
தமிழ் - வடமொழி இலக்கியங்கள்: மேலாட்டப் பரவல்கள் அடிநாத ஒருமைப்பாடாகுமா? விளக்கம் - 2
தமிழ் இலக்கியம், சமஸ்கிருதத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பது பற்றி...
தமிழ் இலக்கியங்கள்.... - Gemini AI
[மு.கு: "இந்திய செம்மொழி இலக்கியங்களில் அடிநாத ஒருமைப்பாடு ஏதுமில்லை” (தினமணி.காம் 26-8-2026) கட்டுரைக்கு குறிப்பிடஉரிய ஆய்வாளர்கள், தகுநிலைப் பேராசிரியர்கள், நாடறிந்த எழுத்தாளர்கள் ஆகியோரின் எதிர்வினைகளாக விளைந்த அறிவார்ந்த கருத்துக்களுக்குக் கட்டுரையாளர் அறிந்துள்ள விளக்கங்கள் - 2 [பகுதி- 1 (தினமணி.காம் 7-9-2026)]
I
எழுத்தாளர் - மூத்த பத்திரிகையாளர் மாலன் ஈந்த ஆழ்பார்வைக் கருத்துகளின் தொகுப்பு இவை:
“புறநானுற்றில் ராமாயணச் செய்திகள், மகாபாரதச் செய்திகள் பேசப்படுகின்றன (புறநானுறு 378); இப்பாடலில் உள்ள ராமாயணச் செய்தி உவமையாகக் கூறப்படுகிறது. வெகுஜனம் அறியாத ஒன்றை உவமையாகக் கூறுவதில்லை. அகநானூற்றிலும் ராமாயணச் செய்தி உள்ளது (அகம் 70); ராவணன் கைலாய மலையை அசைத்த செய்தி கலித்தொகையில் (பாடல் 38) பேசப்படுகிறது; மகாபாரதத்தில் உள்ள அரக்கு மாளிகைச் சதியும் கலித்தொகையில் பேசப்படுகிறது (பாடல் 25); கண்ணன், பலராமன் வழிபாடு பரிபாடலில் கூறப்பட்டுள்ளது; கண்ணன் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்திலும் கார்த்திகைப் பெண்கள் செய்திகள் திருமுருகாற்றுப் படையிலும் உள்ளன.
இலக்கண அமைப்புகள், காவிய வடிவங்கள் இயற்கை வழிபாடு /வியத்தல் எனப் பல கூறுகள் பொதுவாக இருக்கின்றன (அந்த மொழிகள் evolve ஆனதற்கு ஏற்ப.’’
இவற்றுடன் ‘மொழி வன்மம்’ என்ற தனது கட்டுரையையும் அன்புடன் இணைத்தனுப்பியுள்ளார். மாலனுக்கு கட்டுரையாளரின் நன்றி.
எழுத்தாளரின் கருத்துகள் முன்குறிப்பிட்ட கட்டுரை குறித்த விவாதத்தை உயர்தளத்திற்கு இட்டுச்செல்பவையாக இருப்பதால், அவற்றிற்கான விளக்கங்களைத் தொகுத்தளிக்கும் வகையில் இவை:
II
ஒரு புவியியல் பரப்பில், பற்பல பகுதிகளில் பல நூறாண்டுகளாக பல மொழிகள் வழக்கிலிருக்கும் சூழல் இந்தியாவில் தொடர்ந்து வருகிறது. இங்கு வாழும் மக்களது இடப்பெயர்வுகள், பயணங்கள், வணிகம், பிற தொடர்புகள் முதலியவற்றாலும், புலமையர் கல்வி விரிவு, கூடுதல் மொழியறிவு போன்றவற்றாலும், பிற மொழிகளின் ‘சொற்கள்’, ‘கதைகள்’, ‘இலக்கியச் செய்திகள்’ பரவல் மற்றொரு மொழியில் ஏற்படுவது ‘இயல்பான மொழியியல் நிகழ்வு’தான். குறிப்பாக, இந்நாட்டின் இரு பெரும் முதன்மைப் பண்பாட்டு நீரோட்டங்களான தமிழும் சமஸ்கிருதமும் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உரையாடலில் இருந்துள்ளதால் இரு மொழிகளிலும் ‘கொள்வதுங் கொடுப்பதும்’ (மாலன் குறிப்பிட்டிருப்பதுபோல) நிகழ்ந்திருப்பது ஆச்சரியமேயில்லை.
