மனிதர்கள் மீதான பற்று..! மலையாள இயக்குநர் ராஜீவ் ரவியின் திரை உலகம்!

மலையாள இயக்குநர் ராஜீவ் ரவியின் திரைப்படங்கள் குறித்து...
மலையாள இயக்குநர் ராஜீவ் ரவியின் படங்கள்..
மலையாள இயக்குநர் ராஜீவ் ரவியின் படங்கள்..
Published on
Updated on
4 min read

புணே திரைப்படக் கல்லூரியில் படித்து இயக்குநராக ஆசைப்பட்டு, பின்னர் பொருளாதார பிரச்னைகளை சமாளிக்க ஒளிப்பதிவாளராகத் தனது திரைப் பயணத்தைத் தொடங்கியவர் ராஜீவ் ரவி.

தேவ். டி, கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர், பாரடைஸ், பாம்பே வெல்வெட், உட்தா பஞ்சாப், தொண்டிமுதலும் த்ரிக்சாக்சியும் ஆகிய படங்கள் இவரது ஒளிப்பதிவுக்கு பெயர் சொல்லுவதாக அமைந்துள்ளன.

ராஜீவ் ரவியின் மனைவி (கீது மோகன்தாஸ்) இயக்கிய லையர்ஸ் டயர்ஸ் (2014) படத்துக்காக அவருக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

ஒரு கலைஞனின் வேலை வரலாற்றில் அவரது காலத்திற்கு சாட்சியாக இருக்க வேண்டும்” என ராபர்ட் ரௌசென்பெர்க் (அமெரிக்க ஓவியர்) கூறியதற்கு உதாரணமாக தனது திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

ராஜீவ் ரவி இயக்கிய அனைத்து படங்களும் எளிய மக்களின் வாழ்வியல், ரௌடிகளாக மாற்றப்படும் அவர்களின் போராட்டங்களும் அதிகாரத்துக்கு எதிராக போராடி தோல்வியுற்ற அவர்களின் வலியையும் தனது கேமராவின் மூலம் ஆவணமாக்கியுள்ளார் என்று சுருக்கமாகத் தொகுத்துக் கூறலாம்.

1. அன்னயும் ரசூலும் (2013)

ஃபகத் ஃபாசில், ஆண்ட்ரியா நடித்த திரைப்படம். மலையாள எழுத்தாளர் சந்தோஷ் எச்சிக்கானம் திரைக்கதை எழுதியிருப்பார். கிறிஸ்துவ பெண், முஸ்லிம் ஆண் காதலிக்கும் கதை.

இந்தப் படத்தை கொச்சியில் குறிப்பாக வைப்பீன் தீவில் எடுக்கப்பட காரணம் அங்கிருக்கும் மக்களின் வாழ்வியலே என்கிறார்.

ஒவ்வொரு படத்துக்கும் அந்த மண்ணைச் சேர்ந்தவர்களையே நாயகராக நடிக்க வைக்கிறார். அப்போதுதான் அந்த வட்டார மொழி சரளமாக வரும் என்பது ராஜீவ் ரவியின் நம்பிக்கை.

இந்தப் படம் மேலோட்டமாக பார்த்தால் காதல் கதை என்று தோன்றும். சற்றுக் கூர்ந்து கவனித்தால் லவ் ஜிகாத் எனும் கருத்துருவாலும், முஸ்லிம் என்ற மத அடையாளத்தினாலும் கொச்சியில் வாழும் முஸ்லிம்களின் வாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்படுகிறதென மிக நுட்பமாக காட்சிப்படுத்தி இருப்பார்.

ஃபகத்தின் சகோதரருக்கு பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) கிடைப்பதில் தொடரும் சிக்கல்.‌ முஸ்லிம் என்பதால் சந்தேகத்தின் பேரில் சிறைக்கு செல்லும் நாயகன். நாயகனின் நண்பனாக வரும் கிறிஸ்துவர் கப்பலில் வெளிநாட்டில் வேலை செய்வதாக வருவதெல்லாம் திடமான குறிப்புகள்.

