பிரதமர் நரேந்திர மோடியின் அவசரம் புரிகிறது. "வளர்ச்சி' என்கிற கோஷத்தை முன்வைத்து அசாதாரண தேர்தல் வெற்றியை ஈட்டியிருப்பதால், இந்தியாவை விரைந்து வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்கிற அவரது ஆர்வமும், அர்ப்பணிப்பு உணர்வும் பாராட்டுக்குரியவை. இந்தியாவை உலகத்தின் உற்பத்திக் கேந்திரமாக மாற்ற வேண்டும் என்கிற பிரதமர் மோடியின் முனைப்பு வெற்றி பெறுமானால், வேலையில்லாத் திண்டாட்டம் கணிசமாகக் குறையும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
இதெல்லாம் சரி. ஆனால் பிரதமர் மோடி தனது அதிவேக வளர்ச்சித் திட்டத்திற்கு சீனாவைத் துணைக்கு அழைத்துக் கொண்டிருப்பதுதான் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் முடிவுகள் வெளிவருவதுவரை, பிரதமர் மோடி சீனாவைப் பற்றி முன்வைத்த கருத்துகளை அவர் சற்று நினைத்துப் பார்த்தால், இந்த அளவுக்கு சீனாவுடன் நேசக்கரம் நீட்ட அவர் முன்வர மாட்டார். கூடாது.
சீன அதிபரின் சமீபத்திய இந்திய விஜயத்தின்போது, சென்னைக்கும் தில்லிக்கும் இடையே 3,200 கோடி டாலர் முதலீட்டில் 1,754 கி.மீ. தொலைவுக்கான அதிவிரைவு புல்லட் ரயில் திட்டத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. சீன ரயில்வே அதிவேகமானது என்பது மட்டும்தான் நமக்குத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மிகவும் பாதுகாப்பில்லாத ரயில்வே சீனாவில் இயங்குகிறது என்பதை அங்கே அடிக்கடி நடக்கும் விபத்துகள் வெளிப்படுத்துகின்றன. ஜப்பானும், பிரான்ஸூம்தான் விரைவு ரயில் தயாரிப்பு, போக்குவரத்தில் முன்னணி வகிக்கின்றனவே தவிர சீனாவல்ல. கடந்த மாதம் மெக்சிகோ சீனாவுடன் விரைவு ரயிலுக்காகச் செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தை, பாதுகாப்புக் காரணங்களுக்காக, ரத்து செய்திருக்கிறது என்பதை இந்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவை உலக நாடுகளின் உற்பத்திக் கேந்திரமாக்கும் முனைப்பு பல சீனத் தயாரிப்பாளர்களுக்கு பெரு மகிழ்ச்சி அளித்திருக்கிறது. "தேய்பிறைத் தொழில் துறைகள்' என்று சீனாவால் புறக்கணிக்கப்படும், தவிர்க்கப்படும் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் அடைக்கலம் தேடக்கூடும் என்று தெரிகிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடுகளில் ஒன்றான "க்ளோபல் டைம்ஸ்' என்கிற தினசரியில் வெளிவந்திருக்கும் கட்டுரையில் இதுபற்றிய குறிப்பு காணப்படுகிறது. "இந்தியாவின் நம்பிக்கை சீனாவின் தேய்பிறைத் தொழில் நிறுவனங்களில் இருக்கிறது' என்கிற தலைப்பிட்ட அந்தக் கட்டுரையில், உற்பத்தித் துறையில் சீனா அடைந்திருக்கும் வெற்றி ரகசியத்திலிருந்து மோடி அரசு பாடம் படிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் கட்டுரையாளர்.
பழைய தொழில்நுட்பமும், அதிகமாக சுற்றுப்புற மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளும் சீனாவில் மெல்ல மெல்ல மூடப்பட்டு வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளை வியத்நாம், லாவோஸ், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு இடமாற்றம் செய்து வருகிறது சீனா. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சமீபத்தில் வியத்நாமில் சீனாவுக்கு எதிரான போராட்டமே நடந்தது குறிப்பிடத்தக்கது.
ஜவுளி, ரசாயனம், இரும்பு உருக்கு, மோட்டார் உதிரிப் பாகங்கள் போன்ற தொழிற்சாலைகளுக்கான உற்பத்திச் செலவு சீனாவில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதனால், அந்தத் தொழிற்சாலைகளை, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ள ஏனைய ஆசிய நாடுகளுக்கு மாற்றும்படி, சீன அரசு தொழிலதிபர்களை வலியுறுத்துகிறது. அதனால்தான் சமீபகாலமாக, சீனாவின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலைகள் நடத்துபவர்கள் இந்தியாவுக்கு அடிக்கடி வருகிறார்கள். இங்கே தொழிற்சாலை நிறுவுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இப்போது சீனாவும் அமெரிக்காவைப்போல, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை வெளிநாடுகளில் நிறுவுவது என்கிற முதலாளித்துவ மனப்போக்குக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தரம் குறைந்த பொருள்களை அதிக அளவில் உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு உலகச் சந்தையில் விற்பது என்கிற சீனாவின் உத்திக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் இந்தியாவை உலக உற்பத்திக் கேந்திரமாக்கும் திட்டம் மிகவும் வசதியாக இருக்கிறது. இதன் விளைவு எப்படி இருக்கும் என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்?
அதிவிரைவான பொருளாதார முன்னேற்றம் என்பது சாத்தியமல்ல. மிதமிஞ்சிய அவசரமும் வேகமும் விவேகமாகாது என்பதைப் பிரதமர் நரேந்திர மோடி உணர்ந்து செயல்பட வேண்டும். அதிலும் குறிப்பாக, சீனாவுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பது என்பது ஆபத்தை விலைகொடுத்து வாங்கியதாகிவிடும்.
சீனாவைப் பகைத்துக் கொள்ள வேண்டும் என்றோ, சீனாவுடன் போர் தொடுக்க வேண்டும் என்றோ நாம் கூறவில்லை. இந்தியா சீனாவிடம் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

