அறிவியல் ஆயிரம்: இந்தியாவை பெருமைப்படுத்திய கே.எஸ். கிருஷ்ணன்!

சர் கரியமாணிக்கம் சீனிவாச கிருஷ்ணன் இயற்பியலாளர். இந்தியாவின் நோபல் பரிசாளர் சர் சி.வி. ராமனுடன் இணைந்து பணியாற்றியவர்.
கே.எஸ். கிருஷ்ணன்
கே.எஸ். கிருஷ்ணன்

சர் கரியமாணிக்கம் சீனிவாச கிருஷ்ணன் என்ற இந்திய விஞ்ஞானியின் பெயரைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அவர்தான் இந்தியாவின் நோபல் பரிசாளர் சர் சி.வி. ராமனுடன் இணைந்து பணியாற்றியவர். இவர்  ஒரு இயற்பியலாளர் (பிறப்பு: டிசம்பர் 4, 1898; இறப்பு: ஜூன் 14, 1961). ராமன் சிதறலின் இணைக் கண்டுபிடிப்பாளராகவும் இருந்தார். இதற்காக அவரது வழிகாட்டியான சி.வி.ராமனுக்கு 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஆரம்பகால வாழ்க்கை

பொதுவாக கே.எஸ்.கிருஷ்ணன் அல்லது கே.எஸ்.கே என்று குறிப்பிடப்படும் கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணன், வைஷ்ணவ பிராமணக் குடும்பத்தில், 1898ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் நாள் பிறந்தார். இவர் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள விழுப்பனூர் என்ற குக்கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை பள்ளி ஆசிரியர். இவரது தந்தை தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவர். ஒரு விவசாயியும்கூட.

கல்வி

கே.எஸ்.கிருஷ்ணன், தனது தொடக்கக் கல்வியை வத்திராயிருப்பில்  உள்ள திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார். அவரது ஆசிரியர் அவருக்கு ஆரம்பக் கல்வியை ஆர்வத்துடன் கற்பித்தார். இரவு நேரங்களில் வானத்தில் மிளிர்கின்ற நட்சத்திரங்களைக் காட்டி ஆசிரியர் திருமலைகொழுந்துப் பிள்ளை, அவருக்கு அறிவியல் ஆர்வத்தை ஊட்டினார். ஆரம்பக் கல்வியை கே.எஸ்.கிருஷ்ணன் ,வத்திராயிருப்பில் முடித்தார். பின்பு திருவில்லிபுத்தூரில் உள்ள குருஞான சம்பந்தர் உயர்நிலைப்பள்ளியில் தனது அடுத்தகட்ட கல்வியைத் தொடர்ந்தார். அதன் பின்பு கிருஷ்ணன், மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் அடுத்தடுத்த படிப்புகளை முடித்தார்.

அறிவியல் மேல் காதல்

கே.எஸ்.கே.வுக்கு அறிவியல் மீதான ஆர்வம் அவரது பள்ளி நாட்களில் வளர்ந்தது. இதுகுறித்து கிருஷ்ணனே மேற்கோள் காட்டி கூறுவதாவது: 'அறிவியல் மீதான எனது முதல் காதல் 1911 இல் எனது உயர்நிலைப் பள்ளியில் நான்காவது படிவத்தில் (வகுப்பு 9) வந்தது. எனது ஆசிரியர் திருமலைகொழுந்துப் பிள்ளை. அவர்கள் ஒரு தொழில்முறை விஞ்ஞானி இல்லையென்றாலும், அறிவியலை தெளிவாகவும் வசீகரிக்கும் பாணியிலும் விளக்குவதில் வல்லவர். அவருடைய பாடங்கள் நம் மனதில் ஆழமாக பதிந்தது மட்டுமல்லாமல் மேலும் அறிவியலுக்கு நம்மை ஏங்க வைத்தது. இயற்பியல், புவியியல், வேதியியல் என எதுவாக இருந்தாலும், அவருடைய கற்பித்தல் பாணி தனித்துவமாக இருந்தது. அவர் வெறுமனே புத்தகத்திலிருந்து பாடங்களை மீண்டும் உருவாக்கவில்லை. அவர் எங்களுக்காக பல எளிய சோதனைகளை செய்து காட்டினார், மேலும் நாமே பரிசோதனைகள் செய்ய ஊக்குவித்தார். எனக்குத் தெரிந்த மிகச் சில ஆசிரியர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள், அவரை எனது முதல் அறிவியல் ஆசிரியராகப் பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். ஒரு வருடத்திற்குப் பிறகு எனது அறிவியலில் எனது உண்மையான ஈடுபாடு ஏற்பட்டது, எனது இயற்பியல் ஆசிரியர் எங்களிடம் ஒரு கருவியைப் பற்றி “கட்டுரை” எழுதச் சொன்னார். திடப்பொருட்களின் அடர்த்தியை அளப்பதற்காக நான் சொந்தமாக உருவாக்கினேன். சில நாட்களுக்குப் பிறகு, எனது கருவி ஒன்றும் புதிதல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பு நிக்கோலஸால் கண்டுபிடிக்கப்பட்டது. 'நிக்கோலஸ் ஹைட்ரோமீட்டர்' அப்போது பாடப் புத்தகப் பொருளாக இருந்தது' என்கிறார் கிருஷ்ணன் பிற்காலத்தில்

