
கவிதையாய் நிலைத்துவிட்ட கண்ணதாசன்!
கண்ணதாசன் மறைவின்போது, அவருடைய வாழ்க்கை, அவர் சினிமா துறையில் பெற்ற புகழ் பற்றி எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் எழுதிய அஞ்சலி கட்டுரை மீள்பிரசுரமாக...

கவிதையாய் நிலைத்துவிட்ட கண்ணதாசன்.... - தினமணி
- நாரண துரைக்கண்ணன்
கண்ணதாசன்! இப்பெயர் தமிழ் இல்லங்களில் எல்லாம், தமிழ் மக்கள் நாவில் எல்லாம் வழங்கிக் கொண்டிருக்கும் செல்லப் பெயர். வானொலி வாயிலாக இடையறாது ஒலித்துக் கொண்டிருக்கும் பெயர். தொலைக்காட்சிகளில்கூட, நாள் தவறாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் பெயர்.
இவ்வளவு பெரும் புகழ் பெற்றிருந்த பெயருக்குரிய அற்புத மனிதர் - அமெரிக்க நாட்டில் அண்மையில் நடந்த உலகக் கவிஞர் மாநாட்டிலும் தமிழ்ச் சங்க விழாவிலும் கலந்துகொண்ட கவியரசர் இப்பூவுலக வாழ்வை நீத்துச் சென்றுவிட்டார் என்ற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை.
சிகாகோ மருத்துவமனையில் அமெரிக்க மருத்துவ நிபுணர்களிடம் இந்திய மருத்துவர்கள் மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணதாசன் எப்படியும் பூரண குணமடைந்து தாயகம் திரும்பி நம்மையெல்லாம் மகிழ வைப்பார் என்று நாம் கொண்டிருந்த நம்பிக்கையை, காலன் பொய்ப்பித்து விட்டானே? இக்கொடிய நிகழ்ச்சியை நாம் எப்படித் தாங்குவோம்? நமக்கு உலகமெங்கணும் பெருமை தேடித் தந்த ஒப்பற்ற கவிஞனை அடியோடு இழக்க நம் உள்ளம் எப்படி ஒருப்படும்?
முதலில் முத்தையா
செட்டிநாட்டில் சிறு கூடல்பட்டி என்ற ஒரு சிறு கிராமத்தில் மத்திய தரக் குடும்பமொன்றில் பிறந்து எட்டாவது வகுப்பு வரை கூட, பள்ளிப் படிப்பைப் பெறாத முத்தையா என்ற 17 வயது இளைஞன் எழுத்தாளனாகிப் பத்திரிகைத் துறையை முதலில் மேற்கொண்டு, எழுதுவதிலும் பேசுவதிலும் பேரார்வம் உடையவனாகித் தமிழகத்தில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தேடிக்கொள்ள வேண்டுமென்ற குறிக்கோளோடு அயராது உழைத்து, தான் புகுந்த துறைகளில் எல்லாம் தனிச் சிறப்பு பெற்று 37 ஆண்டுகளுக்குள் தன் இலட்சியத்தை அநேகமாக அடைந்துவிட்டான் என்பது தமிழ் நாட்டு வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படத்தக்க ஒரு பெருஞ் சாதனையாகும்.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞனான கண்ணதாசனுடைய இலக்கிய ஆர்வத்தையும், எழுத்தாற்றலையும், கவிதையுள்ளத்தையும் முதன் முதல் உணர்ந்து இலக்கிய உலகுக்கு அறிமுகஞ் செய்து வைத்தவருள் என்னையும் சேர்த்துக் கொள்ளலாம். கண்ணதாசன் பேனா பிடித்து எழுதத் தொடங்கியதுமே என்னுடன்தான் முதன் முதலாகத் தொடர்புகொண்டார்.
பத்திரிகை ஆர்வம்
இன்றுள்ள முன்னணி எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு வாய்ப்பளித்து வளர்த்தது போலவே, கண்ணதாசனுக்கும் நான் ஆசிரியனாயிருந்த, ஆனந்தபோதினியிலும் பிரசண்ட விகடனிலும் வாய்ப்புத் தந்து அவருடைய கட்டுரை, கதைகளை வெளியிட்டு நம்பிக்கையூட்டி உற்சாகப்படுத்தினேன்.
