ஒவ்வொரு செல்லுக்குள்ளும் போய் உக்காந்துக்குங்க” என  சிவராமன் கூற,

“இதெல்லாம் நம்ம விஞ்ஞானிகளுக்குத் தெரியாதா?”

“தெரியுங்க, இது மட்டுமில்லீங்க, இத சாப்பிட்டா மனிதர்களுக்கு என்ன பாதிப்பு ஆகும், கால்நடைகளுக்கு என்ன ஆகுங்கற ஆய்வுகள்கூட செய்யலீங்க " என்றேன்.

முகம் உயர்த்தி அதிர்ச்சியோடு பார்த்தார்.

கையில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வேளாண்மை பல்கலைக் கழகத்திடம் பெற்ற கடிதங்களை அளித்தேன். ஏற்கெனவே அந்தக் குறிப்பிட்ட பகுதியை அடிக்கோடிட்டு மஞ்சளடித்து வைத்திருந்தேன்.

வாங்கி, அந்தப் பகுதியைப் படித்துவிட்டு, பின்னர் மூன்று பக்கமிருந்த அக்கடிதத்தை முழுமையாகப் படித்தார்.

அடுத்தடுத்துக் கேள்வி கேட்டார். நிறைய விவரங்களை அளித்தோம். அவர் தலை அசதிக் தூக்கத்தில் சாய்வது போல இருந்தது. சில விநாடிகள் நிறுத்தினேன். உடனே, தலைநிமிர்த்தி கண் விழித்து ம்ம்ம், என்ன நிறுத்திட்ட, சொல்லு, கேட்டுகிட்டு தான் இருக்கேன்ங்கற மாதிரி பார்த்தார்.

ஷீலு, மரு. சிவராமன், சங்கீதா, ராம், நான் என எல்லோரும் ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருந்த வாதங்களை எடுத்து வைத்தோம்.

இப்படியே ஓடியது நிறைய நேரம். 5 நிமிடம்தான் அனுமதி எங்களுக்கு. எவ்வளவு நேரம் ஓடியது என்று தெரியவில்லை. கடிகாரம் பார்க்க மனதில்லை. மரு. ஜீவா கண்ணால் பேசினார்.

“போதும்டா, சும்மா உங்கிட்ட இருக்கறதெல்லாத்தையும் போட்டு கஷ்டப்படுத்தாத”  என்கிற மாதிரி இருந்தது.

“சரி, என்ன செய்யனுங்கறீங்க” எனக் கேட்டார் கலைஞர்.

இறுதிக்கட்டம் வந்தாகிவிட்டது.  பிடி கத்திரிக்காயைத் தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையைக் கலைஞர் மனதில் நிறுத்துவதற்கான சதுரங்கத்தின் இறுதி நகர்த்தல்கள் வந்துவிட்டது.

“தடை செய்துடலாங்க, ஐயா”

தலை உயர்த்தி எங்களை நோக்கி முகத்தை வைத்துக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டே, அவருக்கே உரித்தான வகையில், தாடையைப் பெருவிரல் அடிப் பக்கம் தாங்கிட, மூன்று விரல்கள் மூக்கின் அருகே மடிந்திருக்க, ஆள்காட்டி விரலால் மூக்கின் வலது பக்கத்தைத் தட்டிக்கொண்டே இருந்தார். ஒரு 15-20 விநாடிகள்.

ஆழ்கடலின் ஆழ்ந்த அமைதி. காற்றாடி ஓடும் மெல்லிய சப்தம் மட்டுமே. பதைபதைப்பு மிகுந்த அந்த சில விநாடிகள்.

ம்ம்ம்ம்ம்ம், கண் விழித்து, “தடைன்னு சொல்ல வேண்டாம், சட்டச் சிக்கல் ஏதாவது வரலாம். அனுமதிக்க மாட்டோம்னு சொல்லிடுவோம்,” என்றார்.

மெரினாவில் எழுந்த அலை ஒன்று என் தலைக்குள் அடித்தது. பெரு மகிழ்ச்சி அலை. அதனூடாகவே, “என்னடா மனுசன் இவரு, இவ்வளவு நுணுக்கமா” என்று அதிர்ந்தேன்.

சரிங்க ஐயா, நன்றிங்க ஐயா, என்று சொல்லி எழுந்தோம்.

