முன்னோடியான முடிவு!

நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகம், ரூ. 500 கோடிக்கு பங்குகளை தமிழக அரசுக்கு வழங்க ஒப்புக்கொண்டிருப்பது நிச்சயமாக ஒரு வெற்றிதான். தமிழக முதல்வரின் விடாப்பிடியான முயற்சியே இதற்குக் காரணம்.
Updated on
2 min read

நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகம், ரூ. 500 கோடிக்கு பங்குகளை தமிழக அரசுக்கு வழங்க ஒப்புக்கொண்டிருப்பது நிச்சயமாக ஒரு வெற்றிதான். தமிழக முதல்வரின் விடாப்பிடியான முயற்சியே இதற்குக் காரணம்.

1957-ஆம் ஆண்டு நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தைத் தொடங்கி வைத்த அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவிடம் அதே மேடையிலேயே அன்றைய முதல்வர் காமராஜ் வைத்த கோரிக்கை - இந்த நெய்வேலி நிலக்கரிக் கழகத்தின் லாபத்தில் தமிழக அரசுக்குப் பங்கு கிடைக்குமா? என்பதுதான். அவரது கோரிக்கை இன்று பங்குகளாகக் கிடைத்திருக்கிறது. அதுவும், அவரது பிறந்தநாளான ஜூலை 15-ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. அவரது கோரிக்கை, காலம் கடந்த பிறகாகிலும் கைகூடியுள்ளதே என்பது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

ஏற்கெனவே 6.44% பங்குகள் பொதுமக்கள் பெற்றிருப்பதால், "செபி' நிபந்தனை 10% -யை பூர்த்திசெய்ய 3.56% பங்குகளே போதும் என்பதாகத் தமிழக அதிகாரிகள் பேசினார்கள் என்று செய்திகள் மூலம் தெரியவருகிறது. தமிழக அரசு 5%க்குக் குறையாமல் பங்குகளை வாங்க வேண்டும்.

இந்த 5% பங்குகளை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்துவிட முடியாது என்பது உண்மைதான். இதைக் கொண்டு நிர்வாக முடிவுகளில் தலையிட முடியாது. தீர்மானிக்கும் சக்தியாக இருக்க முடியாது. ஆனால், நிலக்கரிக் கழகத்தின் போக்கு, அதன் செயல்பாடு, திட்டங்கள் குறித்து முன்னதாகவே அறியவும், தவறான முடிவுகள் என்றால் விமர்சனம் மூலம் தடுத்து நிறுத்தவும் முடியும்.

இந்த முடிவில் தமிழக அரசு தீவிரம் காட்டாமல் ஆர்வம் கொள்ளாமல் இருந்திருந்தால், தனியாருக்கு கதவுகள் திறந்து விடப்பட்டிருக்கும் என்பதுதான் உண்மை. இத்தகைய பங்குகளில் முதலீடு செய்ய தனியார் மின்உற்பத்தி நிறுவனங்கள் ஆர்வமுடன் காத்து நிற்கின்றன. இந்த 5% பங்குகளைக் கொண்டு தனியார் நிறுவனங்கள் மட்டும் என்ன செய்துவிட முடியும் என்று கேட்கலாம். கூடாரத்தை ஆக்கிரமிக்க நுழையும் ஒட்டகம், முதலில் தலையை மட்டும்தான் நுழைக்கும். இந்தப் பங்குகளை யாருக்கேனும் தர வேண்டும் என்று அரசியல் வட்டாரங்கள் முடிவு செய்திருந்தாலும் ஆச்சரியமில்லை. இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கொடுத்த அரசியல் நெருக்கடி, மறுபேச்சில்லாமல் இதற்கு இணங்கச் செய்துவிட்டது. இன்று தமிழக அரசுக்கு இந்தப் பங்குகள் விற்கப்படுவதென எடுக்கப்பட்ட முடிவு அரசியல் நெருக்கடியின் விளைவே.

