2024-ல் - அரியலூர் ரயில் விபத்தும் சாஸ்திரியின் ராஜிநாமாவும் - 5 ... உள்ளத்தில் உறுதி

இன்றைய சூழ்நிலைகளுடன் ஒப்பிட அரியலூர் ரயில் விபத்தும் அன்றைய ரயில்வே அமைச்சர் சாஸ்திரியின் ராஜிநாமாவும் பற்றிய குறுந்தொடர்...
சாஸ்திரி - காமராஜர் - நேரு
சாஸ்திரி - காமராஜர் - நேரு- கருவூலத்திலிருந்து

மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அரியலூர் ரயில் விபத்து தொடர்பாகத் துயரங்களையும் வருத்தங்களையும் பகிர்ந்துகொண்டபோதிலும் பெரும்பாலான உறுப்பினர்கள், சாஸ்திரி ராஜிநாமா செய்வதையும் அதை பிரதமர் நேரு ஏற்றுக்கொள்வதையும் வரவேற்கவில்லை.

ராஜிநாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதுடன், நேரு ஏற்றுக்கொள்ளக் கூடாதென்றும் வலியுறுத்தினர்.

சாஸ்திரியின் ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ளக் கூடாதென வலியுறுத்தி பிரதமர் நேருவுக்கு பெரோஸ் காந்தி, பரூவா உள்பட 30 காங்கிரஸ் எம்.பி.க்கள் கடிதமொன்றையும் எழுதினர்.

“ஸ்ரீ சாஸ்திரியின் உயர்ந்த நோக்கம் பாராட்டத் தக்கது. ஆனால், நுட்பம் மிகுந்த ரயில்வே நிர்வாகத்தில் ரயில்வே போர்டுதான் நிர்வாகத்துக்கு நேர் பொறுப்பு ஏற்கிறதேயொழிய, ரயில்வே மந்திரியல்ல. ரயில்வே நிர்வாகம் திறமையாக இருக்க வேண்டும் என்பது அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் தெளிவாகிறது. 

ஆனால், எங்களுக்கும் தேசத்துக்கும் ரயில்வே அமைச்சரின் மீது நம்பிக்கையிருக்கிறது. இந்தத் தருணத்தில் உண்மையாகவும் கடினமாகவும் உழைக்கும் ரயில்வே அமைச்சரை இழப்பது புத்திசாலித்தனமாகாது.

ஆகையால், உங்கள் முடிவை  மாற்றிக் கொண்டு, இந்த ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ள வேண்டாமென்று குடியரசுத் தலைவருக்கு யோசனை கூறுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

மாநிலங்களவையிலும் சாஸ்திரியின் ராஜிநாமா பற்றி வியப்புத் தெரிவித்தார் கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ் குப்த.

ரயில்வே போர்டுக்குத்தான் இதில் அதிகப் பொறுப்பு. அந்த உறுப்பினர்கள் ஏன் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை என வினா எழுப்பிய குப்த, விபத்து பற்றி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

விபத்து பற்றி விவாதிக்க ஒப்புக்கொண்டதுடன், 23 ஆம் தேதி மாலையே பிரதமரை நேரில் சந்தித்துப் பதவிப் பொறுப்பிலிருந்து தம்மை விடுவித்துவிடுமாறு கேட்டுக்கொண்டதாக சாஸ்திரி தெரிவித்தபோது, அவையில் இருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் கூடாது, கூடாது என முழக்கமிட்டனர்.

விபத்து பற்றி உடனே விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி மக்களவையில் பிரஜா சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த புதுக்கோட்டைக்காரரான கே.எம். வல்லத்தரசு கொண்டுவந்த அவசரப் பிரேரணையை மறுத்து, நாளை அல்லது மறுநாள் அனுமதிப்பதாகத் தெரிவித்தார் மக்களவைத் தலைவர் ஸ்ரீ அனந்தசயனம் ஐயங்கார்.

“விபத்தில் என் உறவினர்கள் பலர் இறந்துவிட்டனர் என்று குறிப்பிட்டுக் கண்ணீர் விட்டழுத வல்லத்தரசு, அவையிலும் வெளியிலும் விபத்து பற்றி பெரும் துயரம் நேரிட்டுள்ளது. ஏற்கெனவே 141 பேர் மாண்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகைச் செய்திகள் இன்னும் சுமார் 200 உடல்கள் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ளதாகக் கூறுகின்றன.