சொற்பரவல்: ‘கொள்வதும் கொடுப்பதும்’
“சமஸ்கிருத மொழி மூல இலக்கியமாகக் கருதப்படுவது ருக்கு வேதம் (Rig Vedha); இதன் காலம் கி.மு. 1,500 என்பது கணிப்பு. இவ்விலக்கியத்தில் தமிழ்ச் சொற்கள் பல காணப்படுகின்றன என்ற உண்மையினை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தாமஸ் பர்ரோ நிறுவியுள்ளார்’’ [முனைவர் சோ.ந. கந்தசாமி, உலகச் செம்மொழிகள் இலக்கியம், முதல் தொகுதி, தமிழ்ப் பல்கலைக்கழகம் 2010, பக்..145]
தாமஸ் பர்ரோ கருத்தை மேலும் வலுப்படுத்துவதாக, ‘’வேதத்திற் காணும் தமிழ்ச் சொற்களாக 135 சொற்களையும், ஆரிய மொழிகள் மேற்கிலிருந்து கிழக்காகப் பரவியபோது அடைந்த படிமுறை மாற்றத்தைக் காட்டும் வகையில் 39 தமிழ்ச் சொற்களையும் அவை முறையே தியூத்தானியம், இலத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் அடைந்த மாற்றத்தையும்” தேவநேயப் பாவாணர் எடுத்துரைத்துள்ளார். [The Primary Classical Language of the World, பக். 286-291] இவற்றுக்கு முன்னரே, சமஸ்கிருதத்திற்கும் திராவிட மொழிகளுக்கும் பொதுச் சொற்களாகக் காணப்படுவன என 25 சொற்களைக் கால்டுவெல் எடுத்துக் காட்டியுள்ளார் என்பதும் நினைவிற்கொள்ள உரியது.
இது இவ்வாறிருக்க, திராவிட, இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பங்களின் தலைமொழிகளான தமிழும் சமஸ்கிருதமும் மொழியின் தோற்றங் குறித்த கருத்திலிருந்தே அடிப்படை வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. 'மொழி கடவுளாற் படைக்கப்படுவதல்ல; மனிதர் பேச முற்படும் முயற்சிகளாலேயே, மொழிகள் பிறக்கின்றன' என்பதே மொழியியல், அறிவியல் அடிப்படையிலான உண்மை. ஆனாலும், இந்து மதப் புராணங்கள், சமஸ்கிருதம் பிரம்மாவின் படைப்பு; "தேவபாணி" (Devavani) அல்லது தேவர்களின் மொழி என்கின்றன (World History Encyclopedia). ஆனால், தொல்காப்பியம் முதற்றான தமிழ் இலக்கண நூல்கள், மொழிப் பிறப்புக்கு மனித உடல் முயற்சிகளைத் தவிர, கடவுளைத் தொடர்புபடுத்துவதில்லை. (காண்க: தொல். எழுத்து. பிறப்பியல்: 1)
இலக்கணத் தொல்வேலி
இருமொழிகளுக்கிடையே நீண்ட காலத் தொடர்பிருந்தபோதும் தன் மொழி, மாந்தர்க்கு வரையறுக்கப்பட்ட வாழ்வொழுங்குக் கோட்பாடுகள் முதலியவற்றில் தமிழ் தன் மரபணுக்களை மாற்றமில்லாமலே வரம்பு கட்டிக் காத்து வந்துள்ளது. “மொழிக் கட்டமைப்பைத் தமிழ் வேலியிட்டுக் காத்தது என்பது மிகைக் கூற்று” என்கிறார் மாலன். தமிழின் ஆகப்பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம், பிற மொழிச் சொற்களைத் தமிழ் எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான எல்லையை மிகத் தெளிவாகத் தீர்க்கமாக வகுத்துள்ளதிலிருந்து அவரது கருத்து ஏற்க உரியதில்லை என்பது தெளிவாகும்.
"வடசொல் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே."
