தேவைதான் தணிக்கை

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் லாப - நட்ட கணக்குகளை பொதுக்கணக்கு தணிக்கை அலுவலர் (சி.ஏ.ஜி.) ஆய்வு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதால், அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கலாம்.
Updated on
2 min read

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் லாப - நட்ட கணக்குகளை பொதுக்கணக்கு தணிக்கை அலுவலர் (சி.ஏ.ஜி.) ஆய்வு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதால், அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் தொலைத்தொடர்புத்துறை தனியாருக்கு திறந்துவிடப்பட்ட பிறகு, பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொடர்ந்து நட்டத்தில் செயல்படுவதும், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மிகப்பெரும் லாபம் பெறுவதும் வழக்கமாகிவிட்டது.

அலைக்கற்றைகளை ஏலத்துக்கு எடுப்பதிலும்கூட, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து, ஏலத்தொகை உயர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்கின்றன. ஏலம் எடுக்கும் நிறுவனங்கள், தங்கள் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அரசுக்கு உரிமக்கட்டணமாக வழங்க வேண்டும். ஆனால், வருவாயைக் குறைத்துக்காட்டி உரிமக் கட்டணத்தையும் குறைவாகவே செலுத்தும் நிலைமைதான் நடைமுறையில் உள்ளது. சி.ஏ.ஜி. தணிக்கை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதாடிய மத்திய அரசு, தனது வாதத்தில் முன்வைத்த முதன்மைக் கருத்தும் இதுதான்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலம் நடத்தப்பட்டதன் மூலம் அரசுக்கு ரூ.61,162 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதில் சுமார் 25 சதவீதத் தொகையை முதலிலேயே கட்டிவிடவேண்டும் என்பதால், நடப்பு நிதியாண்டில் 18,000 கோடி வரை உடனடி வருவாய் கிடைக்கும். இருப்பினும்கூட, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடையும் லாபத்தையும், அவர்கள் தற்போது ஏலத்தில் எடுத்துள்ள தொகையையும் ஒப்பிட்டால் பெரிய இடைவெளி இருப்பதைக் காணலாம்.

அரசு - தனியார் பங்கேற்புத் திட்டங்கள் அனைத்திலும் சி.ஏ.ஜி. தணிக்கை செய்ய அதிகாரம் பெற்றிருக்கிறது. ஆனால் இதுவரை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் சி.ஏ.ஜி. தணிக்கை நடத்தப்பட்டதே இல்லை. காரணம், அதில் அரசுக்கு பங்கு இல்லை என்பதால்தான்.

இருப்பினும், இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதிகள், அலைக்கற்றை என்பது தேசத்தின் சொத்து, அதை ஏலத்தில் எடுத்து பயன்படுத்தும் நிறுவனங்களை அரசின் தணிக்கை அமைப்பு ஆய்வு செய்வதற்கு உரிமை பெற்றுள்ளது என்று கூறியுள்ளது.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் சி.ஏ.ஜி. தணிக்கை செய்வதால் இவர்களது வளர்ச்சி தடைபடப் போவதில்லை. ஆனால், இவர்கள் வாடிக்கையாளர்களிடம் பெறும் பணத்துக்கு ஏற்ப சேவை வழங்குகிறார்களா அல்லது அரசின் அலைக்கற்றையை ஏலத்தில் பெற்று அபரிமிதமான லாபத்தை (500 மடங்கு வரை) சம்பாதிக்கிறார்களா என்பதை சி.ஏ.ஜி. தணிக்கை அம்பலப்படுத்திவிடும். ஆகவே, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளரைக் கவரும் திட்டங்கள், சலுகைகள், நிர்ணயிக்கும் கட்டணங்கள், லாபத்தை அரசுக்கு காட்டாமல் வேறுவகையில் திருப்பிவிடும் முறைகேடுகள் அனைத்தையும் சி.ஏ.ஜி. தணிக்கை கண்டறிந்து சொல்லும். இது பொதுமக்கள் விவாதத்துக்கும் இலக்காகும் என்பதால், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்த தணிக்கை ஒரு கடிவாளமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதேபோன்று, தனியார் மின் உற்பத்தி நிலையங்களையும் சி.ஏ.ஜி. தணிக்கைக்கு உள்படுத்த வேண்டும் என்று தில்லி அரசின் முன்னாள் முதல்வர் கேஜரிவால் உத்தரவிட்டார். இந்த விவகாரத்திலும்கூட, தில்லிக்கு மின் விநியோகம் செய்யும் மூன்று தனியார் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் உயர்நீதிமன்றம் தில்லி அரசுக்கு சாதகமாகவே இருந்தது.

தனியார் மின் உற்பத்தி நிலையங்கள், அரசின் பல்வேறு சலுகைகளைப் பெற்றுதான் மின் உற்பத்தியில் ஈடுபடுகின்றன. இப்படி அனைத்து சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு, மின்சாரத்தை அதிக விலைக்கு அரசுக்கு விற்பார்களேயானால் அது சரியாக இருக்குமா? வரிப்பணம் செலுத்தும் மக்கள் என்ன ஏமாளிகளா?

தனியார் மயம் என்பதில் தவறே கிடையாது. தனியார் மயம் என்கிற பெயரில் கொள்ளை லாபமடைவதும், எந்தவிதக் கண்காணிப்பும் இல்லாமல் மக்களைச் சுரண்டுவதும்தான் பிரச்னை. முறையான தணிக்கைக்கு உள்படுத்தப்பட்டு, கையூட்டுப் பெறாமல் மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு முறையான கண்காணிப்புடன் நிர்வாக இயந்திரம் செயல்பட்டால், தனியார் மயம் மூலம் மிகப்பெரிய வளர்ச்சியை நாம் அடைய முடியும்.

தனியார் மின் உற்பத்தி நிலையங்கள், தனியார் தகவல்தொடர்பு நிறுவனங்கள் மட்டுமின்றி, அரசாங்கத்திடம் இடம், மின்சாரம், சொத்துவரி, தொழில்வரியில் சலுகை மற்றும் ஏற்றுமதி, இறக்குமதியில் வரிவிலக்கு பெறும் நிறுவனங்கள் அனைத்தையுமே சி.ஏ.ஜி. ஆய்வு செய்வதில் தவறில்லை. இந்தப் பட்டியலில் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களையும்கூட சேர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com