திசைதிருப்பல்!

தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ்காந்தி இருவரும் கொல்லப்பட்டதைப் போலத் தானும் கொல்லப்படலாம் என்றும், அதற்காக பயப்படப் போவதில்லை என்றும், காங்கிரஸின் அறிவிக்கப்படாத பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநிலம் அல்வர் மாவட்டம், சுருவில் நடந்த பேரணியில் கூறியிருப்பது அவர்மீது அனுதாபம் ஏற்படுத்துவதற்கு பதிலாக, அவரது முதிர்ச்சியின்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.
Updated on
2 min read

தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ்காந்தி இருவரும் கொல்லப்பட்டதைப் போலத் தானும் கொல்லப்படலாம் என்றும், அதற்காக பயப்படப் போவதில்லை என்றும், காங்கிரஸின் அறிவிக்கப்படாத பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநிலம் அல்வர் மாவட்டம், சுருவில் நடந்த பேரணியில் கூறியிருப்பது அவர்மீது அனுதாபம் ஏற்படுத்துவதற்கு பதிலாக, அவரது முதிர்ச்சியின்மையைத்தான் வெளிப்படுத்துகிறது. அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. நேற்று மத்தியப் பிரதேசம் இந்தூர் நகரில் நடந்த பேரணியில் அதைவிட சிறுபிள்ளைத்தனமான ஒரு கருத்தைத் தெரிவித்துத் தனது அரசியல் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். முசாஃபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களைத் தீவிரவாதத்திற்கு இழுக்க பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. முயற்சித்து வருவதாக மத்திய நுண்ணறிவுப் பிரிவினர் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறியிருக்கிறார்.

ஐ.பி. மற்றும் சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் அரசில் பதவி வகிக்கும் பிரதமர், உள்துறை அமைச்சர் போன்றவர்களுக்குத்தான் கட்டுப்பட்டவை. அப்படியிருக்க, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ஒருவரிடம் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது ஏன் என்கிற கேள்வி எழும் என்று எண்ணிப் பார்க்கும் சக்திகூடவா ராகுல் காந்திக்கு இல்லை? இவரையா இந்தியாவின் வருங்காலப் பிரதமராகக் காங்கிரஸ் முன்னிறுத்தப்

போகிறது?

அடுத்தாற்போல அவர் தெரிவித்திருக்கும் கருத்து, பாரதிய ஜனதாக் கட்சி மதக் கலவரங்களைத் தூண்டிவிட்டு அதில் ஆதாயம் தேட முயல்கிறது என்பது. இந்துமத உணர்வை பா.ஜ.க. தூண்டிவிடுகிறது என்பது நிஜமானால், காங்கிரஸின் செயல்பாடுகள் சிறுபான்மையினரின் வாக்கு வங்கியைக் குறிவைத்துத்தான் நடத்தப்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் உண்மைதானே? முசாஃபர்நகர் கலவரத்துக்குக் காரணம் பா.ஜ.க. என்று தெரிவித்த ராகுல் காந்தி, பல்வேறு முஸ்லிம் அமைப்புகளைத் தங்கள் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் தூண்டிவிடுகிறது என்கிற சமாஜ்வாதி கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளித்திருக்க வேண்டும்.

மதவாதம் என்கிற கோஷத்தை எழுப்புவதன் மூலமும், அதை முன்னிலைப் படுத்துவதன் மூலமும் கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்திருக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முறைகேடுகளையும், ஊழல்களையும் பின்னுக்குத் தள்ளி மூடிமறைக்க ராகுல் காந்தி முற்படுகிறார். கடந்த பத்து ஆண்டுகளில் நடந்திருக்கும் முறைகேடுகள் ஒன்றா இரண்டா?

ஜூலை 2007-இல் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஆதரவாக வாக்களித்த எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது; 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ரூ.1,76,000 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் முறைகேடு; ஆதர்ஷ் குடியிருப்பு என்கிற பெயரில் கார்கில் போரில் பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்கும், இறந்துபோன வீரர்களின் விதவைகளுக்கும் ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளை அரசியல்வாதிகளும் கார்கில் போரில் சம்பந்தப்படாதவர்களும் அபகரித்துக் கொண்டது; அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்திய எஸ் பாண்ட் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு; காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி முறைகேடு; நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

அதெல்லாம் கிடக்கட்டும். ராகுல் காந்தியின் சகோதரி கணவர் ராபர்ட் வதேரா, ஹரியாணா அரசின் துணையோடு விதிகளை மாற்றி, குறைந்த மூலதனத்தில் ரியல் எஸ்டேட் தொழில் தொடங்கிப் பல கோடி லாபம் பார்த்த முறைகேடு பற்றி இதுவரை ராகுல் காந்தி வாயைத் திறக்கவே இல்லையே ஏன்?

ராபர்ட் வதேராவின் முறைகேடுகளையும், அதிகாரவரம்பு மீறல்களையும் எதிர்த்துப் போராடிய அசோக் கெம்கா என்கிற நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது, தவறுகளைத் தட்டிக் கேட்ட குற்றத்திற்காக, ஹரியாணா அரசு ஒன்றன்பின் ஒன்றாக வழக்குத் தொடுக்கிறதே, இதுபற்றி ராகுல் காந்தி ஏன் மூச்சுவிடவில்லை. குற்றப்பின்னணி உள்ள எம்.பி.க்களின் பதவிகளைப் பறிக்கும் சட்டம் முட்டாள்தனமானது என்று கூறி தன்னை அப்பழுக்கற்ற நேர்மையாளராகக் காட்டிக்கொள்ள முயன்ற ராகுல் காந்தி, தனது வீட்டிலேயே நடக்கும் முறைகேடுகள் பற்றி மட்டும் மெüனம் சாதிப்பது ஏன்?

மதவாதமும், தீவிரவாதமும் எந்த வகைப்பட்டதாக இருந்தாலும் கண்டனத்துக்குரியவைதான். எதிர்க்கப்பட, தடுக்கப்பட வேண்டியவைதான். ஆனால் நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் முன்னிலைப்படுத்தபட வேண்டியது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மெகா ஊழல்களும் முறைகேடுகளுமாகத்தான் இருக்கவேண்டும், இருக்க முடியும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com