உள்நாட்டில் ஓராயிரம் பிரச்னைகள் விடை காணப்படாமல் தேங்கிக் கிடக்க, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடுப் பிரச்னையில் பிரதமரை விசாரிப்பதா வேண்டாமா என்று மத்திய புலன் விசாரணை அதிகாரிகள் கையைப் பிசைந்து கொண்டு நின்று கொண்டிருக்க, பிரதமர் விமரிசையாகத் தனது சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியிருக்கிறார். நாடு திரும்பும்போது விமானத்தில் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர், இனிமேல் 4,000 கி.மீ. நீளமுள்ள இந்திய சீன எல்லையில் சமாதானம் நிலவும் என்று தான் நம்புவதாகக் கூறியிருப்பதுதான் வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கிறது.
பிரதமர் எதிர்பார்ப்பது போல எல்லையில் சமாதானம் நிலவுவதற்கு, எல்லைப் பிரச்னைகள் முடிவுக்கு வந்து விட்டனவா இல்லை எந்தவித அத்துமீறலும் இருக்காது என்று சீனத் தரப்பு வாக்குறுதி அளித்திருக்கிறதா என்றால் இரண்டுமே இல்லை. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் வாரம் தவறினாலும் சீனத் துருப்புகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவது வழக்கமாகவே இருந்து வருகிறது.
அருணாசலப் பிரதேச விவகாரத்தில், சீன அரசின் வரைபடங்கள் அதை சீன நாட்டின் பகுதியாகத்தான் காட்டுகின்றன. சமீபத்தில், இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை வளர்க்கும் விதமாக நடத்தப்படும் விளையாட்டுப் போட்டி ஒன்று தென் சீனாவிலுள்ள உச்சி என்கிற நகரத்தில் நடந்தது. இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு வில்வித்தை வீரர்களுக்கு, எல்லாருக்கும் வழங்கப்படுவது போன்ற அனுமதிச் சீட்டு (விசா) வழங்கப்படவில்லை. காகிதத்தில் வழங்கப்படும் தாற்காலிக விசாதான் தரப்பட்டது.
இது இப்போதுதான் என்று இல்லை. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் அருணாசலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இந்தியர்கள் சீனாவுக்குச் செல்வதாக இருந்தால், ஏனைய இந்தியர்களுக்கு வழங்குவது போன்ற அனுமதிச் சீட்டு தரப்படுவதில்லை. அதாவது, அருணாசலப் பிரதேசமும் காஷ்மீரும் இந்தியாவின் பகுதிகள் அல்ல என்றும், பிரச்னைக்குரிய பகுதிகளாக இருப்பதாகவும் சொல்லாமல் சொல்கிறது சீன அரசு.
பிரதமரின் பெய்ஜிங் விஜயத்தின்போது சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லைப்புற ராணுவக் கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தப்படி இனி எல்லையில் ஊடுருவல் இருக்காது என்று நினைத்தால் ஏமாந்துவிடுவோம். ஊடுருவல் இருக்கும், ஆனால், அது பற்றிப் பேசித் தீர்க்கவும், கலந்தாலோசிக்கவும் இரு தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்படும், அவ்வளவே.
இந்தியாவின் கிழக்குப் பகுதியான அஸ்ஸாம் போன்ற மாநிலங்களின் விவசாயமும் தண்ணீர் தேவையும் பிரம்மபுத்ரா நதியால்தான் சாத்தியமாகிறது. சீனாவிலிருந்து உற்பத்தியாகும் இந்த நதியில் பல அணைகளைக் கட்டி வருகிறது சீனா. அந்த நதிநீரைத் திருப்பிவிட்டு, சீனாவின் வறண்ட பகுதிகளை வளப்படுத்தும் பிரம்மாண்ட திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
நதிநீர் பிரச்னையிலாவது பிரதமரின் சீன விஜயத்தில் சாதகமான முடிவு எடுக்கப்பட்டதா என்றால், அப்படி எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியாவின் கவலையை நமது பிரதமர் சீன அதிபருக்கும் பிரதமருக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவித்திருக்கிறார். அவர்களும் அவர் சொன்னதை கவனமாகக் கேட்டுக் கொண்டார்கள். எந்த தீர்மானமான முடிவும் எடுக்கப்படாமல் பிரதமர் தனது சீன விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பி இருக்கிறார்.
சீனாவுடன் மட்டுமான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 325 பில்லியன் டாலர்கள். அதாவது, 19,98,571 கோடி ரூபாய். ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட தினசரி உபயோகப் பொருள்கள் மட்டும் சீனாவிலிருந்து 150 பில்லியன் டாலர்களுக்கு (ரூ.9,22,417 கோடி) இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. முன்பு பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில், நாம் இங்கிலாந்துக்கு பருத்தியை ஏற்றுமதி செய்து, துணிகளை இறக்குமதி செய்ததுபோல இப்போது சீனாவுக்கு இரும்புத் தாது உள்ளிட்ட எல்லா கச்சாப் பொருள்களையும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம். சீனாவுக்கு இவ்வளவு பெரிய வியாபாரத்தை அளிப்பதில் முதன்மை வகிக்கும் இந்தியா, அதையே காரணம் காட்டி சீனாவை தனது நியாயமான கோரிக்கைகளுக்கு இணங்க வைக்கவில்லையே ஏன்?
சீனா நமது அண்டை நாடு. விரோதித்துக் கொள்ள முடியாது என்பது உண்மை. பேச்சுவார்த்தை நடத்தத்தான் வேண்டும், நிஜம். அதற்காக, நமது சுயமரியாதையை விட்டுக் கொடுத்து, அடிபணிந்து நடக்க வேண்டும் என்பது என்ன தலைவிதி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.