

கோடை விடுமுறையோ, கிறிஸ்துமஸ் - புத்தாண்டு விடுமுறையோ, ஹோலி பண்டிகைக் கால விடுமுறையோ, தசரா விடுமுறையோ, தீபாவளி விடுமுறைகளோ அல்லது வேறு பண்டிகைக் கால விடுமுறைகளோ எப்போதும் எதுவும் கிடையாது, மருத்துவமனைகளுக்கு, ராணுவத்திற்கு, காவல், தீயணைப்பு நிலையங்களுக்கு. அதுபோலத்தான் ஆம்புலன்ஸ் சேவை, மின்சாரம், குடிநீர் வழங்கு துறைகள், தூய்மை, சுகாதாரப் பணிகள், பொதுப் போக்குவரத்து, வங்கி, நிதி, காப்பீடு சேவைகள் போன்றவற்றுக்கும் ஒட்டுமொத்த நீண்ட விடுமுறை என்பது பற்றி நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. தற்காலத்தில் தொலைத்தொடர்பு, மொபைல், இணைய சேவைகளுக்கு, பத்திரிகைகள், ஊடகங்களுக்கு குறுகிய விடுமுறைகளாவது விடுவது குறித்து யோசிக்க முடியுமா? ஆனால், காலனித்துவ கால (தொடக்கத்தில் குறிப்பிட்ட வகையான) நீண்ட விடுமுறைகள், அரசமைப்பின் மூன்று தூண்களில் ஒன்றான நீதித் துறைக்கு மட்டும் ஏன் இன்னும் தொடர்கிறது என்ற கேள்வி அவ்வப்போது பொதுப் பரப்பில் தோன்றுகின்றன. ஆனாலும் இந்த கேள்விக்கான இறுதியான விடைகள் இன்னும் உறுதியாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.
நீதிமன்றங்களுக்கு நீண்ட விடுமுறைகள் குறித்து (‘அவசியம்தான்’, ‘அவசியமில்லை’ என்ற) இரு துருவக் கருத்துகளின் முணுமுணுப்பு பொதுவெளியில் நிகழ்ந்துகொண்டேயிருந்து நீதிமன்றத்துக்கு வந்துவிட்டது. நீதிமன்றங்களில் குறிப்பாக உயர் நீதிமன்றங்களில் விடப்படும் நீண்ட விடுமுறைகள், மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய நீதியைத் தாமதப்படுத்துகின்றன. தேவைப்படும் சரியான தருணத்தில் சட்டத் தீர்வுகளுக்காக மக்கள் நீதிமன்றங்களை அணுகுவதை இந்த நீண்ட, ஒட்டுமொத்த விடுமுறைகள் தடுக்கின்றன. ஆகவே, அது அ.ச. பிரிவு 21ஐ (வாழும் உரிமை) மற்றும் தனிநபர் சுதந்திரத்தை மீறுவதாகிறது என்ற வாதம் முன்வைக்கப்பட்டு, மும்பை உயர்நீதிமன்றத்தில் அக்டோபர் 2022-ல், ஒரு பொதுநல வழக்கினை சபீனா லக்தவலா (Sabina Lakdawala) என்ற பெண் மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் மாத்யூஸ் ஜெ. நெடும்பாறா தாக்கல் செய்தார்.
சபீனா தன் மனுவில், ’முந்தைய ஆண்டே சமர்ப்பிக்கப்பட்ட தனது மற்றொரு மனுவை அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், ஏற்கெனவே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல வழக்குகள் காரணமாக - கால அவகாசம் இல்லாததால் - நீதிமன்றம் விசாரிக்கவில்லை’ என்று வேதனையைத் தெரிவித்துள்ளார்.
