அயோத்தி உள்ள ஃபைசாபாத்தில் களமிறங்கும் வேட்பாளர்கள் யார் யார்?

பாஜகவின் அயோத்திக் கணக்கு, அந்தக் கோவில் இருக்கும் ஃபைசாபாத் தொகுதியில் வெற்றி பெறுமா?
அயோத்தி கோவில்
அயோத்தி கோவில்ANI

மக்களவைத் தேர்தல் வெற்றிக்காக பாஜக பயன்படுத்தும் ஆயுதங்களில் ஒன்றான பால ராமர் தரிசனம் தரும் அயோத்தி கோவிலை உள்ளடக்கிய ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜகவும் சமாஜ்வாதியும் நேருக்குநேர் மோதவுள்ளன.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுகள் வருகின்ற 19-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. 80 தொகுதிகளை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்திலும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இவற்றில், அயோத்தி பேரவைத் தொகுதி இடம் பெற்றுள்ள ஃபைசாபாத் மக்களவைத் தொகுதிக்கு 5-ஆம் கட்டமாக மே 20-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த தொகுதியில் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருக்கும் பாஜகவின் லாலு சிங்கை எதிர்த்து, இந்தியா கூட்டணி வேட்பாளராக சமாஜ்வாதியின் மூத்த தலைவர் அவதேஷ் பிரசாத் களமிறங்கியுள்ளார்.

அயோத்தி கோவில்
ஓவைசியை எதிர்த்து சானியா மிர்சாவை களமிறக்கும் காங்கிரஸ்?

ஃபைசாபாத் மக்களவைத் தொகுதிக்குள் அயோத்தி, பிகாபூர், மில்கிபூர், ருடௌலி மற்றும் தாரியாபாத் ஆகிய 5 பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன.

கடந்த மக்களவைத் தேர்தலில் ராணுவத்தின் ‘துல்லிய தாக்குதல்’ உள்ளிட்டவற்றை முதன்மைப்படுத்தி பிரசாரம் செய்த பாஜக, இந்த முறை வட மாநிலங்களில் அயோத்தியில் ராமருக்குக் கோவில் கட்டியதை முன்னிலைப்படுத்தி வருகிறது.

இதற்காக முழுவதும் முடிக்கப்படாத நிலையிலும் அயோத்தி கோவிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு மிகப் பிரமாண்டமாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடத்தப்பட்டது.

வட மாநிலங்களில் பெரும்பாலும் பாஜக வேட்பாளர்கள் அயோத்தி கோவிலை மையப்படுத்தியே பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். வேட்பாளர்கள் பலர் தேர்தலில் வென்றால், மக்களை அயோத்தி கோவிலுக்கு இலவசமாக அழைத்துச் செல்வோம் என்றெல்லாமும் வாக்குறுதி அளித்து வருகின்றனர்.

அயோத்தி கோவில் திறப்பால் உத்தரப் பிரதேச மாநிலம் மட்டுமின்றி, பிற வட மாநிலங்களிலும் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஃபைசாபாத் தொகுதியில் 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற லாலு சிங்கையே மீண்டும் மூன்றாவது முறையாக பாஜக களமிறக்கியுள்ளது.

சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக மூத்த தலைவர் அவதேஷ் பிரசாத் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் இந்த மக்களவைத் தொகுதிக்குள் இடம் பெற்றுள்ள மில்கிபூர் (தனி) சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினராக 9 முறை வெற்றி பெற்றவர்.

இதற்கிடையே, இந்த மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக சச்சிதானந்த பாண்டே களமிறக்கப்பட்டுள்ளார். இவர், அம்பேத்கர்நகர் மாவட்ட பாஜக தலைவராக இருந்து ராஜிநாமா செய்தவர்.

பகுஜன் சமாஜ் கட்சியில் அண்மையில் இணைந்த இவருக்கு ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மாயாவதி வாய்ப்பளித்துள்ளார்.

அயோத்தி கோவில்
வடகிழக்கில் வலுவான நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி!

கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜகவின் லாலு சிங், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளரைவிட 2.80 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், 2019 தேர்தலில் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார்.

தற்போது, சபாஷ், சரியான போட்டி என்பது போல, சமாஜ்வாதியும் மூத்த தலைவரைக் களமிறக்கியுள்ளதால் கடும் போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவின் அயோத்திக் கணக்கு, அந்தக் கோவில் இருக்கும் ஃபைசாபாத் தொகுதியில் வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com