2024-ல் - அரியலூர் ரயில் விபத்தும் சாஸ்திரியின் ராஜிநாமாவும் - 4 ... நேரு உருக்கம்

இன்றைய சூழ்நிலைகளுடன் ஒப்பிட அரியலூர் ரயில் விபத்தும் அன்றைய ரயில்வே அமைச்சர் சாஸ்திரியின் ராஜிநாமாவும் பற்றிய குறுந்தொடர்...
லால் பகதூர் சாஸ்திரி - ஜவாஹர் லால் நேரு
லால் பகதூர் சாஸ்திரி - ஜவாஹர் லால் நேரு
Published on
Updated on
4 min read

ஆனாலும்..., இந்தச் சூழ்நிலையில் அரியலூர் விபத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்றுத் தாம் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் மத்திய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி.

லால் பகதூர் சாஸ்திரியின் ராஜிநாமாவை மக்களவையில் அறிவித்த பிரதமர் ஜவாஹர் லால் நேரு, எது நடந்தாலும் உறைக்காமல் சர்க்கார் காலந்தள்ளும் என்று யாரும் நினைக்க இடந்தரலாகாது என்பதாலேயே ராஜிநாமாவை ஏற்பதாகவும் விளக்கினார்.

நேருவின் பேச்சு விவரம்:

“ஹைதராபாத் அருகே மெஹபூப் நகரில் சில மாதங்களுக்கு முன் பெரிய ரயில் விபத்து ஏற்பட்டபோதே தாம் பதவி விலகுவதாக சாஸ்திரி தெரிவித்தார். எனினும் தாம் அதை ஏற்கவில்லை.

அரியலூர் விபத்துச் செய்தி எல்லாருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. நாம் அனுதாபச் செய்திகளை அனுப்புவதற்கு மேல் என்ன செய்ய முடியும்? கஷ்டத்துக்கு உள்ளானோர் மட்டுமின்றி இந்த அவையிலும் வெளியிலும் இருக்கும் அனைவருக்கும் இது கவலை தருகிறது.

ஆனால், அரியலூர் விபத்துக்குத் தாமே பொறுப்பு என்று கருதுவதால் ராஜிநாமாச்  செய்ய விரும்புவதாக நேற்றிரவு ஸ்ரீ சாஸ்திரி கூறினார்.

ராஜிநாமாக் கடிதம் கிடைத்தவுடனும் பிறகும் அவருடன் பேசினேன்.  இந்த விஷயம் பூராவையும் சிந்தித்துப் பார்த்து ராஜிநாமாவை ஏற்றுக் கொள்வதுதான் சரி என்று முடிவு செய்தேன். விபத்துக்கு அவர் ஜவாப்தாரி (பொறுப்பு) என்று நான் கருதவில்லை. யார் ஜவாப்தாரி (பொறுப்பு) என்பது தெரியாது. இந்தக் கட்டத்தில் குறிப்பிட்ட ஒரு நபர் மீதும் பொறுப்பைக் கட்ட என்னால் இயலாது.  இவ்வாறு நடைபெறாதவாறு பார்த்துக்கொள்வது எஞ்சினீர்களின் பொறுப்பு. எனினும், மந்திரியின் ராஜிநாமாவை ஏற்குமாறு ராஷ்டிரபதிக்கு (குடியரசுத் தலைவருக்கு)  யோசனை கூறுவது நல்லது எனக் கருதினேன்.

உதாரணம்

 சம்பிரதாய நேர்மையை முன்னிட்டு இவ்விஷயமாக ஒரு உதாரணத்தை நிலைநிறுத்துவது அவசியமென நினைக்கிறேன்.

என்ன நடந்தாலும் சரி, அதனால் பாதிக்கப்படாமல் (கவலைப்படாமல்) சர்க்கார் பழையபடியே தொடர்ந்து போய்க் கொண்டிருக்கும் என்று எவரும் நினைத்துவிடலாகாது.

ராஜிநாமாவை ஏற்பது என்ற இந்த முடிவைச் செய்வது எனக்குச் சிரமமாக இருந்தது. ஆனால், இரவெல்லாம் யோசித்துப் பார்த்து விடியற்காலை இந்த முடிவைச் செய்தேன். இதைச் சபையினருக்கு அறிவிப்பது கடமையெனக் கருதுகிறேன்.