வழக்குத் தேக்கங்கள் மிகுந்துள்ள இத்தகைய நிலையில், 'காலனித்துவ சகாப்தத்தின் எச்சமாக இருக்கும் நீதிமன்றங்களுக்கான நீண்ட விடுமுறைகள் என்ற நடைமுறை, ஏற்கனவே வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ள நீதி வழங்கல் முறையைப் பாதாளச் சரிவுக்கு விரைந்து தள்ளுவதாக உள்ளது. நீதிமன்ற விடுமுறைகள் ஒரு நுண்ணிய சிறுபான்மையினரான உயரடுக்கினருக்கு (நீதிபதிகள், வழக்குரைஞர்களின் வசதிக்கு) மட்டுமே ஏற்றதாக உள்ளது; அது சாமானியர்களுக்குச் சாதகமானதல்ல. ஆகவே, நீதிமன்றம் முழுமைக்கும் விடுமுறை விடாமல் - அவசர வழக்குகளை மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் தற்போதுள்ள விடுமுறைக் கால நடைமுறைக்குப் பதில் - வழக்கம்போல அனைத்து வழக்குகளையும் எப்போதும் விசாரிக்க, உயர் நீதிமன்றம் முழுமையாகச் செயல்பட ஏற்பாடு வேண்டும்’ என்று மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
‘நீதிபதிகள், வழக்குரைஞர்கள் ஆகிய இருவருக்கும் விடுமுறை இடைவேளைகள் தேவைதான் என்றாலும், அவற்றை (பிற அரசுத் துறைகளுக்கு இருப்பதுபோல) வார இறுதி நாள்கள் மற்றும் வழக்கமான அரசு விடுமுறை நாள்களுக்குள் மட்டுப்படுத்துவது போதுமானதாக இருக்கும்’ என்றும் தன் மனுவில் சபீனா கூறியிருந்தார். மேலும், ‘இந்த பிரச்னை நீதிபதிகள் விடுப்பு எடுப்பதற்கு எதிரானது அல்ல, ஆனால் நீதிமன்றங்களை நீண்ட காலத்திற்கு முற்றிலுமாக மூடும் கூட்டு விடுப்புக்கு எதிரானது’ என்று மனுதாரர் தெளிவுபடுத்தியிருந்தார்.
ஒருநகை முரணாக, நீதியரசர்கள் எஸ்.வி. கங்காபூர்வாலா, ஆர்.என். லோதா ஆகியோர் அமர்வு 2022 அக்டோபர் 22 முதல் நவம்பர் 9 வரை நீடித்த அந்த ஆண்டின் தீபாவளி விடுமுறைக்குப் பிறகு சபீனாவின் மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்டது. இந்த விஷயத்தை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தது, நீதிமன்றம் திறந்த மனதுடன் இருப்பதைக் காட்டியது. ஆனால் மூன்று தீபாவளிகள் கடந்தும் இன்று வரை (அக். 2025) அந்த மனு நிலுவையில்தான் உள்ளது!
வழக்குத் தேக்கங்களுக்கு மற்றொரு சான்றாக இந்த வழக்கின் நிலுவை நிற்பதுடன், இவ்விஷயத்தில் நீதிமன்றத்தால் வரையறுத்து வழங்கப்படக் கூடிய தீர்ப்பு, தற்போது வரை நாட்டிலுள்ள அனைத்து நீதிபதிகளும் அனுபவித்துவரும் ஒரு பிரத்யேகச் சலுகையைப் பாதிக்கலாம் எனக் கருதி மும்பை நீதிமன்றம் தயக்கம் காட்டுகிறதோ எனும் எண்ணம்கூட மக்களிடையே துளிர்த்து வளரவும் காரணமளிக்கிறது.
உலகெங்கிலும் உள்ள உயர்நிலை நீதிமன்றங்களில், அந்தந்த நாடுகளின் சட்ட அமைப்புகள், வழக்குகள் எண்ணிக்கை, நீதித்துறை மரபுகளில் உள்ள வேறுபாடுகளைப் பொருத்து, வருடாந்திர வேலை நாள்கள் கணிசமாக வேறுபடுகின்றன. ஒப்பீடு செய்துபார்த்தால், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்கள் உள்ளிட்ட இந்திய நீதிமன்றங்கள் பல பிற நாட்டு (அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஜெர்மனி, வங்கதேசம் முதலிய) நீதிமன்றங்களைவிட அதிக நாள்கள் வேலை செய்கின்றன என்பது குறிப்பிட உரியது.
