வரவு எட்டணா; செலவு பத்தணா!

அன்றாடம் அமளியில் முடங்கிக் கொண்டிருந்த நாடாளுமன்றத்தில், உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், காரசாரமான விவாதங்களுக்குப் பிறகு ஆக. 26-ஆம் தேதி பின்னிரவில் அது நிறைவேறியது.
Updated on
2 min read

அன்றாடம் அமளியில் முடங்கிக் கொண்டிருந்த நாடாளுமன்றத்தில், உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், காரசாரமான விவாதங்களுக்குப் பிறகு ஆக. 26-ஆம் தேதி பின்னிரவில் அது நிறைவேறியது.

மசோதாவை ஆதரிக்க வேண்டுமானால் அதில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் வேறுசில மாநில முதல்வர்களும் வலியுறுத்தினர். எதிர்க்கட்சியினர் மாற்றுக் கருத்துகளையும் சில அச்சங்களையும் முன்வைத்தனர். இதில் முக்கியமானவை மூன்று: மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உணவுப்பொருள் அளவு குறைக்கப்படக் கூடாது; புதிய நடைமுறையால் மாநில அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படக்கூடாது; மாநில அரசுகளை கலந்து பேசி மசோதாவை நிறைவேற்ற வேண்டும் ஆகியவைதான்.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு மசோதாவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் 10 திருத்தங்களில், இவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

நகர்ப்புறத்தில் 50%, ஊரகப் பகுதியில் 75% பேரைச் சென்றடையும் இத்திட்டத்தில், முன்னுரிமைப் பயனாளிகள், பொதுப் பயனாளிகள் என இரண்டு பிரிவுகள் இருந்ததை நீக்கிவிட்டு, ஒரே பிரிவாக அனைவருக்கும் தலா 5 கிலோ உணவு தானியம் கிடைக்க உறுதி செய்யும் திருத்தம் வரவேற்புக்குரியது.

மேலும், மாநில அரசுக்கு அளிக்கப்பட்டு வரும் உணவுப்பொருள் அளவு குறைக்கப்படாது என்று திருத்தம் செய்திருக்கிறார்கள். இருப்பினும், இந்த அளவு , 2009-10 முதல் 2011-12 வரையிலான மூன்று ஆண்டுகளில் மாநில அரசுகள் பெற்ற உணவு தானியத்தின் சராசரி அளவு தொடர்ந்து அளிக்கப்படும் என்று சட்டத் திருத்தத்தில் கொஞ்சம் திருகலான வரிகள் உள்ளன. அதாவது, 2012-13-ஆம் ஆண்டிலும் அதன் பிறகு இச்சட்டத்தை அமல்படுத்தும் ஆண்டுகளிலும் உணவு தானியத்தின் தேவை அதிகரிப்பின், அந்தச் செலவை ஏற்பது மாநில அரசின் பொறுப்பு.

இந்த உணவுப் பொருள்களைப் பெறுவதற்குத் தகுதியுடைய குடும்பங்களைத் தீர்மானிக்கும் உரிமை மாநில அரசுக்கே தரப்படுகிறது என்றும் சட்டத் திருத்தம் செய்துவிட்டு, மத்திய அரசு உணவுப் பொருள் வழங்கும் அளவை மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி அளவாக வைப்பதால் மாநில அரசுகளுக்கு புதியதொரு நெருக்கடி ஏற்படும். இச்சலுகையைப் பெற தகுதியுடைய குடும்பங்களின் எண்ணிக்கையை, மத்திய அரசு கொடுக்கும் உணவுப் பொருளுக்கு ஏற்ப கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு மாநில அரசுகள் தள்ளப்படுகின்றன.