ரயில்வே அமைச்சரின் ராஜிநாமாவை ஏற்குமாறு குடியரசுத் தலைவருக்கு யோசனை கூறப் போகிறேன். ஆனால், மாற்று ஏற்பாடுகள் நடைபெறும் வரை, சில தினங்களுக்குப் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு அவரை வேண்டப் போகிறேன்.

இந்த விபத்துக்குக் காரணமாகச் சொல்லக் கூடிய சால்ஜாப்புகள் எவ்வளவோ இருக்கலாம். ஆனால், இத்தகைய விவகாரத்தில் எந்த சமாதானமும் சரியானதாகாது.

ஒரே மாதிரி விபத்து, ஒரே பிரதேசத்தில், அல்லது அருகில், ஒரு குறுகிய காலத்தில் இரண்டு தடவை, ஒன்றிரண்டு ஆண்டுகளில் மூன்று தடவை நடந்திருப்பதுதான் நம்மெல்லாரையும் பிடித்து உலுக்கிவிட்டிருக்கிறது.

நாம் எல்லாருமே இதற்காக வருந்துகிறோம். ஆனால், எல்லாரையும்விட அதிகம் துக்கிப்பவர் ரயில்வே அமைச்சர்தான் என்பதை நான் அறிவேன். அவரிடம் எனக்கு விசேஷ மதிப்பு உண்டு. எதிர்காலத்தில் நாங்கள் ஏதாவது ஒரு வகையில் சேர்ந்து உழைக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்புகிறேன்”.

சாஸ்திரியின் ராஜிநாமா கடிதத்தையும்  அமைச்சரவையில் பிரதமர் நேரு வாசித்தார்.

நவ. 25 ஆம் தேதியிட்ட இந்தக் கடிதத்தில் லால் பகதூர் சாஸ்திரி கூறியிருப்பது:

அன்புள்ள பண்டிட்ஜி,

உங்களுக்கு மீண்டும் இந்த (ராஜிநாமா) கடிதம் எழுதுவது குறித்து நான் வருந்துகிறேன். மற்றொரு மிக மோசமான ரயில் விபத்து ஏற்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். கிட்டத்தட்ட ஒரே மாதிரி சந்தர்ப்பங்களில் இந்தச் சமீபத்திய விபத்துகள் நிகழ்ந்துள்ளமை விந்தையான ஒரு சேர்க்கை. மஹபூப் நகர் விபத்துக்குப் பின் சீக்கிரம் மற்றொரு கோரமான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோர் தொகை ஏற்கெனவே முந்தைய விபத்தில் ஏற்பட்டதைவிட அதிகமாக இருக்கிறது. உடைபாடுகள் அனைத்தையும் இதுவரை அகற்ற முடியாததால் சேதம் எந்த எண்ணிக்கையை எட்டுமோ நானறியேன். அநேகர் பலத்த காயமடைந்துள்ளனர்.

லால் பகதூர் சாஸ்திரி - ஜவாஹர் லால் நேரு
2024-ல் - அரியலூர் ரயில் விபத்தும் சாஸ்திரியின் ராஜிநாமாவும்... கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ்!

மிகவும் துக்ககரமான அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள விபத்து குறித்து மக்களுக்கும் பார்லிமெண்டுக்கும் ஏற்பட்டுள்ள கவலையை நான் நன்கு உணர முடிகிறது. சென்ற தடவை நான் ராஜிநாமா செய்தபோது அதை ஏற்காமல் தாராளமாக நடந்துகொண்டீர்கள். நான் மீண்டும் உங்களை தர்மசங்கடத்தில் மாட்டிவைக்க விரும்பவில்லை. எனவே, நான் வகிக்கும் பதவியைச் சந்தடியின்றி விட்டுவிடுவதே எனக்கும் சர்க்கார் முழுமைக்கும் நல்லதெனக் கருதுகிறேன். இது பெரும் அளவுக்கு மக்கள் மனதில் ஆசுவாசம் ஏற்படுத்தும். சர்க்காரைக் கண்டிப்போரையும் சாந்தப்படுத்தும். என் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

கடிதத்தைப் படித்துவிட்டு நேரு கூறினார்:

“கடிதம் கிடைத்தவுடன் அவருடன் பேசினேன். பிறகு நேற்றிரவும் பேசினேன். அவர் மனம் எவ்வளவு வேதனைப்பட்டது, தன் மீதுள்ள பளு எத்தகையது என்று அவர் கருதுகிறார் என்பதைக் கண்டேன். பிறகு மீண்டும் அதைப் பற்றி யோசித்து அதை ஏற்றுக்கொள்வது நல்லது என்ற முடிவு செய்தேன்.”

