'முடியாது': உரிமைப் போராட்டத்துக்கு வித்திட்ட ரோஸா பார்க்ஸ்

மாண்ட்கோமேரியின் பிரிவினைச் சட்டம், அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உரிமைப் போராட்டத்துக்கு வித்திட்ட ரோஸா பார்க்ஸ்
உரிமைப் போராட்டத்துக்கு வித்திட்ட ரோஸா பார்க்ஸ்

1956ஆம் ஆண்டு.. பேருந்துகளில் அமெரிக்கர்கள் ஏறினால், ஆப்ரிக்க - அமெரிக்கர்கள் எழுந்து தங்களது இருக்கையை விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற மாண்ட்கோமேரியின் பிரிவினைச் சட்டம், அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அமெரிக்கருக்கு தனது இருக்கையை விட்டுக்கொடுக்க மறுத்த கருப்பின பெண் ரோஸா பார்க்ஸ் மூட்டிய தீ.. ஆப்ரிக்க-அமெரிக்கர்கள் நடத்திய மாண்ட்கோமேரி பேருந்து புறக்கணிப்புப் போராட்டமாக வெடித்து இந்த தீர்ப்புக்கு வழிகோலியது.

போராட்டம் என்றால்.. ஒன்றல்ல இரண்டல்ல.. 381 நாள்கள் நடைபெற்ற பேருந்து புறக்கணிப்புப் போராட்டம், மார்டின் லூதர் கிங் ஜூனியரை, அமெரிக்காவின் சமூக உரிமை அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக அடையாளம் காட்டவும்  காரணமாக அமைந்தது.

இதற்கெல்லாம் வித்திட்டவர் ரோஸா பார்க்ஸ். இந்த தீர்ப்பு எழுதப்படுவதற்கு சரியாக ஒரு ஆண்டுக்கு முன்பு, 1955ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி, மாண்ட்கோமேரியில், ஒரு பேருந்து இருக்கையில் அமர்ந்தபடி பயணித்துக் கொண்டிருந்த ரோஸா பார்க்ஸ், அதில் ஏறிய அமெரிக்கருக்கு தனது இருக்கையை விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டார். முடியாது என்று ஆணி அடித்தது போல சொல்லியேவிட்டார். ஆனால், அவர் அப்படி செய்வதற்கு அப்போது உரிமையில்லை. காரணம், மாண்ட்கோமேரியின் நகர விதிமுறைப்படி, ஒரு பேருந்தின் பின் இருக்கைகளில் ஆப்ரிக்க-அமெரிக்கர்களும், முன் இருக்கைகளில் அமெரிக்கர்களும் அமரலாம். ஒரு வேளை, அமெரிக்கர்களுக்கான இருக்கைகள் நிரம்பிவிட்டால், ஆப்ரிக்க - அமெரிக்கர்கள் தங்களது இருக்கைகளை நின்று கொண்டிருக்கும் அமெரிக்கர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறது அந்த விதி.

ஆனால் விதிமுறையை மீறி, ரோஸா பார்க்ஸ், தனது இருக்கையை அமெரிக்கருக்கு விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டார். சட்டப்படி இது குற்றம். 

அது மட்டுமா? மாண்ட்கோமேரியின் நகர அமைப்பே, ஆப்ரிக்க-அமெரிக்க மக்களுக்கு தனியாக குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்ததிலிருந்து, சில பேருந்துகளில் அவர்கள் ஏறவே கூடாது, வெள்ளையர்கள் ஏறினால் இறக்கிவிடப்படுவது என பல ஒடுக்குமுறைக்கு வித்திடும் வகையிலேயே வகுக்கப்பட்டிருந்தன.

இருக்கையை விட்டுக் கொடுக்க மறுத்ததற்காக ரோஸா பார்க்ஸ் 1955ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு உள்ளூர் சமூக உரிமைப் போராளிகள் மூலமாக பிணையில் விடுவிக்கப்பட்டார். தனது வாழ்நாள் முழுக்க அமெரிக்காவில் ஆப்ரிக்க -அமெரிக்கர்களுக்கு எதிராக நடைபெறும் ஒடுக்குமுறைகளைப் பார்த்தே வளர்ந்த ரோஸா பார்க்ஸ், அதற்கெதிராக கிளர்த்தெழுந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. காரணம், இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு முன்பே, அவர் அமெரிக்க வாழ் ஆப்ரிக்கர்களின் முன்னேற்றச் சங்கத்தின் செயலாளராக இருந்தார். 

