மாலத்தீவும் தேர்தல் முடிவும்!

ஓரு வழியாக மாலத்தீவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மாலத்தீவின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாக 30 ஆண்டுகள் கோலோச்சிய மாமூன் அப்துல் கயூமின் மாற்றாந்தாய் மகனான அப்துல்லா யாமீன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
Updated on
2 min read

ஓரு வழியாக மாலத்தீவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மாலத்தீவின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாக 30 ஆண்டுகள் கோலோச்சிய மாமூன் அப்துல் கயூமின் மாற்றாந்தாய் மகனான அப்துல்லா யாமீன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அப்துல்லா யாமீனின் வெற்றியை முழுமையான வெற்றி என்றோ, முழுமையான தோல்வி என்றோ குறிப்பிட முடியாது என்றாலும், சர்வதேசப் பார்வையாளர்களின் மேற்பார்வையில் நடத்தப்பட்டது என்பதால் வெற்றி என்று ஏற்றுக்கொண்டாக வேண்டும். தோல்வி அடைந்த முன்னாள் அதிபர் முகமது நஷீத், அப்துல்லா யாமீனின் வெற்றியை ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகு, அதைப் பற்றிய விவாதத்தில் அர்த்தமே இல்லை.

வெறும் 3,30,000 பேர் மட்டுமே மக்கள்தொகையாகக் கொண்ட மாலத்தீவுதான், மக்கள்தொகையிலும் நிலப்பரப்பிலும் ஆசியாவிலேயே சிறிய நாடு. 1,192 பவளப் பாறைத் தீவுகளாலான இந்த நாடு, இரண்டு மாலைகள்போல காணப்படுவதால் "மாலைத் தீவு' என்று பெயர் வழங்கலாயிற்று. அதுவே மாலத்தீவு என்று மருவி வழங்கப்படுகிறது. இப்போதைய நிலையில் மாலத்தீவு ஒரு முழுமையான இஸ்லாமிய நாடாகத் திகழ்கிறது.

1978இல் அதிபராகப் பதவிக்கு வந்த மாமூன் அப்துல் கயூம், அடுத்த 30 ஆண்டுகள் எதிர்க்கட்சிகளைத் தலைதூக்கவே விடாத சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்தினார். 2008இல் மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகு புதிய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் நடந்த அதிபர் தேர்தலில் போராட்டக்காரர்களின் தலைவரான இளைஞர் முகமது நஷீத் வெற்றி பெற்று அதிபராகவும், முகமது வாஹீத் ஹசன் துணை அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நீதித்துறை, நிர்வாகம், ராணுவம் என்று எல்லா இடங்களிலும் அப்துல் கயூமின் ஆதரவாளர்கள் நிறைந்து காணப்பட்டது, முகமது நஷீதின் ஆட்சிக்கு மிகப்பெரிய தடையாகவே தொடர்ந்தது. கடந்த வருடம் பிப்ரவரி 12ஆம் தேதி, முகமது நஷீத் வலுக்கட்டாயமாகப் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். அதுமுதல், மாலத்தீவில் அரசியல் நிலையின்மை தொடர்ந்து வந்தது.

முகமது நஷீதின் விலகலைத் தொடர்ந்து, ராணுவம் மற்றும் நீதித் துறையின் ஆசியுடன் துணை அதிபராக இருந்த முகமது வாஹீத் ஹுசைன் அதிபராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.

செப்டம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடந்தது. ஆனால் அது ரத்து செய்யப்பட்டது. கடந்த அக்டோபர் 20ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தலை நீதிமன்றம் தள்ளி வைத்தது. நவம்பர் 11ஆம் தேதிக்குள் அடுத்த அதிபர் பதவி ஏற்றாக வேண்டும் என்கிற நிலைமை இருந்தும், நவம்பர் 9ஆம் தேதி நடந்த தேர்தல் முடிவு அறிவிக்கப்படாமல் நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது. முதல் இரண்டு தேர்தல்களிலும் முன்னணியில் இருந்த முகமது நஷீதுக்கு எதிராக ஆதரவு திரட்டவும், கூட்டணி அமைக்கவும்,அப்துல்லா யாமீனுக்கு உதவுவதற்காகவே, அப்துல் கயூமின் ஆதரவாளர்கள் நிறைந்த உச்சநீதிமன்றம் இதுபோன்ற தீர்ப்புகளை வழங்கின என்பது தெளிவு.

செப்டம்பர் 7 நடந்த தேர்தலில் 45 விழுக்காடும், அக்டோபர் 20 தேர்தலில் 47 விழுக்காடும் வாக்குகள் வாங்கித் தனது அடிப்படை பலத்தை நிரூபித்த முகமது நஷீதை மீண்டும் அதிபராகாமல் தடுத்திருப்பது, அப்துல்லா யாமீனுக்கு இஸ்லாமியத் தீவிரவாதக் கட்சியான அதாலத் கட்சி அளித்திருக்கும் ஆதரவு. மதச்சார்பற்ற நாடாக மாலத்தீவை மாற்ற முற்பட்ட முகமது நஷீத் ஆட்சி அமைப்பதைத் தடுக்க வேண்டும் என்கிற குறிக்கோளுடன் அதாலத் கட்சி அப்துல்லா யாமீனுடன் கைகோக்க முற்பட்டதால் 51 விழுக்காடு வாக்குகளுடன் அப்துல்லா யாமீன் மாலத்தீவின் அதிபராகி இருக்கிறார்.

இளைஞர்கள் மத்தியில் முகமது நஷீதிற்கு மிகப்பெரிய செல்வாக்கு இருப்பது அவர் தனியாக 48.6 விழுக்காடு வாக்குகள் பெற்றிருப்பதிலிருந்து தெரிகிறது. அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல்லா யாமீனின் அமைச்சரவையில் அவரது மாற்றாந்தாய் மகனும், முன்னாள் சர்வாதிகாரியுமான மாமூன் அப்துல் கயூமின் மகள் துன்யா மாமூன் மட்டுமல்ல, பெரும்பாலான அவரது ஆதரவாளர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். தனது மாற்றாந்தாய் மகனைப் போல அல்லது அவரது ஆலோசனையின் பேரில், பழைய அடக்குமுறை ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்த அதிபர் அப்துல்லா யாமீன் முயன்றால், முகமது நஷீதின் ஆதரவாளர்கள் மீண்டும் புரட்சியில் இறங்கக்கூடும் என்பதை மறுக்க முடியாது.

இந்தியாவைப் பொருத்தவரை, மாலத்தீவில் ஜனநாயகம் வேறூன்றுவதும், அமைதி நிலவுவதும் மட்டுமல்ல, நம்முடனான நல்லுறவு தொடர்வதும் மிகவும் அவசியம். தீவிரவாதிகள் அங்கே அடைக்கலம் தேடுவதும், இந்துமகா சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பும் சீனா, மாலத்தீவில் மூக்கை நுழைப்பதும் நமக்கு பேராபத்தை விளைவிக்கக்கூடும்.

நமது வெளியுறவுத்துறை கவனமாக செயல்பட வேண்டிய தருணம் இது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com