நல்லதே நினைப்போம்!

கைத்தறி ஆடைகளை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்யவும் விளம்பரப்படுத்தவும் எக்ஸிம் வங்கியும் தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் மற்றும் கைத்தறி நிறுவனங்கள் மற்றும்...
Updated on
2 min read

கைத்தறி ஆடைகளை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்யவும் விளம்பரப்படுத்தவும் எக்ஸிம் வங்கியும் தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் மற்றும் கைத்தறி நிறுவனங்கள் மற்றும் சொசைட்டிகளின் கூட்டமைப்பும் (ஆகாஷ்) ஒரு கூட்டு முயற்சிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது, கைத்தறித் துணி உற்பத்தியாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்பலாம்.

இதுமட்டுமின்றி, தேசிய ஜவுளிக் கழகமும் (என்டிசி) நாடு முழுவதும் உள்ள தனது 84 விற்பனை நிலையங்களில் கைத்தறித் துணிகளை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதும்கூட ஓரளவு பயன்தரக்கூடியதுதான்.

இருப்பினும், கைத்தறி என்பதன் வரையறையை சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு திருத்தியிருப்பதால், இத்தகைய முயற்சிகளின் பலன்கள் உண்மையான கைத்தறி நெசவாளர்களைப் போய்ச் சேருமா என்பதில் ஐயப்பாடு நிலவுகிறது. "விசைத்தறி அல்லாத, ஆட்களால் இயக்கப்படும் அனைத்துத் தறிகளும் கைத்தறி' என்று இருந்ததை, தற்போது மாற்றியிருக்கிறார்கள். அதாவது, "விசைத்தறி அல்லாத, ஆனாலும் நெசவு வேலைகளில் ஏதாவது ஒன்றை மட்டுமாகிலும் ஆட்களே செய்கின்ற நவீன தறிகளும் கைத்தறியாகக் கருதப்படும்' என்று மாற்றியிருக்கிறார்கள்.

அதாவது நெசவில் புடவைத் தலைப்பு வடிவமைப்பை மட்டும் ஆட்களைக் கொண்டு ஜரிகை கோத்து வாங்கினால் போதும். புடவையின் மற்ற பகுதிகளை மோட்டார் வைத்து விசைத்தறி மூலம் வேகமாக நெசவை முடித்தாலும் அது கைத்தறித் துணிதான் என்றாகிறது. இந்த நிபந்தனைத் தளர்வு ஆரம்பத்தில் கைத்தறித் துணி உற்பத்தியை விரைவுபடுத்தும் என்றாலும், விசைத்தறித் துணிக்கும் கைத்தறித் துணிக்கும் வேறுபாடு இல்லாமல் ஆகும்போது, விசைத்தறியாளர்களின் பணபலத்துக்கு முன்னால், ஏழை நெசவாளர்களின் உழைப்பு எடுபடாமல் போகும் வாய்ப்புகளே அதிகம். விசைத்தறித் துணிகள் அனைத்தையுமே கைத்தறித் துணிகளாக விற்றுவிடுவார்கள். இப்போதும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது என்பது வேறு விஷயம்.

காதி என்றால் முரட்டுப் பருத்தியால் பின்னப்பட்ட ஆடை என்று பொருள். விடுதலைப் போராட்ட காலத்தில் கதர் ஆடைகள் பரவலாக விற்பûனையானது. விடுதலைக்குப் பிறகு நூற்பாலை மற்றும் நெசவாலைகள் அதிகரித்தன, பருத்தி கைத்தறி ஆடைகள் விற்பனை குறையத் தொடங்கியது. இதோடு, நைலான், டெரிகாட்டன் போன்ற துணிகளுக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டதால், கைத்தறித் துணிகள் தேக்கம் அடைந்தன.

தற்போது பருத்தி ஆடைகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. ஏறக்குறைய அனைவருமே பருத்தி ஆடைகளைதான் விரும்புகிறார்கள். ஆனால் பருத்தி ஆடைகள் அனைத்தையுமே நெசவாலைகளும் விசைத்தறிகளும்தான் உற்பத்தி செய்கின்றன. கைத்தறி வேட்டிகள், கைத்தறி லுங்கிகள் கூட தற்போது இல்லாமல் ஆகிவிட்டது. பட்டுச் சேலைகளுக்கு மட்டுமே கைத்தறி என்ற நிலைமை உருவாகிவிட்டது.