இந்த உத்தேச சட்டத்தின் கீழ் அரிசி/கோதுமை/தானியம் ஆகியவற்றின் விலை முறையே ரூ.3/ரூ.2/ரூ.1 என்பது மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதன்பிறகு, அரிசி, கோதுமை, தானியங்களுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையைப் பொருத்து, புதிய விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தை (ஐசிடிஎஸ்) பொருத்தவரை "உணவு' என்பதற்கு, சமைத்த, சூடான அல்லது சூடேற்றப்பட்ட உணவு என்றே பொருள்; கட்டிவைக்கப்பட்ட உணவுப்பொருள் (பேக்கேஜ்டு புட்) உணவாகக் கருதப்படாது என்று தெளிவுபடுத்தியுள்ளனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு, உணவுக்குப் பதிலாக பேக்கரி ரொட்டிகளைத் தருவார்கள் என்ற கருத்து பரவலாக இருந்ததால், இந்தத் திருத்தம் தேவையாகிறது.

சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடைமுறைகள் அந்தந்த மாநில அரசுடன் கலந்து பேசி தீர்மானிக்கப்படும் என்ற திருத்தம் அனைத்து மாநிலங்களுக்கும் உடன்பாடான ஒன்று. உணவுப்பொருள்களைக் கொண்டு சேர்த்தல், விநியோகம் ஆகியவற்றில் போக்குவரத்து மற்றும் கையாளுகைச் செலவு அதிகரிக்கும் என்று மாநில அரசுகள் தெரிவித்த கருத்துகளை ஏற்று, இச்செலவுகளை மத்திய அரசே ஏற்கும் என்ற திருத்தமும் மாநில அரசுகளுக்கு உடன்பாடானதுதான்.

மாவட்ட குறைதீர் அலுவலர், மாநில உணவுக் கமிஷன் ஆகியன இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட வேண்டும் என்று உத்தேச சட்டம் கூறினாலும், மாநில அரசு தனது செலவைக் குறைக்கும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள அலுவலர்களையே இப்பொறுப்புகளையும் ஏற்கச் செய்யலாம் என்று ஒரு திருத்தம் அனுமதி அளிக்கிறது. ஆகவே, தமிழ்நாட்டைப் பொருத்தவரையில், மாவட்ட வழங்கல் அலுவலர், மாநில உணவுத் துறைச் செயலர் ஆகியோரே இந்தப் பொறுப்புகளைக் கூடுதலாக நிர்வகிக்க சாத்தியங்கள் உள்ளன.

81 கோடி மக்களுக்கு, 612 லட்சம் டன் உணவு தானியம் ரூ.1.25 லட்சம் கோடியில் வழங்கப்படும் இத்திட்டத்தில் வழக்கத்தைவிட ரூ.23,800 கோடி கூடுதல் செலவும், இது தவிர, மாநில அரசுக்கு வழங்க வேண்டிய போக்குவரத்து, கையாளுகைச் செலவும் கூடும்.

"பத்து' (திருத்தங்கள்) போட்டு வந்த உத்தேச சட்டம் பலன் தருமா? மக்களவைத் தேர்தலில் வாக்குகள் பெற்றுத் தருமா? இந்தக் கேள்விக்கு கிடைக்கும், கிடைக்காது என்று இரு பதில்களும் சாத்தியம்.

உத்தேச சட்டத்தை மாநிலங்கள் அமல்படுத்த வேண்டிய கால அவகாசம் "ஆறு மாதம்' என்பதை "ஓர் ஆண்டு' என்று திருத்தம் செய்துள்ளனர். ஆகவே, இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த எந்தவொரு மாநிலமும், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவு தெரியும்வரை அமல்படுத்தாது என்பது உறுதி.

ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறை. ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமுள்ள இடைவெளி அதிகரித்து ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்தை நோக்கிச் சரிந்து கொண்டிருக்கிறது. திவாலாகும் நிலையில் இந்தியப் பொருளாதாரம். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அடுத்த மக்களவைத் தேர்தலை மட்டுமே கருத்தில்கொண்டு உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தாங்குமா இந்தியா? அதைப்பற்றி யாருக்கு என்ன கவலை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com