அரசு வெளியிட்டிருக்கும் சமீபத்திய புள்ளி விவரப்படி, இந்தியாவில் ஆறரை கோடி பேர் குடிசைப் பகுதிகளில் வாழ்கிறார்கள். 2001இல் ஐந்து கோடியாக இருந்த நகர்ப்புறக் குடிசைவாழ் மக்களின் எண்ணிக்கை இப்போது ஆறரை கோடியாக உயர்ந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புக் குறைந்து வருவது மட்டுமல்ல. நகர்ப்புறங்களில் சாமானிய அடித்தட்டு மக்களான தினக்கூலித் தொழிலாளர்களுக்கான வீட்டுவசதி, முறையாக இல்லாமல் இருப்பதும் அதற்குக் காரணம்.
இதுபோன்ற குடிசைப் பகுதிகளில் வாழ்பவர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தான் என்று அந்தப் புள்ளி விவரம் குறிப்பிடுகிறது. நகர்ப்புறவாசிகளில் பத்தில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தால், குடிசைப் பகுதிகளில் வாழ்பவர்களில் ஐந்தில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்தவர் என்கிறது அந்த அறிக்கை.
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது உலகமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம், சந்தைப் பொருளாதாரம் போன்றவை அறிமுகப்படுத்தப்படாத காலத்தில், இதுபோன்ற குடிசைப்பகுதிகள் ஸ்லம், ஜுக்கி, சேரி போன்ற பெயர்களில் பெருநகரங்களான மும்பை, தில்லி, கொல்கத்தா, சென்னையில் மட்டுமே காணப்பட்டன. ஏனைய மாநிலத் தலைநகரங்களில்கூட இதுபோன்ற குடிசைப் பகுதிகள் இருக்கவில்லை.
இன்றைய நிலைமையே வேறு. மாநிலத் தலைநகரங்களில் மட்டுமல்லாமல், அநேகமாக இந்தியாவில் உள்ள எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும்கூட குடிசைப் பகுதிகள் காளான்கள் போலப் பெருகிவிட்டன. ஒரு காலத்தில் அடித்தள தினசரிக் கூலித் தொழிலாளர்கள் மட்டுமே வசித்து வந்த இதுபோன்ற குடிசைப் பகுதிகளில் இப்போது கீழ் மத்தியதர வகுப்பினர்கூட வசிக்கும் நிலைமை ஏற்பட்டிருப்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.
சென்னையிலும், மும்பையிலும், தில்லியிலும், கொல்கத்தாவிலும் எந்தவித சுகாதார வசதிகளும் இல்லாத நிலையிலுள்ள குடிசைப் பகுதிகளின் வாடகை மூன்றாயிரம் ரூபாயைத் தொடுகிறது எனும்போது, எந்த அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது என்பதை நாம் உணர முடிகிறது. அறுபது, எழுபது குடிசைகளை உள்ளடக்கிய குடிசைப் பகுதிகளில் குறைந்தது 300 பேராவது வசிக்கிறார்கள் என்று கூறுகிறது புள்ளி விவரம். இங்கே வாழும் ஆண்கள் கூலி வேலையிலும், பெண்கள் சிறு வியாபாரம் அல்லது அக்கம்பக்கத்து பகுதிகளில் வீட்டு வேலை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
பெருவாரியான நகர்ப்புற குடிசைப் பகுதிகள் ஆற்றுப் படுகையிலும், ரயில் தண்டவாளத்தின் அருகிலும், கால்வாய் ஓரங்களிலும்தான் காணப்படுகின்றன. இவர்கள் அந்தக் குடிசைப் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் வேலை பார்ப்பதால், அங்கிருந்து அகன்று நகருக்கு வெளியே செல்ல விரும்பாதவர்களாகவும் இருக்கிறார்கள்.
குடிசைப் பகுதிகளுக்கு சுகாதார வசதிகள் செய்து கொடுத்தால், அவர்கள் அங்கேயே நிரந்தரமாக வசிக்க நேரிடும் என்றும், அது நகரின் திட்டமிட்ட வளர்ச்சிக்கு இடையூறாக அமையும் என்றும் நகரமைப்புத் துறையினரும், நகராட்சி அமைப்பினரும் கருதுவதில் நியாயம் இருக்கிறது. அதே நேரத்தில், பிழைப்புத் தேடி நகர்ப்புறங்களைத் தஞ்சமடைபவர்களுக்கு இருப்பிடம் தரவேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது என்பதை எப்படி மறந்துவிட முடியும்?
குடிசைப் பகுதிகள் பற்றி 1962இல் தனது "ஸ்வராஜ்யா' பத்திரிகையில் ராஜாஜி எழுதி இருந்த ஒரு கருத்து தீர்க்க தரிசனமானது. ""குடிசைப் பகுதியில் வாழ்பவர்கள், அந்தந்தப் பகுதியில் வசதி படைத்த குடும்பங்களையும், வியாபார நிறுவனங்களையும் சார்ந்து பிழைப்பு நடத்துபவர்கள். இவர்களில் பலர் நிரந்தரமாக இருப்பவர்கள் அல்ல. அதனால் இவர்களுக்கு ஊருக்கு வெளியே நிரந்தரக் குடியிருப்பு வசதி செய்து கொடுக்கும் முயற்சியால் பலனிருக்காது. ஒரு சாராரை அகற்றினால், இன்னொரு சாரார் வந்து மீண்டும் குடிசைகளை அமைத்துக் கொள்வார்கள். அதனால், அவர்கள் குடியிருக்கும் பகுதியிலேயே, குறைந்த கட்டணத்தில் அரசு வாடகைக் குடியிருப்புகளை சுகாதார வசதிகளுடன் கட்டுவதுதான் தீர்வாகும்!''
குடிசைப் பகுதியில் வாழ்பவர்களும் இந்நாட்டு மன்னர்கள்தான். அவர்களது குழந்தைகளும் ஏனைய குழந்தைகளைப் போல கல்வி கற்க வேண்டும்; ஆரோக்கியமான குழந்தைகளாக வளர வேண்டும். குடிசைப் பகுதிகளில் வாழும் ஆறரைக் கோடி மக்களுக்கும் நியாயம் கிடைத்தாக வேண்டும். அதுபற்றி நாம் கவலைப் பட்டாக வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