எங்கள் பத்திரிகைகளிலும் புதுக்கோட்டை பத்திரிகைகள் சிலவற்றிலும் எழுதிவந்த ஏ.எல். முத்தையாவுக்கு விரைவில் ஏதேனும் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியனாகிவிட வேண்டுமென்ற ஆசையேற்பட்டது.
இராமச்சந்திரபுரத்தில் நட ந்துகொண்டிருந்த 'திருமகள்' மாத இதழுக்கு உதவியாசிரியரொருவர் தேவை என்று தெரிந்து, அதன் அதிபருக்குப் பரிவுரை வழங்க வேண்டுமென்று, முத்தையா என்னைக் கேட்டுக்கொண்டார். அவர் விரும்பியபடியே நான் 'திருமகள்' செட்டியாருக்குக் கடிதமெழுதி முத்தையாவின் எழுத்தாற்றலைத் தெரிவித்து அவரது பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பை அவருக்கு அளிக்குமாறு கூறினேன்.
செட்டியார் என் பரிவுரையை ஏற்று முத்தையா வசம் பத்திரிகையை ஒப்படைத்துவிட்டார். முத்தையா எங்கள் இருவருடைய நம்பிக்கைக்குப் பங்கமேற்படாதபடி, திருமகளைத் திறம்பட நடத்தலானார்.
"வணங்காமுடி"
முத்தையா முதன்முதலாக வைத்துக் கொண்ட புனைபெயர் 'வணங்காமுடி'. இப்புனைபெயர் வாயிலாக அவர் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்து வருகையில்தான், முத்தையா தம் நன்றியுணர்வைக் காட்டும் முறையில் எனக்கும் அவருக்கும் இடையேயுள்ள தொடர்பைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். 'ஜீவா' அவர்களை முன்னோடியாகக் கொண்டுதான் கலை, இலக்கியம், அரசியல் விஷயங்களைத் தாம் எழுதி வருவதாகவும் அறிவித்திருக்கிறார்.
அதற்கேற்றாற்போல், முத்தையா, 'கண்ணதாசன்' என்ற புனைபெயரை நிலையாக வைத்துக்கொண்டு எழுதத் தொடங்கிவிட்டார்.
மூத்தவர் ஏ.எல்.எஸ்.
முத்தையா என்னுடன் தொடர்புகொள்வதற்கு முன்பே அவருடைய மூத்த சகோதரர் ஏ.எல். சீனிவாசன் எனக்கு நண்பராயிருந்தார். கோவை கவுண்டர் கம்பெனியில் பெரும் பொறுப்பு வகித்து வந்த அவர் நான் கோயம்புத்தூர் செல்லும்போதெல்லாம் என்னை வரவேற்று உபசரிப்பார். தன் தம்பி என்னுடைய அன்பாதரவில் இலக்கிய உலகில் இடம் பெற்று, எழுதி வருவது அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
திருமகள் மாத இதழை அதன் அதிபர் என்ன காரணத்தாலோ திடீரென நிறுத்திவிட்டார். ஆகவே, கண்ணதாசன் வேறெப் பத்திரிகையிலாயினும் வேலை கிடைக்குமா என்ற எண்ணத்தோடு, சென்னை நகருக்கு வந்து சில காலம் சொக்கலிங்கம், அருணாசலம், திருநாவுக்கரசு, இராமலிங்கம் முதலியவர்களுடன் தங்கியிருந்தார்.
அச்சமயத்தில் நான் சின்னமனூரில் நடத்திய தமிழ் இளைஞர் மாநாட்டில்தான் அவர் முதன் முதலாக "பேச்சாளர்" ஆனார் எனலாம். மாநாட்டுக்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைவர். நான் மாநாட்டைத் தொடங்கி வைத்தேன். தேவநேயப் பாவாணர், மு. சரவண முதலியார் (அ.ச. ஞானசம்பந்தத்தின் தந்தை), நாகர்கோவில் ஆறுமுக நாவலர் முதலிய பேரறிஞர்களிடையே கண்ணதாசன் அச்சமின்றிக் கச்சிதமாகப் பேசியதைக் கேட்டு எல்லோரும் மகிழ்ந்தனர்.