இந்திய உச்ச நீதிமன்றம் ஆண்டு சராசரியாக 190 முதல் 193 நாள்களும், உயர் நீதிமன்றங்கள் 210 நாள்களும், கீழமை நீதிமன்றங்கள் 225 நாள்களும் பணி செய்கின்றன. இந்திய உச்ச நீதிமன்றம், அரசுக்கு வழங்கியுள்ள தகவலின்படி, 2019 ஆம் ஆண்டு 224 நாள்கள், 2020-ல் 217 நாள்கள், 2021-ல் 202 நாள்கள் அதன் வேலைநாள்களாக இருந்திருக்கின்றன.
அமெரிக்க உச்ச நீதிமன்ற அமர்வுகள் ஒரு ஆண்டில் அக்டோபர் முதல் ஜூன் வரை (80 - 90 நாட்கள்) மட்டுமே. மீதி நாள்கள் (Recess) தீர்ப்புகள், சட்டக் கருத்துகளை வரையறுத்தல், நீதி நிர்வாகப் பணிகளுக்கு என ஒதுக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தலைமை நீதிமன்றம் ஆண்டில் 150-160 நாள்கள்; ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் 100-120 நாள்கள்; ஜெர்மனி கூட்டாட்சி அரசமைப்பு நீதிமன்றம் 150-160 நாள்கள்; பிரான்ஸ் 150-160 நாள்கள்; ஜப்பான் 150-170 நாள்கள்; வங்கதேசம் 180-190 நாள்கள்; சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் 180-200 நாள்கள் வேலை செய்கின்றன என்பது அறியக் கிடைக்கிறது.
பிறகேன் இந்திய நீதிமன்றங்களின் விடுமுறை குறித்த முணுமுணுப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன?
இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. முதற் காரணம், இங்குள்ள நீதிமன்றங்களில், அனைத்து நிலைகளிலும் பல காலமாகத் தொடரும் வழக்கு நிலுவை எண்ணிக்கைகள்தான். 2024 டிசம்பர் வரை நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சேர்த்து 5.25 கோடி வழக்குகள் நிலுவையிலுள்ளன (ஆதாரம்: தேசிய நீதித் துறை தரவு- 2024). உச்ச நீதிமன்றத்தைப் பொருத்தவரை 2025 ஜனவரி இறுதியில், தன்னிடம் 82,445 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகப் பதிவு செய்துள்ளது. (http://www.scobserver.in/journal/january-2025). இப்படி எண்ணற்ற வழக்குகள் நிலுவையிலுள்ளபோது, நீதிமன்றங்களுக்கு ஒட்டுமொத்த நீண்ட விடுப்புகள் என்ற நடைமுறை நியாயமானதுதானா? அவசியமா? என்பது எழுப்பப்படும் வாதம். தற்போதுள்ள விடுமுறைகளில் எவ்வளவு குறைக்கலாம்? விடுமுறைகளைக் குறைப்பதால் மட்டுமே நீடித்து நிலவும் வழக்கு நிலுவைகளைக் குறைத்துவிட இயலுமா? என எழும் வினாக்களுக்கும் தெளிவான பதில்கள் திரளவில்லை இன்னும்.
மக்களால் உணரப்பட்டுள்ள இரண்டாவது காரணம், தற்போதுள்ள ‘ஒட்டுமொத்த விடுமுறை’ என்ற நடைமுறையால், குடிமக்களுக்கு ஏற்படுவதாக உணரப்படும் சிக்கல்கள். பரந்த, பல்வேறு கலாசாரப் பின்னல்களாலான மக்கள்தொகை மிகுந்துள்ள நம் நாட்டின் சமூக அமைப்பில், தமக்குள் எழும் பலவகைப் பிணக்குகள், சிக்கல்களுக்கான தீர்வுகளுக்காக நீதிமன்றங்களைப் பெரிதும் நாடும் வழக்கம் பெருகியுள்ளது. இந்தச் சூழலில் நீதிமன்றங்களுக்கு நீண்ட விடுமுறைகள் என்பது மக்களுக்கு நேரடி இடையூறாக உள்ளது என்பதாகும்.
