அறிவியல் ஆயிரம்: உடல் பருமன், நீரிழிவு நோயைத் தடுக்கும் சிறுகுடல் நுண்ணுயிரிகள் - புதிய கண்டுபிடிப்பு

நம் குடலில் வாழும் நுண்ணுயிரிகளே நம் உடல் ஆரோக்கியத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. 
அறிவியல் ஆயிரம்: உடல் பருமன், நீரிழிவு நோயைத் தடுக்கும் சிறுகுடல் நுண்ணுயிரிகள் - புதிய கண்டுபிடிப்பு

நம் குடலில் வாழும் நுண்ணுயிரிகளே நம் உடல் ஆரோக்கியத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. 

கலிபோர்னியா பல்கலைக்கழகம் சான்டியாகோவில், உள்ள மருத்துவத் துறை பத்திரிகையில் அத்துறையின் பேராசிரியர் அமீர் ஜரின்பார், கடந்த ஜூலை 5ல் சிறுகுடல் நுண்ணுயிரிகள், மனிதனுக்கு செய்யும் நன்மைகள் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

மனித உடல் நோய் சோதனைக்கு உதவும் எலிகளின் மாதிரிகள்

எலிகள் எவ்வளவு சாப்பிட்டன மற்றும் அவற்றின் குடல் நுண்ணுயிரியின் தன்மையை மாற்றியமைக்கும்போது அவை எப்படி நடந்துகொள்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அதிகப்படியான உணவு, குறைந்த நுண்ணுயிரிகள் என்பது வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை விளைவித்தது. இது எலிகளை மனிதனுக்கு மாதிரிகளாக வைத்து சோதனை நடத்தும்போது தெரிய வந்த தகவலாகும்.

நம் குடலின் குடியிருப்பாளர்கள்: பாக்டீரியா & நுண்ணுயிரிகள்

நம் ஒவ்வொருவரின் குடலிலும் 500 முதல் 1,000 பாக்டீரியா இனங்கள் வாழ்கின்றன; ஆச்சரியமாக இல்லையா? அது மட்டுமா? ஒருவேளை 1,00,000 டிரில்லியன் நுண்ணுயிரிகள் கூட வாழலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சான் டியாகோ மருத்துவப் பள்ளியின் ஆராய்ச்சியாளர்கள் 'செல் ரிப்போர்ட்ஸ்' என்ற இதழில் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில், உணவு மற்றும் உணவு முறைகள் என்பவை, இந்த குடல்வாழ் நுண்ணுயிரிகளை எவ்வாறு பாதிக்கிறது என்றும் நமது ஆரோக்கியம், குறிப்பாக உடல் பருமன் மற்றும் வகை 2 நீரிழிவு வியாதியை  எவ்வாறு பாதிக்கிறது என்பதையும்  ஆராய எலி மாதிரிகளைப் பயன்படுத்தினர்.

எலிகள் மற்றும் மனிதர்களில் ஒரே மாதிரியான செயல்பாடு

எலிகள் மற்றும் மனிதர்கள் இரண்டிலுமே,  இலியம்(Ileum) என்னும் சிறுகுடலின் கீழ்ப்பகுதி என்பது சிறுகுடலின் இறுதி நீட்சியாகும். இது பெருங்குடலின் முதல் பகுதியான சீக்கத்துடன் (Caecum) இணைகிறது. இலியத்தில், திரவமாக்கப்பட்ட உணவில் இருந்து ஊட்டச்சத்துக்கள் வெளியேற்றப்படுகின்றன. பெருங்குடலின் தொடக்கத்தையும் குறிக்கும் சீக்கமில், தண்ணீரை பிரித்தெடுக்கும் செயல்முறை தொடங்குகிறது.

நுண்ணுயிரிகளின் பணி

மேலே குறிப்பிட்ட இரண்டு செயல்முறைகளும் சிக்கலான, ஆற்றல்மிக்க செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியமானவை. இந்த செயல்பாடுகள், நாம் உட்கொண்ட உணவு வகைகள் மற்றும் குடலில் குடியிருக்கும் நுண்ணுயிரிகளின் தன்மையினால், இதன் காரணிகளால் மிகவும் ஆழமாக பாதிக்கப்படுகின்றன. மேலும் அவைகளின் இருப்பு மற்றும் செயல்பாடுகள், நமது குடலின் செரிமானம், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுதல், வைட்டமின் உருவாக்கம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சி ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவுகின்றன. 

மாறிக்கொண்டிருக்கும் குடல் சூழலும் & குடியிருப்புவாசிகளும்

"நாம் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், குடல் நுண்ணுயிரிகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. இதனால் நாம் குடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள கடினமாக இருக்கும், எனவேதான், இந்நிகழ்வுகளை ஆய்வாளர்கள் தொடர்ந்து படம் எடுத்துக்கொண்டே இருப்பதன் மூலம் அறிகின்றனர்.