அமெரிக்கர்களுக்கு இருக்கையை தர மறுத்த முதல் பெண் ரோஸா பார்க்ஸ் அல்ல, அதற்கு முன்பும் கூட சில பெண்கள் இருக்கையைத் தர மறுத்து கைது செய்யப்பட்டனர். இருந்தபோதும், ரோஸா பார்க்ஸ் கைது நடவடிக்கை அமெரிக்கா முழுவதும் தீயாகப் பரவியது. ரோஸா பார்க்ஸ் கைது நடவடிக்கை மூலம் போராட்டத்தைத் தூண்டி, பிரிவினைவாத சட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டனர் சமூக உரிமைப் போராளிகள். ரோஸா பார்க்ஸ கைது செய்யப்பட்டது தொடர்பாகவும், அதனைக் கண்டித்து டிசம்பர் 5ஆம் தேதி ஒரு நாள் பேருந்து புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்துவது எனவும் துண்டுச் சீட்டுகள் நகரம் முழுவதும் விநியோகிக்கப்பட்டன. காட்டுத் தீயைப் போல பேருந்து புறக்கணிப்புப் போராட்டம் பரவியது.

இந்த போராட்டம் நிச்சயம் கைகொடுக்கும் என்று போராட்டக்காரர்கள் நம்பினர். காரணம், மாண்ட்கோமேரி பேருந்துச் சேவையைப் பயன்படுத்துவதில் ஆப்ரிக்க-அமெரிக்கர்கதான் அதிகம். சொல்லப்போனால் 75 சதவீதம் பேர். போராட்டம் அறிவிக்கப்பட்ட நாள் வந்தது. அன்றைய தினம் ஒட்டுமொத்த ஆப்ரிக்க-அமெரிக்கர்களில் 90 சதவீதம் பேர் பேருந்துகளில் ஏறவில்லை. ஏறிட்டும் பார்க்கவில்லை.

போராட்டம் எதிர்பார்த்ததைவிடவும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. எனவே, இந்தப் போராட்டத்தை காலவரையறையின்றி நடத்த உள்ளூர் சமூக உரிமைகள் போராட்டத் தலைவர்கள் முன்னெடுத்தனர். 

மாண்ட்கோமேரி மேம்பாட்டுக் கழகம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதற்கு மார்டின் லூதர் கிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்கர்களுக்கு முன் இருக்கையும், ஆப்ரிக்க-அமெரிக்கர்களுக்கு பின்பக்க இருக்கையும் என்ற விதிமுறையை மாற்றி, முதலில் வருவோருக்கு இருக்கை என்ற கோட்பாட்டை இந்தக் கழகம் பரிந்துரைத்தது. அதிகளவில் ஆப்ரிக்க-அமெரிக்க மக்கள் பயணிக்கும் வழித்தடங்களில் ஆப்ரிக்க - அமெரிக்க பேருந்து ஓட்டுநர்களை பணியமர்த்தவும் வலியுறுத்தப்பட்டது. பெரிய அளவில் நட்டத்தை சம்பாதித்த போதும், அவ்வளவு எளிதில் இதற்கு சம்மதிக்கவில்லை பேருந்து நிறுவனங்கள். ஏராளமான அமெரிக்கர்களும் இந்த கோரிக்கைகளுக்கு எதிராக இருந்தனர். மார்டின் லூதர் கிங்கின் வீடு மீது குண்டுவீச்சு சம்பவங்களும், போராட்டக்காரர்களுக்கு எதிராக மிரட்டல்களும், பணி பறிப்பும் நடந்தேறின. பல முறை, போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

இப்படியே, பேருந்து புறக்கணிப்புப் போராட்டம் ஓராண்டுக்கும் மேலாக நீடித்தது, பேருந்து இருக்கை பிரிவினைவாத சட்டத்துக்கு எதிராக மாண்ட்கோமேரி மேம்பாட்டுக் கழகம் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இதனை விசாரித்த பெடரல் மாவட்ட நீதிமன்றம், 1956ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி பேருந்து இருக்கை பிரிவினைவாத சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீரப்பளித்தது. இதனை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு 1956ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. பெடரல் மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு அன்றைய தினம் உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 21ஆம் தேதி பேருந்து புறக்கணிப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

பேருந்து புறக்கணிப்புப் போராட்டம் நாடு முழுவதும் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறியது. மார்டின் லூதர் கிங்கும் நாடறியும் தலைவரானார். இதன் தொடர்ச்சியாக, மாண்ட்கோமேரி போராட்டம், இதர பகுதிகளுக்கும் பரவியது, ஆப்ரிக்க - அமெரிக்க இனத்தவருக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட பிரிவினைவாத சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தொடங்கியிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com