தேவை பிணை, சிறையல்ல!

சிறு சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களை, குறிப்பிட்ட காலம் கடந்துவிட்டதும் ஏன் பிணையில் விடுவிக்ககூடாது என்கிற கேள்வியை உச்சநீதிமன்றம் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் எழுப்பியது.
Updated on
2 min read

சிறு சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களை, குறிப்பிட்ட காலம் கடந்துவிட்டதும் ஏன் பிணையில் விடுவிக்ககூடாது என்கிற கேள்வியை உச்சநீதிமன்றம் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் எழுப்பியது. பொதுநல வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் எழுப்பிய இந்த கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் "சட்டப்படி மட்டுமல்ல, நடைமுறையிலும் அது சாத்தியமல்ல' என்று பதிலளித்திருக்கிறது.

ஒரு குற்றத்திற்காக அதிகபட்ச தண்டனைக் காலம் ஏழு ஆண்டுகள் என்று இருந்தால், குற்றவாளி ஓராண்டு சிறையில் விசாரணைக் கைதியாகக் கழித்து விட்டிருந்தால், அவரை ஏன் பிணையில் விடுவிக்ககூடாது என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் கேள்வி. சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதியாக இருந்தாலும், அந்தந்த வழக்கின் தன்மையையும், பின்னணியையும் கருத்தில் கொண்டுதான் பிணை வழங்கப்பட வேண்டுமே தவிர, குறிப்பிட்ட காலம் சிறையில் இருந்ததை மட்டுமே கருத்தில் கொண்டு விசாரணைக் கைதிக்கு பிணை வழங்கபடுவது சரியாக இருக்காது என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்து.

தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரப்படி, இந்திய சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளில் 64.7 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள். அதாவது அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருப்பதால் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள். இன்னும் சொல்லப் போனால், குற்றம் நிரூபிக்கப்படாமல் தண்டனை அனுபவிப்பவர்கள். இவர்களில் பலர் விடுதலை பெறவும் வாய்ப்புள்ளவர்கள்.

இந்திய சிறைச்சாலைகள் இப்போதே நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் 123 மத்திய சிறைச்சாலைகளும், 333 மாவட்ட சிறைச்சாலைகளும், 809 துணை சிறைச்சாலைகளும், 19 பெண்கள் சிறைச்சாலைகளும், 44 திறந்தவெளி சிறைச்சாலைகளும், 30 சிறப்பு சிறைச்சாலைகளும், 21 சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிகளும் மற்றும் வேறு வகையான மூன்று சிறைச்சாலைகளும் உள்ளன. 3,32,782 கைதிகளை வைத்துக் கொள்ளும் சக்திதான் இந்த சிறைச்சாலைகளுக்கு உள்ளது. அதில் விசாரணைக் கைதிகள் மட்டுமே 2,04,480 பேர் என்றால், சிறைச்சாலைகள் நிரம்பி வழியாமல் என்ன செய்யும்?

விசாரணைக் கைதிகளின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது. அவர்களில் பலர் எந்தத் தவறும் செய்யாமல் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவும், தவறான சாட்சியங்களின் அடிப்படையிலும், சில வேளைகளில் செல்வாக்கு மிக்க சிலரின் விரோதத்தை சம்பாதித்துக் கொண்டதாலும் வழக்குத் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள். அவர்களில் பலருக்கு கல்வி அறிவோ, பொருளாதாரப் பின்னணியோ இல்லாததால் வழக்குரைஞர்களை நியமித்துத் தங்களுக்காக வாதாடக் கூடத் தெரியாதவர்கள்.

பல விசாரணைக் கைதிகள் ஐந்தாண்டுக்கும் மேலாக வழக்கு விசாரணை நடந்தும் தீர்ப்பு வழங்கப்படாததால், சிறையில் அடைந்து கிடக்கிறார்கள். விசாரணைக் கைதிகளில் பலருடைய வழக்குகள், காவல்துறையினரின் மெத்தனப் போக்கால் இழுத்தடிக்கப்படுபவை என்பதுதான் உண்மை. அத்தகையை வழக்கு வரும்போது விசாரணை அதிகாரி ஆஜராகாமல் அவர்கள் கஷ்டப்படுவதும், தங்களது எதிர்காலம் என்ன என்று தெரியாமல் அவர்கள் சிறையில் வாடுவதும் இந்தியாவில் மட்டுமே நடக்கும் மிகப் பெரிய மனித உரிமை மீறல். மத்திய சட்ட அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த பதிவுப்படி வழக்குத் தொடுக்கப்பட்டவர்களில் ஆறு விழுக்காடு பேர் மட்டுமே தண்டனை பெறுகிறார்கள். அப்படியானால், ஏனையோர் குற்றம் நிரூபிக்கப்படாமல் சிறைச்சாலையில் அடைந்து கிடந்திருக்கிறார்கள் என்றுதானே பொருள்.

1998இல் உச்சநீதிமன்றம், முடிந்தவரை கைதிகளைப் பிணையில் விடவேண்டும் என்று வழிகாட்டுதல் வழங்கிய பிறகும் கூட, நீதிமன்றங்கள் பிணை வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றன.

விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைபட்டுக் கிடப்பவர்களில் பெரும்பாலோர் அப்பாவிகளாக இருப்பதற்கான வாய்ப்புதான் அதிகம். அவர்களைப் பற்றிக் கவலைப்பட யாருமில்லை என்பது மட்டுமல்ல; அவர்களது குடும்பங்கள் அனுபவிக்கும் வேதனையும், குழந்தைகளின் எதிர்காலமும் அவமானமும் எழுத்தில் வடிக்க இயலாது. வசதியும், வாய்ப்பும் இல்லாதவர்கள் என்பதால் அவர்களுக்காக கவலைப்பட காவல்துறை மட்டுமல்ல சமூகமே தயாராக இல்லை.

குற்றம் நிரூபிக்கப்படாதவரை ஒருவர் நிரபராதி எனும்போது, பிணையில் விடுவிக்காமல் காலவரையின்றி விசாரணை கைதிகளை சிறையில் வைத்திருப்பது என்ன நியாயம்? இரண்டு ஆண்டுகளுக்கு மேல் விசாரணைக் கைதிகளை சிறையில் அடைப்பது நிறுத்தப்பட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்படாமல் போனால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் அரசு முன்வரவேண்டும்.

தேவை பிணை, சிறையல்ல!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com