மாமியார் vs மருமகள்! புரிதலால் கட்டியெழுப்பப்படும் உறவு!
மாமியார் - மருமகள் உறவின் சிக்கல்களை புரிதலால் தீர்க்கலாம். மாமியார் தினத்தையொட்டி சிறப்புக் கட்டுரை...

மாமியார் தினம் - AI
உறவுகளிலேயே மிகச் சிக்கலான உறவு முறையாக இருப்பது மாமியார் - மருமகள் உறவுதான், தம்பதிக்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது போல, இனி இவர்களுக்கும் பொருத்தம் பார்க்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு இந்த உறவில் அத்தனை சவால்.
உலகில் உறவுகளைத் தக்கவைப்பது அத்தனை சுலபமல்ல.. இன்றைய பரபரப்பான சூழலில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதும், புரிந்துகொள்வதும் குதிரைக்கொம்பாக உள்ளது.
அன்னையார் தினம், தந்தையர் தினம், நண்பர்கள் தினம், காதலர் தினம் என ஒன்றையும் விட்டுவைப்பதில்லை, அனைத்தையும் கொண்டாடி மகிழ்கிறோம். அதேபோன்று மாமியார் தினத்தையும் சிறப்பாகக் கொண்டாடலாமே... ஏன் கொண்டாடக்கூடாதா என்ன? ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் நான்காவது வாரம் ஞாயிற்றுக்கிழமை மாமியார் தினம் கொண்டாடப்படுகிறது. அனைத்து மருமகன்களும் மருமகள்களும் இந்த ஆண்டு ஒரு முறை மாமியார் தினத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடித்தான் பாருங்களேன்...
இன்றைய குடும்ப வாழ்க்கையில் அதிகமாகப் பேசப்படும் விஷயங்களில் ஒன்றுதான் நவீனகால மருமகள்களுக்கும் மாமியார்களுக்கும் இடையிலான உறவு. காலம் மாறிவிட்டது. வாழ்க்கை முறையும் மாறிவிட்டது. பெண்களின் சிந்தனைகளும் எதிர்பார்ப்புகளும்கூட. ஆனால், குடும்ப உறவுகளில் அன்பும், மரியாதையும், புரிதலும் இன்றும் அவசியமாகவே பார்க்கப்படுகின்றது.
ஒருபக்கம் தன்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் குடும்பத்தை நடத்த விரும்பும் மாமியார், மறுபக்கம் சுதந்திரமாகத் வாழ விரும்பும் நவீன கால மருமகள். இருவருக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் சில நேரங்களில் குடும்பங்கள் இரண்டாகின்றன.
மாமியாரின் பார்வையில்...
ஒவ்வொரு மாமியாரும் தங்கள் மகனை அன்புடனும், அக்கறையுடனும் வளர்த்துப் படிக்கவைத்துப் பார்த்துப் பார்த்து திருமணம் செய்துவைப்பார்கள். திருமணத்திற்குப் பிறகு, மகனின் வாழ்வில் புதிய உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, தங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் குறைவதாக உணருவார்கள். இங்கு தொடங்கும் பிரச்னை...
அடுத்து, தங்கள் குடும்பப் பழக்கவழக்கங்கள், சமையல் முறைகள், உறவுகளைப் பேணும் விதம் ஆகியவற்றை மருமகளும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்த்து ஏமாறும்போது விஸ்வரூபம் எடுக்கிறது.
எதிர்பார்ப்பு.. அடுத்து ஏமாற்றம்.. நாளடைவில் வற்புறுத்தலாக மாறும். இதனால் உறவில் விரிசல்.
எனவே, உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்தது போல, வாழ விரும்பியது போல, உங்கள் மகள் ஒரு வீட்டில் சென்று எப்படி வாழ வேண்டும் என்று விரும்புவீர்களோ அதுபோல மருமகளை வாழ விடுங்கள்.
நம் பழக்க வழக்கங்கள் நம்மோடு என்று விட்டுவிட்டு, மாமியார்களும் அவர்களது வாழ்க்கையை செம்மையாக சந்தோஷமாக வாழ முயற்சிக்க வேண்டும்.
