இந்திராதிகாரம் பிறந்த கதை! - 16 : ஜூன் 26, 1975 - அதிகாரத்தின் பிடியில்... அதிரடிகள்

1975 நெருக்கடி நிலை அறிவிப்புக்கு முன் நிகழ்ந்தவை என்னென்ன? வரலாற்றின் பக்கங்களிலிருந்து... நாடு தழுவிய கைதுகளும் அதிகாரத்தின் முகமும்
அவசர நிலை பிரகடனம் (கோப்புப் படம்)
அவசர நிலை பிரகடனம் (கோப்புப் படம்)

ஜூன் 26, நெருக்கடியில்தான் பிறந்தது இந்த நாள்.

அதிகாலையிலேயே நூற்றுக்கணக்கான எதிர்க்கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். யார், எதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்? எங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள்? எப்போது விடுதலை செய்யப்படுவார்கள்? யாருக்கும் தெரியாது.

தலைநகர் தில்லியில் நாளிதழ்களே வெளிவரவில்லை. அச்சிடவே முடியாதபோது, எங்கிருந்து வெளிவருவது? நாளிதழ் அலுவலகங்கள் இருக்கும் பகுதிகளில் நள்ளிரவிலேயே அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலுக்கு வந்துவிட்டிருந்தது.

அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் இந்திரா காந்தியின் இல்லத்தில் காலை 6 மணிக்கு அவசரமாகக் கூட்டப்பட்டது மத்திய அமைச்சரவை. சுமார் 45 நிமிஷங்கள் நடந்த இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடர்பாக நேரிட்டுள்ள அசாதாரண நிலை பற்றியும் தலைவர்களைக் கைது செய்ய நேரிட்டது பற்றியும் பிரதமர் இந்திரா காந்தி விளக்கியதாகக் கூறப்பட்டது.

(இந்தக் கூட்டத்துக்கு முன்னதாக அதிகாலையிலேயே மேற்கு வங்க முதல்வர் சித்தார்த்த சங்கர் ராயுடன் சென்று குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதுவைச் சந்தித்தார் பிரதமர் இந்திரா காந்தி. இந்தச் சந்திப்பின்போதே நெருக்கடி நிலைப் பிரகடனம் பற்றி ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. முந்தைய நாளும், ஜூன் 25, இவர்கள் இருவரும் சேர்ந்தே குடியரசுத் தலைவரைச் சந்தித்துப் பேசினர் என்பதும் குறிப்பிடத் தக்கது. பின்னிரவில் உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டியையும் அழைத்து இந்திரா காந்தி ஆலோசனை நடத்தியிருக்கிறார்).

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, "உள்நாட்டுக் கலவரங்களைச் சமாளிப்பதற்காக" அரசியல் சட்டத்தின் 352-வது  பிரிவின் கீழ் தேசிய நெருக்கடி நிலையைக் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது பிரகடனம் செய்தார்.

நாட்டின் விடுதலைக்குப் பிறகு உள்நாட்டுக் கலவரத்தைச் சமாளிப்பதற்காக முதன்முறையாக நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டது.

[Emergency என்ற ஆங்கிலச் சொல் அந்தக் காலகட்டத்தில் தமிழில் நேரடிப் பொருளில் அவசர நிலை என்றும், நெருக்கடி நிலை என்றும் இருவிதமாக மொழிபெயர்க்கப்பட்டது. அவசரமான நிலை என்பதை விடவும் நெருக்கடியான நிலை என்பதே கூடுதல் பொருத்தமான சொல் எனப் படுகிறது. நாளிதழ்களில் அந்தக் காலத்தில் தலைப்புகளுக்குக் கட்டை எழுத்துகளைப் பயன்படுத்தி அச்சுக் கோக்கப்பட்ட நிலையில் எழுத்துகளின் எண்ணிக்கை குறைவு என்பதால் அவசர என்ற சொல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது].

