ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சட்டப்பேரவைக்கான மூன்றாவது கட்ட வாக்கெடுப்புக்குத் தயாராகிறது. முதல் இரண்டு கட்ட வாக்கெடுப்புகளும், ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் ஆகிய மூன்று பகுதிகளிலும் நடந்தன என்பதும், எல்லாப் பகுதிகளிலும் பெருவாரியான மக்கள் வாக்களிக்கத் திரண்டு வந்தனர் என்பதும் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதம் தலைதூக்குவதற்குக் காரணமே முறையாக நடத்தப்படாத தேர்தல்கள்தான். ஷேக் அப்துல்லாவின் காலத்திலேயே தேர்தல் முறைகேடுகளும், கள்ள வாக்குகள் போடுவதும், முடிவுகள் மாற்றி அறிவிக்கப்படுவதும் தொடங்கிவிட்டன. நியாயமாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இளைஞர்கள், ஷேக் அப்துல்லா குடும்பத்தினருக்கு வேண்டாதவர்களாக இருந்தால், அவர்கள் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். அப்படி அநீதி இழைக்கப்பட்டவர்கள் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளாக மாறினர்.
இந்தியாவில் ஏனைய மாநில சட்டப்பேரவைகளைப் போல அல்லாமல் ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடைபெறும். மாநில சட்டப்பேரவையின் தொகுதிகள் 111 என்றாலும்கூட, இதில் 24 இடங்கள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரப் பகுதியைச் சேர்ந்தவை. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் சாசனப்படி இந்த 24 இடங்களும் அதிகாரப்பூர்வமாகக் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், அரசு அமைப்பதற்கோ, பெரும்பான்மையை நிரூபிப்பதற்கோ இந்த 24 இடங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 87. இதில் காஷ்மீர் பள்ளத்தாக்கு 46 உறுப்பினர்களையும், ஜம்மு 37 உறுப்பினர்களையும், லடாக் 4 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கின்றன. போதுமான அளவு பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று மாநில ஆளுநர் கருதினால், இரண்டு பெண் உறுப்பினர்களை நியமிக்க அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
அதிகரித்த வாக்காளர் பங்கேற்பு, ஜம்முவிலும், லடாக் பகுதியிலும் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள ஆறு தொகுதிகளில் ஜம்மு, உதாம்பூர், லடாக் ஆகிய மூன்று தொகுதிகளை பா.ஜ.க.வும், பாரமுல்லா, ஸ்ரீநகர், அனந்த்நாக் ஆகிய தொகுதிகளை மக்கள் ஜனநாயகக் கட்சியும் வென்றன. சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஏறத்தாழ அதே போன்ற முடிவுகள்தான் காணப்படும் என்பதுதான் பொதுவான கணிப்பு.
ஜம்மு-காஷ்மீர் மக்களால் மிகவும் வெறுக்கப்படும் கட்சியாக தேசிய மாநாட்டுக் கட்சி ஷேக் அப்துல்லா காலத்திலிருந்தே தொடர்கிறது. தேர்தல் முறைகேடுகள் அல்லது தீவிரவாதிகளின் அச்சுறுத்தலால் வாக்குப்பதிவு நடைபெறாமல் இருப்பது போன்ற நிகழ்வுகளால்தான் அந்தக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறதே தவிர, மக்கள் செல்வாக்குடன் அக் கட்சி ஆட்சி அமைத்ததே இல்லை.
கடந்த 2008 சட்டப்பேரவைத் தேர்தலில், நகர்ப்புறங்களில் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்பட்டதால் தேசிய மாநாட்டுக் கட்சி கூடுதலாக 11 இடங்களை வென்று, 87 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் அதிக இடங்களை வென்ற கட்சியாகிவிட்டது. மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சியைவிட 25% அதிகம் வாக்குகள் பெற்றிருந்தும் காங்கிரஸின் துணையுடன் ஆட்சி அமைத்தது என்னவோ ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டுக் கட்சிதான்.
2011-இல் 31 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தல்களிலும், காஷ்மீர மக்கள் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களை மீறி பெருந்திரளாக வாக்கெடுப்பில் பங்கேற்றனர். 80% முதல் 85% வரை வாக்குப்பதிவு நடந்தது. இப்போது சட்டப்பேரவைத் தேர்தல் வாக்களிப்பிலும் அது தொடர்கிறது.
ஜம்மு பகுதியிலுள்ள 37 இடங்களிலும், லடாக்கிலுள்ள 4 இடங்களிலும் ஒட்டுமொத்தமாக பா.ஜ.க. வெற்றி பெற்றாலும்கூட பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துவிட முடியாது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஐந்தாறு இடங்களில் வெற்றி பெற்றால் அது சாத்தியமாகலாம். அதனால்தான், அதிக அளவில் பா.ஜ.க. முஸ்லிம் வேட்பாளர்களைக் களமிறக்கி இருக்கிறது. அப்படியே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், எந்த அளவுக்கு அந்த ஆட்சியை காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது தெரியவில்லை.
மக்கள் தீவிரவாதிகளின் எதிர்ப்பையும் மீறி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுடன் வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள். அவர்களது நம்பிக்கையை அடிப்படையாக வைத்து வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் நிலையான ஆட்சி ஏற்பட்டால் மட்டுமே காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும். தீவிரவாதத்திற்கும் முற்றுப்புள்ளி விழும். என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

