இனியும் வேண்டாம் மெத்தனம்!

உள்நாட்டு பாதுகாப்பைப் பொருத்தவரையில், வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், நமது நாட்டில் பின்பற்றப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மெச்சத்தகுந்த விதத்தில் இல்லை.
Updated on
2 min read

உள்நாட்டு பாதுகாப்பைப் பொருத்தவரையில், வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், நமது நாட்டில் பின்பற்றப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மெச்சத்தகுந்த விதத்தில் இல்லை.

எங்காவது ஓர் இடத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தால் உடனே முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதும், அதன்பிறகு சில நாள்களிலேயே அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதும்தான் நமது நாட்டின் நடைமுறையாக இருந்து வருகிறது. மேலைநாடுகளில் உள்ளது போல நிரந்தரமான பாதுகாப்பு ஏற்பாடுகளை நம்மால் செய்ய முடியாமல் போவது ஏன் என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகப் பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும்.

முக்கிய அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதுதான் தங்களது கடமை என்ற ரீதியில் பாதுகாப்புப் படையினரும், தங்களுக்கு சிறப்புப் படையினரின் பாதுகாப்பை கோரிப் பெறுவது தங்களது செல்வாக்கின் அடையாளம் என அரசியல்வாதிகளும் கருதுவதும்தான் நமது பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள மிகப்பெரிய குறைபாடாகும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு தங்களுக்கு உள்ளது என்பதை மறந்து ஆட்சியாளர்களும், பாதுகாப்புப் படையினரும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்தப் பின்னணியில், உள்நாட்டுப் பாதுகாப்புக்கான நீண்ட காலத் திட்டங்களை தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்த வேண்டுமானால், மத்திய பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கீட்டை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்க வேண்டியது அவசியம் என நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.

2013-14 ஆம் நிதியாண்டில் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ. 59,241 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஆண்டுக்கு 12,300 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் சுமார் 7,62,600 கோடி) ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும், இது நமது நாட்டில் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியைவிட பத்து மடங்கு அதிகம் என்றும் நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் அளித்துள்ள அறிக்கையில் மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் இந்த நிதி மிகவும் குறைவு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதேபோல, சீனாவைவிட நமது நாட்டில்தான் உள்நாட்டு பிரச்னைகள் மிகவும் சிக்கலானவை என்பதையும், இத்தகைய பிரச்னைகளை சமாளிக்க நீண்டகால அடிப்படையில் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த மத்திய பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது அவசியம் என்பதையும் நாடாளுமன்ற நிலைக் குழு ஒப்புக் கொண்டுள்ளது. அதிக நிதி ஒதுக்கீடு பெற மத்திய நிதி அமைச்சகத்தையும், திட்டக் குழுவையும் அணுகுமாறு உள்துறை அமைச்சகத்துக்கு இந்தக் குழு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், அதிக நிதி ஒதுக்கீடு பெற்றால் மட்டும் போதாது. இந்த நிதி உள்நாட்டுப் பாதுகாப்புக்கு முறையாகச் செலவிடப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டியதும் மிகவும் முக்கியமானதாகும். அதோடு, மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டுள்ள நமது நாட்டுக்குள் மும்பையில் நடந்ததுபோல மீண்டும் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க கடலோரப் பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும். இதற்குத் தேவையான நவீன ரோந்துப் படகுகளையும், இதர சாதனங்களையும் தாமதமின்றி வாங்கி,அவற்றை விரைவாகப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

நமது நாட்டின் பாதுகாப்புக்கு உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளால் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது இணையவழி தாக்குதல்களும் அதிகரித்து வருவது மேலும் கவலையளிக்கிறது. வங்கிகள், நிதி, பாதுகாப்புத் துறைகள், எண்ணெய், இயற்கை எரிவாயு நிறுவனங்கள் மற்றும் அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்புகளின் இணையதளங்களை முடக்குவது, செயலிழக்கச் செய்வது உள்ளிட்ட தாக்குதல்களில் நமது நாட்டுக்கு எதிரான சக்திகள் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய இணையவழித் தாக்குதல்களின் எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் 1,808 ஆக இருந்து, ஆகஸ்டில் 4,191 ஆக உயர்ந்திருப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது.

கணினி சார்ந்த குற்றங்களைத் தடுப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதுடன், நமது புலனாய்வுப் பிரிவுகளுக்கு கணினிசார்ந்த வல்லுநர்களையும் அதிக அளவில் தேர்வு செய்து அவர்களை புலனாய்வுப் பணியில் ஈடுபடுத்தியாக வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை விரைந்து எடுக்காவிட்டால் நமது நாட்டின் பாதுகாப்பு

கேள்விக்குறியாகிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com