முறைகேட்டுக்கு என்னை மட்டும் ஏன் பொறுப்பாக்குகிறீர்கள்? இதில் பிரதமரும் அல்லவா குற்றவாளி? - இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பவர் நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீடு தொடர்பான முறைகேட்டுக்காக தற்போது சிபிஐயால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலக்கரித் துறையின் முன்னாள் செயலர் பி.சி. பரேக்.
நிலக்கரித் துறை அமைச்சராக இருந்ததால் மட்டுமே அந்தத் துறையின் ஒதுக்கீட்டு முறைகேடுகளுக்கு பிரதமர் பொறுப்பாக மாட்டார் என்று முதலில் தெரிவித்தார்கள். இந்த வழக்கின் கோப்புகள் காணாமல் போன போதும், கோப்புகளுக்கு பிரதமர் காவல் காக்க முடியாது என்று சொன்னார்கள். இப்போது, நிலக்கரித் துறையின் முன்னாள் செயலரே சொல்கிறார்: "அவருக்கு தெரிந்துதான் ஒதுக்கீடு நடைபெற்றது. நான் சதிகாரன், குற்றவாளி என்றால், பிரதமரும்தானே குற்றவாளி' என்று. இதற்குக் காங்கிரஸ் என்ன பதில் சொல்லப் போகிறது?
எதிர்க்கட்சிகள் முன்னாள் செயலர் கூறும் குற்றச்சாட்டின்மீது விசாரணை கோருகின்றன. இப்போதும் பிரதமர் மௌனம் காப்பதோ, தனக்குத் தொடர்பில்லை என்பதோ சாத்தியமில்லை. பிரதமரும் குற்றவாளியாகச் சேர்க்கப்படாதவரையில் தற்போது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கு வலுவற்றதாகவே இருக்கும்.
ஒடிஸா மாநிலத்தில், தலபிரா நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீட்டில் பங்குகொள்ளத் தகுதி பெற்றவை அரசுத் துறை நிறுவனங்கள் மட்டுமே. ஆனால் அந்த ஒதுக்கீட்டைப் பெற விண்ணப்பித்த தனியார் நிறுவனம் ஹிண்டால் சேர்க்கப்படுகிறது. நெய்வேலி நிலக்கரி கழகமும் ஹிண்டாலும் அந்த நிலக்கரிச் சுரங்க வயலைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் அரசின் கருத்துருவை அன்றைய செயலர் பி.சி. பரேக் தயாரிக்கிறார். இது பிரதமருக்குத் தெரியும் என்று பரேக் கூறுகிறார்.
அரசு நிறுவனம் மட்டுமே பெற வேண்டிய நிலக்கரிச் சுரங்க வயலை, தனியாரும் சேர்ந்து பகிர்ந்துகொள்ளலாம் என்ற ஒரு நிலைப்பாட்டை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமானால் வெறும் கருத்துரு அல்லது துறைச் செயலர் விளக்கம் மட்டுமே போதுமானதல்ல. இத்தகைய மாற்றங்களை அரசாணையில் வெளியிட்டாக வேண்டும். பொதுத்துறை ஒதுக்கீட்டில் இருந்த இன்னின்ன பகுதிகளைத் தனியாருக்கு ஒதுக்கீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது என்பதை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன், அரசிதழில் வெளியிட்டு, பிறகு விண்ணப்பங்கள் பெற்றுத்தான் ஒதுக்கீடு செய்ய முடியும். ஆகவே, பிரதமர் மன்மோகன் சிங் இந்த ஒதுக்கீட்டில் கையெழுத்திடும் முன்பாக, இதற்கான அனுமதி பெற்ற விதம், அறிக்கை வெளியிடப்பட்ட விவரம் ஆகியவற்றையும் பி.சி. பரேக் வெளிப்படையாகப் பேசுவதுதான் சரியானதாக இருக்கும்.
ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, இரண்டு முறை பி.சி.பரேக்கை சந்தித்துப் பேசிய பிறகுதான் இந்த கோப்புகளில் பிரதமர் கையெழுத்திட்டார் என்று சிபிஐ தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளது. ஒரு தொழிலதிபர், ஒரு அரசுத் துறை செயலரைச் சந்தித்தது மட்டுமே ஒரு ஊழலுக்கு ஆதாரமாகி விடாது. அந்த தொழிலதிபர் அதன் மூலம் ஆதாயமடைந்தார் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தாக வேண்டும்.
ஓர் அரசு ஊழியர், சில உண்மைகளை மறைத்து அமைச்சரிடம் கோப்புகளில் கையெழுத்து வாங்குவது நடைமுறையில் சாத்தியம். அத்தகைய தவறு நடந்துள்ளதா என்ற கோணத்திலும் இந்த வழக்கை நுட்பமாகப் பார்க்க வேண்டும். கர்நாடகத்தில் இரும்பு கனிமச் சுரங்க ஒதுக்கீட்டில் ரெட்டி சகோதரர்களுக்கு ஆதரவாக கோப்புகளை நகர்த்திய ஐஏஎஸ் அதிகாரிதான் தற்போது சிறையில் உள்ளார். அன்றைய தேதியில் ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் சிறை செல்லவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
சில நேர்வுகளில் அதிகாரிகள், தங்கள் மறைமுக நடவடிக்கையால் அமைச்சர்களை பலிகடா ஆக்குவதும், சில நேர்வுகளில் அமைச்சர்களின் சுயநல நடவடிக்கையால் அதிகாரிகள் பலிகடா ஆவதும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் அதில் எந்த வகையைச் சேர்ந்தது என்பது விசாரணை முடிந்து நீதிமன்றத் தீர்ப்பு வந்தால்தான் தெரியும்.
அதெல்லாம் இருக்கட்டும். "எனக்கும் இதற்கும் தொடர்பில்லை' என்று பிரதமர் மன்மோகன் சிங் இனியும் கூற முடியாது. அவருக்குத் தொடர்பு இல்லாமல் இருந்து தவறு நடந்திருந்தாலும், அவர் அதற்குப் பொறுப்பேற்றாக வேண்டும். தேசத்தை வழிநடத்துபவர் கவனக் குறைவால் தவறு செய்துவிட்டேன் என்று கூறி நழுவ முடியாது. தவறு நடக்காமல் இருப்பதற்காகத்தானே பிரதமரைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். அதனால், பிரதமர் மக்களுக்கு விளக்கமளிக்கக் கடமைப்பட்டவர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.