
செய்தித்தாள்களும் ஊடகங்களும் பற்றி எரிகின்றன நாடெங்கும். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 13-5-2025 நாளிட்டுத் தனது கையொப்பத்துடன், அரசியல் சட்டத்தின் பிரிவு 143 (1)ன் கீழ், 14 கேள்விகளைத் தொகுத்து, உச்ச நீதிமன்றத்திடம் சட்ட விளக்கம் கேட்டிருக்கிறார் என்பதே ஊடகங்களின் பரபரப்புகளுக்கும், பற்றி எரிவதற்கும் காரணம்.
குடியரசுத் தலைவர் அரசியல் சட்டத்தின் பிரிவு 143 (1) கீழ், விளக்கம் கேட்டிருப்பது இதுவரை நிகழாத ஒரு அசாதாரண நிகழ்வு அல்ல. ஏற்கெனவே 1951 முதல் ஏறத்தாழ 15 முறை இவ்வாறான விளக்கங்கள் முந்தைய குடியரசுத் தலைவர்களால், இதே சட்டப்பிரிவின் கீழ் கேட்கப்பட்டுள்ளன.
தற்போது ஏன் ஊடகங்கள் பரபரக்கின்றன?
காரணம்: மிக அண்மையில், (ஏப்ரல் 8, 2025இல்), தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கு ஒன்றில் [உச்ச நீதிமன்ற சிவில் அசல் அதிகார வரம்பு ரிட் (சிவில்) எண் 1239/2023] உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அமர்வு வழங்கிய தீர்ப்பு, ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் ஆகியோர் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்குக் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. இந்த காலக்கெடு நிர்ணயிப்பது அரசியல் சட்டப்படி பொருத்தமானதுதானா என்ற முதன்மை வினாவை, அதற்கான விளக்கத்தை; அவ்வினாவையொட்டி எழும் மேலும் சில வினாக்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் குடியரசுத் தலைவர் கேட்டிருக்கிறார். ஆகவே குடியரசுத் தலைவர் தற்போது கேட்டிருக்கும் விளக்கங்கள், ஏப்ரல் 8 தீர்ப்பை ஒட்டியே அமைவதால்தான், அனைவருக்கும் அரசியல் சந்தேகங்கள் பலவாறாக எழுந்து முன்நிற்கின்றன.
இதுவரை பிரிவு 143 (1) இன் கீழ் குடியரசுத் தலைவர்களால் உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்ட நேர்வுகள் சில..
தில்லி சட்ட சட்டம், 1912, கேரள கல்வி மசோதா, 1959, பெருபாரி வழக்கு மீதான இந்தியா - பாகிஸ்தான் ஒப்பந்தத்தை அமல்படுத்துதல், கடல் சுங்கச் சட்டம் 1878, குடியரசுத் தலைவர் தேர்தல் 1974, சிறப்பு நீதிமன்ற மசோதா 1979, காவிரி நீர் தகராறு தீர்ப்பாயம், அயோத்தி விவகாரம், ஜம்மு - காஷ்மீர் மீள்குடியேற்ற மசோதா, நீதிபதிகள் வழக்கு மற்றும் ஆகஸ்ட் 19, 2002 அன்று தாக்கல் செய்யப்பட்ட குஜராத் தேர்தல்கள் குறித்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் குறித்து குடியரசுத் தலைவர் இதுவரை உச்ச நீதிமன்றத்தில் குறிப்புகளை அளித்துள்ளார்.
இவற்றில், 1993 ஆம் ஆண்டின் சிறப்பு குறிப்பு எண் 1 (ராம் ஜன்ம பூமி-பாபர் மசூதி விஷயம்) (1993) 1 SCC 642இல் குறிப்பிட உரியது "ராம் ஜன்ம பூமி - பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பு ஒரு இந்து கோவிலோ அல்லது ஏதேனும் இந்து மதக் கட்டமைப்பு இருந்ததா? " என்பது பிரிவு 143 (1) இன் கீழ் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திற்கு உண்மையின் கேள்வியைக் குறிப்பிட்ட ஒரே குறிப்பு இதுதான்.
பிரிவு 143 (1) என்பது என்ன?
