2024 தேர்தல்: சாதிவாரிக் கணக்கெடுப்பு என்ற வெடிகுண்டு!

2024 மக்களவைத் தேர்தலும் நாடு தழுவிய சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் அரசியல் அதிர்வலைகளும் பற்றி...
2024 தேர்தல்: சாதிவாரிக் கணக்கெடுப்பு என்ற வெடிகுண்டு!

2024 மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் நாடு தழுவிய அளவில் அரசியலில் முன்னெப்போதுமில்லாத வகையில் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்ற சிறு சொற்றொடர்!

இந்தியா கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் ஓரளவு ஒன்றிணைந்தாலும் கூட்டணியைக் கலைத்து எதிர்க்கட்சிகளின் வாக்குகளைச் சிதறச் செய்வதற்கான சகலவிதமான வேலைகளையும் ஒருபுறம் பாரதிய ஜனதா செய்துகொண்டிருக்க, கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கேகூட பிரிக்கப்பட்டு விடுவோமோ அச்சம் இருக்கத்தான் செய்கிறது.  

அல்லாமல் திட்டமிட்டபடி அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டி முடித்துத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன் திறக்கத் திட்டமிடும் பா.ஜ.க., அதையொட்டிய கொண்டாட்டங்களின் மூலம் பெறப்படும் ஹிந்துத்துவ எழுச்சியை எளிதில் வாக்குகளாகத் திரட்டிவிட முடியும் எனக் கணக்கிட்டு வருகிறது.

இத்தகைய நிலையில்தான் மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் நாட்டிலேயே முதல்முறையாக பிகார் மாநிலத்தில் எடுக்கப்பட்ட சாதி அடிப்படையிலான மக்கள்தொகை விவரங்களை மாநில முதல்வர் நிதீஷ் குமார் வெளியிட்டார். (மத்திய அரசு மட்டுமே அதிகாரப்பூர்வமான மக்கள்தொகைக்  கணக்கெடுப்பை நடத்த முடியும் என்ற நிலையில் பிகார் மாநிலத்தில் எடுக்கப்பட்டதை ஆய்வுக் கணக்கெடுப்பு என்று கூறலாம்).

இந்த  கணக்கெடுப்பின் முடிவுகள்தான் மக்கள் மத்தியிலும் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் மிகப் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டின் பெரும்பான்மையான மக்கள், தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதாக இதன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கணக்கெடுப்பில், 13.07 கோடி மக்கள்தொகை கொண்ட பிகார் மாநிலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்பட பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தொகை மட்டும் 63.13 சதவிகிதம் எனத் தெரியவந்திருக்கிறது.

இந்த 63.13% பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.13%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36%.

ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்  யாதவின் சாதியான யாதவர்கள் 14.27%, தற்போதைய முதல்வர் நிதிஷ் குமாரின் குர்மி வகுப்பைச் சேர்ந்தவர்கள் 2.87%. முஸ்லிம்கள் மட்டும் 17.70%.

மக்கள்தொகையில் பட்டியலின வகுப்பினர் 19.65% (2,56,89,820), பழங்குடி  வகுப்பினர் 1.68% (21,99,361). உயர் சாதியினர் மொத்தம் 15.5%. இவர்களில்  பூமிஹார் மற்றும் பிராமண வகுப்பினர் 3.66% (47,81,280), சத்திரியர்கள்  (ராஜபுத்திரர்கள்) 3.45% (45,10,733), காயஸ்தாக்கள் 0.6% (7,85,771).

[ஹிந்துக்கள் - 82%, முஸ்லிம்கள் - 17.70%. கிறிஸ்துவர்கள் – 0.0576%.] 

பிகார் முதல்வர் நிதீஷ் குமார்
பிகார் முதல்வர் நிதீஷ் குமார்

2019-ல் ஒரே ஆண்டில் இரண்டு முறை பிகார் சட்டப்பேரவை ஒருமனதாக  சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதெனத் தீர்மானங்கள் நிறைவேற்றியது. 2021 ஆகஸ்ட் மாதத்தில் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தூதுக் குழுவொன்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து நாடு தழுவிய அளவில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. ஆனால், அரசின் தற்போதைய கொள்கைப்படி நடத்த முடியாதென மத்திய அரசு மறுத்துவிட்டது.