1971 ஆம் ஆண்டில் வங்கதேச நெருக்கடியின்போது அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை அப்போதும் நடைமுறையில் இருந்தது. ஆனால், அதுவோ வெளிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்து இந்தியாவின் பாதுகாப்புக்கு நேரிடக்கூடிய அபாயத்தைச் சமாளிப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்டது. புதிதாகப் பிறப்பிக்கப்பட்டதுவோ, உள்நாட்டுக் கலவரங்கள் பற்றியது.

இந்திரா காந்தியின் பதவி விலகலை வலியுறுத்தி நாடு முழுவதும் கிளர்ச்சி நடத்தப் போவதாக பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் அறிவித்த நிலையில் -  ராணுவத்தினரோ, காவல் துறையினரோ, அரசு ஊழியர்களோ கண்மூடித்தனமாக அரசு ஆணைகளைப் பின்பற்ற வேண்டாம் என்று சர்வோதயத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது.

நெருக்கடி நிலை

பிரகடன விவரம்

அரசியலமைப்புச் சட்டம் 352-வது ஷரத்து 1-வது பிரிவின் கீழ் நெருக்கடி நிலையைக் குடியரசுத் தலைவர் பிரகடனம் செய்துள்ளார்.

"உள்நாட்டுக் கலவர நிலைமையால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் கடுமையான நெருக்கடி நிலைமை நிலவுவதாக, குடியரசுத் தலைவர் தம்முடைய பிரகடனத்தில் அறிவித்திருக்கிறார்.

அரசியலமைப்பு 352-வது ஷரத்து முதல் பிரிவு கூறுவதாவது: இந்தியாவின் பாதுகாப்புக்கோ அல்லது அதன் எந்தப் பகுதியின் பாதுகாப்புக்கோ போரினாலோ அல்லது வெளி ஆக்கிரமிப்பினாலோ அல்லது உள்நாட்டுக் கலவரத்தினாலோ அபாயம் காரணமாக, கடும் நெருக்கடி நிலைமை இருப்பதாக, குடியரசுத் தலைவர் முடிவுக்கு வந்தால் இவ்வாறு ஒரு பிரகடனம் மூலம் அறிவிக்கலாம்.

போர், வெளி ஆக்கிரமிப்பு அல்லது உள்நாட்டுக் கலவரம் ஆகியவற்றினால் உண்மையில் அபாயம் இருக்கும்போதுதான் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படலாம் என்பதில்லை, அபாயம் ஏற்படும் என்று குடியரசுத் தலைவர்  திருப்தியடைந்தால் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படலாம்.

நெருக்கடி நிலை பிரகடனம் நடைமுறையில் உள்ளபோது, நிர்வாக அதிகாரம் எப்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றி எந்தவொரு மாநில அரசுக்கும் மத்திய அரசு உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும்.

நெருக்கடி நிலை பிரகடனம் அமலில் உள்ள காலத்தில் மத்திய பட்டியலில் இல்லை என்றாலும்கூட, மத்திய அரசுக்கு அல்லது அதன் அதிகாரிகளுக்கு அதிகாரங்களை வழங்கவும் கடமைகளை நிர்ணயிக்கவும், நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரங்கள் விரிவாக்கப்படும்.

இந்த நெருக்கடி நிலை பிரகடனம் நாடாளுமன்றத்தின் இரு அவைகள் முன்பும் தாக்கல் செய்யப்பட வேண்டும். இரண்டு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுடைய தீர்மானங்களால் அங்கீகரிக்கப்படாவிட்டால் செல்லாது.

மக்களவை கலைக்கப்பட்டிருக்கும்போது அல்லது இந்த இரண்டு மாத காலத்தில் மக்களவை கலைக்கப்பட்டால் இரண்டு மாத காலத்துக்குள் மாநிலங்களவை அங்கீகரித்தால் பிரகடனம் அமலில் இருக்கும்; அப்போதும்கூட, மக்களவை திருத்தியமைக்கப்பட்டு, 30 நாள்களுக்குள் முதல் கூட்டத்தில் பிரகடனத்தை அவை அங்கீகரிக்காவிட்டால் பிரகடனம் செயல்படுவது நின்றுவிடும்.