பணி

கே.எஸ். கிருஷ்ணன், பின்னர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் வேதியியல் துறையில் செய்முறை விளக்குநராகப் பணியேற்றார். இயற்பியலில் பட்டம் பெற்றிருந்தாலும் வேதியியலிலும் தான் சளைத்தவரல்ல என்பதைக் கிருஷ்ணன் நிரூபித்துக் காட்டினார். அந்தக் காலகட்டத்தில் உணவு இடைவேளை நேரத்தில் இவரைத் தேடி ஏராளமான மாணவர்கள் இயற்பியலிலும், வேதியியலிலும், கணிதத்திலும் தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள வருவார்கள். இவரது அறிவாற்றல் அண்டைக் கல்லூரி மாணவர்களையும் ஈர்த்தது. கட்டுக்கடங்காத கூட்டம் இவருடைய சேவையைப் பெறுவதற்காகத் தினசரி வந்து சென்றதை வரலாறு சொல்கிறது.

அறிவியலில் ஆர்வமும் திறமையும்

கிருஷ்ணனிடம் அறிவியலில் ஆர்வமும், திறமையும் அபரிமிதமாக இருந்தது. அன்றைய நாட்களில் அணு ஆற்றல் ஆணையம், பல்கலைக்கழக மானியக் குழு, அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் போன்ற அத்தனை முன்னோடி அமைப்புகளிலும் இவரது பங்களிப்பு இருந்தது. அவர் தனது அறிவியல் வெளிப்பாடுகளைத் தமிழ் மொழியில் அழகாகவும், எளிமையாகவும் எடுத்துரைக்க முடியும் என்பதைத் தீவிரமாக நம்பினார். சிக்கலான அறிவியல் கருத்துகளைக்கூட, எளிமையாக எடுத்துரைக்க முடியும் என்ற எண்ணத்தை இவருக்கு விதைத்தது. இவரது பள்ளி அறிவியல் ஆசிரியர் திருமலைகொழுந்துப் பிள்ளை. இதை அவர் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். 

அதிகாலையிலேயே ஆய்வகம் நோக்கி

டாக்டர் கே.எஸ்.கிருஷ்ணன் தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் என்ற மூன்று மொழிகளில் வித்தகராகத் திகழ்ந்தார். அவர் சிறந்த விளையாட்டு வீரரும்கூட. டென்னிஸ் விளையாட்டிலும், கால்பந்திலும் அளவு கடந்த ஆர்வம் கொண்டவர். தினசரி காலை நேர நடைப்பயிற்சி முடித்தபின்பு, குளிர்ந்த நீரில் குளித்து முடித்து அதிகாலை 6 மணிக்கு முன்பாகவே ஆய்வகத்தில் இருப்பது இவரது அன்றாட நடவடிக்கையாகும். 