தொல்காப்பியம், எச்சவியல், நூற்பா 5
தொல்காப்பியர் பிற மொழிச் சொற்களை நிராகரிக்கவில்லை; மாறாக, அவற்றைத் தமிழின் ஒலியியல் முறைமைக்குள் கொண்டுவந்து "தமிழ்மயமாக்க" வேண்டும் என்ற விதியை வகுத்தார். இவ்வகையில், பிற மொழிகளின் தாக்கங்களை உள்வாங்கி, செரித்து, தன்வயப்படுத்தி, அதே வேளையில் தனது தனித்துவமான ஒலியியல், உருபனியல் மற்றும் திணைக் கோட்பாட்டு அடித்தளத்தை அணுவளவும் அசையாமல் பாதுகாத்துக் கொண்டு- "வழக்கொழிந்து சிதையா”, வளைந்து இடங்கொடா - மரபுக்கோட்டை”யாகத் தமிழ் தொடர்ந்து பயணித்து வந்துள்ளது.
அகம் - புறம் பகுப்பு, ஐந்திணைக் கோட்பாடு
உலகிலேயே தமிழிற்கு மட்டுமே உரிய தனித்துவமான வாழ்வொழுங்கு இலக்கணக் கோட்பாடான அகம் - புறம் பகுப்பு, தொல்காப்பியம் வகுத்த ஐந்திணைக் கோட்பாட்டுடன் பிணைந்துள்ளது. சமஸ்கிருத இலக்கண மரபான 'வியாகரணத்தில்' (Vyakarana) இத்தகைய பகுப்பும் கோட்பாடும் அறவேயில்லை.
காதலைத் தனி மனிதப் பெயர்களைக் குறிப்பிடாமல் பாட வேண்டும் என்கிறது தொல்காப்பிய நெறி.
"மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
சுட்டி ஒருவர்பெயர் கொளப்பெறா அஃது"
- தொல் - அகத்திணையியல், பாடல் 54 / 57:
என்ற இலக்கணத்திற்கேற்ப, இயற்கையோடு இணைத்துத் திணைகளாகப் பாடும் அகப்பொருள் மரபு தமிழில் மட்டுமே. சமஸ்கிருத இதிகாசங்கள் ராமன் - சீதை, நளன் - தமயந்தி எனத் தனிமனிதப் பெயர்களை மையமாகக் கொண்டு இயங்க, தமிழ் இலக்கியமோ பெயரற்ற பொது மானுடக் காதலைப் பாடியது. இவற்றைச் சுட்டுவது அம்மொழி இலக்கியங்களைக் குறைமதிப்பீடு செய்வதாகாது; இருக்கின்ற வேறுபாடுகளை எடுத்து முன்வைப்பதே.
வாழ்வியல் விழுமியங்களின் வேறுபாடு: அறம் - தர்மம்
தமிழ் இலக்கியங்கள் காட்டும் 'அறம்' என்ற சொல்லும், சமஸ்கிருத இலக்கியங்கள் காட்டும் 'தர்மம்' என்ற சொல்லும் அடிப்படையில் வேறானவை. வடமொழி இதிகாசங்கள் மற்றும் மனுஸ்மிருதி ஆகியவை வலியுறுத்தும் ‘தர்மம்’ என்பது பிறப்பின் அடிப்படையிலான 'வருணாசிரம தர்மம்' (Varna Dharma) ஆகும். ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்குரிய கடமையைச் செய்ய வேண்டும் என்பதே அங்கு 'நீதி'. சங்க இலக்கியங்களும், அதன் தொடர்ச்சியான திருக்குறள் உள்ளிட்ட இலக்கியங்களும் காட்டும் தமிழரின் அறம் என்பது எவ்விதப் பாகுபாடுமற்ற 'உலகளாவிய மானுட அறம்' (Universal Virtue// Universal Humanism) ஆகும்.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
புறநானூறு, 192, அடி 1. - கணியன் பூங்குன்றனார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்" - குறள் 972
பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கும் வடமொழி கருத்தியலுக்கு முற்றிலும் மாறாக, பிறப்பால் அனைவரும் சமம் என்ற சமத்துவ நோக்கை சங்க மரபு கொண்டிருந்தது புலனாகும்.