இதைத் தொடர்ந்து, 2022 ஜூன் மாதத்தில் மாநில அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிக்கையை வெளியிட்ட பிகார் மாநில அரசு, இதற்காக ரூ. 500 கோடி நிதியையும் ஒதுக்கி, தாமாகக் கணக்கெடுப்பையும் எடுத்துமுடித்து, தற்போது அறிவித்தும்விட்டது.

இந்தியாவின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1872-ல் தொடங்கியது. பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 1881 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்து பத்தாண்டுகளுக்கு ஒரு முறை என 1931 ஆம் ஆண்டு வரை கணக்கெடுப்புகள் நடந்தன (எல்லாமே சாதிவாரிக் கணக்கெடுப்புகள்தான்). 1941 ஆம் ஆண்டில் சாதிகளைக் கணக்கெடுத்தாலும், இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து ஈடுபட்டிருந்த நிலையில் நிர்வாக மற்றும் நிதிப் பிரச்சினைகள் காரணமாக வெளியிடப்படவில்லை. கடைசியாக சாதிக் கணக்கு எடுக்கப்பட்டிருந்த 1931 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கின்படி, நாடு தழுவிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை சுமார் 52%. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுப் பழையதான இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில்தான் இன்னமும் சாதிகள் பற்றிய விஷயத்தில் மேற்கோள்கள் காட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தற்போது தோன்றுவதைப் போல அல்லது பலரும் கருதுவதைப் போல, சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது பிகார் முதல்வர் நிதிஷ் குமார் சிந்தனையில் மட்டுமே பிறந்தவொன்றாகக் கூறிவிட முடியாது.  இதுதொடர்பான முயற்சிகளை ஏற்கெனவே காங்கிரஸ் தொடங்கிவிட்டது.

2010-ல் மத்தியிலிருந்த அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான  இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்தச் சிக்கலையெல்லாம் மனதில்கொண்டு, தனியாக சமூக - பொருளாதார சாதிக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.

தொடர்ந்து, மத்திய சமூக நீதித் துறை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு சாதிகள் தொடர்பான விவரங்களை, இந்த கணக்கெடுப்பில் நிறைய தவறுகள் இருப்பதாகக் குறிப்பிட்டு, அடுத்து மத்தியில் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா அரசு வெளியிடவேயில்லை  (வெளியிட்டிருக்க வேண்டும், சமுதாய முன்னேற்றத்துக்கும் சமூக நீதி கிடைப்பதற்கும் இது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார் காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ்). 

பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை நிதிஷ் குமார் வெளியிடுவதற்கு இரு நாள்களுக்கு முன்னரே, செப். 30 ஆம் தேதி  (விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள) மத்தியப் பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்டோர் அதிகளவில் வசிக்கும் ஷாஜாபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மத்தியில் காங்கிரஸை ஆட்சிக்கு வரச் செய்தால் நாடு தழுவிய அளவில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்தார்.

நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குப் பதிலாக ஆர்எஸ்எஸ்ஸும் மத்திய அரசு அதிகாரிகளும்தான் சட்டங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று இந்தக் கூட்டத்தில் குற்றம் சாட்டிய ராகுல், சாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பது துல்லியமாகத் தெரிந்துவிடும் என்றும் குறிப்பிட்டார். சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்ற எக்ஸ் ரே, எம்ஆர்ஐ ஸ்கேன் கொண்டு பார்ப்பதால் நாட்டில் அனைத்து மக்களுக்குமான பங்களிப்பு உறுதி செய்யப்படும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

அடுத்த இரு நாள்களில், பிகார் சாதிவாரிக் கணக்கெடுப்பை முதல்வர் நிதீஷ் குமார் வெளியிட்டபோது, உடனே ராகுல் காந்தி வரவேற்றார். 

கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டபோது, மக்கள்தொகையில் ஒவ்வொரு சாதியினருக்கும் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழ வாய்ப்புள்ளதால் இதை மண்டல் 2.0 என்று குறிப்பிடலாமா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்த கணக்கெடுப்பு அனைவருக்கும் பயன்பட வேண்டும், பெரிதும் கவனிக்கப்பட வேண்டிய வகுப்பினருக்குத் தேவையான உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதுதான் நோக்கம் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்தார். 

