தற்கொலையும் காரணமும்!

தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட இந்த ஆறு மாதங்களில் 350க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
Updated on
2 min read

தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட இந்த ஆறு மாதங்களில் 350க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மகாராஷ்டிர மாநிலம் விதர்பாவில் நிலைமை இன்னும் மோசம். கடந்த 2013-இல் மட்டும் 3,146 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த ஆண்டில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டிவிடும் போலிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் 15 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் நடைபெறும் தற்கொலைகளில் 30% மகாராஷ்டிர மாநிலம் விதர்பாவைச் சேர்ந்த விவசாயிகளுடையது. தெலங்கானாவும், விதர்பாவும் சேர்த்து இந்தியாவின் மொத்தத் தற்கொலைகளில் 40% தற்கொலைக்குக் காரணமாக இருக்கின்றன. இதை ஏதோ தெலங்கானா, மகாராஷ்டிர மாநிலங்களின் பிரச்னை என்றோ, அங்குள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னை என்றோ கருதி நாம் வாளாவிருந்துவிட முடியாது. வேளாண்மை எதிர்கொள்ளும் இந்த நெருக்கடிதான் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அதிகரிப்பதற்கு அடிப்படைக் காரணம் என்பதை உணர்ந்து கொண்டால், இந்தப் பிரச்னையின் தீவிரம் புரியும்.

கடந்த 15 ஆண்டுகளாக இந்தப் பிரச்னை தொடர்கிறது.

2006-ஆம் ஆண்டு ஏறத்தாழ 1,450 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தபோதுதான், இந்திய அரசு இந்தப் பிரச்னையின் கடுமையைப் புரிந்து கொண்டது. உடனடியாக, விதர்பா பகுதியின் ஆறு மாவட்டங்களுக்கும் ரூ.3,750 கோடி கடன் நிவாரணம் அளிக்கும் திட்டத்தை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். மகாராஷ்டிர மாநில அரசும் தன் பங்குக்கு ரூ.1,075 கோடி நிவாரணம் அளிக்க முன்வந்தது.

இத்தனைக்குப் பிறகும்கூட இந்தப் பிரச்னை தொடர்ந்தது என்றால் அதற்குக் காரணம், இழப்பீடு வழங்கப்படுவதற்கான அரசின் நிபந்தனைகள்தான். வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டதால், தனியாரிடம் கடன் பெற்றிருந்த விவசாயிகள் இழப்பீடு நிவாரணம் பெறவே இல்லை. அவர்களது நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

விதர்பாவும், தெலங்கானாவும் இந்தியாவின் அதிகம் மழை பெய்யாத பகுதிகள். 1992-ஆம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியைத் தொடர்ந்து புதிதாக 15 நீர்ப்பாசனத் திட்டங்கள் விதர்பாவில் அறிவிக்கப்பட்டன. ஒரு கட்டத்தில், விதர்பா நீர்ப்பாசன வளர்ச்சிக்

கழகம் நூற்றுக்கும் அதிகமான நீர்ப்பாசனத் திட்டங்களை அறிவித்தது. ஆனால் இவையெல்லாம், காகிதத்திலும், கோப்புகளிலும் முடங்கிக் கிடந்தனவே தவிர, செயல்வடிவம் பெறவில்லை.

அடுத்தபடியாக, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 15% விவசாயிகள்தான் பயனடைகிறார்கள். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயி ஒருவர் இழப்பீடு பெற வேண்டுமானால், அவர் சார்ந்த மாவட்டம் வறட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். காப்பீட்டு நிறுவனங்களின் வற்புறுத்தலாலோ என்னவோ, வறட்சி அறிவிப்பைக் காலதாமதப்படுத்துவது மகாராஷ்டிரத்தின் வழக்கமாகி விட்டிருக்கிறது.

குறைந்த அளவு மழை மட்டுமே விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணமல்ல. தெலங்கானா, விதர்பா பகுதிகள் நீர்ப்பாசனத்துக்காக நதிநீர் பெறுவது தடைபடுவதும்கூட இதற்குக் காரணம். நகர்ப்புறவாசிகளின் குடிநீர்த் திட்டங்களுக்கும், தொழிற்சாலைகளின் அளவுக்கதிகமான தேவைகளுக்கும் தண்ணீர் எடுத்துக் கொள்ளப்பட்டு மிச்சம் மீதிதான் விதர்பா, தெலங்கானா போன்ற பகுதிகளுக்குக் கிடைக்கிறது.

நதிநீர் வசதி இல்லாததால், தனியாரிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கிறார்கள். நிலத்தடி நீர் அளவும் குறைந்து, அதிகரித்த மின் வெட்டையும் எதிர்கொள்வதால், விவசாயம் செய்யவும் முடியாமல், கடனை அடைக்கவும் வழியில்லாமல் அவர்கள் கடைசியில் தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்ளும் அவலத்தில் முடிகிறது.

மரபணு மாற்றப்பட்ட விதைகளும் இந்த விவசாயிகள் மரணத்துக்கு இன்னொரு காரணம். இந்த விதைகளைப் பயிரிட்டால் பாரம்பரிய விதைகளைவிட அதிகத் தண்ணீர் தேவைப்படுகிறது. பூச்சிமருந்தின் தேவையும் அதிகரிக்கிறது. அதனால், அதிகமான கடன் சுமை ஏறுகிறது. முடிவில் வேளாண் நெருக்கடியும், விவசாயிகளின் மரணமுமாக நிலைமை மாறுகிறது.

கடந்த ஆட்சியில் வேளாண் துறை அமைச்சர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சரத் பவார். அப்படி இருந்தும் மகாராஷ்டிரத்தில் விவசாயிகள் மரணம் தொடர்கிறது என்று தனது தேர்தல் பிரசாரத்தில் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி இடித்துரைத்ததை விதர்பா பகுதி மக்கள் மறந்துவிட்டாலும், நாம் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com