சங்கப் பாடல்களில் வடமொழி இலக்கியச் செய்திகள்-
மாலன் சுருக்கமாகக் குறிப்பிட்டுக் காட்டியுள்ள சங்க இலக்கியங்களிலும் அதனைத் தொடர்ந்த காலத்து இலக்கியங்களான சிலப்பதிகாரத்திலும் காணப்படும் ராமாயண, மகாபாரதக் குறிப்புகள், சொற்கள் முன்னர் குறிப்பிட்ட 'பரவல்களின்' (Cultural Diffusion) வெளிப்பாடுகளே. தமிழில் வடமொழி இலக்கியச் செய்திகள் எதிரொலித்துள்ள எடுத்துக்காட்டுகள் போலத் தமிழ்த் தொன்மங்களும் தகவல்களும் வடமொழி இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளதற்கும் எடுத்துக்காட்டுகள் உண்டு.
சுருக்கமாக ஒன்றிரண்டு இதோ:
பாண்டிய மன்னர்களோடு தொடர்புடைய மதுரையின் தொன்மங்களும் மீனாட்சி - சொக்கநாதர் கதைகளும் ஹாலாஸ்ய மகாத்மியம் (Halasya Mahatmya) என்ற பெயரில் சமஸ்கிருதத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளன.
கௌடில்யர் அர்த்தசாஸ்திரத்தில், தென்னகத்தின் வணிகத்தைக் குறிப்பிடுவதில் 'பாண்டிய கவாடகம்' (பாண்டிய நாட்டுக் கபாடபுரத்து முத்து) மற்றும் மதுரையின் பருத்தி ஆடைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
வால்மீகி ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்ரீவன் வானரங்களை வழியனுப்பும்போது, பாண்டியர்களின் கபாடபுரம் மற்றும் பொதிய மலை பற்றிக் குறிப்பிடுகிறான். மகாபாரத சபா பர்வத்திலும் பாண்டிய, சோழ, சேர அரசர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
தமிழ் இலக்கணத்தோடும் மொழி வளர்ப்போடும் தொடர்புடைய தென்திசை முனிவரான அகத்தியர் தொன்மம், சமஸ்கிருத இதிகாச - புராணங்களிலும் முக்கியத் தொன்மமாக ஏற்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பின்நாள்களில் ‘அகத்தியர், சிவபெருமானால் தென்திசைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்’ என்ற புதுக்கருத்து உலவ வந்தது.
தமிழ் - சமஸ்கிருதம் ஆகியவற்றிடையே இணக்கமான (வரம்புகளுக்குட்பட்ட) சொல்லேற்புகள், செய்தி எதிரொலிப்புகள் இருந்தாலும் அடிப்படையில், தமிழ் இலக்கியங்களின் உலகப் பார்வை (World Vision) சமஸ்கிருத இலக்கியங்களின் உலகப் பார்வையுடன் முற்றிலும் வேறுபட்ட களமாகவே தொடர்வதால், மேலோட்டச் செய்திப் பரவல்கள் தமிழின் அசல் இலக்கியக் கோட்பாடுகளிலோ அல்லது வாழ்வியல் தத்துவங்களிலோ இம்மியசைவையும் ஏற்படுத்தவில்லை என்பது உண்மை.
வடமொழிப் புராணக் கதைகள், செய்திகள் தமிழகத்திற்குள் பரவிய பிறகும், அப்பரவல்கள் தமிழின் அகம் - புறம், திணை மரபுக் கட்டமைப்பைச் சிறிதும் சிதைக்க இயலவில்லை. தமிழர்கள் தங்கள் அக இலக்கியங்களில் தலைவன், தலைவிக்கு எந்த வடமொழிப் புராண மாந்தர்களின் பெயர்களையும் இட்டதில்லை என்பதே சான்று.
ஆங்காங்கே காணப்படும் இலக்கிய எதிரொலிப்புகள், ‘மேலோட்டப் பரவல்கள்’ வகையாகத்தான், இருமொழிகளிலுமே இலக்கியக் கோட்பாடுகளில், வாழ்வொழுங்குகளில் எம்மாற்றத்தையும் ஏற்படுத்தாமல்தான் நின்றுள்ளன என்பதே சார்பிலா நிலை.
போர் மறம்
தமிழர் போரிலும் அறம் (போர் மறம்) பேணியவர்கள். போர்த் தாக்குதல் கட்டவிழும் முன்பே ‘பசுக்கள், பார்ப்பனர்கள், பெண்கள், நோயாளிகள்’ ஆகியோரைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கும் (புறநானூறு, பாடல் 9) 'ஆநிரை கவர்தல்' (வெட்சித் திணை) போன்ற அறப்போர் முறைகள் தமிழருக்கே உரியவை. எதிராளி கண் இமைத்தாலோ, அவன் சிகை அவிழ்ந்தாலோ தமிழ்வீரர் ஆயுதம் ஏவார்.
