198 நாட் அவுட்!

கிரிக்கெட் உலக நாயகன் சச்சின் டெண்டுல்கர், 200ஆவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கும்.
Updated on
2 min read

கிரிக்கெட் உலக நாயகன் சச்சின் டெண்டுல்கர், 200ஆவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கும். ஆனால் கிரிக்கெட் உலகுக்கு இது அதிர்ச்சி அளிப்பதாக இருக்காது. ஏனென்றால், அவர் ஓய்வு பெறுவதே நல்லது என்ற பேச்சு இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் தோன்றிய பிறகு எடுக்கப்பட்ட முடிவு இது என்பதுதான்.

சச்சின் டெண்டுல்கர் தனது ஆட்டத் திறன் உச்சத்தில் இருந்த காலத்தில் இத்தகைய முடிவை எடுத்திருந்தால், அதற்காக இந்திய கிரிக்கெட் உலகமே கலங்கி, கண்ணீர் விட்டிருக்கும். அந்த அளவுக்கு அவர் இந்திய கிரிக்கெட் வீரர்களின் உள்ளம் கவர் கள்வன். "சத' புருஷன்!

பதினாறு வயதில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய நாள் முதலாக, கடந்த 24 ஆண்டு காலமாக உலகம் முழுதும் விளையாடி, தனது முத்திரையைப் பதித்தவர். தனக்குப் போட்டியாக இந்தியாவில் யாருமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு அபார ஆட்டத்திறன் கொண்டவர். இதற்கு முன்னதாக கிரிக்கெட் உலகில் பலரும் நிகழ்த்திய சாதனைகள் அனைத்தையும் முறியடித்து, முன்னிலையில் இருப்பவர். இவருக்குக் கிடைத்த பாராட்டுகளும் இவரைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களும் அதிகம்.

கிரிக்கெட் உலகின் பிதாமகர் எனப்படும் பிராட்மன், தன்னையொத்த ஆட்டத்திறன்கொண்டவர் சச்சின் என்று வெளிப்படையாகப் பாராட்டியதைப்போன்ற ஒரு புகழ், வேறு எதனாலும் சச்சின் டெண்டுல்கருக்குக் கிடைத்திருக்காது. இந்தியாவில் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு சச்சின் என்ற பெயரைச் சூட்டியதை வைத்தே, அவருக்கு எத்தகைய ரசிகர்கூட்டம் இருந்தது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

இவ்வளவு புகழ் இருந்தாலும் அவர் மீது சிலர் - அவரைப் பிடிக்காதவர்கள் என்றும் சொல்லலாம் - "சச்சின் ரன் எடுப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார். ஆட்டத்தை நடத்திச் செல்வதில் ஆர்வம் காட்டுவதில்லை' என்று குறை கூறுவதுண்டு. அவர்கள் அப்படிச் சொல்ல காரணம் இதுதான்: இந்திய அணி முக்கிய ஆட்டக்காரர்களை இழந்து நிற்கும் கடைசி நேரத்தில், தன்னுடன் களத்தில் நிற்கும் இணை ஆட்டக்காரர் பேட்டிங் திறன் குறைந்தவர் என்றால், கடைசிப் பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்து, அடுத்த முனைக்கு தானே வந்து நிற்பதும், அதன் மூலம் தனது ஜோடி அதிவேக பந்துவீச்சாளர்களை சந்திப்பதை தவிர்க்கச் செய்து ஆட்டத்தை நடத்துவதுமான முன்யோசனையுடன் அவர் விளையாடியது கிடையாது. அவர் 100 ரன்களுக்கு மேலாக அடித்திருந்தாலும் இந்திய அணி மோசமாக மண்ணைக் கவ்விய ஆட்டங்களும் உண்டு. ஆகவேதான் இத்தகைய விமர்சனமும் முன்வைக்கப்பட்டன.

ஆனாலும் இது அவர் திட்டமிட்டு செய்த சுயநலம் என்று சொல்லிவிட முடியாது. கிரிக்கெட் வாரியத்துக்கு சச்சின் தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல, பதினோரு வயது முதலாக அவருக்கு கிரிக்கெட் தவிர வேறு எதுவுமே தெரியாது. பேட்டிங் மட்டும்தான் அவரது நோக்கமாக இருந்தது. ஆகவேதான் அவரால் சிறந்த கேப்டனாக இருக்க முடியவில்லை. அவருக்கு மட்டை பிடித்து ஆடுவது மட்டுமே தெரியும். அதுதான் அவருக்கு அனைத்தையும் கொண்டு வந்து சேர்த்தது, பணம், புகழ்... மனைவியையும்கூட!

அவர் கள்ளம்கபடம் இல்லாத, கிரிக்கெட் தவிர வேறு ஏதும் தெரியாதவர் என்பதற்கு அவர் ஓய்வு கொள்ள எடுத்துக்கொண்ட காலநேரமே அத்தாட்சி. அவர் இதுவரை 198 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அடுத்து, மேற்கிந்திய தீவு அணிகளுடன் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் கொல்கத்தா மற்றும் மும்பையில் இரண்டு ஆட்டங்களை முடித்து, 200ஆவது ஆட்டத்துடன் ஓய்வு பெறுவது என்பதுதான் அவரது விருப்பம்.

இந்த விருப்பத்தில் சாதகம் பாதகம் இரண்டுமே உண்டு. அவர் கடைசியாக ஆடப்போகும் டெஸ்ட் போட்டி என்பதால் இரண்டு இடங்களிலும் அவரது ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். இந்த இரண்டு ஆட்டத்திலும் அவர் இரண்டு சதம் அடித்தால் அவருக்கு மேலும் பெருமை. ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி.

மாறாக இந்த இரண்டு ஆட்டங்களிலும் மோசமாக ஆடி அவர் வெளியேறினால்... முந்தைய எல்லா சாதனைகளையும்விட கடைசி ஆட்டத்தில் அவரது திறமை வெளிப்படாதது மட்டுமே ரசிகர்கள் மனதில் நிற்கும்.

களத்தில் முன்பு போல திறமை காட்டுவது இயலாது என்ற புரிதல் வந்துவிட்ட உடனேயே களத்தைவிட்டு வெளியேறிவிடுவதுதான் சரியான முடிவாக இருக்க முடியும். முடிவு எடுப்பதிலும்கூட உலக நடைமுறை தெரியாத அப்பாவியாகத்தான் இருக்கிறார் கிரிக்கெட் உலக நாயகன் சச்சின்.

இந்த இரண்டு ஆட்டங்களில் அவர் சிறப்பாக ஆடினாலும் ஆடாமல் போனாலும் அவரது ஓய்வுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்படும் என்பது மட்டும் நிச்சயம்.

விஜய் மெர்சன்ட், லாலா அமர்நாத், பாலி உம்ரிகர், மன்சூர் அலிகான் பட்டோடி, சுனில் கவாஸ்கர், கபில்தேவ் வரிசையில் சச்சின் டெண்டுல்கரும் இந்திய கிரிக்கெட் சரித்திரத்தின் பக்கங்களில் நிரந்தர இடம் பெறுகிறார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com