நெய்வேலி நிலக்கரிக் கழகம் தற்போது 2,490 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருக்கிறது. இதில் 1,178 மெகாவாட் மின்சாரம் தமிழகம் பெறுகிறது. 12-ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் முடிவில் நெய்வேலி நிலக்கரிக் கழகம் தனது மின்உற்பத்தியை 5,725 மெகாவாட் அளவுக்கு உயர்த்தும் திட்டங்களை வைத்திருக்கிறது. நெய்வேலி நிலக்கரிக் கழகம், அடுத்த சில ஆண்டுகளில் 50 மெகாவாட் காற்றாலை மின்சாரம், 25 மெகாவாட் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்திலும் உள்ளது. தொடர்ந்து லாபம் ஈட்டிவரும் இந்த நிறுவனத்தில், மேலும் மேலும் வளரப்போகும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதன் மூலம், நிச்சயமாக, பழுதில்லாமல் மூலதனம் வளர்வதோடு, பங்கு ஈவுத்தொகையும் பல கோடி ரூபாய் ஆண்டுதோறும் கிடைக்கும்.

அன்னிய நேரடி முதலீடுகள் மேலும் மேலும் வந்து குவியும் நேரத்தில், நிறுவனங்களின் பங்குகளில் தற்போது தனியார் நிறுவனத்தில் 25% பொதுமக்கள் பங்குகளாகவும் அரசுத் துறை நிறுவனத்தில் 10% பொதுமக்கள் பங்குகளாகவும் இருக்கும் நிலைமை மாறும். அதிக அளவு பொதுமக்கள் பங்குகள் இருக்க வேண்டும் என்று புதிய நிபந்தனையை "செபி' சில ஆண்டுகளில் சொல்லக்கூடும். அப்போதும், இதேபோல, உரிமையுடன் கூடுதல் பங்குகளை தமிழக அரசு வாங்குவதற்கு இது ஒரு அச்சாரம்.

ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு நெய்வேலி நிலக்கரிக் கழகம் சுமார் ரூ.400 கோடி பங்கு ஈவுத்தொகையை அளித்து வருகிறது. தமிழக அரசுக்கும் இதேபோன்று குறைந்தது ரூ.25 கோடி பங்கு ஈவுத் தொகை கிடைக்கும். இது மிகச் சிறு தொகையாக இருப்பினும், மின் திட்டங்களில் ஆண்டுதோறும் முதலீடு செய்ய முடியும்.

நெய்வேலி நிலக்கரிக் கழகத்தின் பங்குகளை தமிழக அரசுக்கே வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கடிதம் எழுதிய பிறகு சில நாள்கள் வரை மத்திய அரசு மௌனம் சாதித்தபோதிலும், ஜூலை முதல் தேதியன்று, நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஒரு சாதகமான பதிலை அளித்தார். அதன் பிறகு பங்கு பரிவர்த்தனைக் கழகமும் (செபி) சாதகமான பதிலை அளித்தது.

இந்நிலையில், ஜூலை 3-ஆம் தேதி முதல் "வேலை நிறுத்தம்' என்று அறிவித்த தொழிற்சங்கங்கள், நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையையும் மீறி வேலை நிறுத்தம் செய்தன. அலுவலர்கள் சங்கத்தினர் மட்டும் நீதிமன்றத்தின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினர். எல்லா விஷயங்களும் சாதகமாக மாறிவருவதைக் கண்டும்கூட, சில தொழிலாளர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதற்குக் காரணம், தங்கள் போராட்டம் தந்த அழுத்தமும் இந்த வெற்றிக்குக் காரணம் என்று சொல்லிக் கொள்ளத்தான் என்றே கருத வேண்டியுள்ளது.

நெய்வேலியில் மட்டுமல்ல, அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில், மாநில அரசுகளுக்குப் பங்களிப்பு இருப்பது பல நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்க உதவும். அதற்கு முன்னோடியாகத் திகழும் மத்திய அரசின் இந்த முடிவைப் பாராட்டி வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com