எழுத்தாளர் சுட்டிக்காட்டியுள்ள புறநானூற்றுப் பாடல்களில் ராமாயணக் குறிப்புகள் இருந்தாலும், ராமாயணப் போர் முறைகள் (எதிரியை மறைந்திருந்து தாக்குதல், பெண்ணுடன் போர், மாயப்போர்), மகாபாரதத்து [மாயாஜாலங்கள் (சூரியனை அஸ்தமிக்கச் செய்தல்) ‘பெண்ணாண்’ (சிகண்டி),தேர்ச் சக்கரம் சேற்றில் சிக்கிய பின் கர்ணனைத் தாக்குதல் போன்ற) அறமிலாச் செயல்கள் எதனையும் தமிழ்ப் போர்மற மரபு எங்கும் உள்நுழைய விடவில்லை. புறநானூறு போற்றும் 'போர்மறம்' மகாபாரத, ராமாயண மரபுகள் அண்ட இயலாச் செம்மாந்த நிலையிலேயே தொடர்ந்திருக்கிறது.
III
மொழியியல், வரலாற்று ஆய்வாளர்களின் சான்றுகள்
கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியரான பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட் (Prof. George L. Hart) சமஸ்கிருத இலக்கிய மரபும் தமிழ் இலக்கிய மரபும் வெவ்வேறு மூலங்களைக் கொண்டவை என்று விரிவாக ஆராய்ந்துள்ளார் [ The Poems of Ancient Tamil: Their Milieu and Their Sanskrit Counterparts, University of California Press, 1975 (பக்.: 1-10 & 251-255)] மேலும், "சங்க இலக்கியங்களின் அழகியலும் (Aesthetics), கவிதை மரபும் சமஸ்கிருதக் காவ்ய (Kavya) மரபிலிருந்து முற்றிலும் சுயேச்சையானவை. தமிழின் கவிதை மரபு தென்னிந்தியாவின் பழங்குடி / பூர்வகுடி மக்களின் உலகப் பார்வையிலிருந்து உருவானதே தவிர, வட இந்திய மரபுகளின் தொடர்ச்சி அல்ல" என்கிறார்.
தனது வரலாற்றுச் சிறப்புமிக்க நூலில், கால்டுவெல் (Robert Caldwell), "தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து சொற்களைக் கடன் வாங்கியிருந்தாலும், அதன் இலக்கணக் கட்டமைப்போ, அடிப்படை வேர்ச்சொற்களோ சமஸ்கிருதத்தைச் சார்ந்தவை அல்ல. சமஸ்கிருதச் சொற்கள் அனைத்தையும் நீக்கிவிட்டாலும் தமிழால் தனித்து இயங்க முடியும். [A Comparative Grammar of the Dravidian or South-Indian Family of Languages, Harrison&Sons,London,1875, பக். 45-52)] என உறுதி கூறியுள்ளார்.
தமிழக வரலாற்றாசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி வடமொழித் தாக்கத்தை ஏற்பவர் என்ற பொதுப் பார்வை இருந்தாலும், அவரே தமிழின் தனித்துவமான உள்வாங்கும் தன்மையை ஒப்புக்கொண்டுள்ளார். "ஆரியப் பண்பாட்டின் கூறுகள் தமிழகத்திற்குள் நுழைந்தபோது, தமிழர்கள் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, தங்கள் சொந்த கலாச்சார வார்ப்பில் (Tamil Mold) இட்டு, அவற்றைத் தமிழ்ப்படுத்திக் கொண்டனர்." [ K.A. Nilakanta Sastri, A History of South India: From Prehistoric Times to the Fall of Vijayanagar, Oxford University Press, 1955 (பக்: 66-70)]
செக் நாட்டு புகழ்பெற்ற திராவிட மொழியியல் அறிஞர் பிரில், தமிழின் இலக்கிய உருவாக்கத்தை வடமொழியோடு ஒப்பிட முடியாத தனித்துவமுடையது என்று விளக்குகிறார். "சங்க இலக்கியத்தின் தனித்துவமான பாடுபொருள் மற்றும் திணைக் கோட்பாடு என்பது மனித வரலாற்றிலேயே மிக விந்தையான, சுயேச்சையான இலக்கிய வளர்ச்சி ஆகும். இதற்கு இணையாக சமஸ்கிருதத்திலோ அல்லது பிற இந்தோ - ஐரோப்பிய மொழிகளிலோ எந்தவொரு கவிதை வடிவமும் இல்லை." [ E.J. Brill, Nature of South India, Leiden, 1973 (பக்: 12-20).]