மருத்துவர் ஜீவா அவரிடம் சென்று குனிந்து, ஈரோடு லூர்துசாமி என்னோட மாமா என்றார். தலை உயர்த்திப் பார்த்து, முகம் முழுக்கப் பெரு மகிழ்ச்சியோடு, அட அப்படியா. அவன்தான்யா என்னோட எழுத்த முதல்ல புத்தகமா அச்சடித்துக் கொடுத்தான்”  என்றார்.

"நீங்க?"

நான் டாக்டரா இருக்கேன். அப்பா வெங்கடாசலம், என்று கூற தலை அசைத்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார். ஜீவாவிடம் சில நிமிடங்கள் அவரது ஈரோட்டு வாழ்க்கை நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார. ஜீவா கொண்டு வந்திருந்த அவர் எழுதிய நூல்களை அளித்தார். ஒவ்வொன்றின் தலைப்பையும் படித்து விட்டு தன் முன்னே இருந்த சிறு மேசையில் வைத்தார். அப்போதுதான் கவனித்தேன், வரிசையாக அடுக்கி வைத்திருந்த நூல்களில் மேலாக இருந்த நூல் ஒன்று, தமிழாக்கமாகி வந்திருந்த ஒரு யோகியின் சுய சரிதை.  வெளியே வந்து நேரம் பார்த்தோம். கலைஞருடன் கலந்திருந்த நேரம் 54 நிமிடங்கள்.

மிகப் பெரும் திகைப்பு. ஒரு மாநிலத்தின் முதல்வர். அவரது ஒவ்வொரு விநாடியும் மிக முக்கியமானது. அவரது சிறு தவறான அசைவுகூட பல்லாயிரம் மக்களின் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்தும். அத்தகைய இடத்தில் உள்ளவர் நமக்காக, இந்தப் பிரச்னையை முழுமையாகக் கேட்டு முடிவெடுக்க இவ்வளவு நேரம் ஒதுக்கினாரா. இவ்வளவு மெனக்கெடலா என்று திகைப்பு எங்களுக்குள். இதைப் பயணத்தின் போது பின்னர் நிறைய பேசித் திகைத்தோம்.

அவரது இல்லத்துக்கு வெளியே வந்ததும் பத்திரிகையாளர்கள் சூழ்ந்தனர்.

என்ன கேட்டீடங்க? என்ன சொன்னார் முதல்வர்? என்று ஓடியது. சில நிமிடங்கள்தான் செய்தியாளர்கள் சந்திப்பு. வண்டியில் ஏறி மவுண்ட் சாலை சேரும்போது ஒரு அழைப்பு. யாரிடமிருந்து என்று நினைவில்லை.  “அண்ணா, தமிழக அரசு பிடி கத்திரியை அனுமதிக்க முடியாதுன்னு ஸ்கிராலிங் ஓடுதுங்க, அண்ணா என்று தகவலை மகிழ்ச்சியோடு பகிர்ந்தார்.

அப்படியா என்று கேட்டுவிட்டு ஈரோட்டு நண்பர்களிடம் தெரிவித்ததும், “அடேங்கப்பா என்னடா வேகம் இது,” என்று கலைஞரை வியந்தார் மரு. ஜீவா.

இந்திய அளவிலான நண்பர்களிடம் இந்த விவரங்களைப் பகிர்ந்துவிட்டு புதுச்சேரி நோக்கி பயணித்தோம். மரு. ஜீவாவுக்கு வேறு பணிகள் அங்கே. சேரும் வரை எங்களது கைபேசிக்கு ஓய்வில்லை. அத்தனை அழைப்புகள். விவரங்கள் பகிர்தல்கள். எல்லோரும் வாழ்த்தினார்கள். இது நம் அத்தனை பேரின் வெற்றி. இந்த சிலரின் வெற்றி அல்ல என்று வெற்றியை பகிர்ந்தளித்துக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது.

நள்ளிரவு 3.30-க்கு வீடு சேர்ந்தேன். தொலைக்காட்சிகளில் ஏதாவது செய்தி வருகிறதா என இலவு காத்த கிளியாகக் காத்தேன். ஏதேனும் ஒன்றிலாவது இது பற்றி செய்தி வருமா என. காலை 8.50.

காலை, 26 ஜனவரி. தினமணியில் படத்துடன் முதல் பக்க செய்தியைப் படித்தேன்.

