2025-ல் இடிந்து விழுந்த பாலங்கள்!

நாட்டில் 2025ஆம் ஆண்டில் இடிந்து விழுந்த பாலங்கள், காரணங்கள் குறித்து..
Bridges collapsed in 2025
இடிந்த பாலங்கள்சித்திரிப்பு - விஜய்
Updated on
5 min read

2025 மார்ச் மாதம் மியான்மரில் நேர்ந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தில் (7.7 ரிக்டர் அளவு) அந்நாட்டு வரலாற்று சிறப்புமிக்க பல கட்டடங்கள் சரிந்தன. இந்த நிலநடுக்கம் 3700 உயிர்களை பலி வாங்கியது. 4,800 பேர் காயங்களுடன் - உடல் ஊனத்துடன் உயிர் பிழைத்தனர். இதே மாதம் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6 பேர் பலியாகினர்.

நிலநடுக்கம், வெள்ளம் போன்ற பெரும் இயற்கை பேரிடர்களில் இடிந்து விழும் கட்டடங்களும் அதனால் பறிபோகும் உயிர்களும் வருந்தத்தக்கதே. ஆனால், நம் நாட்டில் சில பகுதிகளில் எவ்வித இயற்கை பேரிடரும் இல்லாமல், கட்டி முடிக்கப்பட்ட சில பாலங்கள் - கட்டுமானப் பணியில் இருந்த பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இந்திய நிலப்பரப்பை ஆண்ட பல மன்னர்களின் பெயர்கள், உலகளவில் சற்றேனும் இன்றும் அறியப்படுகிறது என்றால் ஆங்காங்கே நிலைத்துநிற்கும் அவர்கள் கட்டிய கோயில்களாலும் கட்டடங்களாலும் அவர்களின் கட்டடக் கலையாலுமே என்று கூறலாம். அதற்கு பல உதாரணங்களும் உள்ளன. ஆனால், உலக அரங்கில் கட்டடக் கலை வியப்பிற்கு அறியப்பட்ட இந்தியாவின் தற்போதைய கட்டடத் திறன் நேர்மாறாகியுள்ளது. இதற்கு காரணம் திட்டமிடுதலில் உள்ள பொறியாளர் திறன் பற்றாகுறையா? அல்லது திட்டமிட்டு அடிக்கப்படும் ஊழலா?

குஜராத் பாலங்கள்

நாட்டில் பயன்பாட்டில் இருந்த பல பாலங்கள் இந்த ஆண்டில் இடிந்து விழுந்துள்ளன. நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 83 பாலங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக அம்மாநில பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழுந்துள்ளதே பலரின் கவனத்தை திருப்பியுள்ளது. குறிப்பாக குஜராத் மாநிலம் மஹிசாகர் நதியின் குறுக்கே வதோதரா – ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் பாலம் இடிந்து விழுந்து 21 பேர் பலியானதைக் குறிப்பிடலாம். ஜூலை மாதம் நடந்த இந்த சம்பவத்தில் பாலத்தின் நடுப்பகுதி ஆற்றில் விழுந்ததால், பாலத்தில் சென்றுக்கொண்டிருந்த லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. பலி எண்ணிக்கை அதிகரித்ததற்கு இதுவே முக்கிய காரணமாக இருந்தது.

அஹிசாகர் நதியில் இடிந்த பாலம்
அஹிசாகர் நதியில் இடிந்த பாலம்பிடிஐ

குஜராத்தில் இது ஒன்று மட்டுமல்ல, 2024-ல் தபி மாவட்டம் வலோட் பகுதியில் நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்ட பாலம், பணிகள் முழுமையாக முடிந்து மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கத் தயாராக இருந்தபோது இடிந்து விழுந்தது.