கண்ணு ரெண்டு கண்ணு பாடலில் ஆண்ட்ரியாவின் கண்கள் பேசும். ஆண்ட்ரியாவின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக இது இருக்கும்.

இந்தப் பாடலில் ஆண்ட்ரியா வேலைசெய்யும் துணிக்கடையில் இருக்கும் பெண்கள் உட்கார்ந்து டீ குடிக்கும் காட்சிகள் அற்புதமாக படம் பிடித்திருப்பார் ராஜீவ் ரவி.‌ அதில் ஒரு பிரேமில் அங்கு வேலை செய்யும் பெண்ணின் முகத்தை காண்பிப்பார். இலக்கியத்தில் பின்நவீனத்துவம் என்பார்களே, அதுமாதிரியான ஒரு காட்சி.

இவர்கள்தான் அழகு, இவர்கள்தான் நாயகர்கள், நாயகிகள் என்ற பிம்பத்தை உடைக்கும் பெருமுயற்சியின் தொடக்கம் அது. முழுமையாக கம்மாட்டிபாடம் படத்தில் நிகழ்த்தியிருப்பார்.

ராஜீவ் ரவி இயக்கியுள்ள அனைத்து படங்களுக்கும் ஒளிப்பதிவாளர் அவரே.

(டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்)

2. நான் ஸ்டீவ் லோபஸ் (2014)

லைப் இஸ் அன்ஃபேர் - Life is unfair (வாழ்க்கை அநியாயமானது) என்ற வாட்ஸ்ஆப் வாசகத்துடன் தொடங்கும் இந்தப் படம்தான் ராஜீவ் ரவியின் படங்களில் மிகவும் பிடித்த கமர்ஷியலாக கவனம் பெறாமல் சென்ற படங்களில் முதன்மையானதாக இருக்கிறது.

இந்தப் படத்துக்கும் திரைக்கதை எழுத எழுத்தாளர் சந்தோஷ் எச்சிக்கானம் உதவியிருக்கிறார்.

ரௌடிகள் என்பவர்கள் யார்? அவர்கள் செய்யும் கொலையும் திருட்டும் மட்டுமே வெளியே வருகிறது. அவர்கள் திடீரென எங்கே காணாமல் போகிறார்கள்? அவர்களது வாழ்க்கை குறித்து அக்கறையுடன் எடுக்கப்பட்ட படம்.

ஸ்டீவ் ஒரு கல்லூரி மாணவன். குளியலறையில் இருந்து பக்கத்து வீட்டு ஆண்டியை பார்க்கும் சாதாரண இளைஞன். அவன் திடீரென ஒரு சுழலில் மாட்டிக்கொள்கிறான். அதிலிருந்து மனதளவில் விலகிவரும் நேரம் மிகவும் காலம்கடந்துவிடுகிறது.

காதலியிடம் லவ் யூ என்று சொல்லிவிட்டு பைக்கில் கனவுகளை சுமந்துவரும் அந்த இறுதிக் காட்சிகள் இன்னமும் மனதை விட்டு அகலாது இருக்கின்றன.

ஏன் இந்தத் துயரம்? தனிமனிதனால் எந்த ஒரு அரசையும் எதிர்க்க முடியாது. நிகழும் அநியாயத்தையும் தடுக்க முடியாது.‌ அது மிகப் பெரிய சுழல். இந்தப் படத்தில் வரும் கிரைம் ரிப்போர்ட்டர் கூறுவதுதான் வாழ்க்கை தத்துவம்.

அது அப்படித்தான் நடக்கும். அடுத்தவர்கள் வாழ்க்கையை நினைத்து நமது சொந்த வாழ்க்கையை கோட்டைவிடக் கூடாது.

இதில் வரும் ஒரு ரௌடி காதாபாத்திரத்தின் மனைவியாக அபிஜா அஞ்சலி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். குறைவான நேரமே வந்தாலும் சிறப்பாக நடித்திருப்பார். அவர்களது குடும்பப் புகைப்படங்களை ஸ்டீவ் பார்த்துக் கொண்டு இருப்பதில் ஒரு அழகான வாழ்க்கை இருக்கிறது.