ஆனால், இந்தக் கணக்கெடுப்பு வெளியானவுடனே கருத்துத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடியோ, “இந்த நாட்டை சாதியின் அடிப்படையில் பிரிக்க” எதிர்க்கட்சிகள் திட்டமிடுவதாகக் குற்றம் சாட்டினார். அறுபது ஆண்டுகளில் அவர்கள் செய்ய முடியாததை ஒன்பது ஆண்டுகளில் நாங்கள் செய்திருக்கிறோம். ஆனால், அவர்கள் ஏழைகளின் உணர்வுகளை வைத்து விளையாடினர். இப்போதும் அதே பாவத்தைத் தொடர விரும்புகிறார்கள் என்றும் மோடி குறிப்பிட்டார்.

2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணிக்கு எதிராக சக்தி வாய்ந்த ஆயுதமாக உருமாற ஆகப் பெரும் வாய்ப்பு இருக்கும் நிலையில், தயக்கமின்றி இதை ராகுல் காந்தி கையிலெடுத்துவிட்டிருப்பதாகவே  அவருடைய பேச்சுகள் காட்டுகின்றன. 

பிகார் கணக்கெடுப்பில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி மக்கள்தொகை மட்டுமே 84 சதவிகிதம் எனத் தெரிய வந்திருக்கிறது. ஆக, இந்தியாவில் சாதிவாரிக் கணக்கு எந்த அளவு முக்கியத்துவம் பெறுகிறது எனத் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, ரூ. 44 லட்சம் கோடி மத்திய பட்ஜெட் தயாரிப்பிலுள்ள 90 செயலர்களில் வெறும் 3 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள், அதுவும் முக்கியத்துவம் இல்லாத துறைகளைக் கவனிக்கின்றனர். இந்திய பட்ஜெட்டில் 5 சதவிகிதத்தையே இவர்கள் கையாள்கிறார்கள். இவ்வளவுதானா, பிற்படுத்தப்பட்டோர் மக்கள்தொகை? இவ்வளவுதானா அவர்களுக்கான பிரதிநிதித்துவம்? அதிக  மக்கள்தொகையினருக்கு அதிக அதிகாரங்கள் என்பதுதான் எங்கள் இலக்கு என்றும் தெரிவித்திருக்கிறார். தொடர்ச்சியாக இதைப் பேசிவரும் ராகுல் காந்தி, தெலங்கானா தேர்தல் பிரசாரத்திலும்கூட மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்னர், இந்தியா கூட்டணியில் காங்கிரஸும் சமூக நீதி பேசும் அரசியல் கட்சிகளும் நெருங்கிவந்து புதிய செயல்திட்டம் ஒன்றை அறிவிப்பதற்கான எல்லாவித வாய்ப்புகளும் இருக்கின்றன. 

அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் கடைநிலையிலுள்ள மனிதர்களையும் சென்றடைந்துள்ளதா என்பதையெல்லாம் உறுதிப்படுத்திக்கொள்ள, நாடு தழுவிய சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் கட்சிகள் முன்வைக்கத் தொடங்கியுள்ளன. உள்ளபடியே இதன் மூலம் சமூகரீதியிலும் பொருளாதார ரீதியிலும்  பின்தங்கியவர்கள் யார் என்பதையும் அடையாளம் காண முடியும் என்றும் குறிப்பிடுகின்றன.

நாட்டின் மக்கள்தொகையில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 52 சதவிகிதம் என்பதாக மண்டல் கமிஷன் வரையறுத்துக் கொண்டது (மண்டல் கமிஷன் அல்லது சமூக அல்லது கல்வியளவில் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் என்பது 1979 ஆம் ஆண்டில் நாட்டில் சமூகரீதியிலும் கல்விரீதியிலும்  பிற்படுத்தப்பட்டோரை அடையாளம் காண்பதற்காக அமைக்கப்பட்டது. பி.பி. மண்டல் தலைமையிலான இந்த கமிஷன், 1980 ஆம் ஆண்டிலேயே அறிக்கையை அளித்துவிட்டபோதிலும் பத்தாண்டுகளுக்குப் பிறகு, வி.பி. சிங் பிரதமரானபோதுதான், 1990-ல் நடைமுறைப்படுத்தப்பட்டது, ஆனால், இதற்கே எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்கள் நடத்தப்பட்டன).  உறுதியாக இந்த எண்ணிக்கை பல மடங்கு பெருகியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ற நிலையில், தற்போது அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வெறும் 27 சதவிகிதம் என்ற அளவிலேயே முடிந்துவிடுகிறது. ஏற்கெனவே, பட்டியலின மற்றும் பட்டியலினப் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு 22.5 சதவிகிதமாக இருக்கிறது.

