பிகார் மாட்டுத்தீவன ஊழல் அம்பலமாகி சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நியாயம் கிடைத்திருக்கிறது. பிகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று உறுதி செய்த நீதிமன்றம் அவரை நீதிமன்றக் காவலில் சிறை வைக்க உத்தரவிட்டுள்ளது. அவருடன் சில அரசியல்வாதிகளும் பல அதிகாரிகளும் என 44 பேர் சிறை சென்றுள்ளனர்.
அவர்களது தண்டனை நாளை (அக்டோபர் 3) அறிவிக்கப்படும் என்றாலும் இத்தகைய குற்றங்களுக்கான தண்டனை குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாக இருக்கும் என்பதால் லாலு பிரசாத் யாதவ், தற்போதைய உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க இயலாது.
அதேவேளையில், உயர்நீதிமன்றத்தால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால், அடுத்த தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்தியாவில் ஒரு ஊழல் வழக்கில் நியாயம் கிடைக்க 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை நீடிக்கிறதே என்பதற்காக வேதனைப்பட வேண்டியிருக்கிறது. கால்நடைத்துறை மூலம், மாடுகளுக்கு தீவனம், சினைப்படுத்தல் கருவிகள், கால்நடை மருந்துகள் என பலவற்றையும் வாங்கியதாக வெறும் கணக்கு எழுதி, அதற்கான ரசீதுகளையும் வழங்கி அரசு கருவூலத்திலிருந்து ரூ.37 கோடி வரை பணம் பெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில்தான் இப்போது, 20 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்கு இத்தனை காலதாமதம் ஏன் என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.
சீனாவில், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் ரூ.22 கோடி லஞ்சம் பெற்றது மற்றும் பதவியை தவறாகப் பயன்படுத்தியதற்காக 2011-இல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2013 செப்டம்பர் 22 ஆம் தேதி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துவிட்டார்கள். ஆனால் இந்தியாவில் இத்தகைய ஊழல் வழக்கில் நியாயம் கிடைக்க 20 ஆண்டுகள் ஆகின்றன!
தில்லி துணை மருத்துவ மாணவி பாலியல் கொலை வழக்கில் 8 மாதங்களுக்குள்ளாக வழக்கை முடித்து தண்டனை அறிவிக்க முடிகிறது. ஆனால், மக்கள் பணம் கோடானு கோடி ரூபாய் கொள்ளைபோனதாகக் கருதப்படும் மாட்டுத்தீவன வழக்கில் தீர்ப்பு வழங்க 20 ஆண்டுகளாகிறது.
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு இன்னும் நடந்துகொண்டே இருக்கிறது. முறைகேடாக தொலைபேசியகம் அமைத்து, சொந்தப் பயன்பாட்டுக்கு அரசு தொலைபேசிகளைப் பயன்படுத்திய வழக்கு இன்னும் நடந்துகொண்டே இருக்கிறது.
ஒரு ஊழல் வழக்கை எத்தனை மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று தீர்மானமாக முடிவு செய்து, அந்த வழக்கில் நிரூபிக்க தகுந்த குற்றச்சாட்டிலான வழக்குகளை மட்டுமாகிலும் முன்னுரிமை தந்து விசாரித்து தண்டனை வழங்க நீதிமன்றத்தால் ஏன் முடியவில்லை? மக்கள் பிரதிநிதிகள் தவறிழைத்தால் அது நம்பிக்கை துரோகமல்லவா? தேசத்திற்கே இழைக்கும் துரோகமல்லவா? அவர்களுக்கு மரண தண்டனை தருவதே நியாயமல்லவா?
குற்றவாளியான எம்.பி, எம்எல்ஏ-க்களுக்கு சில ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பதவி இழப்பும் மட்டுமே நியாயம் அளித்துவிடப்போவதில்லை. ஏனென்றால், கொள்ளையடித்த பணம் முழுவதும் அவருடைய பிள்ளைகள், மனைவியின் வெள்ளைப்பணமாக, சொத்தாக மாறியிருக்கும். அவரது வாரிசுகள் அரசியலைத் தொடர்ந்து நடத்துவார்கள். ஊழலும் தொடரும். அது என்ன வகை நீதி?
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதியின் ரத்த உறவுகள் அடைந்த சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்யாமல் இந்த சிறு தண்டனையும், பதவி பறிப்பும் எத்தகைய நியாயத்தை அளித்துவிடப்போகிறது? அவர்கள் தேர்தலில் போட்டியிடவோ, பதவி பெறவோ தடை விதிக்கப்படாமல், இந்த நயவஞ்சகம் எப்படி தடுக்கப்படப் போகிறது?
மாட்டுத்தீவன ஊழல் 1980-களிலேயே தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. வெறும் கால்நடைத்துறை அதிகாரிகள் அளவில் கொஞ்சமாக போலி ரசீது எழுதி அரசிடம் பணம் பெற்ற சிறு ஊழல், அரசியல்வாதிகளும் கட்சி பேதமின்றி கூட்டு சேர்ந்தபோதுதான் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட அனைவரும் மிகப்பெரும் தொகையை பொய் ரசீது காட்டி, பொய்க் கணக்கு எழுதி அரசு கருவூலத்தில் பணம் பெறத் தொடங்கியபோது வெறும் சில ஆயிரம், சில லட்சமாக இருந்த தொகை, பல கோடியாக உயர்ந்தது.
இது ஏதோ பிகாரில் எப்போதோ நடந்தது என்பதல்ல. இப்போதும் நாடு முழுவதும் இத்தகைய பொய் ரசீது, பொய்க் கணக்கு கொள்ளைகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. பல வேளாண் திட்டங்களுக்கு 50 விழுக்காடு மானியம் தருகிறார்கள். இதில் அடிக்கப்படும் கொள்ளை அம்பலத்துக்கு வருவதே இல்லை. பொய் ரசீதும், பொய்க் கணக்கும் பெருகியுள்ளனவே தவிர குறைந்தபாடில்லை.
சூதின் வாழ்வுதன்னை தர்மம் கவ்வும். ஆனால், சூது வெல்லும் என்கிற நிலைமை மாறவேண்டும்; மாற்றப்பட வேண்டும். அதன் ஆரம்பம் இதுவாக இருக்கட்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.