அரசியல் சட்ட பிரிவு 143 (1): “ஒரு சட்ட வினாவோ, பொருண்மை வினாவோ எழுந்திருக்கிறது அல்லது பெரும்பாலும் எழவிருக்கிறது என்றும், அதன் தன்மையினாலும் பொதுச் சிறப்பினாலும் அதன் மீது உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெறுவது உகந்தது என்றும் குடியரசுத் தலைவருக்குத் தோன்றுகிறது என்றால், அவர் அந்த வினாவைக் கருதுகை செய்யுமாறு அந்த நீதிமன்றத்திற்கு சுட்டியனுப்பலாம் மற்றும் அந்த நீதிமன்றம்தான் பொருத்தமான கருதுகிற கேட்புக்குப் பின்பு அதைப் பற்றிய தன் கருத்தைக் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை (may… report) செய்யலாம்” [இந்திய அரசமைப்பு, சட்டம் மற்றும் நிதியமைச்சகம், அதிகாரப்பூர்வ தமிழாக்கம், தமிழ்நாடு (சட்ட) ஆட்சிமொழி ஆணையம், சென்னை, 1988].
புரிந்துகொள்ள வேண்டியது..
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 143 (1) இன் கீழ், சட்ட விளக்கம்பெறக் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தை அணுகும் அதிகாரத்தைப் பயன்படுத்தலாம். உச்ச நீதிமன்றம் தான் பொருத்தமாக நினைக்கும் விசாரணைக்குப் பிறகு - அ.ச. பிரிவு 143 (1) இன்படி கேட்கப்படும் விளக்கத்தை - தனது கருத்தைக் குடியரசுத் தலைவருக்குத் தெரிவிக்கலாம்; தெரிவிக்காமலும் இருக்கலாம். ஆனால் அ.ச. பிரிவு 143 (2)படி கேட்கப்படும் வினாவுக்கான விளக்கம் நீதிமன்றத்தால் (shall …report) வழங்கப்படும். உச்ச நீதிமன்ற விதிகள் ஆணை XXXVII உறுப்பின்படி, 143(1) ன் கீழ் உச்ச நீதிமன்றம் சிறப்புக் குறிப்பைப் பரிசீலிப்பதற்கான நடைமுறைகளை வகைசெய்துள்ளது.
குடியரசுத் தலைவர் அனுப்பியுள்ள 14 கேள்விக் குறிப்புக்கு உச்ச நீதிமன்றம் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளதா?
உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள விருப்புரிமையின்படி, குடியரசுத் தலைவர் குறிப்புக்குப் பதிலளிப்பது அல்லது குடியரசுத் தலைவருக்கு அறிக்கையை அனுப்ப மரியாதையுடன் (Polite refusal) மறுப்பது இரண்டில் ஒன்றைச் செய்யலாம். (பார்க்க: இயற்கை வள ஒதுக்கீடு, மறுபடி, சிறப்பு குறிப்பு எண். 1/2012, (2012)10 SCC 1).
குடியரசுத் தலைவரது குறிப்புக்குப் பதிலளிக்க மறுக்கும் நீதிமன்றத்தின் உரிமை, பிரிவு 143 இன் (1) மற்றும் (2) பிரிவுகளில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு சொற்றொடர்களிலிருந்து வெளிப்படுகிறது. அதாவது பிரிவு 143 (1) நீதிமன்றம் குறிப்பிடப்பட்ட கேள்வியில் தனது கருத்தைக் குடியரசுத் தலைவருக்கு "அறிக்கை செய்யலாம்" என்று வழங்குகிறது. அதேநேரத்தில் பிரிவு (2) நீதிமன்றம் கேள்வியில் தனது கருத்தைக் குடியரசுத் தலைவருக்கு "அறிக்கை செய்ய வேண்டும்" என்று நிர்ணயிக்கிறது.
ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பு நிலை?
இதுபோன்ற ஆலோசனை அதிகார வரம்பின் மூலம், உச்ச நீதிமன்றத்தால், ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பு எதனையும் ரத்து செய்யவோ அல்லது பயனற்றதாக்கவோ ஆக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக முந்தைய தீர்ப்புகளின் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறது (ஆகவே, உச்ச நீதிமன்றத்தின் ஏப்ரல் 8 தீர்ப்பு நிற்கும் நிலைத்து).
பிரிவு 143 (1)ன்படி அளிக்கப்படும் விளக்கம்
குடியரசுத் தலைவருக்குப் பிரிவு 143(1)ன்படி அளிக்கப்படும் விளக்கம் எதுவும் (அளிக்கப்பட்டால்) தீர்ப்பாகக் கருதப்படாது. அக்கருத்து எதிர்வரும் காலங்களின் நடைமுறைகளுக்கு வழிகாட்டுதலாக இருக்கும். அவ்வளவுதான்.