புதிய சூழ்நிலையில், அரசியல், அரசு நிர்வாகம், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் என அனைத்திலும் தங்களுக்கு உரிய பங்கை வழங்க வேண்டுமென்றும் இட ஒதுக்கீட்டில் 50 சதவிகித உச்சவரம்பு என்பது எந்த வகையிலும் பொருத்தமில்லாதது என்றும்  பிற்படுத்தப்பட்டோர் வலியுறுத்தும் நிலையை ஏற்படுத்தியுள்ளது இந்தக் கணக்கெடுப்பு.

பிகாரின் கணக்கெடுப்புக்குப் பிறகு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலுள்ள சில கட்சிகளேகூட  சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தத் தொடங்கிவிட்டன. 

ஏழ்மைதான் பெரிய சாதி, சமுதாயத்தைப் பிரிக்க எதிர்க்கட்சிகள் முயலுகின்றன என்ற பிரதமர் நரேந்திர மோடியின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும்போது, இது  கண்டனத்துக்குரியது. சந்தேகத்துக்கிடமின்றி இந்தியா என்பது சாதி அடிப்படையிலான ஒரு நாடுதான். எனவே, இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள் என்பது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யக் கூடியதாக இருக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் முதன்மைச் செய்தித் தொடர்பாளரான கே.சி. தியாகி குறிப்பிட்டுள்ளார். 

மண்டலுக்கும் கமண்டலத்துக்கும் இடையேயான அரசியல்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பதாகக் கூறப்படுவது பற்றித் தெரிவிக்கும்போது, சமூக நீதி அரசியலை நாங்கள் முன்வைக்கிறோம். பிகாரில் எடுத்தது வெறும் சாதிக் கணக்கெடுப்பு அல்ல, பொருளாதார, சமூக சூழ்நிலையும்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உண்மையான பிரச்சினையிலிருந்து மக்களைத்  திசைதிருப்பும் வகையில் மோடி செயல்படுகிறார். பிகாரின் சாதிவாரிக் கணக்கெடுப்பு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 2024 ஆம் ஆண்டின் தேர்தல் திட்டங்களுக்கு வெடிவைத்திருக்கிறது எனலாம் என்றும் கூறுகிறார் தியாகி.

அனைத்து அரசு வேலைகளிலும் பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டைப் பரிந்துரைத்த மண்டல் கமிஷன் அறிக்கையைப் பிரதமராக இருந்த வி.பி. சிங் ஏற்று அறிவித்த, 1990 ஆம் ஆண்டில் இருந்ததைப் போல இப்போதைய நிலைமை இல்லை. 

அப்போது மண்டல் கமிஷனால் என்ன பயன்? என்பதேகூட சம்பந்தப்பட்ட பிற்பட்டோருக்கேகூட அவ்வளவாகப் புரியாத நிலையில் அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்தேறின. ஆட்சியே கவிழ்ந்தது.

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தைச் சாதகமாக்கிக் கொண்டு, பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருந்த எல்.கே. அத்வானி ரத யாத்திரை நடத்தினார். மறைந்த பிரதமரான ராஜீவ் காந்தி இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்திலேயே கடுமையான கருத்துகளை முன்வைத்தார். என்றாலும், சாதி அடிப்படையில் பிற்பட்டோருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீட்டை 1992-ல் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. 

என்னதான் விழுந்து விழுந்து பிரசாரம் செய்தாலும், தென் மாநிலங்களில், சமூக நீதி இயக்கங்கள், சமுதாய சீர்திருத்த தலைவர்களின் தொடர்ச்சியான செயல்பாடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள பெருமளவிலான முன்னேற்றங்கள் எதுவும் வட இந்திய மாநிலங்களில், குறிப்பாக, ஹிந்தி பேசும் மாநிலங்களில் நிகழவில்லை என்பதை அனைவருமே ஒப்புக்கொள்வார்கள்.

இந்த கணக்கெடுப்பின் காரணமாக, நாட்டில் பெரும்பான்மையாகவுள்ள பிற்பட்ட வகுப்பினர் எந்தளவுக்குப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்? மக்கள்தொகைக்குப் பொருந்தாத விகிதத்தில் சில குறிப்பிட்ட வகுப்பினர் பெருமளவிலான வேலைவாய்ப்புகளைப் பெற்றிருப்பது பற்றியெல்லாமும் விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன.