இதனைக் கருதியே, தேசிய சட்ட ஆணையம் (National Law Commission) 2009 ஆம் ஆண்டில் அரசுக்கு அளித்த தனது 230-வது அறிக்கையில் ("நீதித்துறையில் சீர்திருத்தங்கள் - சில பரிந்துரைகள்" என்ற தலைப்பில்) நீதித்துறைப் படிநிலையின் அனைத்து நிலைகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகளைக் கருத்தில்கொண்டு வேலை நாள்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
உயர் நீதித்துறையில் தற்போதுள்ள விடுமுறைகளில் இருந்து 10 முதல் 15 நாள்களையாவது குறைக்க வேண்டும் என்றும் நீதிமன்ற வேலை நேரத்தைத் தினமும் குறைந்தது அரை மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
இந்த அறிக்கையை அனைத்து நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கும் அரசு முறையாக அனுப்பி வைத்து, சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதற்காகப் பரிசீலிக்க வேண்டியது (உச்ச நீதிமன்றம், அ.ச.பிரிவு 145இன் கீழ், தனது செயல்பாடுகளுக்கான விதிமுறைகளை வகுத்துக்கொள்ளச் சுய அதிகாரம் பெற்றதாகும். எனவே விடுமுறைகளைக் குறைக்குமாறு அரசு, நேரடியாக நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்த முடியாது).
உச்ச நீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தின்படி வகுத்துக்கொண்ட முந்தைய உச்ச நீதிமன்ற விதிகள், 1966, உச்ச நீதிமன்றத்திற்கு 10 வாரங்களுக்கு கோடை விடுமுறை – பிற விடுமுறைகள் போக - வழங்க வகை செய்திருந்தது. ஒருவேளை நீதிமன்றங்களுக்கு நீண்ட விடுமுறைகள் வழங்கப்படுவதற்கு எதிரான பொதுக் கருத்துக்கும் சட்ட ஆணையத்தின் (2009) பரிந்துரைகளுக்கும் மதிப்பளிக்கும் வண்ணம், புதிதாக 27.05.2014-ல் அறிவிக்கப்பட்ட உச்சநீதிமன்ற விதிகள், 2013-இன்படி, கோடை விடுமுறை, ஏழு வாரங்களுக்கு மிகாமல் என்று குறைக்கப்பட்டது. நீதிமன்றங்களுக்கான பிற விடுமுறை நாள்களின் எண்ணிக்கையும் சேர்த்து மொத்தம் 103 நாள்களுக்குள் எனத் தலைமை நீதிபதியால் நிர்ணயிக்கப்பட்டு, அரசிதழில் அறிவிக்கப்படும் என்று வகுக்கப்பட்டது.
இந்திய நாடாளுமன்றத்தின் (மாநிலங்களவை), பணியாளர் நலன், பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதித் துறைகள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு (2023) அறிக்கை எண் 133, "நீதித்துறை செயல்முறைகள் மற்றும் அவற்றின் சீர்திருத்தம்" என்ற தலைப்பில் ஆகஸ்ட் 7, 2023-இல் மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதே நாளில் மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற நிலைக் குழுவின் 133-வது அறிக்கை, நாட்டின் நீதிமன்றங்களில் குறையாது வளரும் வழக்குகளின் நிலுவை எண்ணிக்கை, வழக்குகளை முடிப்பதில் ஏற்படும் நீண்ட தாமதங்கள் ஆகியவற்றைக் கணக்கில் வைத்தும், நீதிமன்ற விடுமுறைகளின் அவசியம் குறித்துப் பல்வேறு தரப்பினரால் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டு வருவதையும் பரிசீலித்தது. நீண்ட நீதிமன்ற விடுமுறைகளைக் குறைக்கவும், நீதிமன்ற வேலை நேரத்தை மாற்றியமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளதை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அறிக்கையில், மிகச் சுருக்கமாக, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா (R.M.Lodha) கூறியிருப்பதுபோல “அனைத்து நீதிபதிகளும் ஒரே நேரத்தில் விடுமுறைக்குச் செல்வதற்குப் பதிலாக, தனிப்பட்ட நீதிபதிகள் ஆண்டு முழுவதும் வெவ்வேறு நேரங்களில் விடுப்பு எடுக்க வேண்டும் என்று குழு கருதுகிறது. இது நீதித்துறையால் பரிசீலிக்கப்பட வேண்டும்.” (பக். 30, பாரா 71) என்று நீதித் துறைக்கு வேண்டுகோளும் வைத்துள்ளது.