மாலை 4 மணிக்கு. மரு.சிவராமனிடம் இருந்து அழைப்பு. அண்ணே இப்ப கிளம்பி காலை 10 மணிக்கு வந்துடுங்க சென்னைக்கு, திட்டக்குழுவிடம் பிடி கத்திரி பற்றி கலைஞர் அறிக்கை கேட்டு இருக்காராம் முதல்வர்.  ஆகவே திட்டக் குழுவினருடன் சந்திப்பு இருக்கிறது. இரவே கிளம்பி வந்துடுங்க என்றார்.

ஆஹா என ஒரு தடுமாற்றம். இனிமேல் எப்படி டிக்கெட் புடிக்கிறது. விடுமுறை நாள் இரவாயிற்றே என்று தடுமாற்றம். டாக்டரிடமே நீங்களே சமாளிக்க முடியாதா? முனைவர் குமரவேல் குழுவில் இருக்கிறார். அவரிடம் பேசுகிறேன் என்று கூறி சுமையை அவர் தலையில் கட்டிவிட்டேன்.

திட்டக்குழு உறுப்பினராக இருந்த வனத்துறை அலுவலரும் வனவியல் ஆய்வாளருமான  குமரவேலிடம் இது பற்றி விரிவாகப் பேசினேன். நிறைய விவரக் குறிப்புகள் பகிர்ந்தேன்.

மறுநாள் கூட்டம் முடிந்த பின் சிவராமன் அழைத்துப் பேசியவற்றை விவரித்தார்.

நடந்த விவரங்களை மரு. ஜீவாவிடம் பகிர, அட இந்த ஆள இதனாலதான்டா யாரும் அசைக்க முடியாத ஆளா இருக்கார். எவ்வளவு நுட்பமாதான் எடுக்கற முடிவிற்கு எந்த சிறு பங்கமும் தடையும் வந்திடக் கூடாதுன்னு இருக்கார் பாரு என்றார்.

25ம் தேதி எடுத்த முடிவு இந்திய அரசின் விருப்பத்திற்கு மாறான ஒரு நடவடிக்கை. பெருநிறுவனங்களின் வணிக ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கை. இப்படியான ஒரு விஷயத்தில் தான் எடுக்கும் முடிவை எவரும் தடுத்திடக் கூடாது என்பதற்கு மாநிலத் திட்டக்குழுவின் பரிந்துரையைக் கேட்டு இருக்கிறார். மாநிலத் திட்டக்குழுவின் பரிந்துரைப்படி அனுமதி மறுக்கப்படுகிறது, தடை செய்யப்படுகிறது என்றால் இந்திய அரசோ, நீதி மன்றமோ எதுவும் செய்ய முடியாது. அதனாலதான் இப்படி யோசித்திருக்கிறார் என்று விளக்கினார் ஜீவா.

பின் இரு தினங்களுக்குப் பின் நன்றி தெரிவிக்கச் சென்றோம். சில நிமிட சந்திப்பே. சாதிச்சுட்டீங்க என்ற சண்முகநாதன் கூற, இல்லைங்கண்ணா, அவர் எடுத்த முடிவிற்கு தோள் கொடுத்தோம் அதுதான் உண்மை என்று கூற கூர்மையாகப் பார்த்துக்கொண்டே, தோளில் தட்டி சிரித்துக் கொண்டே நகர்ந்தார்.

மீண்டும் ஒரு முறை அவரை ஒரு முடிவெடுக்க நெருக்கிய நிகழ்வு ஒன்று உண்டு.

அது தமிழக வேளாண் சட்டம் என்ற புதிய சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சந்தர்ப்பம் அது.

இந்த சட்டம் வேளாண்மை படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க என்று சில விதிகளை உருவாக்கியது. அதில் ஒன்று, விவசாயிகள் தங்களின் அறிவை பிறருக்குப் பகிர்வதைத் தடை செய்தது. விதைகள் பரிமாறிக் கொள்வதிலும் சில கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த மசோதா சட்டமன்றத்தில் வரும் நாளிற்கு முந்தைய இரவு தோழர் பாலகிருஷ்ணன் தொலைபேசியில் அழைத்து இப்படி ஒரு மசோதா இருக்கிறது, நாளை வருகிறது. உங்கள் கருத்து என்று கேட்டார். அப்போதே இதை எதிர்க்க வேண்டிய அவசியம் பற்றி கூறினேன். ஆனால் மசோதா நிறைவேறியது.