நவீன மருமகள்கள் பார்வையில்…
பெண்கள் கல்வி கற்று, வேலைக்குச் சென்று, பொருளாதாரச் சுதந்திரத்துடன் வாழ்கிறார்கள். திருமணத்துக்காக தங்கள் வாழ்வுமுறையை மாற்ற யாரும் தயாரில்லை.
புதிய உறவுகள் வந்தாலும், தங்களுடைய, தொழில், நட்பை, உறவுகளை எப்போதும் போல தொடரவே விரும்புகிறார்கள். விரும்புவார்கள்.
இங்கு மாமியாரின் அக்கறையையும் அறிவுரையையும் தேவையற்ற தலையீடாகவே அவர்களுக்கு இருக்கும். ஆனால், தேவையான அறிவுரைகளை எடுத்துக் கொண்டு தேவையற்றதை விலக்கி வைத்துக் கொள்ளலாம். தங்களை யாருமே எதுவுமே சொல்லக் கூடாது என்ற எண்ணத்தை விட்டுவிட்டு மாமியாருடனான உறவை சுமூகமாகக் கொண்டு செல்ல ஒரு அடி எடுத்து வைத்துத்தான் ஆக வேண்டும்.
நவீனமும், அனுபவமும்...
என்னதான் அனைத்தும் நவீனமாக மாறினாலும், தலைமுறைகள் கடந்தாலும், மூத்தவர்களின் அனுபவத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பது உறவை மேலும் அழகாக்கும். மாமியாரை இன்னொரு தாயாகவெல்லாம் நினைக்க வேண்டாம். நம் வாழ்க்கைத் துணையின் தாய். அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்தால் குடும்பத்தில் சில பிரச்னையைத் தவிர்க்கலாம். அவ்வளவே. அதே நேரத்தில், எல்லாவற்றையும் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் அல்ல.
யார் மாற வேண்டும்? மாமியாரா, மருமகளா?
இந்தக் கேள்விக்கு ஒரு பதில் இல்லை. எல்லா மாமியார்களும் தவறு செய்பவர்கள் அல்ல, எல்லா நவீன மருமகள்கள் கெட்டவர்களோ அல்ல. கருத்து வேறுபாடுகள் எந்தத் தரப்பிலிருந்தும் ஏற்படலாம். மாமியார் - மருமகளைத் தன் மகளாக ஏற்றுக்கொள்ள வேண்டாம். அவர் ஒரு பெண், அவருக்கு என தனித்துவம், விருப்பம் இருக்கும் என்று மதித்தாலே போதும். அதேபோல், மருமகள், மாமியார் என்றாலே எதிரியாகப் பார்க்காமல், அனுபவம் பக்குவம் கொண்ட சக மனுஷியாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். இருவரும் தங்கள் கருத்துகளைத் திணிப்பதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் பேசுவதற்கும் கேட்பதற்கும் இடமளிக்க வேண்டும்.
மிக முக்கியமாக, மருமகள் தனது மகிழ்ச்சியை இழந்துதான் நல்ல மருமகளாக இருக்க வேண்டும் என்பதும் அல்ல, தன் உரிமைகளை விட்டுக்கொடுத்துத்தான் நல்ல மாமியாராக இருக்க வேண்டும் என்பதும் அல்ல.
மாமியாரும் மருமகளும் ஒரு குடும்பத்தில் எதிர்கொள்ளும் போட்டியாளர்கள் அல்ல. ஒரே குடும்பத்தில் வெவ்வேறு அனுபவங்களுடனும் எதிர்பார்ப்புகளுடனும் வாழ வந்தவர்கள். ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பே வந்திருப்பார், மற்றொருவர் அண்மையில் குடும்பத்தில் நுழைந்திருப்பார். மாமியாருக்கு அனுபவம் இருக்கும், மருமகளுக்குப் புதிய சிந்தனைகள் இருக்கும், அனுபவமும் நவீன சிந்தனையும் ஒன்றிணைந்தால், ஒரு குடும்பம் எனும் விருட்சம், மேலும் செழித்து கல்பவிருட்சமாகும்.
Mother-in-law vs. Daughter-in-law! A relationship built on understanding!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