நீதிமன்றங்களின் வேலை நாள்களை அதிகரிப்பதற்கும் நீதித்துறை செயல்திறனை மேம்படுத்துவதற்கும் கீழ்க்காணும் பரிந்துரைகளையும் நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை வழங்கியுள்ளது.
1. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் தங்கள் வேலை நாள்களை ஆண்டுக்கு குறைந்தது 225 நாள்களாக உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
2. கூட்டு கோடை மற்றும் குளிர்கால விடுமுறைகளுக்குப் பதிலாக நீதிபதிகளுக்கு இடைவெளியுள்ள விடுப்பு முறைகளைக் (Staggered holidays) குழு முன்மொழிந்துள்ளது. இது சரிவர நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆண்டு முழுவதும் நீதிமன்றங்களின் தொடர்ச்சியான செயல்பாட்டை உறுதி செய்ய முடியும். நீதிக்கான அணுகலை மக்களுக்கு மேம்படுத்தும். நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைக்கவும் உதவும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. முந்தைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், கோடை விடுமுறைகளை "பகுதி நீதிமன்ற வேலை நாள்கள்" (Court Partial Working Days) என்று மறுபெயரிட்டார். இதன் மூலம் வரையறுக்கப்பட்ட விசாரணைகளும் விடுமுறை அமர்வுகளும் இருக்கும். இந்த மாதிரியைப் பின்பற்றுமாறு உயர் நீதிமன்றங்களை நிலைக் குழு வேண்டியுள்ளது.
4. வெளிப்படைத் தன்மையை விரிவாக்கி, விடுமுறை அட்டவணைகள் மற்றும் அமர்வு நாள்கள் உள்ளிட்ட நீதிமன்ற நாள்காட்டியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டியதன் அவசியத்தைக் குழு வலியுறுத்தியிருக்கிறது.
5. தாமதங்களைக் குறைக்க, விடுமுறை இடைவேளை காலங்களிலும் மெய்நிகர் விசாரணைகள் மற்றும் டிஜிட்டல் வழக்கு மேலாண்மையைப் பரிசீலிக்கவும் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
நிலைக்குழுவின் பரிந்துரைகள் உச்ச நீதிமன்ற தலைமைப் பதிவாளர், உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் ஜெனரல்கள் ஆகியோருக்கு உரிய பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
நாடாளுமன்றக் குழுவின் 133-வது அறிக்கைக்கு இந்திய நீதித்துறை, எந்தவொரு ஒருங்கிணைந்த கருத்தையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை. தனிப்பட்ட நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கலவையான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். சிலர் தற்போதைய விடுமுறைக் கட்டமைப்பை ஆதரிப்பவர்களாகவும் சிலர் சீர்திருத்தத்தின் அவசியத்தை ஒப்புக்கொள்பவர்களாகவும் உள்ளனர்.
உச்ச நீதிமன்ற முந்தைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நீதிமன்ற விடுமுறைகளை ஆதரித்து, விடுமுறைக் காலம், தீர்ப்புகளை எழுதுவதற்கும், ஆராய்ச்சிக்கும், தங்களைப் புதுப்பித்துக் கொள்ளவும் நீதிபதிகளுக்கு அவசியம் என்று கூறியதோடு, நீதிபதிகள் பெரும்பாலும் விடுமுறை நாள்களிலும் வேலை செய்கிறார்கள் என்றும் நீதிமன்றம் ஒருபோதும் மூடப்படுவது இல்லை என்றும் தெரிவிக்கிறார். இருப்பினும், நீதிமன்றங்கள் இன்னும் அதிக செயல்திறன்களைப் பயன்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், இதே கருத்தை அண்மையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
சென்னை, மும்பை உயர் நீதிமன்றங்கள் நீதிமன்ற வேலை நாள்களை அதிகரிப்பதற்கான 133-வது நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. இத்திசையில் ஒரு முன்னோடி நடவடிக்கையாகச் சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரல், நாடாளுமன்றக் குழு அறிக்கையை மக்களுக்கு நீதி வழங்குதலில் கடப்பாடுடைய பங்குதாரர்களான வழக்குரைஞர்களது சங்கங்களுக்கும் (பார் அசோசியேஷன்களுக்கு) பிப்ரவரி 2, 2024-ல் விநியோகித்து, வேலை நாள்களை எந்தெந்த வகைகளில் அதிகரிக்கலாம் என ஆலோசனைகளை வேண்டியுள்ளார். இம்முயற்சி (Bar and Bench) ‘கூட்டு சீர்திருத்த அணுகுமுறைக்கான’ முன்னுதாரணச் செயல்பாடாகும்.