நேருஜி பெருமிதம்            

நேரு மேலும் கூறியதாவது:

“விபத்துக்குப் பொறுப்பு இந்திய அரசுதான். இந்தப் பொறுப்பை நாங்கள் தட்டிக் கழிக்க விரும்பவில்லை. ரயில்வேயில் நேரிடும் எதற்கும் அதிகப் பொறுப்பாளி ரயில்வே மந்திரி எனினும் இந்திய சர்க்காரின் மற்ற மந்திரிகளும் கூட்டாகப் பொறுப்பாளிகளே.

உயர்ந்த பண்புள்ள ஏராளமான சகாக்களுடன் இந் நாட்டின் பிரதம மந்திரியாகப் பணிபுரியும் கவுரவுமும், பேறும் எனக்கு வாய்த்துள்ளது. அவர்கள் முற்றிலும் குறையற்றவர்களாக இல்லாதிருக்கலாம். ஆனால், தங்களாலானதையெல்லாம் நாட்டின் சேவைக்கு அர்ப்பணித்துள்ளவர்கள் (கரகோஷம்). இத்தனை வருஷங்களாக இந்தியாவை நிர்வகிக்கும் அவர்கள் பெரும் பளுவைச் சுமந்துள்ளனர்.

என் சகாக்களின் கூட்டுறவு முயற்சிகளுக்கு நான் நன்றி பாராட்டுகிறேன். நாங்கள் ஒன்றாக உழைத்துள்ளோம். அதில் கோஷ்டியாக உழைத்துள்ளோம். அதில் வெற்றி கண்டுள்ளோம் (கரகோஷம்). நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதைப் பிறர்தான் கூற வேண்டும். ஆனால், இந்திய மக்களின் சேவையில் நாங்கள் அனைவரும் எங்களால் அதிகபட்சம் சாத்தியமானதனைத்தையும் செய்துள்ளோம் என்பது மட்டும் உண்மை (கரகோஷம்).

இதையெல்லாம் எதற்காகக் கூறுகிறேன் என்றால் இந்த விபத்து ஏற்பட்டதிலிருந்து கடந்த சில தினங்களாக என் மனம் மிகவும் சங்கடப்படுகிறது. என் சகா ரயில்வே மந்திரியின் மனம் இன்னும் அதிகம் சங்கடப்பட்டது; துக்கப்பட்டது போலும்.

அரியலூர் விபத்து மீட்புப் பணியில்...
அரியலூர் விபத்து மீட்புப் பணியில்...- கருவூலத்திலிருந்து

அழுக்கில்லா மாணிக்கம்

இந்திய சர்க்காரில் உள்ள என் சகாக்கள் பற்றி நான் குறிப்பிட்டேன். என் சகா ரயில்வே மந்திரியைப் பற்றி குறிப்பிடுவதாயின், சர்க்காரில் அவர் நீண்ட காலம் இருந்திருக்கிறார் என்பது மட்டுமல்ல; எந்தவொரு பொறுப்பில் அவரைவிடச் சிறந்த சகாவை யாரும் விரும்ப முடியாது (கரகோஷம்). அவர் உன்னதமான நாணயம், விசுவாசம், லட்சியங்களில் ஈடுபாடு கொண்டவர். அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள வேலையில் தோல்வி ஏற்படும்போதெல்லாம் பெரிதும் வருத்தப்படும் மனச்சாட்சி படைத்த மனிதர்.

மஹபூப் நகர் விபத்தின்போது அவர் பெரிதும் வருத்தப்பட்டார். துன்பம் அடைந்தார். என்னிடம் வந்தார். பதவியை ராஜிநாமா செய்வதாகக் கடிதம் எழுதினார். ஏனெனில், அதற்குத் தாம்தான் பொறுப்பு என்று நினைத்தார். நேரடியாக அவருக்கு சம்பந்தம் கிடையாதெனினும் இறுதியில் அது அவரது பொறுப்புத்தானே?

