இபிஎஸ்ஸுக்கு இது தற்காலிக வெற்றிதான்: டிடிவி தினகரன்

உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக வெற்றிதான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
Published on
Updated on
2 min read

உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக வெற்றிதான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வானது செல்லும் என்றும் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் இன்று(வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட ஓ. பன்னீர்செல்வத்தின் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து அதிமுக இபிஎஸ் வசம் சென்றுள்ளது. ஓபிஎஸ்ஸின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. 

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு தற்காலிக வெற்றி தான். இந்த தீர்ப்பு ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றியைத் தராது. வேண்டுமானால் 5 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற வழி வகுக்கும்.

எடப்பாடி பழனிச்சாமி வசம் இரட்டை இலை  சின்னம் இருந்தால் அது அதிமுகவை மேலும் பலவீனப்படுத்தும். 

பொதுக்குழு குறித்து மேல்முறையீடு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தர்ம யுத்தம் 1- ல் ஓபிஎஸ் வெற்றி பெற்றார். தற்போது அவர் நடத்தும் தர்மயுத்தத்தில் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

2017 ஏப்ரல் மாதத்திலிருந்தே பாஜகதான் அதிமுகவை இயக்குகிறது. நீதிமன்றங்களையும் பாஜகதான் இயக்குகிறதா என்பதை நான் கூற முடியாது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக வெற்றி பெறும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் பல முறைகேடுகள் செய்வார்கள்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை  உருவாக்கும் அணியில் அமமுக அங்கம் வகிக்கும். தனியாக களம் காணவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தீர்ப்பில் பின்னடைவை சந்தித்ததால் ஓபிஎஸ்ஸை அமமுகவில் இணையுமாறு அழைக்க மாட்டேன். அது மனிதத் தன்மையும் அல்ல.

கமலஹாசன் பேசுவதையெல்லாம் காமெடியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதை சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளக் கூடாது . அவர் நடிகராக இருந்து அரசியல்வாதியாக அவதாரம் எடுத்துள்ளார்.

தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜாக்கிரதையாக பேச வேண்டும்.

ஆளுநர் ஆளுநராக செயல்பட வேண்டும், அவர் பேசும் பேச்சு ஆளுநருக்கும் அல்ல, ஆர்.என்.ரவிக்கும் அழகல்ல. அவர் மத்திய அரசின் பிரதிநிதி அதனால் அப்படி பேசுகிறார்.

ஆளுநர் பதவி என்பது தேவை இல்லை என்பதுதான் எல்லோருடைய நிலைப்பாடும். ஆனால் அந்த பதவி இருக்கும்போது ஆளுநரை மதித்துதான் ஆக வேண்டும். திமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஆளுனரை மதித்துதான் ஆக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இது அவர்களுக்கு தர்மசங்கடமான நிலை என்றார். 

ஓபிஎஸ் என்னுடைய பழைய நண்பர். அவர் என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். இந்த தீர்ப்பு எங்களை எதுவும் பாதிக்காது.

இரட்டை இலை இபிஎஸ்ஸிடம் சென்றால் அது அதிமுகவை மேலும் பலவீனமாக்கும். இரட்டை இலை சின்னம் இருந்தால் மட்டும் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விடுவார்களா?' என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com