அடுத்த கட்டம் - மறுவாழ்வு!

பேரிடர் மேலாண்மையில் இந்தியா திறமையுடன் செயல்பட்டிருக்கிறது என்று உலகம் முழுவதும் பாராட்ட வைத்திருக்கிறது "பாய்லின்' புயலில் மத்திய மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள்.
Updated on
2 min read

பேரிடர் மேலாண்மையில் இந்தியா திறமையுடன் செயல்பட்டிருக்கிறது என்று உலகம் முழுவதும் பாராட்ட வைத்திருக்கிறது "பாய்லின்' புயலில் மத்திய மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள்.

1999-ஆம் ஆண்டு, மணிக்கு 350 கி.மீ வேகத்தில் வீசிய புயலில் சுமார் 10,000 பேர் இறந்தனர். அன்றைய கணக்குப்படி 200 கோடி டாலர் மதிப்பிலான சேதம் ஏற்பட்டது. தற்போது, 14 ஆண்டுகள் கழித்து, மணிக்கு 250 கி.மீ வேகத்தில் வீசிய புயலால் ஆந்திரத்தின் 3 மாவட்டங்கள், ஒடிஸாவின் 14 மாவட்டங்களில் சுமார் 2000 சதுர கிலோமீட்டர் பாதிக்கப்பட்டாலும், இறந்தவர்கள் எண்ணிக்கை 25 மட்டுமே!

ஆந்திரம் மற்றும் ஒடிஸா மாநிலத்தின் 17 மாவட்டங்களிலிருந்தும் சுமார் 10 லட்சம் பேரை வெளியேற்றி, உயிரிழப்பை தடுத்துவிட்டபோதிலும், பயிர் இழப்பு மற்றும் வீடுகளை புயலிலிருந்து காப்பாற்ற அரசினால் முடியவில்லை. பயிர்ச் சேதம் மட்டுமே பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

இந்தப் புயல், கரையோரம் இருந்த 3.5 லட்சம் வீடுகளை தரைமட்டமாக்கி விட்டது. ஊரைவிட்டு வெளியேறியவர்கள் மீண்டும் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிச் சென்றால், அவர்கள் வாழ்வதற்கு வீடு இருக்காது. அவசரத்தில் எடுத்து வந்த சில துணிமணிகள் நீங்கலாக, அவர்கள் விட்டு வந்த எந்தப் பொருளும் அங்கே இருக்காது. வீடு திரும்பும் விவசாயிகளை வரவேற்க அங்கே பயிர்கள் இருக்கப் போவதில்லை.

வெளியேற்றப்பட்டவர்கள் தற்போது தாற்காலிகமாக 250 இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் இவர்கள் அவரவர் கிராமங்களுக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவர். ஆனால் அவர்களை வெறுமைதான் வரவேற்க காத்திருக்கிறது. இவர்களுக்கு உடனடித் தேவை உணவு, உடை, இருப்பிடம், பயிர் இழப்பீடு!

ஒடிஸா மாநிலத்தில், பெர்காம்பூர் மற்றும் ஜகந்நாத்பூர் ஆகிய இடங்களில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகள் இந்த புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் வைக்கப்பட்டிருந்த 38,181 டன் உணவு தானியங்களில் சில மூட்டைகள் பெருமழையில் ஈரமாகியுள்ளன என்றும், கிடங்கின் கூரைகள் புயலால் பிய்த்தெறியப்பட்டதால் இந்த நிலை உருவானதாகவும் கூறப்படுகிறது.

மத்திய உணவுத் துறை அமைச்சரும் அதிகாரிகளும் மக்களுக்கு கூடுதலாக தேவைப்படும் உணவு தானியங்களை அண்டை மாநிலங்களிலிருந்து திரட்டி வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர். ஆகவே உணவுப் பொருள் கிடைப்பதில் சிரமம் இருக்காது. சாலைகள் சேதமடைந்தும், மழை வெள்ளத்தால் சூழப்பட்டும் இருக்கும் நிலையில், உணவு தானியங்களை பிற இடங்களுக்கு கொண்டு செல்ல இந்திய விமானப் படை களத்தில் இறங்கிவிட்டது. இதுவரை, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்கி வந்த விமானப் படையினர் தற்போது உணவு தானியங்களைக் கொண்டு சேர்ப்பதிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஒடிஸா மாநிலத்தின் 14 மாவட்டங்களில் 9 கடலோர மாவட்டங்களில் முழுமையாக மின்தடை நிலவுகிறது. உயர்அழுத்த மின்சாரம் மற்றும் சாதாரண வீடுகளுக்கான மின்கம்பிகள் அனைத்தும் அறுந்துவிட்டன. மத்திய தொகுப்பிலும்கூட இவை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. சாதாரண நாள்களில் இந்த பகுதிகளில் 2800 மெகாவாட் மின்சாரம் தேவையாக இருந்தது. தற்போது 600 மெகாவாட் மின்சாரம் மட்டுமே பயன்படுகிறது. அப்படியானால் மிகப்பெரிய அளவில் மின்கம்பிகள் அறுந்தும், சாய்ந்தும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

போர்க்கால நடவடிக்கையாக இந்த மின்கம்பங்களை சரி செய்து, மின்விநியோகத்தை சீராக்கினால் மட்டுமே, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது அரசு நிர்வாகத்துக்கு சாத்தியம்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கூடுதல் வேலைவாய்ப்பும், வீடுகட்டும் திட்டத்தின் கீழ் விதிமுறைகளைத் தளர்த்தி அதிக கடனுதவியும் வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. இவை அனைத்தும் நடைமுறையில் நன்மை தராவிடில், இவர்களை உயிர்பிழைக்கச் செய்தும் பயனில்லை என்றாகிவிடும். பயிர் சேதத்தை உடனடியாக கணக்கிட்டு, விவசாயிகளுக்கு அதற்கான தொகையை தருவதும் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நடவடிக்கையாக அமையும்.

இவர்களைக் காப்பாற்றுவதில் எவ்வளவு திறமையாக அரசு செயல்பட்டதோ அதே அக்கறையுடனும் திறமையுடனும் இவர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளிலும் அரசு ஈடுபட வேண்டும். அப்போதுதான் நிர்வாகம் திறமையாகவும் முழுமையாகவும் செயல்பட்டதாகக் கருத முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com