தாய்மை தாய்மைதானே?

இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவோர்- மணம்புரிந்தவராக, மலட்டு தம்பதியாக, இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று மத்திய மருத்துவ சேவைகள் இயக்ககம் ஆணை பிறப்பித்துள்ளது.
Updated on
2 min read

இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவோர்- மணம்புரிந்தவராக, மலட்டு தம்பதியாக, இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று மத்திய மருத்துவ சேவைகள் இயக்ககம் ஆணை பிறப்பித்துள்ளது. வெளிநாட்டவர் என்றால் அந்த தம்பதியில் ஒருவர் இந்தியராக இருக்க வேண்டும் என்கிற நிபந்தனை அர்த்தமற்றது.

தங்களுள் யாரேனும் ஒருவருக்கு மலட்டுத்தன்மை உள்ளதால் குழந்தை பெற முடியாத நிலையில் தவிக்கும் பெற்றோர் யாராக, எந்த நாட்டினராக இருந்தால்தான் என்ன?

வாடகைத்தாயாக ஒப்புக்கொள்பவருக்கு மருத்துவம் மற்றும் வாழ்க்கைச் செலவுக்காக ஒப்புக்கொண்ட பணம், இடைத்தரகர்கள் குறுக்கீடு இல்லாமல், முழுமையாகக் கிடைக்க புதிய விதிமுறைகளை அரசு ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தால், குழந்தைப் பேறு விழைவோருக்கு மட்டுமின்றி, வாடகைத்தாய்க்கும் நிபந்தனை விதித்திருக்கிறது மத்திய அரசு. ஒரு பெண் தனது வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே வாடகைத்தாயாக இருக்கலாம் என்றும் நிபந்தனை விதித்திருக்கிறது.

ஒரு வாடகைத்தாய் உடல்வலுவுடன் இருந்து, மேலும் ஒரு குழந்தையை பெற்றுத்தர முடியும் என்றால், அவர் அதற்கு முற்பட்டால் என்ன தவறு? ஒருவர் ஒரு சிறுநீரகத்தை மட்டுமே விற்க முடியும் என்பதைப் போன்ற மருத்துவச்சூழல் மகப்பேறில் கிடையாது. ஒரு தாய், நலமாக இருந்தால், அவர் மீண்டும் குழந்தை பெறுவதால் எந்த பாதிப்பும் அவருக்கு ஏற்படப்போவதில்லை. ஏன் ஒரே ஒரு குழந்தைக்கு மட்டும்தான் வாடகைத்தாயாக இருக்கலாம் என்கின்ற அர்த்தமற்ற விதிமுறை என்பது புரியவில்லை.

இந்தியாவின் பெருநகரங்களில்} குறிப்பாக சென்னை, தில்லி, மும்பை ஆகிய நகரங்களில் வாடகைத்தாய் மூலமாக ஆண்டுக்கு சுமார் 2000 குழந்தைகள் பிறக்கின்றன. இந்தியாவுக்கு வாடகைத்தாயைத் தேடி வருவோரில் 40 விழுக்காடு தம்பதி வெளிநாட்டவராக இருக்கிறார்கள். இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் மகப்பேறு வழங்கும் மருத்துவத் துறையில் 230 கோடி டாலர் கிடைத்துக்கொண்டிருக்கிறது.

வாடகைத்தாய்க்காக தரப்படும் தொகை அதிகபட்சம் ரூ.5 லட்சமாக இருக்கிறது. ஆனால், இடைத்தரகர்கள்- பெரும்பாலும் செயற்கை கருவூட்டல் மருத்துவனைகள்தான்- பெரும் பகுதியை எடுத்துக்கொண்டு, சில ஆயிரங்களை மட்டுமே இந்த அப்பாவி ஏழைப் பெண்களுக்கு அளிக்கிறார்கள். இந்த அநீதியை தடுப்பதுதான் இன்றைய தேவை. ஆனால் அது குறித்து மத்திய அரசின் சுகாதாரத் துறை அதிக அக்கறை காட்டுவதாகவே தெரியவில்லை.

வாடகைத்தாய், தான் பேசிய தொகையைத் தவிர அந்த குழந்தையிடம் வேறு எந்த உரிமையையும் எந்தக் காலத்திலும் பெற முடியாது என உச்சநீதிமன்றம் மிகத்தெளிவாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அந்தக் குழந்தையுடன், அதன் பெற்றோருடன் தொடர்பில் இருப்பதும்கூட சாத்தியமில்லை. இந்நிலையில், அந்த வாடகைத்தாய்க்கு தான் பெற்றெடுத்த குழந்தைக்காக கிடைக்கும் பணம் மட்டுமே சொந்தம். இத்தகைய வாடகைத்தாய்களை முறையாகப் பதிவு செய்து, அவர்களுக்கு உரிய பணத்தை முதலிலேயே அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தச்செய்து, பிறகு கருவூட்டல் நடவடிக்கைகளில் இறங்கும்படி நிபந்தனைகளை விதிப்பதுதான் இப்போதைய தேவை.

செயற்கைக் கருவூட்டலில் கருச்சிதைவு அல்லது மருத்துவமனையே கருக்கலைப்பு செய்தாலும் நிர்ணயிக்கப்பட்ட தொகை இந்த வாடகைத் தாய்க்கு கொடுக்கப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்க வேண்டும்.

வாடகைத்தாயாக இருக்க சம்மதிப்போர் பெரும்பாலும் ஏழ்மையின் காரணமாகத்தான் பத்துமாதச் சுமையை ஏற்றுக்கொள்கிறார்கள். இது சரியா தவறா என்பதைக் காட்டிலும், இந்த நடைமுறையை ஏற்றுக்கொள்வதென முடிவு செய்துவிட்டால், இந்த வாடகைத்தாயருக்கு எந்த அளவுக்கு நன்மை கிடைக்க வேண்டுமோ அதனை உறுதிப்படுத்துவது அரசின் கடமை.

செயற்கைக் கருவூட்டல் மையங்கள், பல மலட்டு தம்பதிகளிடம் ஒரு கருவை செயற்கை முறையில் கருப்பையில் வைக்க பல லட்சம் ரூபாய் வசூலிக்கின்றன. ஆனால் இந்த கரு பாதியில் கலைந்துபோனால், அது அந்த பெண்ணின் கருப்பை சரியில்லை என்பதாக முடிந்து போகிறது. ஒரு குழந்தைக்காக ஏங்கும் தம்பதியிடம் பணம் பறிக்கும் கூடமாக செயற்கை கருதரிப்பு மருத்துவமனைகள் மாறிக்கொண்டிருக்கும் அவலம் நடந்துகொண்டிருக்கிறது. இதைத் தடுக்க செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப சட்டம் இன்னும் அமலுக்கு வராமலே இருப்பது நியாயமல்ல.

சொந்தமோ, வாடகையோ தாய்மை தாய்மைதானே? அதனால், ஏமாற்றப்படலாகாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com