நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா, இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் பொருந்தும் என்றாலும், இந்த மசோதா புதுதில்லி, ஹரியாணாவில் நிலவும் இ-ரிக்ஷா எனப்படும் மின்கல ஊர்திகளை மட்டும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது மாறிவரும் போக்குவரத்து சூழலையோ, அதற்கான புதிய விதிமுறைகள் குறித்தோ கவலைப்படவில்லை.
தில்லி பெருநகரில் மின்கலன் (பேட்டரி) பொருத்தப்பட்ட அல்லது மின்கலனை மாற்று ஏற்பாடாகப் பொருத்திக் கொண்டிருக்கும் ஊர்திகள் விபத்துக்குள்ளானபோது, இவற்றை மோட்டார் வாகன விதிகளுக்குள் கொண்டு வருவதும், இழப்பீடு பெறுவதும் இயலாதவையாக இருந்தன. இதனால் நீதிமன்றம் தலையிட்டு, மத்திய அரசுக்கு உத்தரவு போடும் நிலை உருவானது.
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தின்படி, மின்கல ஊர்திகள், நடைமுறையில் உள்ள பெட்ரோல், டீசல் ஊர்திகள் எத்தகைய சட்டத்துக்கு உள்பட்டவையோ அதே சட்ட திட்டங்களுக்கு உள்பட்டவை என்ற துணைப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதைத் தவிர புதிதாக ஒன்றும் இல்லை. இவற்றுக்கான இழுவைத் திறன், இவற்றில் பயன்படுத்த வேண்டிய மின்கலன் ஆற்றல் குறித்து எந்த விதிமுறையும் இல்லை. இந்த மின்கலன் ஊர்திகள் 3,500 கிலோ கிராம் எடை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அவை பயணிகளா அல்லது சரக்குகளா என்பது வகைப்படுத்தப்படவில்லை.
மின்கல வாகனங்கள் பெரும்பாலும் ஷேர் ஆட்டோக்கள் போலப் பயணிகள் ஊர்தியாகவும், சில இடங்களில் மீன்பாடி வண்டிகளைப்போல சரக்குகள் ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் தன்மைகள் மாறுபடுகின்றன. இவை எதிர்கொள்ளும் விபத்துகளும் ஏற்படுத்தும் இடையூறு மற்றும் விபத்துகளும் மற்ற ஊர்திகளிலிருந்து மாறுபட்டவை. ஆகவே, வாழ்வாதாரத்துக்காக ஏழைகள் இயக்கும் மின்கல ஊர்திகளுக்கான தனிப்பட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் விரைந்துசென்று, விபத்தில் சிக்கி பலியாவது அதிகரித்து வருகிறது. இதற்கு அடிப்படைக் காரணம், சாலை வசதியே சரியாக இல்லாத நிலையில், 150 சிசி, 200 சிசி இழுவைத்திறன் கொண்ட இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதும், எந்தெந்தத் திறன் கொண்ட வாகனங்கள் எந்தெந்தச் சாலையில் அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு இல்லாமலும் இருப்பதும்தான்.
இன்றைய மோட்டார் வாகனச் சட்டம், விபத்துகளின்போது வாகன ஓட்டுநர், அடிபட்டவர் இருவருக்கும் மட்டுமேயான விவகாரமாக முடிக்கப்படுகிறது. ஆனால், அந்த ஊர்தியைத் தயாரித்தவரையோ, நாற்கரச் சாலையில் சுங்கம் வசூல் செய்யும் அமைப்பையோ, விபத்து அல்லது மரணத்துக்கான காரணிகளாக அவை இருந்தாலும், சேர்ப்பதே இலலை.
மிதவேக விபத்தில்கூட கார்கள் அப்பளம்போல நொறுங்குகின்றன. மோதலைவிட, கார் தகரங்களால் கிழிபட்டு மாண்டுபோவோர் எண்ணிக்கையே அதிகம். இவ்வளவு மோசமான கார்களை வடிவமைக்கும் நிறுவனகள் மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. நூறு கிலோமீட்டர் வேகத்தில் நாற்கரச் சாலையில் பறக்கும் ஒரு வாகனத்தின் எடை, தகரத்தின் வலு எத்தகையதாக இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள்கூட மோட்டார் வாகனச் சட்டத்தில் இல்லை.
இந்தியாவில் தயாரிக்கப்படும் மோட்டார் வாகனம் ஒன்றுகூட சர்வதேசத் தரநிர்ணயப் பரிசோதனைப்படி பாதுகாப்பானதல்ல. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 12 லட்சம் பேர் சாலை விபத்தில் இறந்திருக்கிறார்கள். 55 லட்சம் பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தின்போது இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டிருக்க வேண்டாமா?
நாற்கரச் சாலையில், "பழுதாகி நிற்கும் லாரி மீது விரைந்து செல்லும் கார்கள் மோதி' குவியல் குவியலாகப் பலர் பலியாகிறார்கள். ஆனால், குறிப்பிட்ட கிலோ மீட்டர் தொலைவு பயணத்துக்கு சுங்கம் வசூலிக்கும் நிறுவனம், தடையற்ற பயணத்தை உறுதி செய்யவும், பழுதாகி நிற்கும் லாரியை ஓரம்கட்டவும் உதவுவதே இல்லை. நாற்கரச் சாலை சுங்கச்சாவடியில் ஒவ்வொரு வாகன ஓட்டியிடமும், மது அருந்தியுள்ள சோதனை நடத்த சில நிமிடங்கள்கூட ஆகாது. ஆனால் செய்வதில்லை.
இன்று இவற்றையெல்லாம் சட்டப்படி கட்டாயமாக்குவதற்கான திருத்தங்களை மோட்டார் வாகனச் சட்டம் எதிர்நோக்கியிருக்கும்போது, வெறும் இ-ரிக்ஷாக்களை மட்டுமே கருத்தில் கொண்டு, சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இந்தச் சட்டத்தை முழுமையாகத் திருத்த வேண்டிய வாய்ப்பை மத்திய அரசு தவறவிட்டுவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.