ஜனநாயகத்தைக் குலைக்க சதி

இந்திரா காந்தி வானொலி உரை

1970-களில் நாளிதழ்களும் வானொலியும்தான் மக்களுக்கான தகவல்தொடர்பு சாதனங்கள். சில பெருநகரப் பகுதிகளில் தொலைக்காட்சிகள் இருந்தன. இதுவும் அகில இந்திய வானொலியைப் போலவே அரசுக்கு சொந்தமானதுதான்.

நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நிலைமையைத் தெளிவுபடுத்தவும் தெரியப்படுத்தவும் வேண்டும் என்பதற்காகக் காலையிலேயே வானொலியில் உரை நிகழ்த்தினார் பிரதமர் இந்திரா காந்தி.

எத்தகைய சூழ்நிலையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று  விரிவாகத் தெரிவித்த அவர், ஜனநாயகத்தைக் குலைக்க சதி நடப்பதாகக் குற்றம் சாட்டினார்.

நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கக் கண்டிப்பான நடவடிக்கை தேவை என்ற நிலையில், உள்நாட்டுக் கலவர அபாயத்தைச் சமாளிப்பதற்காகப் புதிதாக  நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாக இந்திரா காந்தி தெரிவித்தார்.

பிரதமர் இந்திரா காந்தியின் உரை:

"குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்துள்ளார். இதைப் பற்றி பயப்படுவதற்கு எதுவும் இல்லை.

"இந்தியாவின் அடித்தட்டு ஆண்கள், பெண்கள் நலனுக்காக நான் சில முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியதிலிருந்தே ஆழ்ந்த, பரவலான சதி உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நிச்சயமாகக் கருதுகிறேன். ஜனநாயகத்தின் பெயரால் ஜனநாயகம் செயல்படுவதையே குலைக்க முயற்சி செய்யப்படுகிறது. சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களையே கலைக்கச் செய்வதற்காக அங்கத்தினர்களை ராஜிநாமா செய்யும்படி நிர்பந்திக்க வன்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. கிளர்ச்சிகள் சூழ்நிலைமையைப் பாதித்து, வன்முறைச் சம்பவங்களுக்கு வழிகோலியுள்ளன.

"என்னுடைய சக அமைச்சர் எல்.என். மிஸ்ர படுகொலை செய்யப்பட்டது கண்டு நாடு முழுவதும் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்தியத் தலைமை நீதிபதி மீது நடந்த மிருகத்தனமான தாக்குதலும் கண்டனத்துக்குரியது.

"கலகம் செய்யும்படி நம்முடைய ராணுவத்தையும் போலீசாரையும் தூண்டிவிடும்  அளவுக்கு சில நபர்கள் சென்றுள்ளனர். நம்முடைய பாதுகாப்புப் படைகளும், காவல்துறையினரும் கட்டுப்பாடு மிக்கவர்கள்; ஆழமான தேசபக்தி உள்ளவர்கள் எனவே, இதற்கு செவிசாய்க்க மாட்டார்கள் என்பது இவர்களின் தூண்டுதலின் கடுமையைக் குறைத்துவிடாது. பிளவு சக்திகள் முழு அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. வகுப்புவாத உணர்ச்சிகள் தூண்டிவிடப்பட்டுள்ளன. இவை நம்முடைய நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாகும்.

"என் மீது எல்லாவிதமான பொய்ப் புகார்களும் கூறப்பட்டுள்ளன. என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே இந்திய மக்கள் என்னை அறிவார்கள். என்னுடைய வாழ்நாள் முழுவதும் நம்முடைய மக்களுடைய சேவையிலேயே கழிந்துள்ளது. இது தனிப்பட்ட விஷயமல்ல. நான் பிரதமராக இருக்கிறேனா, இல்லையா என்பதல்ல முக்கியம். எனினும், பிரதமர் பதவி என்ற அமைப்பு முக்கியமாகும். அதை வேண்டுமென்றே பழிப்பதற்கான அரசியல் முயற்சி, ஜனநாயகத்தின் நலனுக்கோ அல்லது தேசத்தின் நலனுக்கோ உகந்ததல்ல.