ஒருகட்டத்தில் ஏன் அமைதியாக கல்லூரிக்குச் சென்று படித்துவிட்டு வரக்கூடாதா என்று ஸ்டீவ்வின் அம்மா கூறும்போது அவரது சித்தப்பாவாக வருபவர், “மனிதர்கள் மீதான பற்று இல்லாமல் எதற்குப் படிக்க வேண்டும்?” எனக் கூறுவார்.

இதுதான் ராஜீவ் ரவியின் திரைப்படங்களின் அடிநாதமாக இருக்கிறது.

(இந்தப் படத்தை ஆப்பிள் டிவியில் பார்க்கலாம்).

3. கம்மாட்டிபாடம் (2016)

சில சினிமாத்தனமான சண்டைக் காட்சிகளை தவிர்த்துவிட்டு, நகரமயமாக்கலில் யார் சுரண்டப்பட்டார்கள், எப்படி எல்லாம் பாதிக்கப்பட்டார்கள் என்ற வரலாற்று ஆவணம்தான் கம்மாட்டிபாடம்.

இது கேரளத்தில் மட்டுமல்ல வட சென்னை, மும்பை, ஆர்ஜென்டீனாவில் என உலகம் முழுவதும் நடக்கும் பிரச்னைதான். பூர்வகுடிகளின் நிலத்தைப் பறித்து அந்த இடத்துக்கே அவர்களை காவலாளி போல வாசலுக்கு வெளியே நிற்க வைத்தவர்கள் பற்றிய கதை.

இந்தப் படத்தில் பலரும் நினைப்பதுபோல துல்கர் சல்மான் நாயகன் அல்ல. வேறு யார்? விநாயகன்தான்.

ஆடிப் பாடி சுதந்திரமாக திரிந்த மக்கள் இறுதியில் பிணத்தை தூக்கிச் செல்வதற்குகூட இடமில்லாமல் குறுகிய பாதையில் செல்வார்கள். நிலம் மிகப் பெரிய அதிகாரம். அதை இழந்தவர்களின் வாழ்க்கை மட்டுமே படத்தில் காட்டப்படவில்லை. நட்பு, காதல், துரோகம், பழிவாங்கல் என்று பல பரிணாமங்களில் படம் பயணிக்கும். ராஜீவ் ரவியின் படங்களில் கமர்ஷியல் வெற்றி பெற்ற படமாகவும் இதுவே இருக்கிறது.

3 மணி நேரம் கொண்ட இந்தப் படத்துக்கு ரசிகர்கள் அதிகம். இந்தப் படத்தின் 4 மணி நேர பதிப்புக்கு இன்னமும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். எப்போது வெளியிடுவாரோ ராஜீவ் ரவி?

(டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்)

4. குட்டவும் ஷிக்சாவும் (2022)

கேரளத்தில் ஒரு திருட்டு நடைபெறுகிறது. அதைத் தேடி வட இந்தியாவுக்குச் செல்லும் காவல்துறையினர் பற்றிய கதை. தமிழில் வெளியாகி ஹிட் அடித்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் அரசியல் குறைகள் நீங்கிய மாஸ் கமர்ஷியல் சாயம் சிறிதும் பூசாத அசலான திரைப்படம்.

காவல்துறை அதிகாரியாக இருந்து பின்னர் நடிகரான சிபு தாமஸ் எழுதிய கதை. அதனால்தான் என்னவோ மிகவும் உண்மைக்கு நெருக்கமாக இருக்கும். தமிழில் இப்படியான ஒரு படத்துக்கு வாய்ப்பே இல்லை.

மீண்டும் ராஜீவ் ரவி தனது அரசியல் கேள்வியை எழுப்புகிறார்.

அழகான கேரளத்தில் இருந்து வறண்ட நிலமான வட இந்தியாவுக்குள் படத்தின் இரண்டாம் பாகம் செல்கிறது. இது திட்டமிட்ட படப்பிடிப்பு என்று நேர்காணலில் கூறியிருந்தார்.

