உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: ஈரோட்டில் என்ன செய்யப் போகிறது ஓபிஎஸ் அணி?

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஓபிஎஸ் அணிக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
ஓ.பன்னீர்செல்வம்(கோப்புப்படம்)
ஓ.பன்னீர்செல்வம்(கோப்புப்படம்)
Published on
Updated on
2 min read

எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, எழுத்துபூா்வமாக விளக்கத்தையும் பெற்ற நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெராவின் மறைவை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் தொகுதி ஒதுக்கப்பட்டது.

ஆனால், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், அதிமுகவின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் வேட்பாளரை நிறுத்த ஜி.கே. வாசனிடம் ஆதரவு கோரியது இபிஎஸ் அணி.

ஜி.கே.வாசன் விட்டுக் கொடுக்க ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக (இபிஎஸ் அணி) தென்னரசு நிறுத்தப்பட்டார். இபிஎஸ் அணிக்கு போட்டியாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகனை வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அறிவித்ததுடன் கையோடு வேட்புமனுவையும் தாக்கல் செய்து அதிர்ச்சி அளித்தனர்.

இறுதிவரை எந்த தரப்பினருக்கும் ஆதரவளிக்காமலும், தனி வேட்பாளரை அறிவிக்காமலும் இருந்த பாஜக தலைமை, சமரசத்தில் ஈடுபடத் தொடங்கியது.

திமுக கூட்டணியை எதிர்த்து பலம்வாய்ந்த வேட்பாளரை நிறுத்த வேண்டுமென்று கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இரு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ்ஸிடம் தொடர்ச்சியாக பலமுறை செல்போனில் ஆலோசித்ததாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

இதற்கிடையே வேட்புமனுவை தாக்கல் செய்யாமல் காத்திருந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கோரி இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரு தரப்பினரையும் உள்ளடக்கிய பொதுக்குழுவை அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டி பொது வேட்பாளரைத் தோ்வு செய்யவும், இரட்டை இலை சின்னத்தை அங்கீகரிக்கும் படிவத்தில் தமிழ்மகன் உசேன் கையொப்பமிடும் வகையிலும் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர்களின் கடிதத்தை பெறும் நடவடிக்கையில் தமிழ்மகன் உசேன் இறங்க, ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அவைத் தலைவர் நடுநிலையோடு செயல்படவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.

அதன்படி, தமிழ்மகன் உசேனின் செயல்பாட்டுக்கு எதிராக ஓபிஎஸ் அணி உச்சநீதிமன்றத்தை நாடும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், வேட்பாளரை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். மேலும், அதிமுகவின் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசை ஆதரித்து வெற்றி பெற வைப்போம் என்றும் ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்தனர்.

தொடர்ந்து, வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓபிஎஸ்ஸுக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசை பாஜக ஆதரிப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு ஓபிஎஸ் தரப்பினருக்கு பேரிடியாக அமைந்துள்ளது. பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வதாக அறிவித்துள்ளனர்.

பொதுக்குழு செல்லும் பட்சத்தில், அந்த பொதுக்குழுவில் தேர்தெடுக்கப்பட்ட இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடர்வார். ஓபிஎஸ் அணியினரை அதிமுகவில் இருந்து நீக்கி நிறைவேற்றிய தீர்மானமும் செல்லும்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில்கூட நீடிக்க முடியாத நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை எப்படி ஆதரிக்க போகிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர்?

இன்னும் நான்கு நாள்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பில் என்ன செய்யப் போகிறார்கள் என்பது பெரும் கேள்விக்குறி.

ஒருவேளை இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டு வெற்றி பெற முடியாவிட்டாலும், இபிஎஸ் தரப்புக்கு செல்லும் குறிப்பிட்ட சதவிகித வாக்குகளைத் தன்வசப்படுத்தி இருக்கலாம்.

தற்போதைய சூழலில் இடைத்தேர்தலில் அதிமுக தோற்கும்பட்சத்தில், எங்கள் ஆதரவு இல்லாததால்தான் வெற்றி பெற முடியவில்லை எனக் கூறி ஆறுதல்படுத்திக் கொள்ள மட்டும்தான் ஓபிஎஸ் தரப்பினரால் முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com