"இந்தச் சம்பவங்களை நீண்ட காலமாகப் பொறுமையுடன் கவனித்து வந்தோம். இப்போது இயல்பாகச் செயல்படுவதைச் சீர்குலைக்கும் பொருட்டு, நாடு முழுவதும் சட்டம், ஒழுங்கிற்கு எதிராகப் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக அறிகிறோம். நாட்டின் நிலைத்தன்மையைப் பாதிக்க எப்படி ஓர் அரசால் வெறுமனே இருந்து அனுமதிக்க முடியும்? ஒருசிலருடைய நடவடிக்கைகள், மிகப் பெரும்பான்மையோரின் உரிமைகளுக்கு உலை வைப்பதாயிருக்கிறது. உள்நாட்டுக்குள் உறுதியுடன் செயல்படுவதற்கான மத்திய  அரசின் தகுதியைப் பலவீனப்படுத்தும் எந்த நிலைமையும் நாட்டுக்கு வெளியே இருந்து வரும் அபாயத்தை ஊக்குவிக்கக் கூடும்.

"ஒற்றுமையையும் நிலைத்தன்மையையும் பாதுகாப்பது நமது இன்றியமையாத கடமையாகும். நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க உறுதியான நடவடிக்கை அவசியமாகும்.

"உள்நாட்டு நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலானது, உற்பத்தி வாய்ப்புகளையும்  பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளையும் பாதிக்கிறது. கடந்த சில மாதங்களில் நாம் உறுதியுடன் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் பெரிதும் உதவி புரிந்துள்ளன. பொருளாதாரத்தைப் பலப்படுத்தவும், ஏழை மக்கள், குறிப்பிட்ட வருமானம் உள்ளவர்கள் உள்பட பல்வேறு பிரிவினரின் இன்னலைப் போக்க மேற்கோண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம். அவற்றை விரைவில் அறிவிப்பேன்.

"புதிய நெருக்கடி நிலை பிரகடனம், சட்டத்தை மதித்து நடக்கும் குடிமக்களின் உரிமைகளை எவ்வகையிலும் பாதிக்காது என்று உங்களுக்கு உறுதி அளிக்க விரும்புகிறேன். கூடிய விரைவில் இந்தப் பிரகடனத்தைக் கைவிட்டுவிடும் வகையில் உள்நாட்டு நிலைமைகள் விரைந்து மேம்படும் என்று நம்புகிறேன்.

"இந்தியாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் எல்லாப் பிரிவு மக்களிடமிருந்தும் எனக்கு வந்துள்ள நல்லெண்ணச் செய்திகள் என்னை நெகிழ வைத்துள்ளன. இனி வரும் நாள்களில் தொடர்ந்து உங்களுடைய ஒத்துழைப்பையும் நம்பிக்கையையும் அளிக்கும்படி வேண்டுகிறேன்."

தொடங்கின அதிரடிகள்

நாடு முழுவதும் கைதுகள்

நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். பொழுதுபுலருமுன்பே கைது நடவடிக்கைகள் தொடங்கிவிட்டிருந்தன. எனினும், யாருக்கும் சரியான எண்ணிக்கை தெரியாது.

நாடு முழுவதும் 676 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தலைமைத் தகவல் தொடர்பு அலுவலர் ஏ.ஆர். பாஜி தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் அதிகளவாக 450 பேர், தில்லியில் 90 பேர், பஞ்சாபில் 49 பேர், ஹரியாணாவில் 43 பேர், பிகாரில் 24 பேர், ராஜஸ்தானில் 12 பேர், கர்நாடகத்தில் நால்வரும் உத்தரப் பிரதேசம், ஆந்திரத்தில் தலா இருவரும் கைது செய்யப்பட்டனர்.

"காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களில் யாரும் கைது செய்யப்படவில்லை. இவர்கள் சில எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட்டிருந்தனர். எனவே கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தலைவர்களின் பெயர்களை வெளியிட இயலாது. இவர்கள் எதிர்க்கட்சிகளையும் காங்கிரஸையும் சேர்ந்தவர்கள். நன்றாகக் கவனிக்கப்படுகிறார்கள்" என்றும் பாஜி குறிப்பிட்டார்.

"நாட்டின் சட்ட ஒழுங்கைக் குலைக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதைத் தொடர்ந்தே நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டது. பொது, சட்ட ஒழுங்கைக் குலைப்பது, நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பது, தகவல் தொடர்பைத் துண்டிப்பதுதான் இவர்களின் நோக்கம். எல்லாவற்றுக்கும் மேலாக ராணுவத்தினரையும் காவல்துறையினரையும் கலகம் செய்யத் தூண்டினர். இதுவரையிலும் எந்தவோர் அமைப்பும் தடை செய்யப்படவில்லை. நெருக்கடி நிலைக் காலத்தில் மத்திய அரசின் ஆணைகளை மாநில அரசுகள் நிறைவேற்றியாக வேண்டும்" என்றும் பாஜி தெரிவித்தார்.

தலைமறைவு

தில்லியில் ஜனசங்கத் தலைவர்கள் சிலரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தபோதிலும் அவர்கள் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்பட்டது.

தில்லியில் கைது வாரன்ட்கள் அனைத்தும் இரவு 2 மணி முதல் 2.30 மணிக்குள்ளாகப் பிறப்பிக்கப்பட்டுப் பகுதி காவல்துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டன. அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பதற்காகவே கைது செய்யப்படுவதாக சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாநிலங்களில்...

குஜராத்தில் ஆங்காங்கு வன்முறைகள் நடைபெற்றன. அகமதாபாத்தில் சில மோதல்கள் நடைபெற்றன. இவர்களைக் கலைக்கக் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன. பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. சில தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்றன. ஹரியாணாவில் கடையடைப்பு நடைபெற்றது.

மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டன. புணேயில் எதிர்ப்பு ஊர்வலங்கள் நடைபெற்றன. கேரளத்திலும் போராட்டங்கள் நடைபெற்றன.

பிகாரில் எதிர்க்கட்சிகள் பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்தபோதிலும் நடைபெறவில்லை. நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன.

மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இருக்கும் அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, நாட்டின் சட்டம் - ஒழுங்கு நிலைமையைப் பராமரிக்கும்படி மாநில அரசுகளுக்கும் மைய ஆட்சிப் பகுதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

அரசின் வழக்கமான பணிகளும் மக்களின் அன்றாட வாழ்வும் சில சமூக விரோத குழப்ப சக்திகளால் குலைக்கப்படாமல் இயல்பாக நடப்பதற்கு வகை செய்ய தகுந்த பாதுகாப்புத் திட்டங்களை மேற்கொள்ளும்படியும் மத்திய அரசு அறிவுறுத்தியது.

அமலுக்கு வந்தது

பத்திரிகைத் தணிக்கை

நாட்டின் விடுதலைக்குப் பிறகு முதன்முறையாக பத்திரிகைத் தணிக்கை முறை நடைமுறைக்கு வந்தது.

1971 போரின்போது நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டாலும் பத்திரிகைத் தணிக்கை முறை இல்லை. 1965 போரின்போது ஆலோசனை முறை நடைமுறையில் இருந்தது.

வரவேற்ற மாநிலங்கள்

நெருக்கடி நிலைப் பிரகடனத்தை ஆந்திரம், கர்நாடகம், காஷ்மீர், பிகார், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தி வரவேற்றன.

அசாம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சிக்கிம் மாநில முதல்வர்களும் வரவேற்று அறிக்கை வெளியிட்டனர்.