பல்துறை வித்தகர் கிருஷ்ணன்

கிருஷ்ணனின் ஆர்வம் அறிவியல் ஆய்வுகளோடு நின்றுவிடவில்லை. இலக்கியங்கள், தத்துவங்கள் என்று நீண்டுகொண்டே சென்றது. அவர் தமிழில் எழுதிய "நான் விஞ்ஞானத்தில் ஈடுபட்ட விதம்" என்ற கட்டுரையை மிக நேர்த்தியாக எழுதியுள்ளார். "சூரிய சக்தி" என்ற கட்டுரையும் ,"பூமியின் வயது என்ன?" என்ற கட்டுரையும் இவரது ஆய்வின் வெளிப்பாடுகளை உலகிற்குப் பறைசாற்றியது. அணு ஆயுதத்திற்கு எதிரான சமாதான நோக்கில் உருவாகிய பக்வாஸ் இயக்கம் போன்ற பல்வேறு தளங்களிலும் இவரது பங்களிப்பை அளித்தார். சர்.சி.வி ராமனுடன் பணிபுரிந்த நாட்கள் தனக்கு மிகுந்த மன நிம்மதியை அளித்ததாக கிருஷ்ணன் கூறுகிறார். அதன்பின்பு டாக்கா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபொழுது, ராமன் விளைவில் இருந்து விலகி காந்தத்தன்மை பற்றிப் படிக்கிறார். மீண்டும் ஒரு காலகட்டத்தில் அவர் கொல்கத்தாவிற்குத் திரும்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அவருக்கு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பணி கிடைக்கிறது.

ஆரம்ப கால தொழில்

கே.எஸ்.கிருஷ்ணன் 1920களில் கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் இணைந்தார். அங்கு ராமன் விளைவைக் கண்டறிவதில் டாக்டர் கே.எஸ்.கிருஷ்ணன் அளவு கடந்த ஈடுபாட்டுடன் கடின முயற்சி மேற்கொண்டார் ராமன். அங்கு ஏராளமான திரவங்களில்  ஒளிச்சிதறல் மற்றும் அதன் தத்துவார்த்த விளக்கங்கள் பற்றிய சோதனை ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ராமன் சிதறல் கண்டுபிடிப்பில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தார்.

டாக்காவில் பேராசிரியர் பணி

கே.எஸ்.கிருஷ்ணன் 1928 ஆம் ஆண்டில் டாக்கா பல்கலைக்கழகத்திற்கு (தற்போது பங்களாதேஷில் உள்ள) இயற்பியல் துறையில் ரீடராக பணி ஏற்றுச் சென்றார். அங்கு படிகங்களின் காந்தப் பண்புகளை அவற்றின் அமைப்பு தொடர்பாக ஆய்வு செய்தார். கிருஷ்ணன், சாந்திலால் பானர்ஜி போன்ற பிற வளரும் விஞ்ஞானிகளுடன், பி.சி. குஹா மற்றும் அசுதோஷ் முகர்ஜி ஆகியோரும் இணைந்து, டைமேக்னடிக் மற்றும் பாரா காந்த படிகங்களின் காந்த அசமத்திருப்ப நிலையை (Anisotropy of Diamagnetic and Paramagnetic crystals) அளவிட நேர்த்தியான மற்றும் துல்லியமான சோதனை நுட்பத்தை உருவாக்கினர். அவர்களின் கண்டுபிடிப்புகள் 1933 இல் லண்டனின் ராயல் சொசைட்டியால் மேக்னே-கிரிஸ்டாலிக் ஆக்‌ஷன் (Magne-Crystallic Action) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. 