குடியரசுத் தலைவருக்குப் பிரிவு 143 இன் கீழ் ஒரு குறிப்பில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையானது எந்தவொரு அடுத்தடுத்த விஷயத்திலும் உச்ச நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்தாது என்று அகமதாபாத் செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி சங்கம் எதிர் குஜராத் மாநிலம், (1974) 1 SCC 717 வழக்கில் முன்னுதாரணத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கேரள கல்வி மசோதா, 1957 இல், மறுபடி 1959 SCR 995இல் உச்ச நீதிமன்றம் ஒரு பரிந்துரையை ஏற்றுக்கொள்வதும், பரிந்துரைப் பிரிவு 143(2) இன் கீழ் இருந்தால் அதன் கருத்தைக் குடியரசுத் தலைவரிடம் தெரிவிப்பதும் கடமை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது, ஆனால் பிரிவு 143 (1) இன் கீழ், நீதிமன்றத்திற்கு விருப்புரிமை உள்ளதால், ஒரு சரியான வழக்கில், நல்ல காரணங்களுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகள் குறித்து எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க மறுக்கலாம் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்துக்குக் குடியரசுத் தலைவர் கட்டுப்படவேண்டுமா?
அரசியல் சட்டப்பிரிவு 143 இன் விளிம்புக் குறிப்பு "உச்ச நீதிமன்றத்தை அணுக குடியரசுத் தலைவர் அதிகாரம்" என்று கூறுகிறது. "ஆலோசனை" என்ற சொல், சந்தேகத்திற்கு இடமின்றி கருத்தைக் குடியரசுத் தலைவர் செயல்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்பதைக் காட்டுகிறது. உச்ச நீதிமன்றத்தின் ஆணைகள் மற்றும் உத்தரவுகளை அமல்படுத்துவது தொடர்பான பிரிவு 142, மற்றும் பிரிவு (1) இன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் ஆணைகள் மற்றும் உத்தரவுகளை மட்டுமே அமல்படுத்த முடியும். ஒரு கருத்து என்பது, ஒரு ஆணையோ உத்தரவோ அல்ல என்பதால், அதனை அமல்படுத்த முடியாது.
ஏப்ரல் 8 தீர்ப்பின் மீது ஏன் காட்டம்?
ஏப்ரல் 8, தீர்ப்பில், ஆளுநர்கள் மூன்று மாதங்களுக்குள் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததுடன், ஒரு மசோதா பரிந்துரைக்கப்பட்டவுடன் குடியரசுத் தலைவரும் அவ்வாறே செய்ய வேண்டும் என்றும் அத்தீர்ப்பு கூறியிருப்பதுடன், அவ்வாறு செய்யாமலிருப்பது, ‘அரசியலமைப்பு மீறல்கள்’ என்று உச்ச நீதிமன்றம் நம்புவதைத் தெளிவுபடுத்துவதற்காகக் குடியரசுத் தலைவர் பிரிவு 143 (1) ஐப் பயன்படுத்தியுள்ளார் என்று நம்புவதற்கு வலுவான பின்புலம் இல்லையே.
ஏற்கெனவே, தீர்ப்பு வந்த உடனேயே குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கொதித்துக் குதித்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ‘’ஒரு அணு ஆயுத ஏவுகணை’’ என்றும், வர்ணித்தார். உச்ச நீதிமன்றம் அரசியல் அமைப்பை, நாடாளுமன்றத்தின் இறையாண்மையை மீறுகிறது என்றும் குறிப்பிட்டார். ஏற்கெனவே நீதிபதிகள் நியமன ஆணையம் அமைத்த சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றும் ஆரூடம் கணித்தார். ஆகவே ஆளும் தரப்பு சட்டப்படியான ஏப்ரல் 8 தீர்ப்பின் மூலம். நிர்வாகத்தின் (Executive) மீது, நாடாளுமன்றத்தின் (Legislature) மீது நீதித்துறை (Judiciary) தாக்குதல் மேற்கொண்டு தகர்க்க முற்படுவதாகத் தவறாகக் கருதி, ஆர்ப்பரித்து வருகிறார்கள். அநாவசிய எதிர்வினையாற்றும் வகையில் செயல்படுகிறார்கள். அவ்வகையின் மற்றுமொரு செயல்பாடாகத்தான் குடியரசுத் தலைவரைக் கருவியாக்கி அ.ச.பிரிவு 143 (1)ன் கீழ் உச்ச நீதிமன்றக் கருதுகை (Opinion) கோரச் செய்துள்ளார்கள்.
குடியரசுத் தலைவரது 143 (1) குறிப்பில் புதிய வாதம் ஏதுமிருக்கிறதா?
ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் செயல்முறையுடன் தொடர்புடைய அ.ச. பிரிவுகள் 200; 201 எந்தக் காலக்கெடுவையும் குறிப்பிடவில்லை என்பதைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாதங்களெல்லாம், வழக்கு நடைபெறும்போது அரசுத் தரப்பு மூலம் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தவைதான் இந்தப் பதினான்கு வினாக்களும் வேறு வடிவங்களில், வேறு வார்த்தைகளில் ஒன்றிய அரசு வழக்குரைஞர்களால் நீதிமன்றத்தின் முன்வைக்கப்பட்டவைதான். இவற்றுக்கெல்லாம் சேர்த்துத்தானே, அரசியல் சட்டப்படி, ஏப்ரல் 8 தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது? நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டு, அந்த வாதங்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் பரிசீலித்துத்தான் தீர்ப்பு வழங்கியிருக்கிறது என்பதைச் சிறிதும் நம்பாமல் இப்படிச் செயல்படுகிறார்கள். தற்போது அதே வாதங்களைக் குடியரசுத் தலைவரைப் பட்டியலிடவைத்து நீதிமன்றக் கருதுகை வேண்டுகிறார்கள்.
ஒரு மசோதா குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்போது, அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கான காலக்கெடுவை அ.ச.பிரிவு 201 நிர்ணயிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அந்தச் சந்தில் நின்றுகொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முறைப்படி அமையப்பெற்றுள்ள ஒரு அரசு சட்டமன்றம் மூலம் இயற்றும் சட்டங்களை அநாதிக்காலம் வரை கிடப்பில் போட்டுவைத்திருக்க, நியமனம் மூலம் பணியாற்றும் ஆளுநர்களுக்கு அதிகாரம் அரசியல் சட்டத்தால் வழங்கப்படவில்லை என்பதும் அதே அளவு உண்மைதான். இந்த இரண்டு நிலைகளையும் சீர் தூக்கியே உச்ச நீதிமன்றம் மார்ச் 8 தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பை எதிர்ப்பவர்கள், என்ன விரும்புகிறார்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
‘கருதப்படும் ஒப்புதல்’ (Deemed approval / ascent)
ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் மூன்று மாத காலம் அவகாசம் அளித்துள்ளது. நீதிமன்றத்தின் கூற்றுப்படி, ஒரு மசோதா மீண்டும் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டால், ஆளுநர் ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். தவறும் நேர்வில், ‘கருதப்படும் ஒப்புதல்’ (Deemed approval / ascent) நிகழும் என உச்சநீதிமன்றம் நிறுவியுள்ளதை அரசியலமைப்புச் சட்டத்திற்கு அந்நியமானது, அவர்களது அதிகாரங்களை வரம்புக்குட்படுத்துகிறது," என்று குறை கூறுகிறார்கள் வரம்பற்ற அதிகாரம் (unchecked / boundless authority) துய்க்க விரும்புபவர்கள்.
அ.ச. பிரிவு 74 (1)-ன்படி, குடியரசுத் தலைவர் தனது அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின்படிதான் செயல்பட வேண்டும். எனவே, குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ள 14 கேள்விக் குறிப்பு, ஒன்றிய அமைச்சரவைப் பரிந்துரையாகி வந்ததா எனத் தெரியவில்லை. அமைச்சரவையின் ஆலோசனை இல்லாத நிலையில், பிரிவு 143 இன் கீழ் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினால், அவர் அரசியலமைப்பை மீறுவதாகக் கருதப்படுவார், அதற்காக அவர் மீது பதவி நீக்க நடவடிக்கைகூட செய்யப்படலாம் என பிரிவு 143, 42 இன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை அதிகார வரம்புகுறித்த JILI (2000) 458 ஒரு வளமூலம் (Resource) தெரிவிக்கிறது.
ஆனால், பிரிவு அ.ச. பிரிவு 74(2)-ன்படி குடியரசுத் தலைவரே பரிந்துரை செய்தாரா அல்லது அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின் பேரில் பரிந்துரை செய்தாரா என்பதை உச்ச நீதிமன்றம் சரிபார்க்கவோ அல்லது ஆராயவோ முடியாது என்பது நிலை. என்றாலும், அவசியம் எழும்போது, மூலம் என்ன என - பி.பி. சிங்கால் எதிர் ஒன்றிய அரசு (2010) 6 SCC 331 வழக்குத் தீர்ப்பு கூறியுள்ளபடி (Scrutiny) பரிசோதிக்கலாம்.
இத்தகைய அரசியல் சட்டச் சூழல் உள்ள நிலையில்தான் குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்தின் முன் எழுப்பியுள்ளார். இவை யாவும் வழக்கின்போதே அரசுத்தரப்பு முன்வைத்த வாதங்களின் வேறுவடிவம்தான்.
1. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 200-ன் கீழ் ஒரு மசோதா சமர்ப்பிக்கப்படும்போது ஆளுநருக்கு முன் உள்ள அரசியலமைப்பு விருப்பங்கள் (discretions) என்ன?
2. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 200-ன் கீழ் ஒரு மசோதாவைத் தாக்கல் செய்யும்போது, அமைச்சர்கள் குழு வழங்கும் உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்படுகிறாரா?
3. இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஆளுநர் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா?
4. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பாக நீதித்துறை மறு ஆய்வுக்கு இந்திய அரசியலமைப்பின் பிரிவு 361 முழுமையான தடையா?
5. அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசமும், ஆளுநரால் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறையும் இல்லாத நிலையில், இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களையும் ஆளுநரால் பயன்படுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடுவை விதிக்க முடியுமா?
6. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 201 இன் கீழ் குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா?
7. அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் குடியரசுத் தலைவர் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், இந்திய அரசியலமைப்பின் 201வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரின் விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடுவை விதிக்க முடியுமா?
8. குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை நிர்வகிக்கும் அரசியலமைப்புத் திட்டத்தின் வெளிச்சத்தில், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 143-ன் கீழ், குடியரசுத் தலைவர் ஒரு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகவோ அல்லது வேறுவிதமாகவோ ஒதுக்கும்போது, உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்று, உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டுமா?
9. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 200 மற்றும் பிரிவு 201 இன் கீழ் ஆளுநர் மற்றும் ஜனாதிபதியின் முடிவுகள், சட்டம் அமலுக்கு வருவதற்கு முந்தைய கட்டத்தில் நியாயப்படுத்தப்படுமா? ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, எந்த வகையிலும் அதன் உள்ளடக்கங்கள் மீது நீதிமன்றங்கள் நீதித்துறை தீர்ப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறதா?
10. இந்திய அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ், அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவதையும், குடியரசுத் தலைவர்/ஆளுநர் உத்தரவுகளையும் எந்த வகையிலும் மாற்ற முடியுமா?
11. மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம், இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறையில் உள்ள சட்டமா?
12. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 145(3)-ன் விதிமுறையைக் கருத்தில்கொண்டு, இந்த மாண்புமிகு நீதிமன்றத்தின் எந்தவொரு அமர்வும், அதன் முன் நடவடிக்கைகளில் உள்ள கேள்வி, அரசியலமைப்பின் விளக்கம் தொடர்பான கணிசமான சட்டக் கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலில் முடிவு செய்து, குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதைப் பரிந்துரைப்பது கட்டாயமில்லையா?
13. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 142 இன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் நடைமுறைச் சட்டம் அல்லது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 142 தொடர்பான விஷயங்களுக்கு மட்டுமே உள்ளதா? அரசியலமைப்பு அல்லது நடைமுறையில் உள்ள சட்டத்தின் தற்போதைய அடிப்படை அல்லது நடைமுறை விதிகளுக்கு முரணான அல்லது முரண்பாடான உத்தரவுகளைப் பிறப்பித்தல்/ஆணைகளைப் பிறப்பித்தல் வரை நீட்டிக்கப்படுகிறதா?
14. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 131 இன் கீழ் வழக்குத் தொடருவதைத் தவிர, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் வேறு எந்த அதிகார வரம்பையும் அரசியலமைப்புத் தடைசெய்கிறதா?
முன்னரே விளக்கியதுபோல, குடியரசுத் தலைவர் ஒரு குறிப்பை வெளியிடும் போதெல்லாம், பிரிவு 143 (1)-ன் கீழ் உச்ச நீதிமன்றம் தனது கருத்தைத் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவ்வாறு கருத்து அளிக்கப்பட்டாலும் அது ஒரு சட்டம் அல்லது ஆணையின் தகுதி பெறாது, அளிக்கப்படும் கருத்து ஏற்கெனவே அளிக்கப்பட்டிருக்கும் எந்தத் தீர்ப்பையும் மாற்றவோ, செல்லாததாக்கவோ முடியாது. கருத்துக் கூற உச்ச நீதிமன்றத்திற்கு எந்தக் கால அவகாசமும் நிர்ணயிக்க முடியாது. உச்ச நீதிமன்றம் கூறும் கருத்தின் பேரில் குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டிய கட்டாயமும் இல்லை.
பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கட் பதடி எனல் - (குறள் 196).
பயனில் செயல்புரிவாரை?
***
[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.