ஜனதா முன்னணி ஆட்சி செய்த குஜராத்திலும் திமுக ஆட்சி செய்த  தமிழகத்திலும் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தி முதல்வர்கள் ஆலோசனை நடத்தினர்.

பழைய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான காமராஜர், இந்தத் தகவலை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்தார்.

இடைநீக்கம்

காங்கிரஸுக்குள்ளேயே பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து வந்த, இளம் துருக்கியர் என்று அறியப்பட்ட சந்திரசேகர், மோகன் தாரியா, ராம்தன், டி. லட்சுமிகாந்தம்மா, எஸ்.என். மிஸ்ர, கிருஷ்ணகாந்த் ஆகியோரை கட்சியிலிருந்து தாற்காலிகமாக நீக்கிக் கட்சித் தலைவர் டி.கே. பரூவா அறிவித்தார்.

எம்.பி.க்களாக இருந்தாலும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே இவர்கள் நீக்கப்பட்டதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் அறிவித்தபோதிலும் காரணம் எதையும் குறிப்பிடவில்லை.

பொறுப்பற்ற நடவடிக்கைகளால்...

நாட்டின் ஜனநாயகம், ஒருமைப்பாடு, நிலைத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் சில கட்சிகள், தனிநபர்கள் பொறுப்பற்று நடந்துகொண்டதால் மக்கள் பொறுமை இழக்கும் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் டி.கே. பரூவா தெரிவித்தார்.

செயற்குழுவில் முடிவு: மு.க.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றிப் பரிசீலிப்பதற்காக மறுநாள் திமுக செயற்குழு கூடும். அதைத் தொடர்ந்து, நெருக்கடி நிலைப் பிரகடனம் தொடர்பான நிலைப்பாடு பற்றி அறிவிக்கப்படும் என்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு. கருணாநிதி தெரிவித்தார்.

தமிழகத்தில் திமுக ஆளுங்கட்சி. திமுக அரசு திமுக செயற்குழுவுக்குக் கட்டுப்பட்டது என்றும் அவர் கூறினார்.

கடைசி ஆயுதம்: எம்.ஜி.ஆர்.

ஜனநாயகத்தைக் காக்கவும் நாட்டைக் குழப்பத்தில் ஆழ்த்தி அன்னிய அரசுகளிடம் அடமானம் வைக்கும் பிற்போக்கு சக்திகளின் முயற்சிகளைத் தடுக்கவும் கடைசி ஆயுதமாக நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றில் அதிமுக பொதுச்செயலர் எம்.ஜி.ஆர். தெரிவித்தார்.

பால்கிவாலா விலகல்

அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள, பிரதமர் இந்திரா காந்தியின் மேல் முறையீட்டு வழக்கில் அவருக்காக ஆஜராவதிலிருந்து விலகிக் கொள்வதாக வழக்கறிஞர் என்.ஏ. பால்கிவாலா அறிவித்தார்.

பத்திரிகைகளுக்குக் கடிவாளம்

தில்லியில் 25 ஆம் தேதி இரவே அவசர நிலை நடைமுறைக்கு வந்துவிடவே, 26 ஆம் தேதி நாளிதழ்கள் எதுவும் வெளிவரவில்லை. ஆனால், தமிழ்நாடு உள்பட பெரும்பாலான பிற மாநிலங்களில் வழக்கம்போல நாளிதழ்கள் வெளியாகின.

இந்த நாளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் தொடர்ச்சியாக விவாதித்து, பிரதமர் இந்திரா காந்தி பதவி விலக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தித் தலையங்கம் எழுதியிருந்தது தினமணி (ஜூன் 26 முதல் எல்லா இடங்களிலுமே பத்திரிகைத் தணிக்கை நடைமுறைக்கு வந்துவிட்டது).