(நெட்பிளிக்ஸில் இந்தப் படத்தைப் பார்க்கலாம்)

5. துறமுகம் (2023)

கேரளத்தின் மட்டஞ்சேரியில் 1953இல் நடந்த துறைமுக தொழிலாளர்களின் துப்பாக்கிச் சூடு பற்றிய படம். படம் 1930-40 களில் தொடங்குகிறது. ஜோஜு ஜார்ஜ் என்ன மாதிரியான நடிகர்! அவரது கண்களும் நடித்திருக்கும்.

தொழிலாளர்களுக்கு டோக்கன் கெடுப்பதில் இருக்கும் பிரச்னை, முதலாளிகளின் உழைப்புச் சுரண்டல், தொழிலாளர்களின் போராட்டம்‌, வறுமை, கூடுதல் வட்டி என அன்றைய காலக்கட்டத்தை கண்முன்னே காட்டியிருப்பார்.

முதல் 20 நிமிடம் கறுப்பு - வெள்ளையில் படமாக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு காட்சியில் பூர்ணிமா இந்திரஜித்தின் கண்களுக்கு இட்டிருக்கும் கண் மை தெரியும் அளவுக்கு சிறப்பான ஒளிப்பதிவை செய்திருப்பார். ஒளிப்பதிவு, கலை இயக்குநரின் சிறப்பான பங்களிப்புக்கு தேசிய விருது தரலாம்.

இந்தப் படத்தில் நிவின் பாலி, அசோகன், இந்திரஜித் முக்கியமான கதாபாத்திரங்கள். படம் ஒரு குடும்பத்தில் தொடங்கி ஒரு மிகப் பெரிய போராட்டத்தில் முடியும். இதன் திரைக்கதையை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது.

இந்தப் படம் ராஜீவ் ரவியின் மற்ற படங்களைவிட மெதுவாக செல்லும். ஆனால் ஒரு நாவலைப் படிப்பதுபோல தோன்றும். முக்கியமாக அசோகன் - நிவின் பாலி - நிமிஷா சஜயன் இடையிலான காட்சிகள் மிகவும் அருமையாக எடுக்கப்பட்டிருக்கும். (இந்தப் படத்தை சோனி லைவ் ஓடிடியில் பார்க்கலாம்).

இதில் வரும் நிவின் பாலி கதாபாத்திரம்தான் கம்மாட்டிபாடம் விநாயகன், ஸ்டீவ் லோபஸில் வரும் ரௌடி. ஆழமாக உற்றுப் பார்த்தால் ராஜீவ் ரவியும் ஒரே படத்தைத்தான் மீண்டும் மீண்டும் எடுத்து வருகிறாரோ என்று எண்ணம் வலுப்படுகிறது...

கலைஞன் மக்களிடமிருந்து விலகியிருக்க வேண்டுமா எனக் கேள்விகேட்டபோது ராஜீவ் ரவி, “மக்களுக்குள் ஒருவனாக இருக்க வேண்டும். அவர்களின் பிரச்னைகளை பேசவேண்டும். படத்துக்கு புரமோஷன் தேவையில்லை. அதை மக்களே பார்த்துக்கொள்வார்கள்” என்றார்.

இதுவரை தொலைக்காட்சிகள், யூடியூப்பிலும் நேர்காணல்களில் பங்கேற்காமல் இருந்துவருகிறார் ராஜீவ் ரவி. எந்தவிதமான சமூகவலைதளங்களிலும் அவருக்கென தனிப்பட்ட கணக்கு இல்லை. தனது அரசியல் கருத்தைப் படத்தின் மூலம் மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார்.

தற்போது, அவரது மனைவி கீது மோகன்தாஸ் இயக்கும் டாக்ஸிக் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துவருகிறார்.

குறைந்த செலவில் எடுக்கப்பட்டாலும்கூட மலையாளப் படங்களில் பலவும் மனித மனங்களின் நுட்பங்களைப் பதிவு செய்வதில் பெரிய நிலையில்தான் இருக்கின்றன எனலாம். இவற்றில் ராஜீவ் ரவியின் திரைப்படங்கள் குறிப்பிடும்படியான மாதிரிகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com