இவற்றைக் கூறுவதில், பிறமொழிக் காழ்ப்பு ஏதுமில்லை. அறிஞர்களது கருத்துகளே அணிவகுப்பிலுள்ளன.
IV
ஒப்பிலக்கிய அறிஞர்களின் சான்றுகள்
ஒப்பியல் இலக்கியக் கோட்பாட்டு அறிஞர் உல்ரிச் வெய்ஸ்டைன் தனது நூலில் (Ulrich Weisstein - Comparative Literature and Literary Theory), "இரு வேறு மொழிகளின் இலக்கியங்களில் ஒரே மாதிரியான தொன்மங்களோ (Myths) அல்லது கதைகளோ காணப்படுவதால் மட்டுமே அவை ஒரே இலக்கிய மரபைச் சேர்ந்தவை என்று கூறிவிட முடியாது. அவை வெறும் 'கருப்பொருள் பரவல்கள்' (Thematic Diffusion) மட்டுமே. ஒரு மொழியின் அசல் தன்மையை அதன் வடிவமும் (Form), அது கட்டியெழுப்பும் வாழ்வியல் தத்துவமுமே (Philosophy) தீர்மானிக்கின்றன" என்கிறார்.
ஒப்பிலக்கிய விமர்சக அறிஞர்கள் ரெனே வெல்லக் & ஆஸ்டின் வாரன் (René Wellek & Austin Warren - Concepts of Criticism) ஆகியோர், இலக்கியத் தாக்கங்களை ஆராயும்போது, "ஒரு படைப்பாளி பிற பண்பாட்டுக் கதைகளைக் குறிப்பிடுவதை 'நேரடித் தாக்கம்' (Influence) என்று அவசரப்பட்டு முடிவு செய்யக் கூடாது. அது வெறும் 'பயன்பாடு' (Adoption) மட்டுமே. அந்தப் பயன்பாடு, தாய்மொழியின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றாதவரை, இரு இலக்கியங்களுக்கும் இடையே அடிநாத ஒற்றுமை இருப்பதாகக் கூறவே முடியாது" என எச்சரிக்கிறார்கள்.
மற்றொரு ஒப்பிலக்கிய வல்லுநர் ஏ. எம். போஸ்நெட் (A. M. Posnett - Comparative Literature, 1886) இலக்கியங்களின் சமூகப் பரிணாமத்தை விளக்கும் இவர், தனிமனிதப் படைப்பாற்றல் (Individual Genius) சமூகக் கதைகளை எவ்வாறு உள்வாங்கித் தன்வயப்படுத்துகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறார். ஒரு கவிஞன் உலகச் செய்திகளைத் தன் கவிதையில் பயன்படுத்துவது அவனது தனிப்பட்ட கற்பனைத் திறனே தவிர, ஒட்டுமொத்த மொழியின் அடிநாத ஒருமைப்பாடு அல்ல என்கிறார்.
ஒப்பிலக்கிய அறிஞர் கிளாடியோ கிலென் (Claudio Guillén) தனது நூலில் ('The Challenge of Comparative Literature)' "ஓர் இலக்கிய மரபு பிற பண்பாட்டுத் தொன்மங்களைத் தன்வயப்படுத்தி, அவற்றை வெறும் உவமைகளாகத் தன் அசல் வடிவத்திற்குள் அடக்கும்போது (Structural Subordination), அங்கு தாக்கம் நிகழவில்லை; மாறாக அசல் மரபு தன் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துகிறது" என்பார்.
நிறைவுக்கு முன்
ஒப்பிலக்கிய ஆய்வில் இருவேறு மொழிகளில் காணப்படும் ஒரே மாதிரியான கருத்து வெளிப்பாடுகளை இரண்டு தலைப்புகளில் அறிஞர்கள் பிரிப்பர்:
நேரடித் தாக்கம் (Direct Influence / Borrowing): ஒரு மொழி இலக்கியத்தை உள்வாங்கி, அதன் அடிநாதத்தைப் பின்பற்றி மற்றொரு மொழியில் எழுதுவது.
