சல்மானின் சூழ்ச்சி!

இதற்கு முன்னால் இருந்த எந்தவொரு அரசும் செய்யத் துணியாத நடவடிக்கைகளையும், பிறப்பிக்காத உத்தரவுகளையும் மன்மோகன் சிங் அரசு எடுத்து வருகிறது.
Updated on
2 min read

இதற்கு முன்னால் இருந்த எந்தவொரு அரசும் செய்யத் துணியாத நடவடிக்கைகளையும், பிறப்பிக்காத உத்தரவுகளையும் மன்மோகன் சிங் அரசு எடுத்து வருகிறது. சந்தடிச் சாக்கில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சில உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. எதிர்க்கட்சிகள் தேர்தல் நேரப் பிரசாரத்தில் மூழ்கி இருப்பதும், ஊடகங்களின் கவனமும் தேர்தலில் திசை திரும்பி இருப்பதும், காங்கிரஸ் தலைமைக்கு சாதகமாக இருக்கின்றன.

சமீபத்தில் மத்திய அரசு எடுத்திருக்கும் நிர்வாக முடிவுகளில் ஒன்று, வாஷிங்டன், பெய்ஜிங், லண்டன் போன்ற சர்வதேச அரசியல் முக்கியத்துவம் பெற்ற நாடுகளின் தலைநகரங்களுக்கான இந்தியத் தூதர்களின் பணிக்காலத்தை குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் என்று நிர்ணயிக்க முற்பட்டிருப்பது. தூதர்களுக்குக் குறைந்தபட்ச பதவிக்காலம் என்பது முதலில் சரிதானா என்பதே சர்ச்சைக்குரிய ஒன்று. ஏதாவது ஒரு தூதருக்கு அவர் பதவி வகிக்கும் நாட்டு அரசுடன் கருத்து வேறுபாடோ பிரச்னையோ ஏற்பட்டால் அவரை மாற்றாமலா இருக்க முடியும்?

அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால்தான் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் இருக்காது என்கிற வெளியுறவுத் துறை அமைச்சர்

சல்மான் குர்ஷிதின் கருத்தும் ஏற்புடையதல்ல. ஆட்சி மாறும்போது, தேவைப்பட்டால் வெளியுறவுக் கொள்கையிலும் மாற்றம் ஏற்படலாம், தவறில்லை.

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டாலே, பதவியில் இருக்கும் அரசு காபந்து அரசாகிவிடுகிறது. எந்தவிதக் கொள்கை முடிவை எடுக்கும் அதிகாரமும் அந்த அரசுக்குக் கிடையாது. நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் உண்டு என்றாலும், அப்படி எடுக்கும் நடவடிக்கைகள் அடுத்து அமைய இருக்கும் அரசை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்துவதாகவோ, பாதிப்பதாகவோ இருக்கக்கூடாது என்பது உலகளாவிய அளவில் எழுதப்படாத சட்டம்.

வெளியுறவுத்துறை அமைச்சகம் தூதர்களுக்கு இரண்டாண்டு பதவிக் காலத்தை உறுதிப்படுத்தும் உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் இப்போது ஏன் இத்தனை அவசரம் காட்ட வேண்டும் என்பது புதிரொன்றும் அல்ல.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமக்குத் தேவையான அதிகாரிகளுக்குத் தொடர்ந்து பதவி நீட்டிப்பு, மறு வேலைவாய்ப்பு, மிகவும் அணுக்கமான அதிகாரிகளுக்கு ஆளுநர் பதவி, தூதர் பதவி என்று தொடர்ந்து அளித்து வந்திருக்கிறது. இரண்டாண்டுகள் பதவியை உறுதிப்படுத்துவது என்பது, ஓய்வு பெற்றாலும் பதவியில் தொடரும் வாய்ப்பை அதிகாரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் அரசு ஊழியராகச் சேரும்போதே, அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்பது தெரிந்துவிடும். அதேபோல, வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தூதராக நியமிக்கப்படும்போதே, அவர் ஓய்வு பெற வேண்டிய தேதி எது என்பது அரசுக்குத் தெரிந்துதான் இருக்கிறது. குறிப்பாக, தூதர்களாக நியமிக்கப்படும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தொடர்ந்து ஒரு நாட்டில் இரண்டாண்டு பதவி வகிக்க வேண்டும் என்பதுதான் அரசின் உண்மையான நோக்கமாக இருக்குமானால், இரண்டு ஆண்டுகளில் ஓய்வுபெறாத அதிகாரிகளை அந்தப் பதவியில் நியமித்தால் பிரச்னை தீர்ந்துவிடுமே...

இதுபோல பதவி நீட்டிப்புக் கொடுப்பது, பதவிக்காலத்தை நிர்ணயித்து ஓய்வுபெறுவதை ஒத்திப் போடுவது போன்ற அரசின் நடவடிக்கைகள் பலரது வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்கும் தன்மையின. அதுமட்டுமல்ல, ஓய்வுக்குப் பிறகும் பணியில் தொடரவும், ஏதாவது பதவி பெறவும் வாய்ப்புகள் உருவாக்கப்படுவதன் மூலம், ஆட்சியாளர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் சேவகம் செய்யும் அடிமை மனோபாவம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுவிடும் (ஏற்பட்டு விட்டது!).

அதிகார வர்க்கம் அரசியல் முத்திரை குத்திக் கொண்டிருப்பதும், ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று பிரிந்து கிடப்பதும் ஜனநாயகத்திற்கே ஆபத்து. தேர்தல் ஆணையம் அதிகாரிகளை மாற்றி அவர்களுக்கு அரசியல் முலாம் பூச முற்பட்டிருப்பது அதைவிட வேதனை. பாசிச ஆட்சியில்தான் நிர்வாகத்தை ஆட்சியாளர்கள் கைப்பாவையாக்கி வைத்திருப்பார்கள். அப்படியொரு நிலைமை இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது என்கிற அச்சம் மேலோங்குகிறது.

இப்போது எடுத்திருக்கும் முடிவை மன்மோகன் சிங் அரசு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் எடுத்திருந்திருக்க வேண்டும். போகிற போக்கில் தனக்கு விசுவாசமாக இருந்த அதிகாரிகளுக்குச் சலுகை புரிய நினைக்கிறது இந்த அரசு. சட்டப்படியும், தார்மிக ரீதியாகவும் சல்மான் குர்ஷிதின் முடிவு ஏற்புடையதல்ல!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com