தலையங்கம்

கைவிடப்பட்ட நல் வாய்ப்பு

"நிறுத்தல் மனு" மீது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக, காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டு கூடி, திருமதி இந்திரா காந்தியின் தலைமையில் நம்பிக்கை தெரிவித்து "பிரதமராக நீடிக்கும்படி" மிகவும் உணர்ச்சியுடன் அவரைக் கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பிரதமர் விலகப் போவதில்லை என்றே இதிலிருந்து ஊகிக்க வேண்டும். பதவியிலிருந்து தாம் விலக வேண்டியதில்லை என்று அவர் முடிவு செய்துவிட்டால், நாட்டின் கௌரவத்தை உயர்த்துவதற்குள்ள ஒரு இரண்டாவது வாய்ப்பினை அவர் கைவிட்டார் என்றே பொருள்படும்.

இந்திரா காந்தியின் தேர்தல் சட்டப்படி செல்லத் தக்கதல்ல என்று அலகாபாத் ஹைகோர்ட் முடிவு செய்தது. அது சுப்ரீம் கோர்ட்டில் மாற்றப்படலாம். ஆனால் பிரச்னை இந்தத் தீர்ப்பின் முடிவுக்கு அப்பாற்பட்டது. தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பினைவிட முக்கியமானது, இந்திரா காந்தியின் சாட்சியம் பற்றி அந்தத் தீர்ப்பினில் சொல்லப்பட்டுள்ள அபிப்பிராயம். இது சற்று நுணுக்கமாகக் கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

(1) இந்திரா காந்தியின் காரியதரிசியாக [செயலராக] இருந்த யஷ்பால் கபூர் என்ற நிரந்தர சர்க்கார் அதிகாரியின் ராஜிநாமா எந்தத் தேதியில் அமலுக்கு வந்தது? எந்தத் தேதியில் இந்திராஜி "வேட்பாளர்" என்ற நிலைக்கு வந்தார்? (2) பிரதமரின் பிரயாணத் திட்டம், மாநில சர்க்காருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற காரணத்தால் பொதுக் கூட்ட மேடை வசதிகளை பிரதமர் - (வேட்பாளர்) - கோரிப் பெற்றார் (obtain) என்று மதிக்க முடியுமா? "பிரதமருக்கு பந்தோபஸ்து" என்ற இனத்தில் மேடை அமைப்பு சேருமா? என்ற பிரச்னைகளில் (Issues இல்) அலகாபாத் நீதிபதி ”கண்ட முடிவுகள்” (Findings) வேறுவிதமாக இருந்து, ராஜ்நாராயணனின் தேர்தல் மனு தள்ளுபடியாகி, திருமதி இந்திரா காந்தியின் தேர்தல் ஊர்ஜிதம் செய்யப்பட்டிருந்ததாக வைத்துக் கொள்வோம். அப்போதுகூட ஒரு பெரிய நாட்டின் பிரதமரின் அந் நிலை பற்றி கோர்ட் ஏதேனும் தெரிவித்திருந்தால், அந்தக் கருத்தினிடையாக சில விளைவுகள் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதுதான் பிரச்னை.

நீதி மன்றத்தின் முன் சாட்சியம் அளிக்கும்போது, நீதி மன்றத்திற்கு தகவல் தரும்போது, (1) உண்மையையே சொல்ல வேண்டும் (2) உண்மையல்லாததை சொல்லக் கூடாது (3) முழு உண்மையையும் சொல்ல வேண்டும் என்பது நல்லறம் பற்றிய ஒரு தத்துவம்,

ஆகவே, இந்திரா காந்தியின் சாட்சியம் பற்றி தீர்ப்பில் ஏதேனும் இருந்தால், தேர்தல் சட்டம் பற்றிய issueவைவிட தீர்ப்பின் இந்தப் பகுதி முக்கியமானது. சுப்ரீம் கோர்ட் வேறுவிதமாக கருதும் வரையில் அற நிலை பற்றிய பகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதுதான் நாட்டின் மிக உயர்ந்த பொறுப்புள்ள பிரதம மந்திரிப் பதவி பற்றிய கண்ணியத்தை, "தர நிர்ணய முறையை” (standard) உயர்த்துவதாகும்.