குடலின் சூழல் என்பது நாம் சாப்பிடும் உணவின் தன்மையை அடிப்படையாகக் கொண்டது என்பது மட்டுமின்றி, ஒரு நாளின் நேரத்தையும் அடிப்படையாகக் கொண்டது என்பதை, நாம்  உணர வேண்டியது அவசியம்" என்கிறார் மூத்த ஆய்வு ஆசிரியர் மற்றும் மருத்துவ உதவி பேராசிரியர் அமீர் ஜரின்பார். இவர் சான் டியாகோ மருத்துவத்துறை, மற்றும் சான் டியாகோ ஹெல்த்தின் இரைப்பை மற்றும் குடல் மருத்துவரும்கூட.

இந்த ஆய்வின் மூலம், ஒரு திரைப்படத்தைப் போலவே, நாள் முழுவதும் பல ஸ்னாப்ஷாட்களை எடுத்து குடலில் நடைபெறும் செயல்பாடுகளை அதன் தன்மையை அறிய முயற்சித்தனர். இது உணவு மற்றும் நுண்ணுயிர் உடல் எடை அதிகரிப்பு மற்றும் நீரிழிவு ஆகியவற்றையும்  பாதிக்கிறது.

வளர்சிதை மாற்றத்துக்கு உதவும் நுண்ணுயிரிகள்

குடல் நுண்ணுயிரிகளில் ஏற்படும் சுழற்சி மாற்றங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம், ஏனெனில், அவை சர்க்காடியன் சுழற்சி என்ற உயிரியல் கடிகாரத்திற்கு உதவுகின்றன. மேலும் உடலின் குளுக்கோஸ், கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு அமிலங்களின் கட்டுப்பாடு மற்றும் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்துக்கும் இது முக்கியமாக உதவுகிறது.

சோதனை மூலம் தகவல்

ஜரின்பார் மற்றும் அவரது குழுவின் சமீபத்திய ஆய்வுப்பணியில், இந்த காரணிகளின் தாக்கம் மற்றும் இடைவினைகளை பற்றி மேலும் தெளிவுபடுத்தியுள்ளனர்.  குறிப்பாக இலியம், செரிமானம் மற்றும் உறிஞ்சுதல் தொடர்பான அதன் தனித்துவமான செயல்பாடுகளின் அடிப்படையில். குறிப்பாக, உணவு-தூண்டப்பட்ட உடல் பருமன் ( Diet Induced Obesity-DIO) மற்றும் நேர-கட்டுப்படுத்தப்பட்ட உணவு  (Time-Resticted Feeding-TRF) ஆகியவை எலிகளின் மாதிரிகளில் நுண்ணுயிர் கலவை மற்றும் டிரான்ஸ்கிரிப்டோம்(Transcryptome) (ஒரு உயிரினத்தின் மரபணுவின் புரத-குறியீட்டு பகுதி) ஆகியவற்றை எவ்வாறு மாற்றுகின்றன என்பதையும் அவர்கள் கவனித்தனர்.

எலிகளின் மாதிரிகளில், உடல் பருமன் மற்றும் நேர-கட்டுப்படுத்தப்பட்ட உணவு (TRF) இல்லாதது (எலிகள் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்) குடல் நுண்ணுயிரிகள் தாளகதி (rthyms) மற்றும் குடல் கடிகாரங்களை (Intestinal Clocks) மாற்றியமைக்க உதவும் சமிக்ஞை பாதைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். 

குடலுக்கும், மனிதனுக்கும் ஆரோக்கியமான நுண்ணுயிரிகள்

இந்த கண்டுபிடிப்புகள், ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை பராமரிப்பதிலும், நமது உணவு மற்றும் நேர கட்டுப்படுத்தப்பட்ட உணவு முறைகளின் செல்வாக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இது வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் சர்க்காடியன் தாளங்களையும் மாற்றியமைக்கிறது என்று ஜரின்பார் கூறினார். மேலும் இது நுண்ணுயிரிக்கும் மனிதனுக்கும் இடையிலான மிகவும் சிக்கலான உறவு, இதில் குடல் வாழ் நுண்ணுயிரிகள், மனிதனின் இரைப்பை குடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியத்தை தீர்மானிக்க உதவுகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆய்வாளர்களின் இப்போதைய பணி என்பது, எதிர்கால ஆய்வுகளில், குடல் எவ்வாறு செயல்படுகிறது அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அல்லது நாளின் நேரத்தில் நுண்ணுயிரியின் நிலையைப் பொருத்து குடல் செயல்பாட்டின் மீது மருந்துகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிய குறிப்பிட்ட தகவல்கள் மூலம்/சோதனைகள் மூலம் தெரிவிக்க முடியும்/தெளிவாக அறிய முடியும் என கருத்து தெரிவித்துள்ளனர்.  

கண்ணுக்குத் தெரியாத குடல் நுண்ணுயிரிகள் கட்டுப்பாட்டில் நம் ஆரோக்கியம்

எப்படி நம் குடலில் வாழும் நுண்ணுயிரிகள் நமது குடலைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன, அதுவும் நம் உடல் நன்மைக்கும், ஆரோக்கியத்துக்கும், நோயெதிர்ப்பு தன்மைக்கும்கூட அவை காரணமாகின்றன. அந்த நுண்ணுயிரிகளே நம் உடல் பருமனையும் கட்டுப்படுத்துகின்றன என்றால் உண்மையில் வியப்புதான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com