பாடலாசிரியராக ஆசை
1947-ம் ஆண்டில் கோவை ஷண்முகா நாடக அரங்கில் டி.கே.எஸ். சகோதரர்கள் என் உயிரோவியம் நாடகத்தை அரங்கேற்றினர். அச்சமயம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் நடத்திய "சண்டமாருதம்" பத்திரிகையில் கண்ணதாசன் எப்படியோ சேர்ந்து உதவியாசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். நாடகம், சினிமாக்களுக்கு இசைப்பாடல் எழுத வேண்டுமென்று சினிமா ஸ்டூடியோ சூழ்நிலை காரணமாக அவருக்கு அக்காலத்தில் ஆசையுண்டாயிற்று போலும்.
உயிரோவியம் (நாடகம்) சேலத்தை அடுத்துள்ள கோவையில் அரங்கேறுவதால் அதற்குப் பாடல் எழுதித் தரலாமென கண்ணதாசன் எண்ணியிருக்கிறார். எனக்கு எழுதினதோடு, சகோதரர் ஷண்முகத்துக்கும் நேரே மடல் விடுத்துக் கேட்டிருக்கிறார் அவர்.
திரைப்படக் கவிஞர்
கண்ணதாசன் விடா முயற்சியுடையவராதலால் அவர் விரும்பியபடியே வெகு விரைவில் சினிமா உலகைப் பிடித்து விட்டார். முதலில், கதை, வசனம் எழுத முற்பட்டு பின், காலப் போக்கில் இசைப் பாடல்கள் எழுதித் திரைப்படக் கவிஞராகவே மாறிவிட்டார்.
ஹரீந்திரநாத் சாட்டோபாத்யாய போன்ற அ. இ. பெருங் கவிஞர்களெல்லாம் மதித்துப் போற்ற, வட நாட்டுப் படமுதலாளிகள் பலர் போட்டி போட்டுக் கொண்டு பாடல்களுக்கு எதிர்பார்க்கும் நிலையில் பெரும் புகழ் பெற்றிருந்த கம்பதாசனுக்குப் பின், கண்ணதாசன் ஒருவர்தான் பெரும் புகழ் பெற்றிருந்தார்.
ஒரு பாடலுக்கு 2000, 3000 என்று பணம் வாங்கிக் கண்ணதாசன் படவுலகில் பெரும்பொருள் சம்பாதித்த அளவுக்குத் தமிழகத்தில் மட்டுமில்லை; வட இந்தியாவில் கூடப் பாடலாசிரியர்கள் யாரும் சம்பாதிக்கவில்லை.
அரசியல் தொடர்பு
மாடர்ன் தியேட்டர்ஸில் கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட நட்பு கண்ணதாசனைத் தி.மு.க.வில் சேர வைத்துப் பிரசாரகராகவும் ஆக்கிவிட்டது.
பின் ஈ.வே.கி. சம்பத்துடன் தி.மு.க.வை விட்டு விலகி வந்து, தமிழ்த் தேசியக் கட்சியைத் தொடங்கி நடத்தினார்.
அதன் பின் அக்கட்சியையும் கலைத்து விட்டு, சம்பத்தும் அவருமாக காங்கிரஸில் சேர்ந்து பணியாற்றிப் பெருந்தலைவர் காமராஜரின் பேரன்பைப் பெற்றனர்.
'நவசக்தி' முதலிய தினசரிகளில் அன்றாடம் எழுதி அரசியல் உலகில் தம்மைப் பிரபலப்படுத்திக் கொண்டார்.
சுவீகாரமும் திருமணமும்
1950-ம் ஆண்டில் கண்ணதாசன் காரைக்குடி விசாலாட்சி ஆச்சிக்கு சுவீகார புத்திரரானார். அடுத்து அவருக்குத் திருமண ஏற்பாடு நடந்தது. மூத்த சகோதரர் சீனிவாசன்தான் முன்னின்று நடத்தினார்.