கொல்கொத்தாவில் பேராசிரியர்

1933 ஆம் ஆண்டில் அவர் கொல்கத்தாவுக்குத் திரும்பினார், மகேந்திரலால் சிர்கார்காரின்  அறிவியல் இந்திய சங்கத்தில்(the Indian Association for the Cultivation of Science) இயற்பியல் பேராசிரியராகப் பதவியேற்றார். அங்கு அவர் பானர்ஜியுடன் தொடர்ந்து பலனளிக்கும் வகையில் படிகங்களின் காந்தப் பண்புகளை மற்றும் அவற்றின் அமைப்பு தொடர்பாக விரிவாக ஆய்வும் விவாதமும் செய்து விளக்கினார். அவர்களின் கூட்டு ஆவணங்கள் மற்றும் தகவல்தொடர்புகள் நேச்சர், டெரஸ்ட்ரியல் மேக்னடிசம் மற்றும் வளிமண்டல மின்சாரம் மற்றும் ராயல் சொசைட்டி (Nature, Terrestrial Magnetism and Atmospheric Electricity, and by the Royal Society) ஆகியவற்றில் வெளியிடப்பட்டது. பல்வேறு இயற்பியல் இதழ்களில் அவர்கள் இந்த ஆய்வை வெளியிட்டனர். இன்று வரை சிறிய படிகங்களின் அமைப்பு மற்றும் போக்குகள் அவற்றின் செயல்பாடுகள் அவர்கள் கூறிய முறையிலேயே பின்பற்றப்பட்டு வருகின்றன. டாக்காவில் அவர்களின் சோதனைகள் மற்றும் கொல்கத்தாவில் தொடர்ந்த கூட்டு ஆராய்ச்சி ஆகியவை சிறிய படிகங்களின் காந்த உணர்திறனை அளவிடுவதற்கான கிருஷ்ணன் பானர்ஜி முறைக்கு வழிவகுத்தது. சர்.சி.வி ராமனுடன் இணைந்து ஒளிவிலகல் சம்பந்தமான 20-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை "நேச்சர்" என்ற இதழில் கிருஷ்ணன் எழுதியுள்ளார்

ராயல் சொசைட்டியின் உறுப்பினர்

கே.எஸ். கிருஷ்ணன் 1940-ம் ஆண்டு, ராயல் சொசைட்டியின் (FRS-Fellow of Royal Society) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1935ம் ஆண்டு அவரது ராயல் சொசைட்டி வேட்புமனுச் சான்றிதழ் பின்வருமாறு: "மூலக்கூறு ஒளியியல் மற்றும் காந்த-படிக நடவடிக்கை ஆகியவற்றில் அவரது ஆய்வுகளுக்காக தனித்துவம் பெற்றவர்: சர் சி.வி. ராமனுடன் விரிவான தத்துவார்த்தத்தில் ஒத்துழைத்தார். ஒளிச் சிதறல், மூலக்கூறு ஒளியியல் மற்றும் ராமன் விளைவு கண்டுபிடிப்பில் (1928) சோதனை ஆய்வுகள், படிக கட்டிடக்கலை மற்றும் தெர்மோ தொடர்பான காந்த அனிசோட்ரோபியின் முக்கியத்துவம் குறித்து பல மதிப்புமிக்க ஆய்வுகளை செய்தனர். இது தொடர்பான தகவல் சமீபத்தில் வெளியிட்டு வருகிறது. மிகக் குறைந்த வெப்பநிலையில் காந்த நடத்தை. படிகங்களில் உள்ள ப்ளோக்ரோயிசம் மற்றும் புகைப்பட-விலகல் தொடர்பான முக்கியமான வேலைகளை வெளியிட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஒரு தீவிர ஆராய்ச்சிப் பள்ளியின் தலைவர்.

அலகாபாத்தில் நேருவே ரசித்த பேச்சாளர் கிருஷ்ணன்

கே.எஸ். கிருஷ்ணன் 1942 ஆம் ஆண்டில், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், இயற்பியல் துறைத் தலைவராகவும் பணிபுரிந்தார். அங்கு அவர் திடப்பொருட்களின் இயற்பியலை, குறிப்பாக உலோகங்களைப் படித்தார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் கிருஷ்ணன் பணியாற்றிய காலத்தில் ஜவஹர்லால் நேரு, அடிக்கடி கிருஷ்ணனைப் பார்க்க வருவதுண்டு. எப்படிப்பட்ட பணியாக இருந்தாலும் அந்தப் பணியை ஒதுக்கிவைத்துவிட்டு, ஜவஹர்லால் நேருவுடன் கிருஷ்ணன் உரையாடச் சென்றுவிடுவார். அவருடைய பேச்சை ஜவஹர்லால் நேரு மிகவும் ரசித்துக் கேட்பார்.