“விபத்து பற்றி விவாதிக்க சம்மதிக்குமாறு அரசு கட்சித் தலைவரை வேண்டிக் கொள்கிறேன். ஏராளமான பிரபல அரசியல்வாதிகள், நீதிபதிகள், கலைஞர்கள் முதலியோரின் உயிரை விபத்து முடித்துவிட்டது. இந்த விஷயத்தில் நாடாளுமன்றம் கவனம் செலுத்தினால், அதுவாயினும் தமிழகத்திலுள்ள இரண்டு கோடி மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்” என்றும் வல்லத்தரசு குறிப்பிட்டார்.

[புதுக்கோட்டை சமஸ்தான மற்றும் நகர காங்கிரஸ் கமிட்டிகளுக்குத் தலைவராக இருந்தவர். சீர்திருத்தவாதியான வல்லத்தரசு, அந்தக் காலத்திலேயே சாதிமறுப்பு, வைதிக மறுப்புத் திருமணங்கள், பெண்களுக்கு மறுமணங்களை நடத்திவைத்தவர். பெரியாருடன் இணைந்து ஈரோடு சமதர்மத் திட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். நாட்டின் முதலாம் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்புத் தராததால் பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து போட்டியிட்டு எம்.பி.யானவர்].

வல்லத்தரசு பேசியதும் உடனே பிரதமர் ஜவாஹர் லால் நேரு எழுந்து, இந்த நிமிஷமே விவாதத்துக்கு நான் தயார். தக்க நேரத்தை மக்களவைத் தலைவர் நிர்ணயிக்கட்டும்  என்றுதான் நான் கூறினேன் என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய மக்களவைத் தலைவர், விபத்து பற்றிய முழுத் தகவல்களும் இன்னும் கிடைக்கப் பெறவில்லை (அந்தக் காலத்தில் தொலைத்தொடர்பு நிலவரங்கள் அப்படியிருந்தன!)  என்றும் நாளை, அல்லது மறுநாள் நேரம் நிர்ணயிப்பதாகவும் அதற்குள் அரசு அனைத்துத் தகவல்களையும் சேகரிக்க முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

அரியலூர் விபத்தில் மீட்புப் பணி...
அரியலூர் விபத்தில் மீட்புப் பணி...- கருவூலத்திலிருந்து

மறுநாள் மக்களவையில் விவாதமும் நடைபெற்றது. அதே தொனி. விபத்து பற்றி நிறைய விமர்சனங்கள் இருந்தபோதிலும் யாரும் லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகுவதை மட்டும் விரும்பவில்லை.

அவையில் இந்த விவாதத்தைத் தொடக்கிவைத்துப் பேசியவரும் வல்லத்தரசுதான். விபத்து பற்றியும் சாஸ்திரி பற்றியும் அவர் பேசியது என்றென்றும் அவசியம் நினைவுகூரப்பட வேண்டிய ஒன்று.

“ரயில்வே வாரியம் மந்தமான ஒரு நிறுவனம். இந்த நாட்டில் இந்த ரயில்வே வாரியத்தால் யாருக்கும் பயனில்லை. ரயில்வே வாரிய உறுப்பினர்களில் யாராவது இந்த நாட்டிலுள்ள எந்தப் பெரிய பாலத்துக்காவது போய்ப் பார்த்திருக்கிறார்களா? அதிலுள்ள குறைபாடுகளைக் கண்டுபிடித்திருக்கிறார்களா? இக்குறைகளை நீக்க உத்தரவு போட்டிருக்கிறார்களா?

“உதவி ரயில்வே மந்திரியும் தல அலுவலர்களும் ராஜிநாமா செய்யாவிட்டால் அமைச்சர் ராஜிநாமா செய்து என்ன பயன்? எந்த அமைச்சரும் ராஜிநாமா செய்வதை நான் விரும்பவில்லை. அதிலும் தற்போதைய அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரியின் ராஜிநாமாவில் எனக்குக் கொஞ்சம்கூட விருப்பமில்லை. ஏனெனில், லால் பகதூர் சாஸ்திரியைவிட சிறந்த அமைச்சரை நாம் கண்டுபிடிக்க முடியாது. அவரைவிடச் சிறந்தவர் எங்கே  ஒளிந்துகொண்டிருக்கிறாரோ, தெரியவில்லை.