சமூக - மனிதப் பொதுமை (Parallelism / Typological Affinities): வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு நிலப்பரப்புகளில் வாழும் படைப்பாளிகள், மனிதப் பொதுப் பண்பின் காரணமாக ஒரே மாதிரியான சிந்தனைகளைத் தற்செயலாகவோ அல்லது உலகளாவிய மானுடப் பொதுமையின் காரணமாகவோ வெளிப்படுத்துவது.
எ.கா.: கலித்தொகை - ஷேக்ஸ்பியரின் 'லுக்ரீஸ்' (Lucrece) ஒப்பீடு
கலித்தொகை (நெய்தற்கலி, பாடல் 120, அடி 11): “வெள்ள மான்நிறம் நோக்கிக் கணைதொடுக்கு கொடியான்போல”
ஷேக்ஸ்பியரின் 'The Rape of Lucrece' (வரிகள் 580-581): “He is no woodman that doth bend his bow / To strike a poor doe”
தலைவன் பிரிவால் நெய்தல் நிலத் தலைவி படும் துயர்க்கொடுமை கூற, எளிய மான் மீது வேடன் அம்பு தொடுக்கும் கொடூரத்தை உவமையாக்குகிறார் நல்லந்துவனார். “எளிய பெண் மான் மீது அம்பு எய்பவன் வேடனே அல்லன்” என்று கடுமையாக இகழ்கிறார் இங்கிலாந்து ஷேக்ஸ்பியர்,
மற்றொரு எடுத்துக்காட்டாக, ஷேக்ஸ்பியரின் மிராண்டா “O, I have suffered / With those that I saw suffer!” ('The Tempest' Act 1, Scene 2) என கடலில் புயலில் சிக்குண்ட, யாரென்றறியாத மனிதர்களின் துயரைக் கண்டு கசிந்து இரங்குவது வள்ளலாரின் “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” (திருவருட்பா) எனும் உயிருருகும் கருணைக் குரலாக நம் உளமுருக்குவதைத் ‘தாக்கம்’, ‘இரு மொழி இலக்கியங்களிடையே ஒருமைப்பாடு’ எனக் குதித்துக் கொண்டாடிவிட முடியாதே!
சங்க காலத் தமிழ்ப் புலவர் நல்லந்துவனாருக்கும், அண்மைக் கால வள்ளலாருக்கும், 16-ஆம் நூற்றாண்டு ஆங்கிலேய ஷேக்ஸ்பியருக்கும் இடையே எந்த நேரடித் தொடர்போ, மொழித் தாக்கமோ இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், எளிய உயிர்கள் துன்புறுத்தப்படும்போது இயல்பாகக் கசியும் 'இரக்க உணர்ச்சி' இவர்களுக்குப் பொதுவானதாக இருந்திருக்கிறதே! இது தாக்கம் அல்ல, உலக மானுடப் பொதுமைச் சிந்தனைக்கான சான்றுகள் இவை. மேலும், மொழிகளுக்கு அப்பாற்பட்ட 'மனிதப் பொதுமைச் சிந்தனைக்கு' (Universal Humanism) இவை மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள் எனலாம்.
இலக்கியம் தனிமனிதப் படைப்பாற்றல் விளைவு (Product of a Single Genius).
இலக்கியம் சமுதாயத்தை, வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மைதான். அதே சமயத்தில், “இலக்கியம்… ஒட்டுமொத்தமானது எனக் கருதுவதுகூடப் பிழையாகலாம்..... அது தனிப்பட்ட முயற்சியைத் தவிர, வேறு எந்த முயற்சியின் விளைவாகும் என்று கருதுவதும் ஒரு துணைப் பிழை. இலக்கியத்தின் உன்னதமான சாதனைகள் ஒற்றை மேதைமையால் ஏற்படுகின்றன’’ என்ற (George Henry Lewes, The Principles of Success in Literature, 1865) கருத்தும் கவனங்கொள்ள உரியது (இதே அல்லது இதற்கிணையான கருத்துகள் கார்டினல் நியூமேன், தாமஸ் கார்லைல், கதே போன்ற ஆங்கிலக் கவிஞர்களும், இலக்கிய விமர்சன அறிஞர்களும் வழங்கியுள்ளனர்.)