இதுபற்றி விரிவாக மக்களிடமும், விவசாயிகளிடமும் விளக்கினோம். தமிழகம் எங்குமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. கலைஞருக்கு நெருக்கமான எழுத்தாளர். சோலையிடம் இதுபற்றிப் பேச, அவர் சட்டத்தைக் கடுமையாக விமர்சித்து எழுதினார். அவர் எழுதியதும் கலைஞர் அவரைத் தொலைபேசியில் அழைத்து விவரங்கள் கேட்டிருக்கிறார்.

அதேசமயத்தில் பல்வேறு முகாம்களில் இருந்து சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென கடிதங்கள் பறந்தன. ஏறத்தாழ மூன்று மாதங்கள் இது நடந்தது. எதுவுமே நடக்கவில்லை. சோலையிடம் விசாரித்தால், அவர் என்னிடம் கேட்டு விட்டார். வருத்தப்பட்டார். நம்ம விவசாயிங்களுக்கு இருக்குற புரிதல்கூட நம்ம அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் இல்லாம இருக்குன்று சொல்லி வருத்தப்பட்டார். எனவே கவலைப்படாதீங்க. எப்ப செய்யறதுன்னு அவருக்குத் தெரியும் என்றார்.

அவர் எப்படி இயங்குகிறார் என்பதைத்தான் அறிந்திருந்தோமே. அதனால் மென்மையான அழுத்தங்கள் மட்டும் தந்து கொண்டிருந்தோம். அவரோ நிறைவேற்றிய சட்ட மசோதாவை சட்டமாக்க ஆளுநருக்கு அனுப்பாமல் அரசே வைத்திருந்தது தெரிந்தது. இதை சட்டமாக மாற்ற ஆளுநருக்கு அனுப்ப வேண்டாம் என்று தெரிவித்துவிட்டதாக தகவல் கிடைத்தது.

தான் கொண்டு வந்து நிறைவேற்றிய சட்ட மசோதாவை தானே இரத்து செய்வது என்பது எந்த முதல்வருக்கும் கடினம்தான். நிறைய விமர்சனங்களை அரசியல் ரீதியாக சந்திக்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு அவல் கொடுத்தது போல் ஆகிவிடும்.

அதே சமயம் சமூக இயக்கங்களின் கருத்துகளுக்கும் அதில் உள்ள உண்மையை அங்கீகரித்துச் செயல்படவும் வேண்டும். சட்டமாக்காமல் அப்படியே நிறுத்தி வைத்துவிட்டால் எந்த விமர்சனமும் வராது. இந்த முறை அவரது அணுகுமுறை வேறு விதமாக இருந்தது.

அவரது காலத்திய அரசியல்வாதிகள், சமூக செயல்பாட்டாளர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுத்தார்கள். அவர்களோடு உரையாடவும், உறவாடவும் இடம் கொடுத்தார்கள். இந்திய அளவிலேயே இந்தப் போக்கு இப்போது மாறிவிட்டது. அதிகாரிகள், உளவுத் துறை, பொருளாதார வல்லுநர்கள் குழு அவர்களோடு அரசதிகாரத்தின் மேல்மட்டங்கள் நின்றுவிட்டது. சமூகத்தின் அறிவு அரசின் கவனத்திற்கும், முடிவெடுக்கவும் எடுத்துச் செல்லப்படுவது தடைப்பட்டுவிட்டது.

இது கலைஞரின் வழி எனவும், அவர் தன் சமூகத்தின் உணர்வுக்கும், அறிவுற்கும் அளித்த இடம் இதுவெனவும் கூற வேண்டும்.

ஒரு சமூக செயல்பாட்டாளராக அரசின் மேலிடம் எப்படி இயங்கும், எப்படி பிரச்னைகளை அணுகுகிறது, எப்படி தன் முடிவுகளை அடுத்தடுத்து நகர்த்துகிறது என்பதை நேரடியாக அறிந்திட வாய்ப்பாக இருந்தது கலைஞருடனான சந்திப்பு.

அதனினும் பிரமிப்பாக இருப்பது கலைஞர் என்ற அந்த சிறந்த நிர்வாகி.

கலைஞரிடமிருந்து இன்னும் கற்க நிறைய மீதமிருக்கிறது.

[கட்டுரையாளர்: இயற்கை வேளாண் அறிவியலாளர், சமூக செயற்பாட்டாளர்]

ஆக. 7 - முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com