இந்தியாவில் இப்போதும் துணித் தேவையில் 19 விழுக்காடு கைத்தறியால் ஈடு செய்யப்படுகிறது. நூற்பாலைகள் மிகக் குறைவாகவும், விசைத்தறிகளால் 60 விழுக்காட்டுக்கு அதிகமாகவும் துணிகள் உற்பத்தியாகின்றன. கைத்தறித் துணிக்கு ஏற்றுமதி வாய்ப்புகளும் அதிகம் இருக்கிறது. கடந்த 2012-13 ஆம் ஆண்டில் மட்டுமே, 15.60 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி ஆகியிருக்கிறது. ஆனால் இதனால் பயன் அடைந்தவர்கள் நெசவாளர்கள் அல்லர். ஏற்றுமதியாளர்கள்தான்!

ஒவ்வொரு நூற்பாலையும் உற்பத்தி செய்யும் நூல் அளவில் குறிப்பிட்ட விழுக்காட்டை, சிட்டா நூலாக கைத்தறிக்கு வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. பல நூற்பாலைகள் இந்த கட்டாயக் கடமையை இடையூறாகக் கருதுகின்றன. ஆகவே சிறு நூற்பாலைகளில் குறைந்த விலையில் தரமற்ற சிட்டா நூலை வாங்கி, தங்கள் கணக்கில் சேர்த்து தள்ளிவிடுகிறார்கள். இதெல்லாம் ஜவுளித்துறை அதிகாரிகளுக்குத் தெரியாதது அல்ல.

தமிழ்நாட்டில், கதர் வாரியம் மிகப்பெரும் நட்டத்தில் செயல்படுவதற்கு மூல காரணம், தரம்குறைந்த நூல்களை மில்களிலிருந்து வாங்கும் அதிகாரிகளின் ஊழல்தான். தரம் குறைந்த பருத்தி நூலால் உற்பத்தியாகும் வேட்டி மற்றும் துணி நீடித்து உழைப்பதில்லை. ஆகவே மக்கள் வேறு நிறுவனங்களின் பருத்தி வேட்டி, பருத்தி லுங்கிகளுக்கு மாறும் நிலைமை!

ஏழைகளுக்கு அளிக்கப்படும் விலையில்லா வேட்டி, சேலைகளை கைத்தறி கூட்டுறவுச் சங்கங்களில் வாங்கினால்கூட நெசவாளர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அதிலும் விசைத்தறியாளர்கள் உள்ளே புகுந்து விடுகிறார்கள்.

இன்றைய நெசவாளர்களுக்கு இருக்கும் ஒரே சந்தை, வெளிநாடுகள்தான். தரமான நூல், ரசாயனம் கலவாத இயற்கைச் சாயம், இக்காலத்துக்கான வடிவமைப்பு, இந்திய அரசின் இலச்சினைபெற்ற விற்பனை இவை இருந்தாலே போதும், கைத்தறி நெசவாளர் வாழ்க்கைத் தரத்தை வெளிநாட்டவரைக் கொண்டே உயர்த்த முடியும். அதற்கு இத்தகைய ஒப்பந்தங்கள், வெளிநாட்டில் நடத்தப்படும் கண்காட்சிகள் உதவும்.

இந்தியாவில் இன்னமும் கைத்தறித் தொழிலைச் சார்ந்து 65 லட்சம் பேர் வாழ்கிறார்கள். 27 லட்சம் தறிகள் இயங்குகின்றன. இதில் 87 விழுக்காடு தறிகள் கிராமப்புறங்களில் உள்ளன.

ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனையின் லாபத்தில் ஒரு பகுதியை நெசவாளருக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு மேற்கொண்ட எந்த முயற்சியும் இதுநாள் வரையிலும் முழுமையாகப் பயன் அளிக்கவில்லை. இப்போது அரசு செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களாகிலும் பயன் தர வேண்டும். இல்லையென்றால், கைத்தறி விரைவில் காலாவதி ஆகும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com