இதன்படி, ஒரு படைப்பாளி (கபிலரோ, பரணரோ அல்லது இளங்கோவடிகளோ, பிறரோ) தனது பயணங்கள் மூலமாகவோ, ஏற்பட்டுள்ள வணிகத் தொடர்புகள், மனித உறவுகள் மூலமாகவோ, பிறமொழியறிவு மூலமோ வடமொழிப் புராணக் கதைகளைக் கேட்டிருக்கலாம். அவ்வாறு தான் அறிந்த ஒரு செய்தியையோ, உவமையையோ தனது படைப்பில் ஆங்காங்கே கையாளுவது என்பது அந்தப் படைப்பாளியின் தனிப்பட்ட அறிவுத் தேடலின் (Individual Knowledge) விளைபயன் வெளிப்பாடே தவிர, அது இரு மொழி இலக்கியங்களின் 'அடிநாத ஒற்றுமை' என நிறுவ உதவாது.
நிறைவாக
மொழியியல், ஒப்பிலக்கிய அறிஞர்களின் கூற்றுப்படி, கலித்தொகையும் ஷேக்ஸ்பியரும் எவ்வாறு உலகப் பொதுமையால் இணைகிறார்களோ, அப்படித்தான் சங்க இலக்கியங்களில் உள்ள வடமொழி இதிகாசக் குறிப்புகளும் மேலோட்டமான பண்பாட்டுப் பரவல்களாக இணைந்துள்ளன. வடிவத்திலும், தத்துவத்திலும், வாழ்வொழுங்கு வரையறைகளிலும் தமிழ் இலக்கியம் சமஸ்கிருதத்திலிருந்து முற்றிலும் சுயேச்சையானது. ஆங்காங்கே காணப்படும் புராணக் குறிப்புகளை வைத்துக் கொண்டு "இரு மொழி இலக்கிய ஒற்றுமை" என நிறுவ ஒப்பிலக்கியக் கோட்பாடுகள் இடம் வழங்காமலே உள்ளன.
சங்க இலக்கியங்கள் சிலவற்றில் உள்ள வடமொழிப் புராணக் குறிப்புகள் சங்கப் புலவர்கள் என்ற 'தனிப்பெரு மேதைகள்' (Single Geniuses) அறிந்துகொண்ட வெளியுலகச் செய்திகளைத் தங்களின் கவிதைகளில் உவமைகளாகப் பயன்படுத்தியிருப்பது 'மேலோட்டமான வெளிப்பாடுகள்' மட்டுமே. அதே செய்திகள், உவமைகள் தொடர்ந்து பிற தமிழ்ப் புலவர்களால் எதிரொலிக்கப்படாததே ‘இந்திய செம்மொழி இலக்கியங்களில் அடிநாத ஒருமைப்பாடு ஏதுமில்லை’ என்ற வாதத்திற்கு கூடுதல் உறுதுணை.
முத்தாய்ப்பாக, மாலன், “மொழி என்பது கலாசாரத்தின் வெளிப்பாட்டுக் கருவி. கலாசார ஒருமை இருக்கும்போது அதன் விழுமியங்களில் ஒருமை இருக்கும்போது அவற்றின் அடிநாதங்களிலும் (basic values) ஒருமை இருக்கும்’’ என்று கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள உரியதே. அதனடிப்படையில் பார்க்கும்போதும், திராவிட- ஆரிய பண்பாட்டு, கலாசார வேறுபாடுகள் ஆராய்ச்சிகளால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இரு பண்பாடுகளின் விழுமியங்களில் வேறுபாடுகள் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கும் நிதர்சனத்தில், இவ்விரு மொழிகளின் இலக்கியங்களிடையே அடிநாத ஒருமைப்பாடு நிலவிட வாய்ப்புகள் அரிதென்பதே மேலும் தெளிவாகிறது.
இலக்கியங்கள் உள்பட எல்லாவற்றிலும் வலிந்து ஒற்றுமை காண முயற்சிப்பதிலும், உண்மையாகவே இருக்கும் வேற்றுமைகளை அறிந்துகொண்டு கொண்டாடுவதே பிணக்கிலா நிலை வளர்க்கும்.
[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]
Summary
Tamil and Sanskrit Literatures: Do Superficial Similarities Signify an Underlying Unity
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