2023 ஆம் ஆண்டு குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்திற்குட்பட்ட யாத்ரா மார்க் என்னும் இடத்தில் கட்டுமானப் பணிகள் முடியும் நிலையில் இருந்தபோது, பாலம் சரிந்து விழுந்தது. 2022 ஆம் ஆண்டில் குஜராத்தின் மோர்பி நகரில் ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் குழந்தைகள், பெண்கள் உள்பட 140 பேர் பலியானது யாராலும் மறக்க முடியாது. இதனை வைத்துப்பார்க்கும்போது குஜராத்தில் ஆண்டுக்கு ஒரு பாலமேனும் இடிந்து விழுகிறது. விழுவது பழைய பாலம் என்றால் கடந்து சென்றுவிடலாம். ஆனால், கட்டுமானப் பணியில் இருக்கும்போதே பாலங்கள் சரிவது, தரத்தின் மீது பெரிய கேள்வியையே எழுப்புகிறது.

பிகார் பாலங்கள்

2025-ல் பிகாரில் நடந்த தேர்தல் குறித்த செய்திகளை விட, பாலங்கள் அடிக்கடி இடிந்து விழுந்த செய்திகளே பலரின் கவனத்தை ஈர்த்தன. (இவை தேர்தல் முடிவுகளை எந்தவகையிலும் பாதிக்கவில்லை)

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் சொந்த மாவட்டமான நாளந்தாவில் கட்டுமானத்தில் இருந்த ரயில்வே மேம்பாலம் செப். 29-ல் இடிந்து விழுந்தது. கட்டுமானத் தரம் மோசமாக இருந்ததே இடிபாடுகளுக்குக் காரணம் என்பதே உள்ளூர் மக்களுன் குற்றச்சாட்டாக இருந்தது.

நாளந்தாவில் கட்டுமானத்தில் இருந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது
நாளந்தாவில் கட்டுமானத்தில் இருந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததுENS

பிகாரின் மஹிசி - நவ்ஹட்டா கிராமங்களை இணைக்கும் பாலம் ஜூலை 11ஆம் தேதி இடிந்து விழுந்தது. இந்த இரு கிராமங்களையும் தேசிய நெடுஞ்சாலையுடன் இந்தப் பாலம் இணைக்கும். இந்தப் பாலம் இடிந்ததால் அந்தக் கிராமத்திற்கான போக்குவரத்து தொடர்பு முற்றிலும் நின்றது. இதில் வியப்பு என்னவென்றால், 3 வார இடைவெளியில் இடிந்து விழுந்த 13வது பாலம் இது.

இதற்கு முன்பு பாட்னாவின் சிவான் பகுதியில் இரண்டு பாலங்களும், சரண் மாவட்டத்தில் ஒரு பாலமும் இடிந்து விழுந்தன. இதோடு மட்டுமில்லாமல் அராரியா மாவட்டத்தில் இரு பாலங்கள் இடிந்து விழுந்தன. பகதூா்கஞ்ச் வட்டத்தில் சிறிய துணை ஆறு ஒன்றின் குறுக்கே 2011ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. இப்படி ஜூன் 20 முதல் ஜூலை 11ஆம் தேதி வரை - 3 வாரங்களில் 13 பாலங்கள் இடிந்து விழுந்தன.

இவற்றில் சிவான், சரண் மாவட்டங்களில் இடிந்த பாலங்கள் 20 - 30 ஆண்டுகள் பழைய பாலங்கள் என்று கடந்து சென்றுவிடக்கூடும். ஆனால், அராரியா, சிவான் மாவட்டங்களில் இடிந்து விழுந்த பாலங்கள் கட்டுமானப் பணிகள் முழுவதும் முடியாத புதிய பாலங்கள்.

சிவான் பகுதியில் இடிந்த பாலம்
சிவான் பகுதியில் இடிந்த பாலம்ENS

முன்பு கூறியதைப்போல, இதற்கு காரணம் திட்டமிடுதலில் உள்ள பொறியாளர் திறன் பற்றாகுறையா? அல்லது திட்டமிட்டு அடிக்கப்படும் ஊழலா? ஒவ்வொரு பாலத்திற்கும் கோடிகளில் தொகை ஒதுக்கப்படுகிறது. லட்சங்களில் ஊழல் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. இது மக்களின் வரிப்பணம் இல்லையா?

