ஒன்றுபட வேண்டிய தருணம்!

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கடந்த ஜனவரி மாதம், இந்திய ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டு ஒருவருடைய தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்போது இத்தகைய தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ராணுவம் அல்ல என்று பாகிஸ்தான் அரசு கூறியது.
Updated on
2 min read

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கடந்த ஜனவரி மாதம், இந்திய ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டு ஒருவருடைய தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்போது இத்தகைய தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ராணுவம் அல்ல என்று பாகிஸ்தான் அரசு கூறியது.

இப்போது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இப்போது இந்திய அரசே, எல்லை மீறி வந்து தாக்கியவர்கள் பாகிஸ்தான் ராணுவ உடை அணிந்த தீவிரவாதிகள் என்கிறது. இந்த அறிக்கை, ராணுவத்தின் முதல் அறிக்கையிலிருந்து மாறுபட்டிருப்பதால் நாடாளுமன்றத்தில் பெரும் அமளி நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்கினர் என்று இந்திய ராணுவம் கொடுத்த முதல் அறிக்கை, இந்திய அரசின் பலவந்தத்தால் மாற்றப்பட்டுள்ளது என்பதுதான் பாரதீய ஜனதா கொண்டுவந்துள்ள உரிமை மீறல் பிரச்னையின் அடிப்படை. இருப்பினும் இந்த விவகாரம் தேவையில்லாமல் அரசியலாக்கப்படுகிறதே என்பதுதான் கவலை அளிக்கிறது.

பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதா அல்லது பாகிஸ்தான் உடையில் வந்து பயங்கரவாதிகள் தாக்கினரா என்பதை மத்திய பாதுகாப்பு அமைச்சராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. இந்திய ராணுவத்தாலும் உறுதிப்படுத்த முடியுமா என்பது சந்தேகமே. இரவு 2 மணியளவில் நடந்த இந்த தாக்குதலின்போது, அங்கே ரோந்துப் பணியில் இருந்தவர்கள் மட்டுமே சொல்லமுடியும். அவர்கள் தரும் தகவலின் அடிப்படையில்தான் அறிக்கை அளிக்கப்படுகிறது.

இதுவரை நடந்துள்ள ஊடுருவல் முயற்சிகளில் எத்தகைய அணுகுமுறை இருந்தது என்பதை வைத்தே, வருபவர்கள் உண்மையில் பாகிஸ்தான் ராணுவத்தினரா அல்லது ராணுவ உடையில் வரும் தீவிரவாதிகளா என்பதை இந்திய ராணுவம் கணிக்கின்றது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் அமளியைக் கட்டுப்படுத்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அப்படியொரு அறிக்கையை அவையில் அளித்தது தவறுதான். என்றாலும், அப்படி நடந்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு.

ஒரு தீவிரவாத கும்பல் பாகிஸ்தான் ராணுவ உடை அணிந்து பாகிஸ்தான் எல்லையில் உலவுகிறது என்பதைவிட அவமானம், பழி பாகிஸ்தானுக்கு வேறு ஏதும் இல்லை. பாகிஸ்தான் வீரர்கள்தான் வெறுப்புணர்வுடன் தாக்கினார்கள் என்பதைக் காட்டிலும் "தீவிரவாதிகள் தாக்கினார்கள், எங்களுக்கு எதுவும் தெரியாது' என பாகிஸ்தான் ஒப்புக்கொள்வதைப் போன்ற கேவலம் வேறு ஏதும் இருக்க முடியாது. பாகிஸ்தானேகூட இதற்காக வெட்கப்படும். வெட்கப்பட வேண்டும்.

ஆகவே நாம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரைக் கண்டிப்பதோ அல்லது அரசுக்குப் பயந்து அறிக்கையை அமைச்சர் மாற்றிச்சொன்னதாக கூறுவதன் மூலம் ராணுவத்தை கேள்விக்குரியதாக்குவதோ தேவையற்றது.

இந்த சம்பவத்தைக் கண்டித்துப் பேசிய அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்திய அரசு அண்டை நாடுகள் உறவில் சரியாகச் செயல்படவில்லை என்று குறை கூறியுள்ளன. கடுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள். ஒரு பலம்வாய்ந்த நாடாக இந்தியா தன்னை நிலைநிறுத்த வேண்டும் என்கிறார்கள். சென்ற ஆண்டைவிட அதிக எண்ணிக்கையில் ஊடுருவலும், சண்டைநிறுத்த ஒப்பந்த மீறலும், இந்திய ராணுவத்தினர் மீதான கொலையும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று எதிர்க்கட்சியினர் மாநிலங்களவையில் கடும் கேள்விக்கணைகளைத் தொடுக்கின்றனர். எதிர்க்கட்சிகளின் ஆத்திரத்தில் அர்த்தம் இருக்கிறது என்றாலும், இந்தியாவில் எந்த ஆட்சி நடந்தாலும் பாகிஸ்தான் எல்லையில் இந்திய வீரர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும், அத்துமீறல் இருக்கவே செய்யும் என்பதுதான் மெய்யான நிலைமை.

நிகழாண்டில் 57 முறை சண்டை நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது. அதேவேளையில் 17 ஊடுருவல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாத தொடக்கம் வரையிலான காலக்கட்டத்தில் 19 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் பிடித்துள்ளது. அதற்காக பாகிஸ்தான் - இந்திய எல்லை முழுவதிலும் ராணுவத்தை நிறுத்த முடியாது. ராணுவத்தை மீறி ஊடுருவும் தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயல்பாக திரிந்துகொண்டிருக்கிறார்கள். அங்குள்ள மாநில அரசு இவர்களைக் கட்டுப்படுத்த தவறியதால்தான் இந்த ஊடுருவல் இன்னமும் தொடர்கிறது.

இதேபோன்று, கடந்த சில மாதங்களாக சீன ராணுவமும் நமது எல்லைக்குள் நுழைந்து முகாம் போடுவதும், நமது கண்காணிப்பு காமிராக்களை அகற்றுவதுமாக விளையாடிச் செல்கிறது. வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் சீனா சென்று பேசி வந்த பிறகும் இந்த அத்துமீறல் விளையாட்டுகள் நின்றபாடில்லை. சீன அதிபர் இந்தியா வந்து சென்ற பிறகும் முடிந்தபாடில்லை.

அதென்னவோ தெரியவில்லை, நாடாளுமன்றம் கூடும்போதெல்லாம் இந்த ஊடுருவல் பிரச்னையும் கூடவே வந்து விடுகிறது. தீவிரவாதிகளுக்குக்கூட இதுதான் தக்க தருணம் என்று தெரியும் போலிருக்கிறது. உள்நாட்டு விவகாரங்களில் கடும் கருத்துமோதல்களும் குறைபாடுகளும் இருந்தாலும் நாடாளுமன்றத்தை முடக்கும் அவலத்தை நாம் அரங்கேற்றலாகாது. நாடாளுமன்றம் எப்படி நடக்கின்றது என்பது நாட்டின் பிரதிபலிப்பு. நாடாளுமன்றம் விவாதித்தால் நாடும் விவாதிக்கும். நாடாளுமன்றம் ஒன்றுபட்டு எதிர்த்தால் நாடும் எதிர்த்து நிற்கும்.

வெளிவிவகாரப் பிரச்னைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டும்தான் இந்தியாவின் கௌரவம் காப்பாற்றப்படும் என்பதை ஆளும் கட்சி உணர வேண்டும். எதிர்க்கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரே குரலில் நாம் பேசத் தொடங்கினாலே, தீவிரவாதமும், ஊடுருவல்களும் கணிசமாகக் குறைந்துவிடும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com