பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

இதுவல்ல இஸ்லாமிய கோட்பாடு!

ஆஸ்திரேலியாவில் ஒரு வணிகவளாக உணவகத்தில் இருந்த பொதுமக்களை பிணைக் கைதிகளாக மாற்றியவர் சுட்டுக் கொல்லப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில், பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் செயல்பட்டு வரும் ராணுவப் பள்ளியில் புகுந்த பயங்கரவாதிகளால் 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 138 பேர் பள்ளிச் சிறார்கள்.

Updated On :16 டிசம்பர் 2014, 8:28 pm

ஆஸ்திரேலியாவில் ஒரு வணிகவளாக உணவகத்தில் இருந்த பொதுமக்களை பிணைக் கைதிகளாக மாற்றியவர் சுட்டுக் கொல்லப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில், பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் செயல்பட்டு வரும் ராணுவப் பள்ளியில் புகுந்த பயங்கரவாதிகளால் 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 138 பேர் பள்ளிச் சிறார்கள்.

ராணுவத்தினர் நடத்தும் பொதுப் பள்ளி என்பதால் பாதுகாப்பு வளையங்கள் கிடையாது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மட்டுமே புழங்கும் பகுதி என்பதால் இத்தகைய தாக்குதலை யாரும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை பயங்கரவாதிகள் கொன்றிருப்பது உலக மக்கள் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

தலிபான் பயங்கரவாதமா, மதவாதமா என்பது குறித்த விவாதம் இப்போது அர்த்தமற்றது. அவர்களின் ஆயுத பலத்துக்கு தலிபான்கள் ராணுவத்துடன்தான் மறைமுகமாகவும் நேரடியாகவும் மோத வேண்டும். பள்ளி மாணவர்களையும், அப்பாவிப் பொதுமக்களையும் கொல்வது போர்முறை அல்ல. தலிபான்கள் வலியுறுத்தும் இஸ்லாமிய மதக்கோட்பாடும் இதை ஏற்பதில்லை.

கடந்த ஓராண்டில் தலிபான் இயக்கத்துக்கு தொடர்ச்சியான பின்னடைவு ஏற்பட்டு வருவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், இத்தகைய கோழைத்தனமான கொலைகளால் தங்கள் பலத்தை நிரூபிக்க முற்படுகிறார்கள் என்று தோன்றுகிறது. அமெரிக்காவின் ஆளில்லா குறுவிமானத் தாக்குதலில் தலிபான் இயக்கத்தின் மிக முக்கிய தலைவர்களான முல்லா நஸீர் ஜனவரி மாதத்திலும், வலியு - ர் - ரஹ்மான் கடந்த மே மாதமும் கொல்லப்பட்டனர். தலிபான் இயக்கத்தால் சுடப்பட்ட மலாலா தற்போது நோபல் பரிசை வென்றிருக்

கிறார். இதுபோதாதென்று, பாகிஸ்தானும் தலிபான் மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத தலிபான் இயக்கத்தின் வெறியாட்டம்தான் இத்தகைய தாக்குதல்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு அமைந்தபோது அதை உலக நாடுகள் எதிர்த்தன. ஆதரித்த மூன்று நாடுகள் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் ஆகியவை மட்டுமே. முதல் இரு நாடுகளும்கூட தலிபான்களிடமிருந்து விலகிக்கொள்ள முற்பட்டாலும், பாகிஸ்தான் இப்போதும் மறைமுகமாகத் தலிபான்களை ஆதரித்து வருகிறது. தன் வினை தன்னைச் சுடும் என்பதாக இப்போது பாகிஸ்தானுக்கு தலிபான் ஒரு தலைவலியாக மாறியிருக்கிறது.

கைபர் அருகே உள்ள வடக்கு வஸிரிஸ்தான் பகுதியில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டதில் பல ஆப்கன் பயங்கரவாத அமைப்பினர் இறந்துபோனதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் தலிபான்களால் நடத்தப்பட்டுள்ளது. இத்தனைக்கும், தலிபான்கள் மீது பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல் உண்மையான தாக்குதல் அல்ல. தலிபான்களை ஒழிக்க வேண்டும் என்பதற்காக பாகிஸ்தானுக்கு சில ஆயிரம் கோடி டாலர்களை அமெரிக்கா கொட்டிக்கொண்டிருக்கிறது. அந்தப் பணத்தை இழக்க விருப்பம் இல்லாத பாகிஸ்தான் வெறுமனே ஒரு கண்துடைப்புக்காக நடத்தும் தாக்குதல் நாடகத்துக்கே தலிபான் இந்த அளவுக்கு கொதிக்கிறது, அப்பாவி மக்களைக் கொல்கிறது என்பதுதான் வேடிக்கை.

ஆப்கானிஸ்தான் யாராலும் வெற்றி கொள்ள முடியாத தேசமாகவே இருந்து வருகிறது. 1700-களில் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை நிறுவிட ஆங்கிலேயர் நடத்திய படையெடுப்பு, பெருந்தோல்வியில் முடிந்தது. பல ஆயிரம் பேரை பலி கொடுத்து, தோல்வி முகத்துடன் தில்லி திரும்பினர். அதன்பிறகு, ரஷியா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால், அவர்களாலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இப்போது அரசியல் ரீதியான கட்டுப்பாட்டை அமெரிக்கா நடத்தினாலும், அவர்களாலும் வெற்றி கொள்ள முடியவில்லை.

அதற்காக, தலிபான்கள் அனைத்து நாடுகளிலும் தங்கள் பயங்கர முகத்தைக் காட்டுவார்கள் என்றால், உலகம் முழுவதும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மாறும்போது, அந்தத் தேசம் தனது வலிமையை இழக்கும். தலிபான் அதற்கு காரணமாக அமையும்.

ஆஸ்திரேலியாவில் உணவகத்தில் பொதுமக்களை பிணைக் கைதியாக்கிய சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுப்பிய ஆஸ்திரேலிய இஸ்லாமிய அமைப்புகள் பலவும், இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கமாட்டோம்; இவற்றை எதிர்க்க ஒன்றுபட்டு நிற்போம் என்று ஒரே குரலில் தெரிவித்தனர். தலிபான்களை ராணுவம் ஒடுக்குவதைவிட, உலகு தழுவிய இஸ்லாமிய அமைப்புகளின் ஒருமித்த குரல் மூலமும், இவர்களுக்கான நிதிநல்கை தடைபடுவதன் மூலமும்கூட இவர்களை ஒடுக்க முடியும். ஏன் தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.