தண்ணீரும் நீலிக்கண்ணீரும்!

காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில், மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர்ப் பகிர்வை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தி அமைக்கலாம் என்று கூறியிருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுவது மிகவும் அற்பத்தனமானது.
Updated on
2 min read

காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில், மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர்ப் பகிர்வை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தி அமைக்கலாம் என்று கூறியிருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுவது மிகவும் அற்பத்தனமானது.

97.82 டிஎம்சி மட்டுமே சாத்தியம் என்ற கணக்கு எப்படி வந்தது என்பது சித்தராமையாவின் சித்தத்துக்கே வெளிச்சம். தமிழ்நாட்டுக்கு எவ்வளவு தண்ணீர் விட வேண்டும் என்பதைக் கர்நாடகம் தீர்மானிக்க வேண்டியதில்லை.

நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் தான் வழங்கிய அளவுகளை மாற்றி அமைக்கலாம் என்று நேரடியாகச் சொல்லவில்லை. ""தீர்ப்பின் ஷரத்துகளை கட்சிக்காரர்கள் (தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், பாண்டிச்சேரி) ஒப்புதலுடன் தங்களுக்குள் விட்டுக்கொடுப்பதை இந்தத் தீர்ப்பு எவ்வகையிலும் தடுக்காது'' என்றுதான் கூறியுள்ளது.

மேலும், அவர் சொல்லும்வாதம் உண்மையாகவே இருந்தாலும்கூட, ஒரு குழந்தை பிறந்த நாள் முதலாகத்தான் வயது தொடங்குமேயொழிய, குழந்தை கருவுற்ற நாள் முதலாகவே வயது தொடங்கிவிட்டதாகக் கருத வேண்டும் என்பது நகைப்புக்கு இடமாகும். நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு பிப்ரவரி 5, 2007-இல் அறிவிக்கப்பட்ட போதிலும், அரசிதழில் வெளியானது பிப்ரவரி 19, 2013-இல் தான். ஆகவே ஐந்தாண்டு என்ற கணக்கு அரசிதழில் வெளியான நாள்முதலாகத்தான் கணக்கிடப்பட வேண்டும்.

பருவமழை பொழியத் தொடங்கும்போதே கர்நாடகம் தனது முதலைக் கண்ணீரைப் பொழியத் தொடங்கிவிட்டதற்குக் காரணம் - காவிரி மேற்பார்வைக் குழு அமைந்திருப்பதுதான். காவிரி மேலாண்மைக் குழுதான் முழுமையானது என்றாலும்கூட, காவிரி மேற்பார்வைக் குழு கண்காணிப்பைத் தொடங்கிவிட்டது. கர்நாடகம், தமிழகம் இரு அரசுகளும் தங்கள் பகுதியில் பெய்யும் மழை, அணைக்கு நீர்வரத்து, வெளியேற்றப்படும் அளவு ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

அத்தோடு, நடுவர்மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியாகும்வரை, ஆண்டு என்பது உறுதிப்படாமல் இருந்தது. தற்போது பாசன ஆண்டு (இரிகேஷன் இயர்) என்பது ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 31 தேதி வரை என்றும், தண்ணீர் ஆண்டு (வாட்டர் இயர்) என்பது ஜூன் 1 முதல் அடுத்த ஆண்டு மே 31-ஆம் தேதி வரை என்றும் மிகத் தெளிவாக நடுவர் மன்றத் தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுவிட்டது.

ஆகவேதான் பாசன ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 134 டிஎம்சி தண்ணீரை (ஜூன்-10, ஜூலை-34, ஆகஸ்ட்-50, செப்டம்பர்-40 டிஎம்சி) கட்டாயமாகத் திறந்தாக வேண்டிய நெருக்கடியில் கர்நாடகம் உள்ளது. தரவுகள் அனைத்தையும் மேற்பார்வைக் குழு கண்காணிக்கிறது. தண்ணீரை வைத்துக்கொண்டு "எங்களிடம் தண்ணீர் இல்லை' என்று சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ஆகவே பருவமழை தொடங்கும்போதே தனது கண்ணீர்ப் பொழிவையும் கர்நாடகம் தொடங்கிவிட்டது.

