எரியும் இலங்கை: இலங்கையில் உள்ள உறவுமுறைகளின் பெயர்கள்; நேரடி ரிப்போர்ட்-19

இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்...
கோப்புப்படம்
கோப்புப்படம்

இலங்கையில் உள்ள உறவுமுறைகளின் பெயர்கள் குறித்துப் பார்க்கலாம். 

தந்தையின் உடன் பிறந்தாளை, 'அத்தை' என்று அழைக்கும் வழக்கம் யாழ்ப்பாணத்தில் மிகவும் குறைவு. 

தந்தையோடு பிறந்த பெண்களையும், தாயோடு பிறந்த ஆண்களின் மனைவியரையும், 'மாமி' என்றே அழைப்பது இவ்வூர் வழக்கம்.

பழைய தலைமுறையினர், தாயோடு பிறந்த ஆணை 'அம்மான்' என்றும், தந்தையுடன் பிறந்த பெண்ணின் கணவரை 'மாமா' என்றும் குறிப்பிட்டனர். இன்று 'அம்மான்' என்ற சொல் கைவிடப்பட்டு, 'மாமா' என்பதே இரு உறவுக்கும் பயன்படுகின்றது.

மனைவி கணவனை 'இஞ்சாருங்கோ', அல்லது 'இஞ்சாருங்கோப்பா' என்றும், கணவன் மனைவியை பெயரைச் சொல்லியோ அல்லது 'இஞ்சாருமப்பா' என்றுமோ அழைத்து வந்தனர்.

அக்காவின் கணவரை 'அத்தான்' அல்லது 'மைத்துனர்' என்றும், தங்கையின் கணவரை 'மச்சான்' என்றும், அண்ணாவின் அல்லது தம்பியின் மனைவியை 'மச்சாள்' என்றும் அழைத்தனர்.

'அண்ணி' என்ற சொல் மிக அரிதாகவே யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும், மாமா, மாமியின் மகனை 'மச்சான்' என்றும், அவர்களின் மகளை 'மச்சாள்' என்றும் அழைக்கும் வழக்கமும் இருந்து வந்தது. ஆனால், இன்றைய தலைமுறையினர் 'அண்ணி' என்று சொல்லத்தொடங்கிவிட்டார்கள்.
பெற்றோரையும் பிள்ளைகளையும் கொண்ட தனிக் குடும்பம் ஒன்றில் உள்ள உறவுகள்.

ஈழத் தமிழில் கணவன், மனைவி என்ற சொற்களுக்கு ஈடாக, யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் 'புருசன், பெண்சாதி' அல்லது 'என்னவள், என்னவன்' தாய், தந்தை, ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என்பவர்களாகும். இவர்களை அழைக்கப் பயன்படும் விளிச் சொற்களும், அவர்கள் பற்றிப் பிறருடன் பேசும்போது பயன்படுத்தும் குறிப்புச் சொற்களும் ஒரு பேச்சு மொழியின் அடிப்படையான சொற்களாகும்.

தற்காலத்தில் யாழ்ப்பாணத்துப் பிள்ளைகள் தந்தையை அப்பா என்றும், தாயை அம்மா என்றும் அழைக்கிறார்கள். இன்று வாழும் மூத்த தலைமுறையினரில் பலர், இவர்களை முறையே, 'அப்பு', 'ஆச்சி ' என அழைத்தனர். இடைக் காலத்தில் தந்தையை 'ஐயா' என்று அழைக்கும் வழக்கமும் இருந்தது.

அக்காலத்தில், பெற்றோரின் பெற்றோரை, 'பெத்தப்பு, பெத்தாச்சி, அம்மாச்சி, அப்பாச்சி, ஆச்சி' என்றார்கள். இன்று அவர்கள் 'அம்மம்மா, அப்பம்மா, அம்மப்பா, அப்பப்பா', சில வீடுகளில் 'தாத்தா, பாட்டி' எனவும் என அழைக்கப்படுகிறார்கள்.

இதுபோலவே பெற்றோரின் உடன் பிறந்த ஒத்தபாலாரும், சில பத்தாண்டுகளுக்கு முன்வரை, 'பெரியப்பு, சின்னப்பு, பெரியாச்சி, சின்னாச்சி, குஞ்சையா, குஞ்சம்மா என்றும் பின்னர் பெரியையா, சின்னையா' என்றும் அழைக்கப்பட்டு இன்று, 'பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா' அல்லது 'சித்தி' என்ற உறவுப்பெயரிட்டு அழைக்கப்படுகிறார்கள். 

பால் வேறுபாடின்றிப் பிள்ளைகளைக் குறிக்கும்போது, 'பிள்ளை' என்ற சொல்லே பயன்படுகின்றது. ஆண் பிள்ளையை 'ஆம்பிளைப் பிள்ளை' என்றும், பெண் பிள்ளையைப் 'பொம்பிளைப் பிள்ளை' என்றும் அழைக்கப்படும்.

உறவுச் சொற்களாக வழங்கும்போது, ஆண்பிள்ளையை 'மகன்' என்றும், பெண் பிள்ளையை 'மகள்' என்றுமே வழங்குவர். பல குடும்பங்களில், ஆண்பிள்ளையைத் 'தம்பி' என்றும், பெண்பிள்ளையை 'தங்கச்சி', அல்லது 'பிள்ளை' என்றும் அழைப்பது வழக்கம்.பிள்ளைகள் தங்களுக்குள் பயன்படுத்திக்கொள்ளும் உறவு முறைச் சொற்கள்.

'அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சி' மேற்சொன்ன உறவுகள் ஒன்றுக்கு மேற்பட இருக்கும்போது, 'பெரிய, சின்ன, இளைய, ஆசை, சீனி' போன்றவற்றில் பொருத்தமான ஒரு அடைமொழியைச் சேர்த்து, 'பெரியண்ணன், ஆசைத்தம்பி, சின்னக்கா' என்றோ, அவர்களுடைய பெயரைச் சேர்த்து, 'மறவன் அண்ணா, மதியக்கா' என்றோ வேறுபடுத்தி அழைப்பது வழக்கம்.

மேலே நான் குறிப்பிட பல உறவு முறைகள் இந்தியத் தமிழில் வேறுமாதிரி இருக்கும் என்பது என் கருத்து. எனக்கு வெளிப்படையாக அனைத்து இந்திய உறவுமுறைக்கான சொற்கள் தெரியவில்லை என்பதனால் நான் குறிப்பிடவில்லை. 

இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்தும் தமிழ் மொழியில் உள்ள வேறுபாடுகளையும் மறந்துவிட முடியாது. பொதுவாக தமிழகத்தில் பேசப்படுகின்ற தமிழ்ச் சொற்களில் இருந்து இலங்கைத் தமிழர்களின் பேச்சுத் தமிழ் வேறுபாடுகள் சில. 

சான்றாக இந்த சொற்றொடர்.'பேச்சு மொழி'

1. நான் கடைக்குப் போனேன். - 'தமிழ்நாடு மற்றும் மலேசியா சிங்கப்பூரில் பேசப்படும் வகை'

கடைக்குப் போனேன் நான். - 'இலங்கைத் தமிழர் பேசும் வகை'

2. எத்தனை நாள் உங்கள் நண்பர் வீட்டில் தங்கியிருப்பீர்கள்? - 'தமிழ்நாடு மற்றும் மலேசியா சிங்கப்பூரில் பேசப்படும் வகை'

எத்தனை நாள் உங்கள் நண்பர் வீட்டில் நிற்பீர்கள்? - 'இலங்கைத் தமிழர் பேசும் வகை'

3. நீ மகிழியிடம் பேசினாயா? - 'தமிழ்நாடு மற்றும் மலேசியா சிங்கப்பூரில் பேசப்படும் வகை'

4. நீ மகிழியிடம் கதைச்சியா? - 'இலங்கைத் தமிழர் பேசும் வகை'

இப்படியாக பல வேறுபாடுகள் இலங்கைத் தமிழர்களின் பேச்சு வழக்கில் காணமுடிகின்றது. 

இலங்கையில் பயன் பாட்டில் உள்ள சில சொற்கள்.
பேச்சுத் தமிழ் (பொருள்)

 ஆம்பிளை (ஆண்)
 இளந்தாரி (இளைஞன்)
 ஒழுங்கை (ஒடுங்கிய தெரு)
 கதிரை (நாற்காலி)
 கமம் (விவசாயம்/வயல்)
 கமக்காரன் (விவசாயி)
 காசு (பணம்)
 காணி (நிலம்)
 கொடி (பட்டம்)
 சடங்கு (விவாகம்)
 திகதி (தேதி)
 பலசரக்கு (மளிகை)
 பெட்டை (சிறுமி)
 பெடியன் (சிறுவன்)
 பேந்து/பிறகு (பின்பு)
 பொம்பிளை (பெண்)
 முடக்கு (பாதைத் திருப்பம்)
 வளவு (வீட்டு நிலம்)                                              
 வெள்ளாமை (வேளாண்மை)
 கதை (பேசு)
 பறை (பேசு)
 பாவி (பயன்படுத்து)
 பேசு (ஏசு)
 விளங்கு (புரிந்துகொள்)
 வெளிக்கிடு (புறப்படு/உடை அணிந்து தயாராகு)
 ஆறுதலா (மெதுவாக)
 கெதியா (விரைவாக)
 தேத்தண்ணி (தேநீர்)
 புதினம் - செய்தி
 கொழுவுதல் - மாட்டிவைத்தல் அல்லது இணைத்தல்.
 சத்தி - கக்குதல் 'வாந்தி'.
 தலையிடி - தலைவலி.
 அரியண்டம் - சிக்கல்.
 தேசிக்காய் - எலுமிச்சை.
 மச்சம் - இறைச்சி வகைகள்.
 துவாய் - துண்டு.
 நொடி - விடுகதை.
 பொழுதுபட - மாலை.
 அவா - அவர்கள்.                                                     
 கெலில் - ஆசை.
 கெதியா - விரைவாக, சீக்கிரமாக.
 ஆறுதலா - மெதுவாக.
 நித்திரை - தூக்கம்.
 கிட - படு.
 இனத்தாட்கள் - சொந்தக்காரர்கள்.
 வந்தவ - வந்திருக்கின்றனர்.
 சீவிக்கலாம் - வாழலாம்.
 கிட்டடியிலே - அண்மையில், சில நாட்களுக்கு முன்னர்.
 கண்டுட்டன் - பார்த்துட்டேன்.
 தமையன் - அண்ணன்.
 நாரி - முதுகு.
 திறமா - நன்றாக.
 காவிக் கொண்டு - தூக்கிக் கொண்டு.
 காணும் - போதும்.
 காணாது - பத்தாது.

- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com