நீதிமன்றங்களுக்கு நீண்ட விடுமுறை என்ற நடைமுறை அரசியலமைப்பிற்கு முரணானது என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் 2022-ல் தாக்கல் செய்யப்பட்டு இன்று வரை நிலுவையிலுள்ள மனுவை விரைவில் விசாரித்து நீதிமன்றம் முன்மாதிரியான வழிகாட்டும் தீர்ப்பினை வழங்க வேண்டும் எனச் சீர்திருத்த ஆதரவாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
நீதிமன்ற விடுமுறைகளைக் குறைப்பது என்ற ஒற்றை நடவடிக்கையின் மூலம், நாட்டில் இன்றைய நிலுவையிலுள்ள 5.25 கோடி வழக்குகளைத் தீர்த்துவிடலாம் என எதிர்பார்ப்பது பூனைக்குட்டி ஒன்று பாற்கடலைக் குடித்து வற்றிப்போகச் செய்துவிடும் என நம்புவது போலவும் ஊசியின் துளையில் ஒட்டகத்தை நுழைத்துவிட முயற்சிப்பதுபோலும் ஆகிவிடும்.
இந்தியாவின் நீதித்துறை அமைப்பை மாற்றுவதற்கு அடிப்படைக் கட்டமைப்பு சீர்திருத்தங்கள், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, கலாசார மாற்றம், மாற்றுத் தீர்வு வழிமுறைகள் போன்றவற்றை இணைத்த பன்முக அணுகுமுறை தேவைப்படுகிறது. குறிப்பாக நீதிமன்றக் காலிப் பணியிடங்கள் தாமதங்களின்றி நிரப்பப்பட வேண்டும். நீதிபதிகள் நியமனங்கள் மிக வெளிப்படையான முறையில், பாரபட்சமின்றி நீதி வழங்கும் சேவை மனங்கொண்ட தகுதியுள்ளோரைத் தேடித் தேர்ந்து எடுக்கும் நேர்மையான முறையில் நிகழ வேண்டும்.
புதிய தொழில்நுட்ப வசதிகளைச் சரிவரப் பயன்படுத்தி நடைமுறைத் தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டும். மாற்றுத் தீர்வுகளுக்கு முதன்மையளிக்கப்படுவதன் மூலம், நீதிமன்றங்களின் நேரமும் சுமையும் குறைக்கப்பட வேண்டும்; மேல் முறையீடுகளுக்குத் தகுதி வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டு எல்லா வழக்குகளும் உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு குவிவது களையப்பட வேண்டும். கீழமை நீதிமன்றங்களை அதிகரித்து ஷிப்ட் முறையில் செயல்பட வைக்கலாம் என்ற ஆலோசனைகள், நேரடி வருகை இல்லாமல், தொழில்நுட்ப வளர்ச்சிகளை நன்கு பயன்படுத்தி கரோனா காலத்தில் முயற்சித்ததுபோல ஆன்-லைன், காணொலி அமர்வுகளை அதிகரிக்கலாம் என்பன பரிசீலிக்க உரியவை.
இலக்கு: நீதிமன்றங்களில் நிலவும் வழக்குத் தேக்கங்களை முற்றிலும் வற்றச்செய்து, குடிமக்கள் அனைவருக்கும் தாமதமின்றி முறையான நீதி கிடைக்கச் செய்வதுதான். குடிமக்கள் பெருநலனை முதன்மைப்படுத்தி, தேவைப்படும் புதுமைகள் புகுத்தி, சமநீதி, சரிநீதி, காலத்தே எளிதில் கிடைக்கச் செய்வது நீதித்துறை, வழக்குரைஞர்கள், சமுதாயம், அரசு ஆகிய நிறுவனங்களின் கூட்டுப் பொறுப்பாகட்டும்.
[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]
இதையும் படிக்க | அவதூறு, கிரிமினல் குற்றமென்பது அகற்றப்பட உரியதே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.