அது வேறு, இது வேறு...

இலங்கைச் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்பதில், "தற்போது பாகிஸ்தானுடன் உள்ள நடைமுறையைப் போன்ற ஒன்றினை' ஏற்படுத்த முயற்சிகள் செய்யப்படுகின்றன என்று இந்திய உள்துறை செயலர் அனில் கோஸ்வாமி கூறியிருப்பது...
Updated on
2 min read

இலங்கைச் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்பதில், "தற்போது பாகிஸ்தானுடன் உள்ள நடைமுறையைப் போன்ற ஒன்றினை' ஏற்படுத்த முயற்சிகள் செய்யப்படுகின்றன என்று இந்திய உள்துறை செயலர் அனில் கோஸ்வாமி கூறியிருப்பது, இன்னமும் இந்தப் பிரச்னையை மத்திய அரசு சரியாக அணுகவில்லை என்பதையே காட்டுகிறது.

இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்வதற்கும் தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்வதற்கும் இடையே மிகப்பெரிய சமூக - பொருளாதார - அரசியல் இடைவெளி இருக்கிறது.

தமிழகம் வந்திருந்த குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, குஜராத் மீனவர்களை மீட்பதில் மத்திய அரசு எவ்வாறு அக்கறை காட்டாமல் இருக்கிறதோ, அதேபோன்று தமிழக மீனவர்களை மீட்பதிலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறியிருந்தாலும், தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் வேறானவை.

மக்களவையில் ஆகஸ்ட் மாதம் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் அளித்த புள்ளிவிவரத்தின்படி, பாகிஸ்தான் அரசினால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் 437 பேரில் 391 பேர் குஜராத் மாநிலத்தவர். கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தான் ராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்படாத படகுகள் எண்ணிக்கை 740.

அதே வேளையில் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் 114 பேர். திரும்ப ஒப்படைக்கப்படாத படகுகளின் எண்ணிக்கை 21.

தமிழகத்தில் மீனவர்கள் கைது செய்யப்பட்டதும், படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதும் குஜராத்தைக் காட்டிலும் குறைவாக இருந்தாலும், இந்தப் பிரச்னையின் தீவிரம் தமிழகத்தில் மிக அதிகம். குஜராத் மீனவர்கள் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டால் அது ஒரு சம்பவம். இங்கே தமிழக மீனவர்கள் இலங்கை அரசினால் கைது செய்யப்பட்டால் அது வெறும் நிகழ்வு அல்ல. அது வேறு நிறம் பெறுகிறது. இலங்கை ராணுவத்தின் தமிழ்இன அழிப்பு நடவடிக்கையாகவே கருதப்படுகிறது; பேசப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், "பாகிஸ்தானுடன் தற்போதுள்ள நடைமுறை போன்ற ஒன்றினை' உருவாக்குதல் மட்டுமே தமிழக மீனவர் பிரச்னைக்குத் தீர்வு ஆகாது. தமிழகச் சூழலுக்கு ஏற்ற நடைமுறைகளை உருவாக்க வேண்டும். அதைச் செய்ய வேண்டுமானால் மத்திய அரசு தமிழக அரசுடன் கலந்து பேசி, தமிழக அரசின் ஆலோசனைகளைப் பெற்றே செய்ய வேண்டும். அதையும் விரைந்து செய்ய வேண்டும்.

இப்போது இலங்கையில், தமிழக மீனவர்களுக்கு ஆதரவான சூழல் உள்ளது. இலங்கை வடக்கு மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பில் தமிழர்கள் இருக்கின்றனர்.

பிடிக்கப்படும் மீனவர்களை விரைந்து விசாரித்து விடுதலை செய்வதிலும், அவர்களது உடைமைகளைத் திருப்பி ஒப்படைப்பதிலும் வடக்கு மாகாண முதல்வர் தலையிட முடியும். இத்தகைய ஆதரவான சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாத வகையில் தீர்வு காணும் எளிய அணுகுமுறைதான் இன்றைய தேவை. இதனை மத்திய அரசு, தமிழக அரசை இணைத்துக்கொண்டு செயல்படுத்த வேண்டும்.

இந்தப் பிரச்னையை இரு நாடுகளின் மீனவர்களே பேசித் தீர்வு காண வேண்டும் என்பது தீர்வை மேலும் தாமதப்படுத்தவே வழிவகுக்கும். ஏற்கெனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 72 நாள்கள் மட்டுமே மீன் பிடிக்கும் அனுமதி என்பதை இந்திய மீனவர்கள் ஏற்கவில்லை. மேலும், இது வெறும் நாள் கணக்கு என்பதைக் காட்டிலும், மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை, அவர்கள் பிடிக்கும் மீன்அளவு ஆகியவற்றைத் தீர்மானிப்பது மீனவர்களால் இயலாது. அதை தமிழக அரசுதான் தீர்மானிக்க முடியும்.

உண்மையான மீனவர்கள் யார் யார், படகுகள் யாருக்குச் சொந்தமானவை, அரசின் அனுமதி பெற்ற படகுகள் எத்தனை என்பதை கணக்கிடுவதும், இலங்கையும் இந்தியாவும் ஏற்றுக்கொண்ட பொது கடல்பரப்பில் மீன்பிடிக்கும்போது, படகுகளை ஆழ்கடலுக்குள் முறைவைத்து அனுமதிப்பதும் தமிழக அரசினால் மட்டுமே முடியும்.

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் பெரிய படகுகளால் லாபம் அடைவோர் நிச்சயமாக மீனவர்கள் அல்ல. இத்தொழிலில் முதலீடு செய்திருக்கும் பெரும்பணக்காரர்கள் மட்டுமே. மீனவர்களைத் தூண்டில் புழுக்களாகப் பயன்படுத்தும் திமிங்கலங்களால்தான் தமிழக மீனவர் அதிகம் துன்புறுகின்றனர். இதை நாம் உணர்ந்தால்தான் இந்தப் பிரச்னையின் பின்னணி புரியும்.

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் கடலுக்குள் சென்ற மீனவர்கள் கைது செய்யப்பட்டால், படகுகள் பறிமுதல் செய்யப்பட்டால், அவர்களுக்கு கருணைத்தொகை, மீண்டும் படகு வாங்கிட நிதியுதவி ஆகியன கிடையாது என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்தாத வரை, மீன்பிடிப் படகுகள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது நிற்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com