ரிசர்வ் வங்கியின் 23-வது ஆளுநராக 50 வயதே நிரம்பிய ரகுராம் ராஜன் பதவி ஏற்றிருக்கிறார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, இந்திய அரசு வெளியிடும் ரூபாய் நோட்டுகளில் கையெழுத்திடப் போகும் ரகுராம் ராஜனின் பதவிக் காலம் ஏன் மூன்று ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பது புரியவில்லை. 1992 முதல் ரிசர்வ் வங்கியின் ஆளுநர்களாகப் பதவி வகித்த சி. ரங்கராஜன், பிமல் ஜலான், வை.பி. ரெட்டி, டி. சுப்பாராவ் என எல்லோருமே குறைந்தது ஐந்து ஆண்டுகள் பதவி வகித்திருக்கும்போது, ரகுராம் ராஜனுக்கு மட்டும் மூன்றாண்டு மட்டுமே பதவிக்காலம் தரப்பட்டிருக்கிறது.
இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடி நிலையை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் துணிந்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்றுக் கொண்டிருப்பதற்கு, ரகுராம் ராஜனைப் பாராட்டத்தான் வேண்டும். இது அவராக ஏற்றுக் கொண்ட சவாலா; இல்லை அவருக்கு இடப்பட்ட கட்டளையா என்பது தெரியவில்லை. ஆனால், புயலில் சிக்கியிருக்கும் கப்பலின் கேப்டனாக இருந்து, அதைக் கரை சேர்க்க முன்வருவது என்பது சாதாரணமான ஒன்றல்லவே!
1990-91-க்குப் பிறகு இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி இப்போதுதான். ஆசியாவில் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்று கருதப்படும் இந்தியாவின் ரூபாய், நாளும் பொழுதும் மதிப்பிழந்து வரும் நிலை; 90 பில்லியன் டாலர் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை போதாது என்று, வரலாறு காணாத விலைவாசி ஏற்றமும் சேர்ந்து கொண்டிருக்கிறது. 2008 போல இந்த ஆண்டும் 8 விழுக்காடு வளர்ச்சி என்று கனவு கண்டு கொண்டிருந்ததுபோய், 4 விழுக்காடு வளர்ச்சி கூட இருக்குமா என்பது சந்தேகம் போலிருக்கிறது.
அப்படிப்பட்ட சூழலில் ரகுராம் ராஜனின் கையில் ரிசர்வ் வங்கியின் தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் நிலைகுலைந்துவிடாமல் காப்பாற்றும் பெரிய பொறுப்பை மன்மோகன் சிங் அரசு அவரிடம் அளித்திருக்கிறது. இதற்கு அவரது பொருளாதாரப் பின்னணி காரணமா, திறமை காரணமா, இல்லை, இரண்டுமே காரணமா என்பதை வரப்போகும் நாள்களில் அவர் இந்தியாவின் நிதி நிலைமையை எப்படிக் கட்டுக்குள் கொண்டுவரப் போகிறார் என்பது தெளிவுபடுத்தும்.
ரகுராம் ராஜனின் பின்னணிதான் என்ன? தமிழராக இருந்தாலும் இவர் பிறந்ததும் வளர்ந்ததும் வடநாட்டில்தான். இந்திய வெளிவிவகாரத்துறை அதிகாரியின் மகனான ரகுராம் பிறந்தது போபாலில். தில்லி பப்ளிக் ஸ்கூலில் பள்ளிப் படிப்பும், தில்லி ஐ.ஐ.டி.யில் பொறியியல் படிப்பும், ஆமதாபாத் இந்திய நிர்வாக இயல் நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) நிர்வாக இயலும் படித்துத் தேர்ந்தவர். தில்லி ஐ.ஐ.டி.யிலும் சரி, ஆமதாபாத் ஐ.ஐ.எம்.மிலும் சரி சிறந்த மாணவருக்கான தங்கப் பதக்கம் பெற்றவர். இதெல்லாம் போதாதென்று வங்கியியல் பற்றிய ஆய்வில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
சிகாகோ பல்கலைக் கழகத்துடன் இணைந்த பூத் ஸ்கூலில் வணிகவியல் பேராசிரியராகப் பணியாற்றும்போதே, சர்வதேச நிதி ஆணையத்தில் (ஐ.எம்.எப்) வேலை கிடைத்தது. மிக இளைய வயதில் சர்வதேச நிதி ஆணையத்தின் உயர் அதிகாரியாகப் பதவி வகித்த பெருமை ரகுராம் ராஜனுக்கு உண்டு.
2005-ஆம் ஆண்டில் ரகுராம் ராஜன் வங்கிகளில் கடன் வழங்கும் முறை பற்றிய ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், அப்போது கடைப்பிடிக்கப்படும் முறை விரைவிலேயே மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு வழிகோலும் என்று எச்சரிக்கை செய்திருந்தார். அவர் கணித்ததுபோலவே, 2008-ஆம் ஆண்டில் அமெரிக்க பொருளாதாரச் சந்தையை ஆட்டம் காண வைத்த நிதிநெருக்கடி ஏற்பட்டபோது, பொருளாதார நிபுணர்கள் ரகுராம் ராஜனை வியப்புடன் பார்த்தனர். உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவராக ரகுராம் ராஜன் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
இந்தியப் பொருளாதாரம் பிரச்னைகளை எதிர்நோக்கத் தொடங்கியபோது, நிதியமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டார். 2012-இல் பதவி ஏற்றுக்கொண்ட ரகுராம் ராஜன் இப்போது ரிசர்வ் வங்கியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.
இதற்கு முன்னால் பதவி வகித்த சுப்பாராவைப் பொருத்தவரை, ரிசர்வ் வங்கியும் நிதியமைச்சகமும் பல பிரச்னைகளின் ஒத்த கருத்துடையவையாக இருக்கவில்லை. சொல்லப் போனால், அரசின் பல கொள்கை முடிவுகளும், மானியங்களை அள்ளி வீசும் திட்டங்களும், நிதி நிர்வாகமும்தான் பொருளாதாரச் சரிவுக்குக் காரணம் என்பதைப் பல தடவை முந்தைய ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ் மறைமுகமாகச் சுட்டிக்காட்டி எச்சரித்திருக்கிறார்.
இப்போது பதவி ஏற்றிருக்கும் ரகுராம் ராஜன், நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். கடந்த ஓர் ஆண்டில் நிதியமைச்சர் எடுத்த பல முடிவுகளுக்குக் காரணமாக இருந்தவர். அமெரிக்கக் குடியுரிமையுடைய வெளிநாடுவாழ் இந்தியர். (American Green Card Holder). அது மட்டுமல்ல. சர்வதேச நிதி ஆணையத்துடன் நெருங்கிய தொடர்புடையவர். அதனால், சர்வதேச நிதி அமைப்புகள் இந்தியப் பொருளாதாரத்தைச் சிக்கலிலிருந்து காப்பாற்றும் என்பது அரசின் நம்பிக்கையாக இருக்கக் கூடும்.
"என்னிடம் பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்கும் மந்திரக்கோல் எதுவுமில்லை' என்கிற அறிவிப்புடன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்றிருக்கிறார் ரகுராம் ராஜன். தேர்தல் நெருங்கும் வேளையில், கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க அரசு அனுமதிக்குமா? அப்படியே எடுத்தாலும், அரசுத் தரப்பு ஒத்துழைக்குமா? தெரியாது. ஒன்று மட்டும் நிச்சயம். இவர்தான் அரசின் கடைசி நம்பிக்கை என்பதுதான் அது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.