மிகச் சிறப்பாக நடைபெற்ற அத்திருமண விழாவைத் தொடர்ந்து மாலை வாழ்த்துக் கூட்டத்துக்கு என்னைத் தலைமை தாங்குமாறு கண்ணதாசன் சகோதரர்கள் கேட்டுக்கொண்டனர். நான் பெருமகிழ்ச்சியுடன் மணமக்களை உளமார வாழ்த்தினேன். கலைஞர் கருணாநிதி, 'பொன்னி' ஆசிரியர் முருகு சுப்ரமண்யம், இராம. அரங்கண்ணல் முதலிய நண்பர் பலர் வாழ்த்துரை வழங்கினர்.
முடிவில் மணமகன் கண்ணதாசனின் நன்றியுரை எல்லாரையும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.
கண்ணதாசன் வாழ்வில் நல்ல வசதி ஏற்பட்டதும், 'தென்றல்' என்ற பெயரில் ஒரு வாரப் பத்திரிகையையும், 'கண்ணதாசன்' என்ற தம் பெயராலேயே ஒரு மாதப் பத்திரிகையையும் சில காலம் நடத்தி தம் திறமை முழுவதையும் வெளிப்படுத்தினார். சினிமா பாடல்கள் மூலம் சம்பாதித்த பெரும் பொருளைக் கொண்டு கண்ணதாசன், தாம் ஆசைப்பட்ட காரியங்களையெல்லாம் செய்து பார்த்துவிட்டார்.
படத்துறையில்
எழுத்தாளராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கிய கண்ணதாசன் பத்திரிகையாளராகவும் மாறிக் கவிஞராகப் பிரபலமடைந்தார். அத்துடன் திருப்தியுறாது சில படங்களில் பாத்திரங்கள் ஏற்று நடித்தார்; பாடினார். சொந்தத்தில் ரத்த திலகம், சிவகங்கைச் சீமை, மாலையிட்ட மங்கை, கவலையில்லாத மனிதன், கறுப்புப் பணம் ஆகிய படங்களைத் தயாரித்து திரையிட்டார். கண்ணதாசன் பாஷையில், 'வனவாசத்தை' விட்டு, 'மனவாசம்' செய்யத் தொடங்கிய பின், கீதை முதலிய சமய நூல்களை நன்கு படித்து சமயச் சொற்பொழிவுகள் செய்து வந்தார்.
"அர்த்தமுள்ள இந்து மதம்"
அத்துடனில்லாமல், சங்கராச்சாரிய சுவாமிகளும் பாராட்டுமளவுக்கு 'அர்த்தமுள்ள இந்து மதம்", கீதை விளக்கம் முதலிய சமய சம்பந்தமான நூல்களை எழுதிப் பெயர் பெற்றார். ஆதிசங்கரரின் கனகதாரா தோத்திரம் போன்றவைகளை கவிதைகளில் ஆக்கித் தந்திருக்கிறார். இறுதியாக, கிறித்துவப் பாதிரியார் ஒருவர் கேட்டுக் கொண்டபடி 'பைபிளை'க் காவியமாக்கிக் கொடுத்திருக்கிறார். இப்படிப் பல துறைகளிலும் புகுந்து செயல்புரிந்த கண்ணதாசன் பெயர் பெற்று வருவதைக் கண்டு மனம் பூரித்து வாழ்த்தினவர்களுள் நானும் ஒருவன்.
புகழின் உச்சியில்
எல்லாவற்றுக்கும் மேலாக கண்ணதாசன் திரைப்படக் கவிஞர் என்ற வகையில் பெற்றுள்ள பெயர்தான் உலகப் பிரசித்தமானது. இத்துறையில் அவர் புகழின் சிகரத்துக்குச் சென்று விட்டார்.
பாரதியார், பாரதிதாசன், கவிமணி ஆகிய மாபெரும் கவிஞர்களுடைய ஸ்தானங்களை இதுவரை யாராலும் எப்படி எட்ட முடியவில்லையோ அப்படி தம்பி கண்ணதாசன் கவிதையுலகில் எட்டிவிட்ட உச்சியை யாரும் எளிதில் எட்டிப் பிடிக்க முடியாது.