காங்கிரஸில் சில தலைவர்களுக்குக் கருத்து வேறுபாடு இருப்பதாகத் தோன்றினாலும்கூட மிகத் தெளிவாக முடிவெடுத்து அறிவித்தும்விட்டார்கள். இவ்விஷயத்தில், பப்பு என்றெல்லாம் பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்களால் கேலி பேசப்பட்ட ராகுல் காந்தியின் உறுதிப்பாடுதான் பல அரசியல் தலைவர்களையும் வியக்க வைத்திருக்கிறது.

நாடு தழுவிய சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தி காங்கிரஸ்  செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். 

இந்தியா கூட்டணியிலுள்ள பெரும்பாலான கட்சிகள் இந்தக் கணக்கெடுப்புக்கு முழு அளவில் ஆதரவாக இருக்கின்றன. சிலருக்கு சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதனால் பரவாயில்லை என்று குறிப்பிட்ட ராகுல், காங்கிரஸின் 4 மாநில முதல்வர்களில் மூவர் பிற்படுத்தப்பட்டோர். ஆனால், பா.ஜ.க.வின் 10 மாநில முதல்வர்களில் ஒருவர் மட்டும்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் (ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்). அவரும் விரைவில் பதவி விலகுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இன்னமும்கூட இந்த விஷயத்தில் பாரதிய ஜனதா கட்சியால் எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்க முடியவில்லை என்பதுடன், விஷயத்தை ஏழைகள்தான் பெரிய சாதி என்றெல்லாம் சுற்றிவளைத்து இழுத்துவிட முயலுகின்றனர். இதை எவ்வளவு காலத்துக்கு, எந்த அளவுக்கு மக்கள் நம்புவார்கள் என்பதும் தெரியவில்லை என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

1990-களில் தொடங்கி, பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் ஆதார பலமாக இருந்து வருகிற இரு விஷயங்கள், மண்டலும் கமண்டலமும் (ஹிந்துத்துவமும்) எனலாம். ஆனால், சாதிவாரிக் கணக்கெடுப்பு அந்தக் கட்சிக்குப் புதிய பிரச்சினைகளையும் சவால்களையும் கொண்டுவந்திருக்கிறது.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான ஆட்டத்தைத் தொடக்கிவைத்து ராகுல் காந்தியும் நிதீஷ் குமாரும் இறக்கியுள்ள காயை எதிர்கொள்ள எந்தக் காயை நகர்த்துவது என்ற முடிவுக்கு பாரதிய ஜனதா கட்சியால் உடனடியாக வர முடியவில்லை என்பதாகத்தான் அதன் நடவடிக்கைகளில் வெளிப்படுகிறது.

இன்றைய சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பற்றிய தங்கள் நிலைப்பாட்டை அறிவித்தேயாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

பிற்படுத்தப்பட்டோர் பற்றிய கணக்கெடுப்பொன்றை ஒடிசா மாநில அரசும் எடுத்துள்ளது. நெருக்கடியான மாறுபட்ட இன்றைய சூழலில் இதன் முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்படலாம்.

2015 ஆம் ஆண்டில் கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசே இத்தகைய கணக்கெடுப்பை நடத்தியது. மீண்டும் காங்கிரஸ் அரசே பொறுப்பேற்றுள்ள நிலையில் அதன் விவரங்களும் விரைவில் வெளியிடப்படலாம். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆளும் ஆந்திரத்திலும் நவம்பர் 15-ல் தொடங்கி சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அதிரடியாகப் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஸ்ரீநிவாச வேணுகோபால கிருஷ்ணா அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே 2021 ஆம் ஆண்டு எடுக்க வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், இனி அடுத்துவரும் நாடு தழுவிய இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தும்போது சாதிவாரியாகக் கணக்கிட வேண்டும் என்று அனைவருமே வலியுறுத்துவார்கள். ஏற்கெனவே, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ள ராகுல் காந்தி, ஒருபடி மேலே சென்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்தும்விட்டார். 

27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கே போராடிக் கொண்டிருந்த நிலையில், பிகார் கணக்கெடுப்பில் மக்கள்தொகையில் பிற்படுத்தப்பட்டோர் 63 சதவிகிதம் என அறியப்பட்ட நிலையில், தங்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று நாடு தழுவிய அளவிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் பிற்படுத்தப்பட்டோர் உரத்துக் குரல் எழுப்பும் நிலை உருவாகியிருக்கிறது.