கட்டுமானத்தில் உள்ள பாலம் சரிந்து விழுவது, கட்டி முடிக்கப்பட்டு திறப்புக்கு காத்திருந்த பாலம் இடிந்து விழுவது என அடுத்தடுத்து நடந்ததால், நீர்வளத் துறை மற்றும் ஊரக பொதுப்பணித் துறையைச் சேர்ந்த 16 பொறியாளர்களை பிகார் அரசு பணியிடை நீக்கம் செய்தது. பால விபத்துகளில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் மூலம் அரசு ஆறுதல் கூறியது. ஆனால், அரசுத் துறைகளிடையே ஊழல் நடந்துள்ளது என்பதை மூடி மறைத்துவிட்டது. தேர்தலையொட்டிய நடவடிக்கையாக மாநிலத்தில் உள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்து, சீரமைக்க நிதீஷ் குமார் அரசு உத்தரவிட்டது.

பிகாரில் அடிக்கடி பாலங்கள் இடிந்து விழுவது இந்த ஆண்டு மட்டும் நடப்பதல்ல. 2023 ஆம் ஆண்டு பிகாரில் 7 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. சுல்தான்கஞ்ச் - குவானி கட் பகுதிகளை இணைக்கும் வகையில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டப்பட்டுள்ள பாலம், அது முழுமையாக முடிக்கப்படுவதற்கு முன்பு, 2024 ஆம் ஆண்டில் 3 முறை இடிந்து விழுந்துள்ளது.

உத்தரப் பிரதேச பாலங்கள்

உத்தரப் பிரதேசத்தின் சோனாலி - கோரக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் மகாராஜ்கஞ்ச் பகுதிக்குட்பட்ட மோகனாபூர் தாலா என்ற இடத்தில் கட்டப்பட்டு வந்த இரும்புப் பாலம் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி இடிந்து விழுந்தது. தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்காக கட்டப்பட்டுவந்த இந்த இரும்புப் பாலம், கட்டுமானப் பணியின்போதே சீட்டுக்கட்டு போல சரிந்தது. இரும்புக் குவியல்களில் சிக்கியிருந்த தொழிலாளர்களை ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு மீட்டனர். இதில் உயிர் பலி ஏதுமில்லை என்றாலும் 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

பிகாரில் பாலங்கள் அடிக்கடி இடிந்து விழுவது அந்த மாநில ஆட்சியின் ஊழலைக் காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், மாநிலத்திலுள்ள அனைத்து பாலங்களின் தரங்களையும் ஆய்வு செய்ய உத்தரப் பிரதேச முதல்வர் உத்தரவிட்டிருந்தார். மாநிலம் முழுவதும் ஆய்வு செய்ததில் 83 பாலங்கள் பாதுகாப்பற்றதாகவும், பயன்படுத்துவதற்கு தகுதியற்றதாக உள்ளது தெரியவந்துள்ளது. அந்தப் பாலங்களின் மீது கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து, சீரமைப்புப் பணிகளுக்காக தொகையை மதிப்பிட மாவட்ட நிர்வாகத்திடம் பொதுப்பணித் துறை கோரியுள்ளது. ஒரு மாநிலத்திலுள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடும் அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன பால விபத்துகள்.

இவை மட்டுமா, புணே மாவட்டம் மாவல் பகுதிக்குட்பட்ட இந்திராயணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரும்புப் பாலம் இடிந்து விழுந்தது. தொடர் விடுமுறையையொட்டி அதிகப்படியான மக்கள் கூடியதால் பழைய இரும்புப் பாலம் இடிந்து விழுந்தது. கனமழையால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நிலையில், சுற்றுலாப் பயணிகள் பலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். 41 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

இந்திராயணி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டவர்களைத் தேடும் பணி
இந்திராயணி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டவர்களைத் தேடும் பணிபிடிஐ