பெரியவர்களின் பாராட்டு
கண்ணதாசன் பாடியுள்ள கவிதைகளில் பெரியார், அண்ணா, காமராஜர் போன்ற இயக்கத் தலைவர்களும் மனத்தைப் பறிகொடுத்திருக்கின்றனர். கண்ணதாசன், அண்ணாவைத் தூற்றிப் பழித்த காலத்திலும், அவர் தம்பியின் கவிதையாற்றலைப் பலபடப் பாராட்டியிருக்கிறார். கவிஞர் வேழவேந்தனின் முதல் கவிதைத் தொகுதியை வெளியிடவந்த அண்ணா, அவரைப் பாராட்டுவதை விட்டுக் கண்ணதாசனைப் புகழ்ந்து பேசிவிட்டுச் சென்றது பலர் நினைவிலிருக்கும்.
கண்ணதாசன் சினிமாத் துறையில் கலைஞரை முன்மாதிரியாகக் கொண்டு பாடுபட்டார். அவருடன் போட்டி போட்டுக்கொண்டு காரியங்களைச் செய்து முன்னேற்றம் அடைந்தார். அம்மையப்பன், கலைஞர் எழுதினார் என்றதும் கண்ணதாசன் இல்லறஜோதி என்று எழுதித் திணற வைத்தது போன்ற கதையெல்லாம் அவ்விருவருடைய நெருங்கிய நண்பர்கள் சிலர் நினைவில் மட்டுமே இருக்கும்.
உழைப்பும் விடாமுயற்சியும்
பெரும்பாலாருக்கு, கண்ணதாசனின் உல்லாச வாழ்க்கைதான் தெரியுமே யொழிய அவர் இரவு பகலாக உழைத்து வந்த பேருழைப்பும் ஊக்கமும் விடாமுயற்சியும் தெரியாது.
'கண்டது கற்க, பண்டிதனாவான்' என்ற பழமொழியின் உட்பொருளை, கண்ணதாசன் நன்கு உணர்ந்து, பலவிதமான நூல்களையும், சதா படித்துத் தம் அறிவை விசாலப்படுத்திக் கொண்டிருக்கிறார். பாரதி, பாரதிதாசன் பாடல்கள் முழுதும் அவருக்கு மனப்பாடம். நாடோடிப் பாடல்களிலிருந்து இனிமையான, மகாபாரதம் முதலிய இதிகாசங்கள், காவியங்களையெல்லாம் கரைத்துக் குடித்திருக்கிறார்.
கண்ணதாசன் அபார ஞாபக சக்தி படைத்தவர். ஒன்றை ஒருமுறை படித்துவிட்டால், அதை அப்படியே மனத்தில் பதித்துக் கொள்வார்.
இத்தகைய சிறந்த சிறப்பியல்புகளும் பெருமுயற்சியும் பேருழைப்பும்தான் கண்ணதாசனைப் புகழேணியின் உச்சியில் ஏற்றிவைத்திருக்கிறது.
வாழும் காலத்திலேயே. கண்ணதாசன் புகழ், பட்டங்கள், பரிசுகள் பெற்றது போல, உன்னத பதவிகளை அடைந்தது போல, வேறு யாரும் பெறவில்லை. அவ்வகையில் அவர் பெரும்பேறு பெற்றவர்.
தமிழ் மொழியும் மக்களும் உள்ளவரை கண்ணதாசன் கதைகள் மற்றும் படைப்புகள் இலக்கிய நெஞ்சங்களில் பசுமையாக இருக்கும். அவர் பெயர் நிலைத்திருக்கும்.
இது பொதுவாகப் பலருக்குச் சொல்லப்பட்டுவரும் உபசார வார்த்தை போன்றதல்ல: முழுக்க முழுக்க உண்மையான கருத்தாகும். ஏனென்றால், கண்ணதாசன் கவிதையாய் நிலைத்து விட்டார்!
[தினமணி கருவூலப் பக்கங்களிலிருந்து...]
Summary
Kannadasan, who has become immortal as poetry
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





