தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு பொது தொகுதியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராகி அமைச்சராகவும் பதவியேற்க உள்ளார்.
59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கிறார். மேலூர் பொதுத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெ. விஸ்வநாதன் அமைச்சராகப் பொறுப்பேற்பதன் மூலம் தமிழகத்தில் நிலவி வந்த ஆதிக்க ஜாதி சிந்தனை மாறி, மாற்று அரசியலுக்கான களம் உருவாகி இருக்கிறது.
தமிழகத்தில் 20 சதவீதம் பட்டியலினத்தவர்கள், 2 சதவீதம் பழங்குடியினர் என மொத்தம் 22 சதவீதம் பேர் இருந்தாலும், அரசியல் கட்சிகளிலும், ஆட்சி அதிகாரத்திலும் அவர்களுக்கு உரிய அங்கீகாரமோ பிரதிநிதித்துவமோ உரிய வகையில் கிடைப்பதில்லை என்கிற குறை தொடர்கிறது.
"தமிழகம் பெரியார் ஈ.வெ.ரா. மண்', "சமூக நீதி மண்' என திராவிடக் கட்சிகள் முழங்கினாலும், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாரம்பரிய அரசியல் கட்சிகளில் அதிகாரமிக்க உயர் பதவி, மாநிலத் தலைமைப் பதவி மாவட்டச் செயலர்கள் பொறுப்புகளை வழங்குவது என்பது மிக, மிக அரிதாக காணக்கூடிய நிகழ்வாகும். தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் அதற்கு விதிவிலக்காக பட்டியல் இனத்தவர்களுக்கு மாநிலத் தலைமைப் பதவியை வழங்கத் தயங்கியதில்லை.
பெயருக்கு வாய்ப்புகள்: பட்டியல் சமூகத்தினருக்கான அரசியல் அதிகாரம் குறித்து சில ஆண்டுகளாக ஊடகங்கள், சமூக ஊடகங்களில் மிகுந்த அழுத்தம் எழுந்ததால் திமுக, அதிமுக போன்ற ஆட்சி அதிகாரத்தில் இருந்த அல்லது வரக்கூடிய கட்சிகள்1 அல்லது 2 மாவட்டச் செயலர்கள் பதவிகளை வழங்கினவே தவிர, இதுவரை உரிய அல்லது உயர்ந்த பிரதிநிதித்துவத்தை வழங்கவில்லை. அதேபோல, கடந்த 70 ஆண்டுகளாக சட்டப்பேரவை தேர்தலில் பொதுத்தொகுதியில் திராவிட கட்சிகள், தேசிய கட்சிகள் இரண்டும் பட்டியல் சமூகத்தினரை நிறுத்துவதில்லை.
சற்று விதிவிலக்காக, பொதுச் செயலராக ஜெயலலிதா இருந்தபோது, 2001 திருச்சி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் தலித் எழில்மலையை பொதுத் தொகுதியில் நிறுத்தி வெற்றி பெறச் செய்தார். 2011-இல் இந்தியக் குடியரசுக் கட்சி பொதுச்செயலாளர் செ.கு. தமிழரசனை இடைக்கால அவைத் தலைவராக்கி தனக்கு பதவிப் பிரமாணம் செய்து கொண்டதும் அருந்ததியினர் சமூகத்தைச் சேர்ந்த தனபாலை அவைத் தலைவர் ஆக்கியதும் ஜெயலலிதாவின் தலைமை பட்டியலினத்தவருக்கு வழங்கிய மிகப்பெரிய அங்கீகாரம்.
பொதுத் தொகுதியில் பட்டியல் சமூகத்தினரை நிறுத்தினால் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் உயர் ஜாதியினரின் வாக்குகள் கிடைக்காமல் தங்களது வேட்பாளர் தோல்வி அடையக்கூடும் என்ற அச்சம் அரசியல் கட்சிகள் இடையே நிலவி வருகிறது. பட்டியல் சமூக வேட்பாளரை பொதுத் தொகுதியில் நிறுத்தும்போது அந்தத் தொகுதியில் மட்டுமன்றி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளிலும் தங்களது கட்சிக்கான வெற்றி வாய்ப்பு குறையலாம் என்பதே அதற்குக் காரணம்.
நாம் தமிழர் கட்சி "2016' முதல் இதுவரை நடந்த மக்களவை, பேரவைத் தேர்தல்களில் பொதுத் தொகுதிகளில் பட்டியல் சமூகத்தினரை வழக்கமாகவே நிறுத்தி வருகிறது. அதேபோல, இம்முறை தவெகவும் பொதுத் தொகுதியில் பட்டியல் சமூகத்தினருக்கு வாய்ப்பு கொடுத்தது. ஆனால், அந்தக் கட்சிகளின் வேட்பாளர்களால் வெற்றி பெற முடியவில்லை.
மதுரை மாவட்டம் மேலூர் பொது தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெ. விஸ்வநாதன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்படாமல் இருக்க மாநிலத் தலைமையே முட்டுகட்டை போட்டது என்று கூறப்படுகிறது.
பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் கட்சிக்குள் நீடித்த மிகப் பெரிய விவாதம் மற்றும் அழுத்தங்களுக்கும் மத்தியில்தான் அவரை இறுதி வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் தெலங்கானா மாநிலத்தின் கட்சி மேலிடப் பொறுப்பாளராக இருக்கும் பெ. விஸ்வநாதன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நம்பிக்கையைப் பெற்றவராக இருப்பதால் அனைத்துத் தடைகளையும் கடந்து பொதுத் தொகுதியான மேலூரில் காங்கிரஸôல் களமிறக்கப்பட்டார்.
"வெளியூர் வேட்பாளர்' என்ற பிரசாரத்தை காங்கிரஸ் கட்சிக்குள்ளும், வெளியிலும் பலர் முன்னெடுத்தனர். பொதுத் தொகுதியில் பட்டியலினத்தவர் ஒருவர் களமிறக்கப்பட்டிருப்பதை முன்னெடுத்து ஜாதி இந்துக்கள் மத்தியில் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. இருந்தபோதிலும், கடுமையான மும்முனைப் போட்டியின் முடிவில் விஸ்வநாதன் வெற்றி பெற்றிருக்கிறார்.
மேலூர் தொகுதியின் வரலாறு: மேலூர் தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 8 முறையும், அதிமுக 6 முறையும், தமாகா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1957 தேர்தலில் இரட்டை வேட்பாளர் முறை இருந்தபோது இத்தொகுதியில் பட்டியல் சமூக வேட்பாளராக வென்ற கக்கன், காமராஜர் அமைச்சரவையில் இடம்பெற்றார். பின்னாளில் அவர் பக்தவத்சலம் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலூரில் தொடர்ந்து காங்கிரஸ் வென்ற நிலையில், 1977-இல் எம்ஜிஆர் தலைமையில்அதிமுக எனும் புதிய சக்தி களத்தில் இறங்கியதைத் தொடர்ந்து தொகுதி அதிமுகவுக்கு கைமாறியது . இப்போது தவெக எனும் புதிய சக்தி களத்துக்கு வந்த நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், மேலூர் பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளரை நிறுத்தி வெற்றி கண்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் நிலவிய கடுமையான மும்முனைப் போட்டியில் காங்கிரஸ் 31.50 சதவீத வாக்குககளைப் பெற்று வென்றிருக்கிறது.
ஜாதி ஆதிக்க தொகுதி: இத்தொகுதியில் திமுக ஒருமுறைகூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலூர் தொகுதியில் பெரும்பான்மை சமூகங்களாக உள்ள முத்தரையர், கள்ளர் இடையே "எதிராக வாக்களிக்கும் பழக்கம்' இருந்து வருகிறது. கடுமையான ஜாதி அழுத்தம் நிறைந்த இத்தொகுதியில் ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சிகளாக "எதிர்ப்பு வாக்குகள் இல்லாத' காங்கிரஸýம் அதிமுகவும் மட்டுமே வென்று வந்துள்ளன. ஜெயலலிதா இருந்ததுவரை இத்தொகுதி அதிமுகவின் கோட்டையாக தொடர்ந்து விளங்கியது.
நடந்து முடிந்த தேர்தலில் மேலூர் தொகுதி கடுமையான மும்முனைப் போட்டியைக் கண்டது. அதில், 2,724 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் விஸ்வநாதனிடம் தவெக வேட்பாளர் வெற்றியை இழந்தார். அதிமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. மேலூரில் "விஸ்வநாதனின் வெற்றி' என்பது தமிழகத்தில் பட்டியல் சமூக வேட்பாளர்களை பிற கட்சிகளும் பொதுத் தொகுதியில் நிறுத்துவதற்கான நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளர் ஒருவர் வெற்றிபெற்றிருப்பது தமிழகத்தில் சமூக மனமாற்றத்தின் அறிகுறியாகக் கருத வேண்டும். இன்று அமைச்சராகப் பொறுப்பேற்க இருக்கும் விஸ்வநாதன் தியாகி கக்கனுக்குப் பிறகு அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளும் பட்டியலினத் தலைவராக ஒருவர் உயர்ந்திருப்பதன் அறிகுறி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

55 ஆண்டுகளுக்குப் பின் போட்டியிட்டு வாசுதேவநல்லூரில் வென்ற திமுக

மேலூரில் காங்கிரஸ் வென்றது! தமிழ்நாட்டில் முதல் வெற்றி!

மதச்சார்பின்மையின் முகம் விஜய் அல்ல, காங்கிரஸ்! முன்னாள் எம்.பி. பெ. விஸ்வநாதன் சிறப்பு நேர்காணல்

மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



