இன்னுமா இப்படி?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு குடியரசுத் தலைவர், தனது சுதந்திர தின உரையில் பெருவாரியான மக்களின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுவதுபோலச் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
Updated on
2 min read

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு குடியரசுத் தலைவர், தனது சுதந்திர தின உரையில் பெருவாரியான மக்களின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டுவதுபோலச் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். அவர் சுட்டிக்காட்டி இருக்கும் கருத்துகள் இரண்டு. முதலாவது, நிர்வாகத்தின் மீதும், அரசு அமைப்புகளின் மீதும் பரவலாக வெறுப்பும் ஏமாற்றமும் ஏற்பட்டிருக்கிறது என்பது. இரண்டாவது, ஊழலும் முறைகேடுகளும் சுதந்திர இந்தியாவை எதிர்நோக்கும் மிகப் பெரிய சவால்கள் என்பது. பல லட்சம் கோடிகள் செலவழித்தும்கூட, அது பெரிய அளவில் சராசரி இந்தியக் குடிமகனின் வாழ்க்கையை வளப்படுத்தியதாகத் தெரியவில்லையே என்கிற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஆதங்கமும்கூட, நம் எல்லோரையுமே கவலையில் ஆழ்த்தியிருக்கும் பிரச்னைதான்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, கடந்த ஒன்பது ஆண்டுகளில் நிறைவேற்றி இருக்கும் கிராமப்புற வேலைவாய்ப்பு, தகவல்பெறும் உரிமை, கல்வி கற்கும் உரிமை, உணவுப் பாதுகாப்பு போன்ற சட்டங்கள் சுதந்திர இந்திய சரித்திரத்தில் மிகப்பெரிய சாதனைகள் என்றாலும், இவற்றின் பயன் சராசரி இந்தியக் குடிமகனை, குறிப்பாக, அடித்தட்டு மக்களை முறையாகச் சென்றடைந்திருக்கிறதா, அதனால் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் முழுமையானவைதானா என்று கேட்டால் பாராட்டும்படியாக இல்லை என்பதுதானே நிஜம்.

1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டி தாக்கல் செய்தது வெறும் 500 கோடி ரூபாய்க்கான நிதிநிலை அறிக்கை. இன்று, இந்திய அரசின் மொத்த நிதி ஆதாரம் 1 ட்ரில்லியன் டாலர்கள். அதாவது, 61 லட்சம் கோடி ரூபாய். அப்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜி.டி.பி) ஒரு லட்சம் கோடி. இப்போது, நூறு லட்சம் கோடி. பொருளாதார வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டால், இன்று இந்தியா உலகிலேயே அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் இரண்டாவது பொருளாதார நாடு.

சுதந்திரம் அடைந்தபோது, நமது மக்கள்தொகை மிகவும் குறைவு. அப்படி இருந்தும் பாதிப் பேருக்குக்கூட உணவு வழங்கும் நிலையில் இல்லாத உற்பத்தி நிலைமை. இன்று, நமது தானியக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. நாம் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம். பல்லாயிரம் டன் தானியங்கள் மழையில் நனைந்து வீணாகிக் கொண்டிருக்கும் அளவுக்கு உணவு உற்பத்தி அதிகரித்திருக்கிறது.

பயணியர் விமானங்களைத் தவிர, வேறு என்னவெல்லாம் உண்டோ அவை அனைத்தும் இன்று இந்தியாவில் தயாராகின்றன. விண்கலன்களிலிருந்து போர்க் கப்பல்கள் வரை நாம் தயாரிக்காத தளவாடங்களே இல்லை என்கிற நிலைமை.