இந்த ஆண்டு பருவமழை நன்றாகப் பெய்யும் வாய்ப்பும் அதிகம் என்பது கர்நாடகத்துக்குத் தெரியும். இருந்தாலும் முதலிலேயே ஒரு முதலைக்கண்ணீரை வடித்துவிடுவோம் என்று ஒரு அஸ்திவாரம் போடுகிறது. இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான்.

சென்ற ஆண்டு கர்நாடக அணைகளில், தமிழகத்துக்குத் திறந்துவிடக்கூடிய அளவுக்குத் தண்ணீர் இருந்தும்கூட பல காரணங்களைக் கூறி, தேவையற்ற போராட்டங்களை நடத்தி, கர்நாடகம் மட்டும் சிறப்பாகச் சாகுபடி செய்து முடித்தது. இந்த ஆண்டும் அதே உத்தியைக் கையாளத் திட்டமிடுகிறார்கள். தமிழ்நாட்டுக்கு அதிர்ஷ்டம் இருந்து மழை அதிகம் பெய்தால், தண்ணீர் திறந்துவிட்டு நடுவர்மன்றத் தீர்ப்பை முழுமையாக நிறைவேற்றுவது; இல்லையென்றால், தண்ணீர் இல்லை என்று சொல்வது என்பதுதான் கர்நாடகத்தின் காய்நகர்த்தல்.

இடர்காலப் பகிர்வு குறித்து நடுவர் மன்றம் தெளிவாக வரையறுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனாலும், இந்தத் தீர்ப்பில், ""இடர்காலத்தில் பற்றாக்குறையின் விகிதத்துக்கு ஏற்ப'' என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், அணையில் உள்ள நீரை இரு மாநிலங்களும், அந்த நேரத்தில் இருக்கும் நீரை விகிதாசார அடிப்படையில் குறைத்துப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதைவிடுத்து, எங்களுக்கே தண்ணீர் இல்லை என்று சொல்வதற்கு, கர்நாடகம் ஒன்றும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீரை தானமாகத் தரவில்லை.

மேலும், ஒரு மாநிலம் காவிரியிலோ அல்லது அதன் கிளை நதியிலிருந்தோ, அணையிலிருந்து வேறு பயன்பாட்டுக்காகத் தண்ணீரைத் திருப்பினால், அந்த நீரின் அளவை அந்த மாநிலத்துக்கான நீர்ப்பகிர்வு அளவில் கணக்கிட வேண்டும் என்று நடுவர் மன்றம் மிகத் தெளிவாகச் சொல்கிறது. கர்நாடக மாநிலம் தற்போது பெங்களூருவுக்காக எடுத்துச்செல்லும் நீரின் அளவு மிகமிக அதிகம். அந்த அளவை, அவர்களது தண்ணீர்ப் பகிர்வில் கணக்கிட்டால், தமிழகத்துக்குத் தண்ணீர் தராமல் ஏமாற்றி வருவது தானே புலப்படும்.

2012, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்துக்கு நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் தராமல் ஏமாற்றிய கர்நாடகத்தின் மீது தமிழகம் ஏற்கெனவே ஒரு வழக்கு தொடுத்திருந்தது. சாகுபடி இழப்புக்காக ரூ.1,045 கோடி இழப்பீடும், மற்ற பாதிப்புகளுக்காக ரூ.1,434 கோடி இழப்பீடும் கேட்டு தமிழக அரசு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்கத் தமிழக முதல்வர் மீண்டும் மனு கொடுக்க வேண்டும்.

ஜூன் 12-ஆம் தேதி நடைபெறும் காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில், கர்நாடக அரசு சொல்லும் 97.82 டிஎம்சி பொய்க் கணக்கை ஆணித்தரமாக எதிர்க்க வேண்டும். நீர் அளவுகளைக் குறைக்க ஒப்புதல் அளிக்கவே கூடாது.

தீர்ப்பு வந்தும், அரசாணை பிறப்பிக்கப்பட்டும், காவிரி மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்ட பின்னும் நியாயமான உரிமைக்காக தமிழகத்தின் போராட்டம் தொடர வேண்டியிருக்கிறதே, அதுதான் வேதனையிலும் வேதனை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com