அரசியல் சட்ட சம்பிரதாயம் என்ற முறையிலும் அவர் ராஜிநாமா செய்வது சரியே. அதனால்தான் அவர் ராஜிநாமா சரி என நான் ஒப்புக்கொண்டேன். ஆனால் அதை ஏற்பது சரியல்ல என நினைத்தேன். அவ்வாறே அவரிடம் கூறினேன். அது அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை.

இப்போது மீண்டும் இந்த விபத்து பற்றி நமக்குத் தெரிந்ததும் என்னிடம் வந்து ராஜிநாமா செய்ய முன்வந்தார். நேற்றிரவு கடிதமும் எழுதினார். அதை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை. ஏற்குமாறு ராஷ்டிரபதிக்கு (குடியரசுத் தலைவருக்கு) சிபாரிசு செய்யப் போகிறேன்.

இயற்கைக் கோளாறு காரணமாக நாசங்கள் விளைகின்றன. பூமி அதிர்ச்சியை நாம் தடுக்க முடியாது. இந்த வருஷம் நடந்தது போல சில சமயங்களில் வெள்ளங்கள் வந்து ஏராளமான கிராமங்கள் அழித்துவிடுகின்றன. இந்த நாசங்களுக்கு நாம் பணிந்துபோவதில்லை. அவைகளைச் சமாளிக்க முயற்சி செய்கிறோம். அவை தவிர, இப்போது நடந்தது போன்ற நாசமும் திடீரென ஏற்படுகிறது. இதற்குப் பலவிதமான சமாதானங்களும் சொல்லலாம். எல்லா முன்ஜாக்கிரதை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன என்று சொல்லலாம். எனினும் இது நடந்துவிட்டது. இம்மாதிரி விஷயத்தில் எந்தவித சமாதானமும் போதுமானது என்று நான் நினைக்கவில்லை. ஒரே மாதிரியான விபத்து, ஒரே பிரதேசத்தில் குறுகிய காலத்திற்குள் அடுத்தடுத்து நடந்திருக்கிறது. ஒன்றிரண்டு வருஷங்களுக்குள் மூன்று தடவை நடந்திருப்பது நமக்கெல்லாம் ரொம்ப வருத்தத்தை அளித்துள்ளது. இதைவிட பெரிய எச்சரிக்கை வேறு இருக்க முடியாது. நம்பிக்கையும் பந்தோபஸ்து (பாதுகாப்பு) உணர்ச்சியும் இருக்கும்வரையில் நமது ரயில்வேக்களை நடத்த சாத்தியமான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த சம்பவம் பற்றி சௌகரியப்பட்ட சமயத்தில் விவரமான விவாதம் நடத்துவதை சர்க்கார் (அரசு) வரவேற்கும்.”

ஸ்ரீ சாஸ்திரி பேட்டி

23 ஆம் தேதியே தமது ராஜிநாமாவைச் சமர்ப்பித்ததாகப் பிறகு சபைக்கு வெளியே நடந்த சம்பாஷணைகளின்போது (உரையாடலின்போது) ஸ்ரீ சாஸ்திரி தெரிவித்தார். புனராலோசனை (மறுபரிசீலனை) செய்யுமாறு பிரதமர் கேட்டாராம். ஆனால் தமக்கு மிகுந்த வேதனை ஏற்பட்டிருப்பதாகவும், ராஜிநாமா செய்வதுதான் முறையென்று பதிலளித்ததாகவும் அவர் சொன்னார். விபத்துக்குத் தார்மிகப் பொறுப்பு தம்முடையது என்று சொல்லவே, ஞாயிற்றுக்கிழமையன்று அதனை ஏற்பதென பிரதமர் முடிவு செய்தார் என்று ஸ்ரீ சாஸ்திரி தெரிவித்தார்.

[வரலாற்றின் பக்கங்களிலிருந்து... தொடரும்]

லால் பகதூர் சாஸ்திரி - ஜவாஹர் லால் நேரு
2024-ல் - அரியலூர் ரயில் விபத்தும் சாஸ்திரியின் ராஜிநாமாவும் - 5 ... உள்ளத்தில் உறுதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com