இந்திரா காந்தியின் சாட்சியத்தின் ஒருகட்டத்தில் கூறியது மற்றொரு கட்டத்தில் கூறியதிலிருந்து மாறுபட்டதாக அலகாபாத் நீதிபதி எடுத்துக்காட்டியுள்ளார். இதை உத்தேசித்து பிரதம மந்திரி 12 ஆம் தேதியே ராஜிநாமா செய்திருந்தால் அவரது கௌரவம், இந்தியாவின் கௌரவம், பிரதம மந்திரி பதவியின் கௌரவம் மூன்றும் உயர்த்தப்பட்டிருக்கும். அப்போது இருந்த சந்தர்ப்பத்தினை திருமதி இந்திரா காந்தி நழுவ விட்டுவிட்டார்;

இப்போது சுப்ரீம் கோர்ட்டில் அவர் கோரிய "நிபந்தனையற்ற நிறுத்தம்” கிடைக்கவில்லை. நிபந்தனையுடனேயே நிறுத்தல் உத்தரவு தரப்பட்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தையாவது பயன்படுத்திக்கொண்டு இந்திராஜி, பிரதம மந்திரி பதவியின் கௌரவத்தை உயர்த்தலாம். ஆனால் அவ்வாறு செய்வார் என்று தோன்றவில்லை.

இந்திரா பிரதம மந்திரியாக நீடிப்பதற்கு சட்ட நிமித்தமாக தடை எதுவும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பது உண்மையே. ஆனால், "அரசியல் காரணம் பற்றிய சம்பிரதாயம், ஜனநாயக தர்மம்' (Canons of political propriety and democratic dharma) பற்றி கருத்து தெரிவிப்பது கோர்ட்டின் வேலையல்ல என்று இந்தத் தீர்ப்பில் ஒரு வாசகம் இருக்கிறது. ஆகையால் அறநிலைப்படி திருமதி இந்திரா பதவியில் நீடிக்கலாம் என்றோ நீடிக்கக் கூடாது என்றோ சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளதாக யாரும் வாதிக்க முடியாது. அறநிலை பற்றிய விஷயம் இந்திராவும் அவரது சகாக்களும் சிந்தனை செய்து தமக்குத் தாமே முடிவு செய்துகொள்ள வேண்டிய விஷயம். இது கோர்ட் விஷயமல்ல; மெஜாரிடி மைனாரிடி விஷயமுமல்ல: இது பிரதமர் பதவியின் கண்ணியம் பற்றிய விஷயம்.

சுப்ரீம் கோர்ட் அளிக்கும் நிறுத்த உத்தரவு "நிபந்தனைக்குட்பட்டதாக இருக்குமாயின் சில "தர்ம சங்கடங்கள்'" (எக்கச்சக்கமான நிலை Embarrassments)  உண்டு என்று திரு. பல்கிவாலா வாதிட்டுள்ளார். அளிக்கப்பட்டது, **நிபந்தனைக்குட்பட்ட" நிறுத்த உத்தரவே. இந்த நிலையில் பிரதமர் தர்மசங்கடங்களுக்கு (Embaraimentsக்கு) உட்பட்டு பதவியில் நீடிக்க விரும்பலாமா, இணங்கலாமா? சட்டப்படி தடை இல்லை என்பது மட்டும் போதுமா? இதுதான் பிரச்னையின் தன்மை.

அறநிலை சம்பந்தப்பட்ட மட்டில் சாதாரண மக்கள் அல்லது கௌரவமான பதவிகளில் இருப்போர் பற்றிய அளவுகோலைவிட 60 கோடி மக்களின் வாழ்க்கைக்குப் பொறுப்பான பிரதம மந்திரி பற்றிய அளவுகோல் சிறிது நுணுக்கமான அளவுகோலாக இருப்பதுதான் இயல்பு; அவசியமும்கூட.

* * *

ஆனால், நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இவற்றுக்கெல்லாம் அவசியமில்லாமலே போய்விட்டது!

[வரலாற்றின் பக்கங்களிலிருந்து - தொடரும்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com