இதெல்லாம் உண்மைதான். ஆனால், இதன் பயன் சராசரி, அடித்தட்டு இந்தியனைப் போய்ச் சேர்ந்திருக்கிறதா என்கிற கேள்வி வரும்போது, உதட்டைப் பிதுக்காமல் வேறென்ன செய்வது? தானியக் கிடங்குகள் நிறைந்து வழிந்தென்ன, வீணாகிச் சீரழிந்தென்ன, ஏற்றுமதி செய்யப்பட்டால்தான் என்ன? இன்னும் தெருவோரங்களில் தரித்திர நாராயணர்களாக இந்நாட்டு மன்னர்கள் ஒரு கவளம் சோறில்லாமல் படுத்துக் கொண்டிருக்கிறார்களே!

இன்னும் கழிப்பறை இல்லாத பள்ளிக்கூடங்கள்... கல்வி கற்றும்கூட சரியாக எழுதப் படிக்கத் தெரியாத குழந்தைகள்... மதிய உணவு வழங்கப்பட்டும்கூட, ஊட்டச் சத்தில்லாத அடுத்த தலைமுறை, லட்சம் கோடிகள் செலவழித்தும்கூட பல்லாயிரக்கணக்கான கர்ப்பிணிகளின் பிரசவ மரணம் - இப்படி அவலங்களை அடுக்கிக்கொண்டே போகலாமே, இந்த நிலைமை ஏன்?

சராசரி இந்தியன், இந்தியா தனது 67-வது சுதந்திர தினத்தைக் கடந்துவிட்ட நிலையில், எதை நினைத்துப் பெருமைப்படுவது? விலைவாசி உயர்வையா, கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத முறைகேடுகளையா, கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம்வரை புரையோடிப் போயிருக்கும் ஊழலையா, பரவலாகக் காணப்படும் வேலைவாய்ப்பின்மையையா? 67 ஆண்டுகளாகியும் இதற்கெல்லாம் தீர்வு காணப்படவில்லை என்பதுகூடத் தவறில்லை. தீர்வு காண வேண்டும் என்கிற சிந்தனையே இல்லாத நிர்வாகமும் ஆட்சியாளர்களும் தொடர்கிறார்களே என்பதுதான் வேதனைக்குரிய ஒன்று.

சிறு வியாபாரிகளிலிருந்து பெரும் வியாபாரிகள், தொழிலதிபர்கள் வரை, பயத்துடன்தான் தொழில் நடத்துகிறார்கள். காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், வணிகவரித் துறை, வருமானவரித் துறை போன்றவற்றின் அரசு அதிகாரிகள், ஆளும் கட்சியினர் என்று யாராவது ஒருவருக்கு பயப்படாமல், அவர்களுக்குக் கப்பம் கட்டாமல், நேர்மையாக வியாபாரம் செய்ய முடியாத சூழல்தான் இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் நிழல்.

பெண்கள் தைரியமாக நடமாட முடியவில்லை என்பதை சமீபகாலத்திய சம்பவங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஆண்டுதோறும், 60,000-க்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போகிறார்கள் என்பது தெரியுமா? நேர்மையாக,எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் அதிகாரிகள் செயல்பட முடியும் என்று மனசாட்சியைத் தொட்டு யாராவது அதிகாரி சொல்லட்டுமே, பார்க்கலாம்.

இதுவரையில் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்ந்திருக்கிறது. நிமிடத்துக்கு நிமிடம் உணவுப் பொருள்களின் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. உற்பத்தியும், ஏற்றுமதியும் இறங்கு முகத்தில். நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படுகிறது. நிதிப் பற்றாக்குறை வரலாறு காணாத அளவு அதிகம். பொருளாதார வளர்ச்சி தளர்ச்சியாகி விட்டிருக்கிறது. ரூபாயின் மதிப்பு காகித விலையாகிவிடாமல் இருந்தால் சரி.

பல பிரச்னைகளுடன்தான் 1947-இல் சுதந்திர இந்தியா தனது பயணத்தைத் தொடங்கியது என்பது உண்மை. ஆனால், 67 ஆண்டுகளாகியும் முறையான, ஊழலற்ற நிர்வாகத்தையும், மக்களுக்கு சமச்சீரான அடிப்படை வசதிகளையும்கூட நம்மால் தரமுடியவில்லையே, இது யார் குற்றம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com