வரும் மக்களவைத் தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடியையும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் முன்னிறுத்தி, ராமர் கோவிலையும் திறந்து, ஹிந்துத்துவத்தின் பெயரால் வாக்குகளைத் திரட்டத் தேவையானவற்றை எல்லாம் பாரதிய ஜனதா செய்துவைத்துள்ள நிலையில்தான் நிதிஷ் குமாரின் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளதாதக் கருதப்படுகிறது.

1990-களின் தொடக்கத்தில், மண்டல் கமிஷன் பரிந்துரைகள் காரணமாக ஹிந்து வாக்குகள் சிதறிவிடும் என்ற சூழ்நிலையில்தான், அயோத்தி பாபர்  மசூதி – ராமர் கோவில் பிரச்சினையை ஆர்எஸ்எஸ் – பா.ஜ.க. தீவிரப்படுத்தியது. சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட சில மாதங்களே இருக்கும் நிலையில் பிகார்வழி மீண்டும் சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தை எதிர்க்கட்சிகளின் கூட்டணி முன்வைத்திருக்கிறது.

பாரதிய ஜனதாவின் ஹிந்துத்துவ மற்றும் தேசியவாத அரசியல் உத்திக்கு மாற்றாக சாதிவாரிக் கணக்கெடுப்பு என்ற உத்தி களம்  இறக்கப்பட்டிருக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவான காங்கிரஸின் நிலைப்பாடு தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.

ஹிந்துத்துவத்தின் பெயரால் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக வாக்குகள் திரளுவதற்குப் பதிலாக, சாதிகளின் பெயரால் எதிர்க்கட்சிகளை நோக்கிப் பிரிவதற்கான வாய்ப்புகளையே அதிகரிக்க நேரிடலாம். பிற்பட்டோரைப் பட்டியலிடுவதற்காக அமைக்கப்பட்ட ரோஹினி கமிஷன் அறிக்கையை வெளியிட மத்திய அரசு திட்டமிடலாம். ஆனால், எதிர்க்கட்சிகளோ சாதிவாரிக் கணக்கெடுப்பு, அவற்றுக்கேற்ப இட ஒதுக்கீடு எனப் பேசத் தொடங்கும்போது, 2024 மக்களவைத் தேர்தலில் சமூக நீதி என்ற சொற்கள் விஸ்வரூபம் எடுப்பதற்கான சூழ்நிலை உருவாகக் கூடும்.

'பெரும்பான்மை மக்கள் காலங்காலமாக, ஏறத்தாழ ஒரு நூறாண்டாக, ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உரிய இடம் வழங்கப்படவில்லை. தேர்தல் நெருங்க, நெருங்க 90 செயலர்களில் 3 பேர்தான் பிற்பட்டோர்' என்பது போன்ற மேலும் பல தகவல்கள் வெளிவரலாம்.

நாடு தழுவிய சாதிவாரிக் கணக்கெடுப்பின் முடிவில் இதுவரையில்  கூறப்பட்டுவந்த புள்ளிவிவரங்கள் எல்லாம் தலைகீழாக மாறிவிடும். இந்த முடிவுகள் அரசியலிலும் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கல்வியிலும் அரசு வேலைவாய்ப்பிலும் 50 சதவிகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் வரையறைகளையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழ்நிலைகளை உருவாக்கக் கூடும். 

ஹிந்துத்துவம் என்ற பெயரில் அனைத்து சாதிகளையும் உள்ளடக்கி பாரதிய ஜனதா உருவாக்கி வைத்துள்ள ஆதரவு தளம், சாதிகளுக்கான உரிமைகள், இட ஒதுக்கீடுகள் ஆகிய கோரிக்கைகளின் மூலம் எதிர்க்கட்சிகளால் கலைத்துப் போடப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

சாதிவாரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்ற  பெரிய வெடிகுண்டை ராகுல் காந்தியும் நிதிஷ் குமாரும்  தேர்தல் நெருங்கும் நேரத்தில் கொளுத்திப் போட்டிருக்கிறார்கள்; புகையத்  தொடங்கிவிட்டிருக்கிறது. புகையால் கண்ணெரிச்சலும் தொடங்கிவிட்டது. இனி என்னென்ன நடக்கப் போகிறது? எப்படி வெடிக்கப் போகிறது?  என்பதெல்லாம் தேர்தல் நெருங்க நெருங்கத்தான் தெரியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com