மரணிப்பு

கே.எஸ்.கிருஷ்ணன் 1961 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் நாள் மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தைத் தழுவினார். இவரைப் பற்றிய பாடம் இந்திய விஞ்ஞையாக இந்தியாவின் பாடதிட்டத்தில்/ புத்தகத்தில் இடம் பெறுதல் அவசியம். 

கிருஷ்ணனின் முக்கிய பங்களிப்பு

  • ராமன் விளைவு (Raman Effect)
  • படிக காந்தம்(Crystal Magnetism)
  • காந்த வேதியியல்(Magneto Chemistry)
  • காந்த படிகங்களின் காந்த அனிசோட்ரோபியை அளவிடுவதற்கான நுட்பம்(Technique for measuring Magnetic Anisotrophy of magnetic crystals) 

பெருமைகள்

  1. கே.எஸ். கிருஷ்ணன் 1946 ஆம் ஆண்டு, அவரது பிறந்தநாள் அன்று கௌரவப் பட்டியலில், நைட் பட்டம் பெற்றார்.
  2. 1954 ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்ம பூஷன் விருது பெற்றார்.
  3. 1958 ம் ஆண்டில் இந்தியாவின் மதிப்புமிக்க பட்நாகர் விருதைப் பெற்ற முதல் நபர் கே.எஸ். கிருஷ்ணன்தான்.
  4.  1947ம் ஆண்டு, ஜனவரி 4ம் நாள், அன்று கே.எஸ்.கிருஷ்ணன் இந்தியாவின் தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் அமைக்கப்பட்ட ஆரம்பகால தேசிய ஆய்வகங்களில் இதுவும் ஒன்றாகும்.
  5. இவரை பெருமைப்படுத்தும் விதமாக கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின்  அரங்கத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டு, அந்த அரங்கத்தின் முன்பு இவர் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
  6.  தலைநகர் தில்லியில் ஒரு சாலைக்கு கே.எஸ். கிருஷ்ணன் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
  7. இவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய வத்திராயிருப்பு இந்து உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வகமும், அவரது திருவுருவச் சிலையும் இன்றும் உள்ளது.

"கிருஷ்ணனைப் பற்றி குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அவர் ஒரு சிறந்த விஞ்ஞானி அல்ல, ஆனால் அதற்கும் மேலான ஒருவர். அவர் ஒரு முழுமையான குடிமகன், ஒரு ஒருங்கிணைந்த ஆளுமை கொண்ட முழு மனிதர்" – ஜவஹர்லால் நேரு கூறியது. 

வகித்த பதவிகள்

  • சர்வதேச பௌதிக ஆராய்ச்சி இந்திய தேசிய கமிட்டியின் தலைவர்.
  • தேசிய பௌதிக ஆராய்ச்சி கமிட்டியின் இயக்குனர்.
  • சுதந்திர இந்தியாவில் பிரதமரின் விஞ்ஞான ஆலோசகராக முதலில் நியமிக்கப்பட்டவர்

எழுதிய கட்டுரைகள்

  • நான் விஞ்ஞானத்தில் ஈடுபட்டவிதம்.
  • பூமியின் வயது என்ன?
  • சூரிய சக்தி.
  • உலக புரட்சியாளர் ஐன்ஸ்டைன்.

சேகரிக்கப்பட்ட கிருஷ்ணனின் படைப்புகள்

  • கே.எஸ். கிருஷ்ணனின் அறிவியல் கட்டுரைகள் 1988 இல் தேசிய இயற்பியல் ஆய்வகத்தால் வெளியிடப்பட்டன. புது தில்லி டாக்டர் கே.எஸ். கிருஷ்ணன் சாலையில் ஆய்வகம் அமைந்துள்ளது.
  • 950 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகம், https://archive.org/details/in.ernet.dli.2015.5023 என்ற இணையதளத்தில் உள்ள இந்தியப் பொது நூலகத் தொகுப்பில் கிடைக்கிறது. 

[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com