“தங்கள் கடமைகளைச் செய்யத் தவறிய தல அலுவலர்களை இடைநீக்கமாவது செய்துவைக்க வேண்டும். இந்தப் பகுதிக்குப் பொறுப்பான தட்சிண ரயில்வே கோட்டப் பொறியாளர், போக்கு வரத்து கண்காணிப்பாளர், இன்னும் மற்ற அலுவலர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும்.

“இந்த விபத்து தென்னிந்தியாவில் கொள்ளிடம், காவிரி ஆறுகளின் மீதுள்ள பாலங்களைக் கடந்து செல்லும் மக்களிடையே பாதுகாப்பின்மையை ஏற்படுத்திவிட்டது. கடந்த இரண்டரை மாதங்களாக இந்தப் பகுதியில் கனமழை பெய்திருப்பதும் ரயில்வே தண்டவாளங்களுக்கு இதனால் அபாயம் ஏற்படுமென்பதும் எவரொருவருக்கும் தெரியும். விபத்து நடந்த நாளுக்கு மூன்று நாள்களுக்கு முன் இந்த பாலத்தைப் பொறியாளர் கவனித்திருந்தால் விபத்து நடந்திருக்காது. கரைகளை வெள்ளம் அரிக்கும் அபாயம் இருக்கிறதென்பதை அவர்கள் பார்த்திருப்பார்கள். விபத்தையும் தவிர்த்திருக்கலாம்.

சாஸ்திரி - காமராஜர் - நேரு
2024-ல் - அரியலூர் ரயில் விபத்தும் சாஸ்திரியின் ராஜிநாமாவும்... கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ்!

“அரியலூர் விபத்து பற்றி நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எச்.கே. பாசுவிற்குப் பதிலாக தமிழ் தெரிந்த ஒரு நீதிபதியை வைத்து விசாரணை நடத்தச் சொல்லலாம், உள்ளூரைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இன்னொரு உறுப்பினரும் விசாரணையில் கலந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

“ரயில்வே. நிர்வாகத்தின் கோட்ட அலுவலகங்கள் திறமையற்றதாக இருக்கின்றன.  இவற்றுக்குப் பொறுப்பாக உள்ளவர்களை நீக்கிவிட்டு, உதவி அமைச்சர்கள் பொறுப்பில் இவற்றை ஒப்படைக்க வேண்டும்” என்றார் வல்லத்தரசு.

கன மழையின்போது ஏன் ரயிலை நிறுத்தவில்லை என்று கேள்வி எழுப்பிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.கே. கோபாலன், ரயில்வேயில் அடிக்கடி நடக்கும் விபத்துகளுக்கு இவற்றைக் கவனித்துக்கொள்பவர்கள்தான் பொறுப்பு என்றும், ரயில்வே அமைச்சர் ராஜிநாமா செய்வது நியாயமானதுதான் என்றாலும் ரயில்வே போர்டிலும் மற்ற பதவிகளிலும் உள்ள விபத்துக்குப் பொறுப்பான அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்  என்றும் கூறினார். இதுபோன்ற கோர விபத்துகள் இனி நேராவண்ணம் ரயில்வே நிர்வாகம் முழுவதற்கும் உண்மையில் நல்ல அதிர்ச்சி வைத்தியம் தேவை என்றும் கோபாலன் குறிப்பிட்டார்.

மஹபூப் நகர் விபத்திலிருந்து ரயில்வே நிர்வாகம் ஏன் பாடம் கற்றுக் கொள்ளவில்லை? என்று கேள்வி எழுப்பிய கோபாலன், இந்தியாவின் மிக நெரிசலான ரயில்வே பிரிவான மொகல்சராய் அருகே அக்டோபர் மாதம் 4 நாள்களுக்கு ரயில் போக்குவரத்தை நிறுத்திவைக்க முடியும்போது, தென் இந்திய ரயில்வேயில் கன மழை பெய்யும் பகுதிகளில் மட்டும் ஏன் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளப்படவில்லை? அரியலூர் பகுதியில் 3 நாள்களாக மழை பெய்து கொண்டிருக்கும்போது விபத்துக்குள்ளான தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் செல்வதற்கு முன்னால் ஏன் ஒரு பைலட்  ரயிலை அனுப்பிப் பார்க்கவில்லை? ரயில்வே தண்டவாளங்கள் சரிவர கண்காணிக்கப்படவில்லை; சாதாரணமாக எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை? "ஒவ்வொரு கேங்குமேனும் தினசரி 16 மைல் தொலைவுக்குத் தண்டவாளத்தைக் கண்காணிப்பது சாத்தியமில்லை, எனவே கேங்மேன்களை அதிகரிக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.

ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியமே இல்லையென்றும், விபத்துகளுக்கு அமைச்சர் பொறுப்பு என்று சொல்லுவதானால் ரயில்வே நிர்வாகமே சாத்தியமாயிராதென்றும் பிராங்க் அந்தோனி குறிப்பிட்டார்.

ரயில்வேயின் உயர் தலைமை நிர்வாக அமைப்பான ரயில்வே வாரியம் திறமையற்றதென உறுப்பினர்கள் பலர் கண்டனம் தெரிவித்தபோது, தற்போதைய ரயில்வே வாரியம் மிகத் திறமையானதுதான் என்று மறுத்தார் லால் பகதூர் சாஸ்திரி.

அண்மைக்காலமாக நேரிட்ட விபத்துகளில் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் தனக்கு மிகுந்த வேதனையளித்ததாகவும் ராஜிநாமாவுக்கு அதுதான் காரணமென்றும் சாஸ்திரி விளக்கினார்.

மற்ற நாடுகளின் ரயில் பாதுகாப்பைவிட இந்திய ரயில்வே பிரயாணத்தில் பாதுகாப்பு அதிகமென்றும் இந்திய ரயில்வேக்கள் பல துறைகளில் அரும் சாதனைகளைச் செய்திருக்கின்றன என்றும் குறிப்பிட்ட சாஸ்திரி, தொழிலாளர்கள் இன்னும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டால் நன்றாயிருக்கும் என்று ஒப்புக்கொண்டார்.  ஆயினும் பொதுவாக, அவர்களுடைய ஒத்துழைப்பையும் பாராட்டினார்.

இவ்வளவு விவாதங்களுக்குப் பிறகும் வேண்டுகோள்களுக்குப் பிறகும் தன் ராஜிநாமா முடிவிலிருந்து சாஸ்திரியும் பின்வாங்கவில்லை, நேருவும் வற்புறுத்தவில்லை.

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகியே விட்டார் லால் பகதூர் சாஸ்திரி!

சாஸ்திரி சொன்னார்:

“ஒருவேளை, நான் உருவத்தில் சிறியவனாக இருப்பதாலும் மென்மையாகப் பேசுவதாலும் நான் மிகவும் உறுதியுள்ளவனாக இருக்க முடியாது என்று மக்கள் நினைக்க வாய்ப்புள்ளது. உடலளவில் நான் பலம் குன்றியவனாக இருந்தபோதிலும் உள்ளுக்குள் – உள்ளத்தளவில் நான் அவ்வளவு பலவீனமானவன் அல்ல என்றே நான் நினைக்கிறேன்.”

பின்னால், 1957 மக்களவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அமைந்த ஜவாஹர் லால் நேருவின் மூன்றாவது அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராகப் பதவியேற்றார் லால் பகதூர் சாஸ்திரி. ஓராண்டுக்குப் பிறகு வணிகம் மற்றும் தொழில் துறைக்குப் பொறுப்பேற்றிருந்த சாஸ்திரியிடம் கோவிந்த வல்லப பந்த்தின் மறைவுக்குப் பிறகு உள்துறையை ஒப்படைத்தார் பிரதமர் நேரு. மிகமிக அமைதியான நபரான சாஸ்திரியிடம் மிகமிக முக்கியமான துறை; நேருவுக்கு அடுத்த இடம்!

1964-ல் பிரதமர் ஜவாஹர் லால் நேருவின் மறைவைத் தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜரின் காய் நகர்த்தல்களின் முடிவில், நாட்டின் இரண்டாவது பிரதமராகப் பொறுப்பேற்று, 1966-ல் தாஷ்கண்ட்டில் எதிர்பாராத மரணத்தைச் சந்திக்கும் வரை பதவி வகித்தார் லால் பகதூர் சாஸ்திரி.

1956-ம் 2024-ம்...

[வரலாற்றின் பக்கங்களிலிருந்து... தொடரும்]

சாஸ்திரி - காமராஜர் - நேரு
2024-ல் - அரியலூர் ரயில் விபத்தும் சாஸ்திரியின் ராஜிநாமாவும் - 6 ... மக்கள் மீதான கரிசனம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.