மத்தியப் பிரதேச மாநிலம் ரைசன் பகுதியில் பரெய்லி - பிபாரியா சாலையிலிருந்த 40 ஆண்டுகள் பழமையான பாலம் இடிந்து விழுந்தது. 40 ஆண்டுகள் பழமை என்பது ஒரு பாலம் இடிந்து விழுவதை ஏற்றுக்கொள்வதற்கான காரணியா? பல தலைமுறைகளாக நீடித்து நிற்கும் கட்டட அமைப்புகள் நாட்டில் ஏராளம் உண்டு அல்லவா? தலைமுறைகள் தாண்டி நிற்கும் கட்டுமானத்தை இனி கட்டவே முடியாதா? இக்காலத்தில் உறுதித்தன்மையை பூர்த்தி செய்ய முடியாதது ஏன்? இவை எல்லாவற்றுக்கும் ஒரே பதில்தான்.

பாலங்கள் போன்றவற்றின் கட்டுமானம் குத்தகைக்கு விடப்படும்போது அதில் பணியாற்றும் பொறியாளர்கள் தரமற்ற இரண்டாம்தர பொறியாளர்களாகவே பெரும்பாலும் உள்ளதாகக் கூறப்படுகிறது. முதன்மை தரத் தகுதியுடன் கல்வி நிலையங்களில் இருந்து வெளியேறும் பொறியாளர்கள் மேல்படிப்பு அல்லது பணிக்காக பெரும்பாலும் வெளிநாடுகளுக்குச் சென்று விடுவதாக அத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

கட்டுமானப் பொறியியல் முடித்தவர்களில் வெகு சிலரே சுற்றுச்சூழல் பொறியியல் (Environmental Engineering) மற்றும் கட்டுமான தொழில்நுட்ப துறையில் (Construction Technology) மேல்படிப்புப் படிக்கின்றனர். இத்தகைய திறன் வலுவான கட்டமைப்புகளை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

நாட்டில் ராணுவத்தில் உள்ள பொறியாளர்களால் சிறந்த உள்கட்டமைப்புகளை உருவாக்க இயலும் என்பது பலரும் அறிந்ததே. ஆனால், அவர்கள் வணிக ரீதியான கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது இல்லை. வணிக ரீதியான கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளில் உள்ளவர்கள் ராணுவப் பொறியாளர்கள் போன்ற சிந்தனை வளத்துடன் செயல்பட வேண்டியது இங்கு அவசியமாகிறது.

முடிவில், பொறியியல் பணிகள் எங்கு இருந்து மேற்கொண்டாலும் அதில் தரம் இருக்க வேண்டியது அவசியம். ஊழல் இல்லாத அரசால் மட்டுமே பொதுத் துறை கட்டுமானத்திற்கு முழுமையான வலிமையை சேர்க்க முடியும். பொறியாளர்களின் மெத்தனம், ஊழல் மட்டும்தான் தரமற்ற கட்டுமானங்களுக்கு காரணமா?

பாலங்கள் இடிந்து விழுவதற்கு தரமற்ற கட்டுமானப் பொருள்கள் அல்ல, வேறு 4 காரணங்களைக் கூறலாம்.

1. தகுதியற்ற பொறியாளர்கள் நியமனம்

2. அவர்களை வைத்து அதிகாரிகளிடையே நடக்கும் ஊழல்

3. ஊழல் நடப்பதை கண்டுகொள்ளாத அரசு

4. அந்த அரசை அடுத்த ஆட்சிக்கு அனுமதிக்கும் மக்கள்.

இந்த வகையில் நாட்டில் பாலம் அடிக்கடி இடிந்து விழுகிறது என்றால் அதற்கு தரமற்ற பொறியாளர்கள் மட்டுமின்றி வேறு பலவும் காரணமாகின்றன. நாட்டில் இதுவரை இடிந்து விழுந்த பாலங்கள் எல்லாமும் பாடங்களாக மாறி, 2026-ன் அடித்தளம் வலுவாக அமைய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.

Summary

Year ender Bridges that collapsed in 2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com